நமது பத்திரிகை

 

குடி அரசுப் பதிப்பகத்தினின்று “”பகுத்தறிவு” என்ற பெயரால் ஒரு மாதப் பத்திரிகை வெளியிட வேண்டுமென்ற அபிப்பிராயம் 6, 7 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது.  காலஞ்சென்ற ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் 1928ம் ஆண்டிலேயே அரசாங்கத்தில் ரிஜிஸ்டர் செய்து “”பகுத்தறிவு”  மாதப்  பத்திரிகையைப்  பிரசுரஞ்  செய்ய அனுமதியும் பெற்றிருந்தார்கள் என்பதைக்  “”குடி அரசு”  வாசகர்கள் நன்கறிவர்.  ஆனால் பலப்பல காரணங் களால் அம்மையாரின் முயற்சி தடைப்பட்டுப் போய்விட்டது.

தமிழ் மக்களிடையே அதிதீவிரமாக அறிவியல் கொள்கைகளைப் பரப்பவேண்டுமென்றும்,  அவ்வாறு பரப்புவதற்கு ஓர் தனிப் பத்திரிகை,  வேறு எவ்வித நோக்கமுமின்றி அறிவியற் கொள்கைகளைப் பரப்பும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஓர் நல்ல ஸ்தாபனத்தினின்று பிரசுரிக்கப்பட்டு தொண்டாற்றி வரவேண்டும் என்ற அபிப்பிராயம் நமக்கு  மட்டுமல்ல  பல அறிஞர்களுக்குமிருந்து வந்தது.

எனவே 1935ம் ஆண்டு மேமாதம் “பகுத்தறிவை’ நமது பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தினின்று வெளியிட வேண்டு மென்று தீர்மானிக்கப் பெற்று அவ்வாறே இப்பொழுது வெளி வந்திருக்கின்றது.

“”பகுத்தறிவு” தமிழ் மக்களிடையே அறிவியல் கொள்கைகளை அதிதீவிரமாகப் பரப்ப முயற்சி செய்யும்; விஞ்ஞான மேம்பாட்டை விளக்கமாக எடுத்துக்காட்டும்;  மேனாட்டு மெஞ்ஞானப் புலவர்கள் கண்ட அரிய பெரிய அற்புதங்களை யெல்லாம் தெள்ளிதில் விளக்கும்; மூட நம்பிக்கைகளையும் குருட்டுப்  பழக்க வழக்கங்களையும், புரோகிதப் பித்தலாட்டங்களையும், சாதி சமய சாத்திரப் புரட்டுகளையும் புட்டுப்புட்டுக்  காட்டும். சுருங்கக்கூறின் அறிவுக்கு மாறுபட்ட அனைத்தையும் நிர்த்தூளி பண்ணி யாண்டும் அறிவின் ஜோதி ஜொலிக்கத் தன்னாலான எல்லாத் தொண்டினையும் செய்து தமிழ் மக்களின் வாழ்க்கையை இன்பகரமாகச் செய்வதையே தனது கடனாக கொண்டு வேலை செய்ய முனைந்து பகுத்தறிவு இன்று உங்கள் முன் வந்துளது.  நேயர்கள் நல்வரவேற்று பகுத்தறிவு வளர முயற்சி செய்வார்களென்று பெரிதும் நம்புகிறோம்.

இதன் வருட சந்தா இதைவிட மிகக்குறைவாக இருக்கவேண்டுமென்று கருதியிருந்தோமாயினும் பெரிய அளவில் பல அரிய கட்டுரைகளுடனும் அதிகப் பக்கங்களுடனும் அழகிய முறையிலும் நடத்தவேண்டுமென்ற நோக்கத்தினால் இதை விடக்  குறைக்க முடியாமல் வருட சந்தா    1,  ஏற்படுத்தி யிருக்கின்றோம்.

தமிழ் மக்கள் “”பகுத்தறிவை” உல்லங்கனம் செய்து விடாது உவகையுடன் வரவேற்று ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தார்

பகுத்தறிவு (மா.இ.)  பதிப்புரை  மே 1935

You may also like...