சத்தியமூர்த்தியாருக்கு பிரைஸ்

 

தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்து சென்னைக்குப் பிழைக்க வந்தவர். சரோஜினி அம்மையார் தலைமையில் நடந்த காஞ்சிபுரம் அரசியல் மகாநாட்டில் பெசண்டம்மையாரை வைததின் மூலம் முதல்முதலாக தலைகாட்டப்பட்டவர். அவரது வசவின் பெருமையை அறிந்து “இந்து’ “சுதேசமித்திரன்’ பத்திராபதிபர்களால் விலைக்கு வாங்கப்பட்டு அப்பத்திரிகைகளின் மூலம் தூக்கிவிடப்பட்டு பிரபலமடைந்தவர். அய்யர்  அய்யங்கார் சண்டையில் அய்யங்கார்களின் ஆயுதமாக இருந்து தோழர்கள் சி.பி. அய்யர், சீனிவாச சாஸ்திரி, பி.என். சர்மா, இந்தியன் ரிவ்யூ நடேசன் ஆகியவர்களை வைது ஐயங்கார்களால் பணமுடிப்பு முதலியவை பெற்று பெரிய அரசியல்வாதியாகி அப்புரம் ஒத்துழையாமையையும், நிர்மாணத் திட்டத்தையும் காரியத்தில் நடை பெருவதை ஒழிக்க இந்து, மித்திரன் பத்திராதிபர்கள், சத்தியமூர்த்தியை உபயோகித்துக் கொண்டதின் மூலம் அவர் எல்லா இந்திய அரசியல்வாதியாக விளம்பரம் பெற்று சுயராஜ்ஜியக் கட்சியால் அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு, இப்போது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் முதல் வரிசையில் “”முதல்” ஆளாக தன்னை செய்து கொண்டு விளம்பரமும் பெற்று இருக்கிறார்.

இந்திய சட்டசபை மெம்பரானதின் மூலம் அவரே தமிழ்நாட்டுத் தலைவராகவும் ஆகி விட்டார். ராஜகோபாலாச்சாரியார் துரவு நாடகத்தின் பயனாய் தலைவர் (வேஷம்) இவருக்கே வரப் போகிறது.

இப்படிப்பட்ட பெரியார் டெல்லியில் இருக்கும்போது சென்னை மேயர் முத்தையா செட்டியாருக்கு டெல்லியில் ஒரு விருந்தும் நடத்தினார். இதில் ஆச்சரியம் எதுவும் இருக்க முடியாதல்லவா?

ஆகவே இருவரும் டெல்லியில் இருந்து வந்தவுடன் அண்ணாமலை யுணிவர்சிட்டிக்கு தோழர் மேயர் முத்தையா செட்டியாரால் தோழர் சத்தியமூர்த்தியார் வைஸ்சேன்சலராக நியமிக்கப்பட்டு இப்போது அந்த யுனிவர்சிட்டிக்கு ஒரு ஒப்பற்ற ஆபரணமாய் இருந்து அதை அலங்கரிக்கிறாராம்.

ஆகவே தோழர் சத்தியமூர்த்திக்கு அடித்த பிரைஸ் இது வரையிலும் தமிழ்நாட்டில் ஒருவருக்கும் அடித்ததாக நமக்கு ஞாபகமில்லை.

கூடிய சீக்கிரத்தில் சத்தியமூர்த்தியாருக்கு அந்த யுனிவர்சிட்டியில் டாக்டர் பட்டமும் கிடைக்கக் கூடும் என்பதாக நிழல் தெரிகிறது. இனி அவர் மந்திரி ஆகப் போகும் விஷயமும் 100க்கு 50 பங்கு உறுதியாய் விட்டது. எப்படி எனில் சத்தியமூர்த்தியார் ஏற்றுக் கொள்ள சம்மதித்து விட்டார்.

குடி அரசு  கட்டுரை  28.04.1935

You may also like...