காங்கிரஸ் ஒரு வியாதி

 

இந்திய தேசீய காங்கிரஸ் என்பது இந்தியாவுக்கு ஏற்பட்ட ஒரு வியாதியேயாகும். அது ஆரம்பித்த காலம் முதல் மனித சமூக முற்போக்கைத் தடை செய்து கொண்டே வருகிறது. அது ஏற்பட்ட இந்த 50 வருஷ காலத்தில் இந்திய நாடு பிற்போக்கடைந்திருக்கிறது என்று கூட சொல்ல வேண்டும்.

முதலில் காங்கிரசை ஏற்படுத்தியவர்களது நோக்கம் படித்தவர் களுக்குப் பெரிய பெரிய உத்தியோகம் வேண்டும் என்பதாக இருந்தது என்றாலும் அது நாளாவட்டத்தில் சமூகத் துறையில் பார்ப்பனர்களுக்கு உள்ள ஆதிக்கமும் மேன்மையும் குறையாமல் காப்பாற்றப்படவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உதாரணம் வேண்டுமானால் இந்த 50 வருஷ காலத்தில் காங்கிரசினால் ஏதாவது ஒரு சமூக சம்பந்தமான காரியம் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் நன்றாய் விளங்கும்.

அது மாத்திரமல்லாமல் சமூக சீர்திருத்த சம்பந்தமாக வந்த தீர்மானங்களை யெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படும் படியான தோழர் சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்களும், காங்கிரஸ் தேசீயப் பத்திரிகைகளான இந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும் எதிர்த்தும் வந்திருக்கின்றன என்பதை யாராவது மறுக்க முடியுமா?

ஆனால் காங்கிரசின் செலவுக்காக  சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும் காரியத்துக்கு ஆக, தீண்டாமையை ஒழிக்கின்றோம், கள்ளை நிறுத்துகின்றோம், ஏழைகளைக் காப்பாற்றுகின்றோம், இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒற்றுமைப்படுத்துகின்றோம் என்கின்ற பெயர்களைச் சொல்லி இந்த 15 வருஷகாலமாக கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திய மக்களிடம் இருந்து வசூல் செய்து பார்ப்பன பிரசாரமும், சமூக சீர்திருத்த முட்டுக்கட்டைப் பிரசாரமும் செய்ததல்லாமல் வேறு ஏதாவது செய்யப்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா? அல்லது ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா? என்று கேட்கின்றோம்.

கள்ளை நிறுத்தும் வேலைக்கு வசூல் செய்த பணம் எவ்வளவு? ஜெயிலுக்குப் போய் துன்பப்படும்படி அனுப்பப்பட்ட வாலிபர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இவ்வளவும் செய்த பிறகு ஒரு கால்படி கள்ளாவது குடிப்பதையோ செலவாவதையோ உண்மையில் நிறுத்தினார்களா? என்றுதான் கேட்கின்றோம். காங்கிரஸ் மதுவிலக்கு நாடகம் ஆட ஆரம்பித்து அதன் பேரால் மக்களை மோசம் செய்து, பண வசூல் ஆரம்பித்த காலம் முதல் நாளது வரை நடந்து வந்த கள்ளு வியாபாரம்   குடி ஆகிய விஷயங்களை கவனித்துப் பார்த்தால் இந்த பித்தலாட்ட நாடகம் நடிப்பதற்கு முன் எவ்வளவுக்கு கள் உற்பத்தியாயிற்றோ  எவ்வளவு பேர் குடித்தார்களோ  எவ்வளவு ரூபாயிற்கு கள் விற்றதோ அதற்கும் குறிப்பிடத் தகுந்த அளவு மேலாகவே ஒவ்வொரு துறையிலும் அதிகப்பட்டிருக்கிறதே ஒழிய சிறிதுகூட குறையவே இல்லை என்று பந்தயம் கட்டிப் புள்ளி விபரங்களோடு கூறுவோம்.

அது போலவே இந்து முஸ்லீம் ஒற்றுமை பேசிப் பேசி இரு சமூகத் தாரையும் பார்ப்பன ஆதிக்கத்துக்காக ஏமாற்றியதின் யோக்கியதை யெல்லாம் முன் இருந்ததைவிட இன்று இந்து முஸ்லீம்களுக்குள் பிளவும் அவ நம்பிக்கையும் அதிகமாய் இருந்து வருகின்றதே தவிர எந்தத் துறையிலாவது சிறிதளவாவது குறைந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா என்றும் கேட்கின்றோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் காங்கிரசின் சூழ்ச்சியினாலும் பேராசைக் குணத்தினாலும் முஸ்லீம்களுக்கு இந்துக்களிடம் அடியோடு நம்பிக்கை குறைந்து போய் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக ஒன்றுக்கு இரண்டாய் பலன் பெறவும் இந்துக்களை வெறுத்த வரையிலும் அவநம்பிக்கை பட்ட வரையிலும் அவர்களோடு சேராமல் பிரிந்து இருக்கும் வரையிலும் அதிக லாபம் என்று சொல்லக்கூடிய நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.

இனி காங்கிரசானது ஏழைகளுக்கு நன்மை செய்யும் காரியத்தை கவனிப்போமேயானால் அதுவும் அது போலவே கதர் என்கின்ற தந்திரத்தினால் வருஷத்தில் ஒரு இருபது முப்பது ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்துவிட்டு அதற்காக லட்சக்கணக்கான ரூபாய்களை இந்திய மக்களிடம் இருந்து வசூல் செய்து பார்ப்பனர்களையே நிர்வாகிகளாக ஆக்கி அவர்களுக்கே பெரும்பாகம் செலவு செய்து அவர்களைப் பார்ப்பனப் பிரசாரம் செய்யச் செய்து விட்டு இவ்வளவும் செய்து கடைசியாகக் கணக்குப் பார்த்தால் 15 வருஷ காலம் பொறுத்தும் 2 அணா பெறும்படியான துணிக்கு எட்டு அணா கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் தான் கதர் இருக்கிறதே தவிர அதுவும் நாளுக்கு நாள் மறைந்து போக வேண்டிய காரியமாகத்தான் ஆயிற்றே தவிர, அதனால் எவ்வித சீர்திருத்தத்திற்கும் பயன் இல்லாமல் போய்விட்டது என்பது குருடர்களும் அறிந்த காரியமாகும்.

இனி தீண்டாமை விலக்கு விஷயத்தைப் பார்த்தாலோ அது பரிசுத்தமான ஹம்பக்கென்று சொல்லும்படியான நிலைமையில்தான் இருக்கின்றது. காங்கிரஸ் தீண்டாமைப் பிரசாரம் என்பதனால் தீண்டாதவர்கள் என்பவர்களுக்குள் இருந்து வந்த தீண்டாமை என்பதுகூட அதிகமாக்கப் பட்டதே தவிர மற்றபடி காரியத்தில் அவர்களுக்கு சமூகத்திலோ, அரசியலிலோ, பொருளாதாரத்திலோ கடுகளவு முற்போக்குக்கூட காங்கிரசினால் ஏற்படவே இல்லை.

சமீபகாலத்தில் தீண்டாமையின் பேரால் இந்திய மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 20, 30 லக்ஷக்கணக்கான ரூபாய்களை பார்ப்பன எலக்ஷன் பிரசாரம் செய்யத் தகுந்த ஆளுகளை கூலிகளாகப் பிடித்து பத்திரிக்கைகளை கூலிக்கு அமர்த்தி தீண்டாமை விலக்கு சங்கம் என்கின்ற நாணையமில்லாத பெயரின் பேரில் செலவு எழுதி வந்து கடைசியாக எல்லாவற்றையும் பார்ப்பனர்களுடையவும் அவர்களது அடிமைகளுடையவும் எலக்ஷனுக்கே உபயோகப்படுத்திக் கொண்டு வந்து அந்த எலக்ஷனில் வெற்றி பெற்ற ஆளுகளையும் “”சட்டசபையில் தீண்டாமை சம்பந்தமான வேலையில் பிரவேசிக்கக்கூடாது” என்று திட்டப்படுத்தி கட்டுப்படுத்ததான் முடிந்ததே ஒழிய மற்றப்படி இத்துறைகளில் காரியத்தில் ஏதாவது நடந்ததா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களை வேண்டுகின்றோம்.

இந்த நிலையில் இருந்து வரும் ஒரு வெளிப் பகட்டும் உள் வஞ்சகமுமான ஸ்தாபனமாகிய காங்கிரசை யாரோ ஒருவர் பார்ப்பனர்கள் ஸ்தாபன மென்றும், முதலாளிகள் ஸ்தாபனமென்றும், தொழில் செய்து பிழைக்கும் மக்களுக்கு அது ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லி விட்டதால் முத்து சிந்திப் போய்விட்டதாம்.

காங்கிரஸ் வஞ்சகர்கள் ஸ்தாபனமென்றும் வருணாச்சிரமக்காரர் ஸ்தாபனமென்றும் முதலாளிகளின் கூலிகளின் ஸ்தாபனமென்றும் தோழர் ஈ.வெ. ராமசாமி மாத்திரமோ அல்லது இவ்வாரம் சென்னை காங்கிரஸ் மாளிகையில் நடந்த கூட்டத்தில் மாத்திரமோ 2 பேர் பேசி விட்டார்கள், கேள்வி கேட்டுவிட்டார்கள் என்று சில பார்ப்பன பத்திரிகைகள் மாய்மாலக் கண்ணீர் விடுகின்றன. இதை ஊரை ஏமாற்றும் தந்திரமென்றுதான் சொல்லுவோம்.

காங்கிரசை முதலாளி ஸ்தாபனமென்றும், வஞ்சக ஸ்தாபனமென்றும் கராச்சி காங்கிரசின்போது அதே கொட்டகையில் கூடிய பாரத நவவீரர் மகாநாட்டில் அதன் தலைவர் தோழர் சுபாஷ் சந்திர போஸ் கூறியிருக் கிறார். அம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் தோழர் கோவிந்தானந்தர் கூறியிருக்கிறார். இவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்றால்

சுபாஷ் சந்திர போஸ்

“”காங்கிரஸ் கொள்கைகள் பயனற்றது, அதன் தலைவர்கள் நாணைய மற்றவர்கள். ஒன்றைச் சொல்லி ஒன்றைச் செய்து கொள்கிறார்கள். அவர்களுடைய உள் எண்ணமெல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே. அவர்கள் லட்சியங்கள் ஜமீன்தாரனுக்கும், பணக்காரனுக்கும் மேல் ஜாதிக்காரனுக்கும் நல்ல பிள்ளையாய் நடக்கவேண்டும் என்பதே. அதே மூச்சில் மற்றவர்களுக்கும் நல்ல பிள்ளைபோல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதே. உண்மையான சுதந்திரத்தை சம்பாதித்துக் கொடுக்க காங்கிரஸ்காரர்களால் முடியாது. அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்தியா சுதந்திரமடைய வேண்டுமானால் வேறு ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

தோழர் கோவிந்தானந்தர் இதைவிடப் பச்சையாய் “”காங்கிரசினால் ஒரு நாளும் ஏழைத் தொழிலாளி மக்களுக்கு பயன் ஏற்படாது. ஏழைகளை பலி கொடுத்து அரசியல்வாதிகளான சிலர் வாழ்ந்து வருகிறார்கள்” என்றும் பேசி இருக்கிறார்.

தொழிலாளிகள் நன்மைக்கென்றே உழைத்துவரும் தோழர் சக்லத்வாலா அவர்கள் “”காந்தியும் காங்கிரசும் தொழிலாளிகளையும் ஏழைக் குடியானவர்களையும் மோசம் செய்து வஞ்சித்து வந்திருக்கிறார்கள். இவ்விரண்டும் ஒழிந்தாலொழிய இந்தியாவுக்கு விடுதலை இல்லை” என்றும் பேசி இருக்கிறார்.

ஜவகர்லால் நேரு அவர்கள் “”காங்கிரசானது ஏழைத் தொழிலாளிகள் நலத்தையும் விவசாயிகள் நலத்தையும் புறக்கணித்துவிட்டு பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள் முதலிய கூட்டத்தாருக்கு நன்மை செய்து வந்திருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார்.

காங்கிரசின் யோக்கியதை இவ்வளவு தானா? என்றால் இனியும் உண்டு. அதாவது :

“”பம்பாய் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ஜம்நாதாஸ்  மேதா அவர்கள் பம்பாயில் ஒரு கூட்டத்தில் காங்கிரசில் உள்ள பூர்ஷ்வா கூட்டம் அழிந்தால் ஒழிய காங்கிரசால் மக்களுக்கு நன்மை ஏற்படாது” என்று சொல்லி இருக்கிறார்.

பம்பாய் தொழிலாளர்களும் கிர்ணி காம்கர் சங்கத்தார்களும், “”காங்கிரஸ் ஒழிக”, “”காந்தி ஒழிக”, “”காங்கிரசும் காந்தியும் முதலாளி களின் கூலிகள்”, “”காந்தியே திரும்பிப்போ” என்று கருப்புக் கொடியுடன் கூப்பாடு போடவில்லையா?

கராச்சி காங்கிரஸ் ஊர்வலத்தில் காந்தியாரை வழி மறித்து,

“”ஓ காந்தியாரே நீங்கள் முதலாளிகளுடைய கூலி, எங்களுக்கு வேண்டாம்; திரும்பிப் போங்கள்” என்று சொல்லவில்லையா?

சர்க்காரிடம் சரணாகதி

மற்றும் சர்க்காருடன் காந்தியார் செய்து கொண்ட “”ஒப்பந்தத்தை” காங்கிரசின் சரணாகதி என்று சுபாஷ் போஸ் முதல் ஜவர்லால் வரையில் சொல்லவில்லையா?

இந்த சரணாகதியை ஜவர்லால் ஒப்புக் கொண்டதற்காகவே உலக சமதர்ம சங்கத்தில் (அதாவது ஆண்டி இம்பீரியலிஸ்ட் லீக்கில்) உப தலைவராய் இருந்த ஸ்தானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு அவர்கள் நீக்கப்பட்டு விடவில்லையா?

ஆகவே இந்தப்படி காங்கிரசையும் காங்கிரஸ் தலைவர்களையும் காந்தியாரையும் முதலாளிகள் கூலிகள் என்றும் வஞ்சகர்கள் என்றும் சர்க்காரிடம் சரணாகதி அடைந்தவர்கள் என்றும் சொன்ன ஆசாமிகள் சுலபத்தில் மார்ட்டின் லூதராகவும் லெனினாகவும் ஆக வேண்டும் என்கின்ற புகழ் ஆசைப் பிடித்த பைத்தியக்காரர்களா? என்று கேட்கின்றோம்.

அன்றியும் இவர்களெல்லாம் “”காங்கிரசின் “அரிய’ வேலையை அறிய யோக்கியதை இல்லாத தேசத்துரோகி”களா என்றும் கேட்கின்றோம்.

மற்றும் சுயமரியாதைக்காரர்கள் இனி சர்க்காருக்கு விரோதமாக எழுதுவதில்லை என்று சொன்னது. ஒரு மானங்கெட்ட செய்கை என்று எழுதி ஒரு கூலிப் பத்திரிகை பரிகாசம் செய்கின்றது. அப்படியானால்

காங்கிரஸ் வெகு வீரமாய் அதுவும் சுயராஜ்யம் பெற்றாலொழிய திரும்புவதில்லை என்று சபதம் கூறி ஆயிரக்கணக்காய் ஜெயிலுக்குள் புகுந்து பிறகு,

“”புத்தி வந்தது நாங்கள் இனிமேல் பிரிட்டிஷ் சர்க்கார் சட்டத்தை மீறுவதில்லை. எங்களை வெளியே விட்டுவிடுங்கள்”

என்று எழுதி கொடுத்து கையெழுத்துப் போட்டு விட்டு வெளியில் வந்த மானங்கெட்ட யோக்கியர்கள் இப்போது காங்கிரஸ் பேச்சையும், சுயராஜ்ய பேச்சையும் பேசுவது மானங்கெட்ட வாழ்வு மாத்திரமல்லாமல் இழி தன்மையான வாழ்வும் அல்லவா என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ் ஸ்தாபனம்கூட இனி சட்டத்தை மீறுவதில்லை என்றும் வாக்குக் கொடுத்து விட்டுத் தானே இன்று காங்கிரசே சபைகளை உயிர்வாழச் செய்திருக்கிறது.

காங்கிரசை சட்ட விரோதமான இயக்கம் என்று தீர்மானம் செய்த பிறகு மறுபடி எப்படி சட்டத்துக்கு கீழ்ப்பட்டு நடக்கும் ஸ்தாபனமாயிற்று என்று யோசித்தால் மானங்கெட்ட தன்மை சரணாகதித் தன்மை இன்னது என்றும் அது யாரிடம் இருக்கின்றது என்றும் நன்றாய் விளங்கிவிடும்.

இவ்வளவும் தவிர கடைசியாய் ஒன்று கூறி இதை முடிக்கிறோம். அதாவது,

காங்கிரசுக்குள் இருந்த சமதர்மவாதிகள் காங்கிரஸ் ஸ்தாபனம் சமதர்மத்துக்கு ஏற்றதல்ல வென்றும் காங்கிரஸ் சமதர்மக் கொள்கைகளை எதிர்க்கின்ற ஸ்தாபனம் என்றும் வெளிப்படையாகச் சொல்லி காங்கிரசை கண்டித்து அவர்களது நிர்வாக ஸ்தாபனங்களையும் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

இன்னும் ரஷியா, ஜர்மனி, ஜினிவா, இங்கிலாந்து முதலிய தேசங்களில் உள்ள சமதர்மக்காரர்களின் இந்திய தேசிய காங்கிரசைப் பற்றிய எண்ணம் என்ன என்று வெளிப்படையாய் நல்ல பாஷையில் ஒருவர் தெரிய வேண்டுமானால் அது பிரிட்டிஷ் கவர்ன்மெண்டை ரகசியமாக தாங்குவதே என்பதும், காந்தியார் பணக்கார ஆட்சிக்கு ஒற்றர் என்பதும் இந்திய தேசீய காங்கிரசின் தத்துவம் என்றும், காங்கிரஸ் அழிக்கப்படாமல் பிரிட்டிஷ் ஆட்சியில் எவ்வித சரியான மாறுதலும் ஏற்பட முடியாது என்பதுமாகும்.

மற்றும் இத்தேசங்களுக்குச் செல்லும் இந்தியன் ஒருவன் தான், இந்திய தேசிய காங்கிரசுக்கு விரோதி என்று சொல்லிவிட்ட மாத்திரத்திலேயே அவனுக்கு சகலவித தொழிலாளர் சங்கத்திலும், சமதர்மிகள் சங்கத்திலும் தாராளமான வரவேற்பும் செல்வாக்கும் அனுமதியும் இருந்து வருகின்றது.

ஆகவே இந்த நிலையில் உள்ள காங்கிரஸ்காரர்களும் அவர்களது கூலிகளும் யாரோ ஒருவன் காங்கிரசைக் குற்றம் சொல்லுகிறான் என்றும், அதற்கு ஆக பெரிய நோப்பாளம் வந்து விட்டது என்றும் காட்டிக் கொள்ளுகிறது. இதை யார் மதிக்கக் கூடும் என்று கேழ்க்கின்றோம். பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல் எழுதி விட்டால் காங்கிரசைப் பற்றி உலகம் சிரிப்பது யாருக்கும் தெரியாமல் போய்விடுமா?

இன்றைய தினம் காங்கிரஸ்காரர்கள் பலபொய் வாக்குத் தத்தங்கள் பேராலும் ஏமாற்றுதல் பேராலும் மற்றும் தந்திரங்களாலும் சில பணக்காரர்களிடமிருந்து பல லட்சக்கணக்கான ரூபாய்கள் கவர்ந்து அதை மாகாணம் தோறும் பங்கிட்டுக் கொண்டு கூலி ஆட்களைப் பிடித்து விஷமப் பிரசாரம் செய்வதாலும், மக்களின் முட்டாள்தனத்தினாலும் இன்று ஏதோ இரண்டொரு வெற்றி என்பது ஏற்பட்டுவிட்டதாலேயே அவர்களுக்கு மதிப்பு வந்துவிடும் என்றோ அதுவும் தென் இந்தியாவில் யோக்கியதையோ ஆதிக்கமோ வந்து விடுமென்றோ நினைத்தால் அது கனவில் கண்ட காக்ஷியாகவும் நாடகத்தில் போட்ட ராஜா வேஷம் போலவும் தான் முடியுமே தவிர மற்றபடி காதொடிந்த ஊசியளவு பயனும் அடைய முடியாதென்றும் கூறுவோம்.

தமிழ்நாட்டில் உள்ள உண்மையான சமதர்மவாதிகள் யாரானாலும் அவர்கள் எவ்விதத் தியாகத்தைச் செய்தாவது யாருடன் சேர்ந்தாவது காங்கிரசை அழிப்பதையே தங்களது வாழ்க்கையில் லக்ஷியமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த கூலிகளின் வேஷக் கூச்சலாகிய தேசத் துரோகப் பூச்சாண்டிக்கு பயப்படப் போவதில்லை என்பதையும் துணிவுடனும் உறுதியுடனும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  21.04.1935

You may also like...