மடங்களுக்கு ஆபத்தா?

 

சுயநலக்காரர்களின் எதிர்ப்பு

நமது நாட்டில் சமயங்களைப் பாதுகாப்பதற்கு என்னும் பெயரோடு உள்ள மடங்களைப் பற்றியும், அந்த மடங்களின் அதிபர்களாக இருக்கின்ற ஆச்சாரியார்கள், தம்பிரான்கள், ஜீயர்கள் போன்ற அதிபதிகளைப் பற்றியும், அவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்கும் சொத்துக்களை எந்தெந்தக் காரியங்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பதைப் பற்றியும், அவர்கள் மதத்தின் பெயரால் தங்களுக்கு இருக்கும் செல்வாக்குகளை எந்தெந்த சுயநலமுள்ள காரியங்களுக்காகத் துஷ்பிரயோகம் பண்ணி வருகிறார்கள் என்பதைப் பற்றியும் நாம் அதிகமாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம்.

இன்று, இந்த மடங்களும், அவற்றின் பணமும், செல்வாக்கும், நமது நாட்டில், சாதிச் சண்டைகளையும், மதச் சண்டைகளையும் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பல மடங்கு அதிகமாக வளர்த்துப் பலப்படுத்தவே உபயோகப்படுகின்றன. இந்தச் சண்டைகளைப் பலப்படுத்துவதன் மூலம் தங்களை உயர்ந்த சாதியினராகவும், உயர்ந்த மத ஒழுக்கமுடையவராகவும் பாமரர்களாகிய பொதுஜனங்களுக்குக் காட்டி, அவர்கள் ஏமாறும்படி செய்து பணம் பறித்து வாழ்கின்ற பார்ப்பனர்களுக்கு இன்னும் செல்வாக்கையும், ஆதிக்கத்தையும், பணத்தையும் அதிகப்படுத்திக் கொழுக்க வைப்பதற்குமே இந்த மடங்களின் சொத்துக்களை உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் பலர் அறிந்தே யிருக்கிறார்கள்.

மதத்தின் பெயரால் பொதுஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கும் இந்தச் சோம்பேறி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் மடத்தலைவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய அதிகாரத்திலுள்ள சொத்துக்களை குடிக்கும், விபசாரத்துக்கும், அடிதடி கொலை சம்பந்தமான கோர்ட்டு வழக்குகளுக்கும் இன்னும் தங்களுடைய ஆடம்பர வாழ்க்கைச் செலவுகளுக்கும் தாராளமாகச் செலவு செய்து வருவது மடத்துச் சிஷ்யகோடிகளுக்கும் பொது ஜனங்களுக்கும் தெரியாத விஷயமல்ல.

மடம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஆத்ம வித்தை பயிலும் இடம் என்பதே அர்த்தம் என்றும், மடாதிபதிகள் தலைவர்களாய் இருந்துகொண்டு சிஷ்யர்களுக்கு ஆத்ம வித்தையை  கற்பிக்க வேண்டுவதே அவர்களுடைய கடமையென்றும், மடச் சிஷ்யர்களும், மட அபிமானிகளும் சொல்லியும் ஒப்புக் கொண்டும் வருகிறார்கள். இவர்கள் கூறுகிறபடி மடாதிபதிகளின் இந்தக் காரியம் ஒழுங்காக நடைபெற்று வருகிறதா என்றால், இன்று மடத் தலைவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் எல்லோரும், பதில் கூற வாயில்லாமல் தலைகுனிய வேண்டியதுதான். ஒரு சமயம் தைரியமான பதில் கூற வேண்டுமானால் ஏதாவது தப்பு சால்சாப்புகள் சொல்லித் தொலைக்க வேண்டுமேயொழிய உண்மையாக திருப்தியான பதில் ஒன்றையும் கூற முடியாது.

உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் இந்த மடங்களின் சொத்துக்கள் யாவும், பொது ஜனக் கல்வி அபிவிருத்தியை உத்தேசித்து முற்காலத்திலிருந்த ராஜாக்களாலும், செல்வவான்களாலும், சிஷ்யர்களாலும் கொடுக்கப்பட்டவைகளே என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தச் சொத்துக் களை இப்பொழுது இவர்கள் பொது ஜன நன்மைக்காக ஒரு கடுகளவாவது செலவழித்து வருகிறார்களா என்று யாராவது சொல்ல முடியுமா?

எந்தக் காரியத்திற்காக இந்த மடாதிபதிகளிடம் சொத்தும் அதிகாரமும் ஒப்படைக்கப் பட்டனவோ, அந்தக் காரியத்தை அவர்கள் சரியாகச் செய்து வராவிட்டால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்களையும், அதிகாரங்களையும் அவர்களைவிட்டு மாற்றுவதற்கு முயற்சி செய்வதே நேர்மையான முறையாகும். அப்படியில்லாமல், அவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தையும், சொத்துக்களையும் அவைகள் கிடைத்த நோக்கத்திற்கு மாறாகத் தங்கள்இஷ்டப்படி துஷ்பிரயோகம் செய்வார்களானால் அதை அரசாங்கமும், சிஷ்யர்களும், பொது ஜனங்களும் கவனிக்காமல் கண்ணை மூடிக் கொண்டோ, அல்லது கவனித்தாலும் ஒன்றும் பேசாமலும் சும்மா அவர்கள் இஷ்டப்படி விட்டுக் கொண்டோ இருப்பது நியாயமாகுமா என்று யோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம்.

பொது ஜனங்கள் பல வருஷங்களாகவே மடங்களின் நிர்வாகங்களைச் சீர்திருத்தி, மடாதிபதிகள் செய்து வரும் மத ஒழுக்கத்திற்கு விரோதமான அக்கிரமங்களை ஒழித்து அவைகளின் நிர்வாகத்தை ஒழுங்காக நடைபெறச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வந்திருக்கிறார்கள். இதற்காகச் சில மடங்களின் மேல் அந்த மடங்களின் சிஷ்யர்கள் என்பவர்களால் கோர்ட்டுகளில், “”ஸ்கீம் சூட்டுகள்” கொடுக்கப்பட்டு வழக்குகள் நடத்தப் பட்டதும் பொது ஜனங்களுக்குத் தெரிந்த விஷயமாகும்.

இப்பொழுது இருக்கும் இந்து தரும பரிபாலனச் சட்டத்தின்படி, மடங்களில் நடைபெறும் ஊழல்களையும், அந்த மடாதிபதிகளால் தங்களுடைய சரீர சுகத்தைக் கருதியும், அதற்கு உதவி செய்பவர்களின் தயவைக் கருதியும் அக்கிரமமான வழியில் சொத்துக்களை வீணாக்கும் செய்கையைத்  தடுக்க வழியில்லை. ஆகையால் மடங்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி, அவைகளின் சொத்துக்களையும் நாசமாகாமற் காப்பாற்று வதற்காகச் சென்னைச் சட்டசபையில் புதிய மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டு அது இப்பொழுது சட்டசபையின்  தேர்ந்தெடுக்கப்பட்ட தனிக்கமிட்டியின் ஆலோசனையில் இருந்து வருகிறது.

மடங்களின் நிர்வாக விஷயம் ஒழுங்குபடுவதற்காக ஒவ்வொரு மடங்களுக்கும் தனித்தனியே “”மடத்தின் லௌகீக விஷயங்களைக் கவனிக்க” ஒரு நிர்வாக உத்தியோகஸ்தரை நியமிக்க வேண்டுமென்பதும், (இதனால் மத விஷயங்களில் மடாதிபதிகளின் அதிகாரம் சிறிதும் குறைவுபடாது. ஆனால் மற்ற நிர்வாக விஷயங்களிலும் அவர்களுக்குச் செல்வாக்கு உண்டு.) மடத்தின் சிஷ்யர்களைக் கொண்ட ஆலோசனை சபையொன்று ஏற்படுத்தி, அச்சபை நிர்வாக உத்தியோகஸ்தருக்கும், மடாதிபதிக்கும் ஆலோசனை கூறக் கூடியதாக இருக்க வேண்டுமென்பதும், இந்த ஆலோசனைகள் கவனிக்கப்படுகிறதா என்பதை இந்து தரும  பரிபாலன போர்டார் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்பதுமே தற்பொழுது தனிக் கமிட்டி ஆலோசனையில் இருக்கும் மசோதாவில் அடங்கியிருக்கும் முக்கியமான விஷயங்களாகும்.

இந்த மசோதாவை மடாதிபதிகளுக்கும், பிரபலஸ்தர்களுக்கும், அவர்களுடைய அபிப்பிராயம் இவ்விஷயத்தில் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக கமிட்டியார்கள் சுற்றறிக்கையாக அனுப்பி யிருக்கிறார்கள். சிலர் இந்த மசோதாவின் முக்கியத்தையும், அவசியத்தையும் இதனால் ஏற்படும் நன்மையையும் உணர்ந்து இதற்குச் சாதகமான அபிப்பிராயங் கொடுத்து வருகிறார்கள். ஆனால் தங்கள் சுகபோகச்  சுயநல வாழ்வுக்கு ஆபத்து வரும் என்று கருதும் மடாதிபதிகளும் அந்த மடாதிபதிகளுக்குப் பல வகையில் கையாட்களாக இருந்து வயிறு பிழைக்கும் கூலிகளும், தரகர்களும், மடத்துப் பணங்களை இதுவரையிலும் கொள்ளையிட்டது போதாமல், இன்னும் கொள்ளையடிக்க வேண்டுமென்று இருக்கின்ற பார்ப்பன வக்கீல் கூட்டங்களும் இந்த மசோதாவை ஆட்சேபித்துப் பலமாகப் பிரசாரம் பண்ணி வருகிறார்கள். இந்த மசோதாவை நிறைவேற்றிச் சட்டமாக்கினால், மடங்கள் அழிந்து விடும் என்றும், மதத்திற்கு ஆபத்து வருமென்றும் சென்னை அரசாங்கமும், சட்டசபையும், மந்திரிமார்களும் இம்மசோதாவுக்கு ஆதரவு அளிக்காமல் கைவிட்டுவிடவேண்டுமென்றும் கூறி வருகிறார்கள். காலஞ்சென்ற பனகால் அரசர் இந்து  தரும பரிபாலன மசோதாவைக் கொண்டு வந்தபோது, இந்த வைதீகர்களும், கோயில் பணத்தைக் கொள்ளையடித்து வாழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தாரும் எவ்வளவு கூப்பாடு போட்டார்களோ அந்தக் கூப்பாட்டை மறுபடியும் இந்த மட பரிபாலன மசோதா விஷயத்தில கிளப்பியிருக்கிறார்கள். மடங்களின் செல்வம், அக்கிரமமான வழியில் செலவாகாமல், ஒழுங்கான வழியில் செலவாவதற்காகச் செய்யப்படும் இந்த முயற்சியினால் மதம் எப்படி அழிந்து விடும் என்பதும், மடங்கள் எப்படிப் பாழ்பட்டு விடும் என்பதும், மடாதிபதிகளின் செல்வாக்கு, அதாவது அவர்களுக்கு மதத்தின் பேரால் உள்ள மதச் செல்வாக்கு எப்படிக் குறைந்துவிடும் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

உண்மையில் மடாதிபதிகள் ஆத்ம போதனை செய்வதற்கென்றும், ஜன சமூகத்திற்கு நல்லொழுக்க போதனை செய்வதற்கென்றும் ஏற்பட்டிருப் பார்களானால் அவர்களுக்கு இந்தச் சொத்து நிர்வாகத்தைப் பற்றியும், அந்த நிர்வாகத்தின் மேல் அதிகாரம் செலுத்துவதைப் பற்றியும் ஏன் கவலை உண்டாக வேண்டும் என்று கேட்கிறோம், ஆத்ம ஞானியாகவே யிருந்து, ஆத்ம ஞானத்தைப் போதிக்கின்ற ஒருவனுக்கு, ஆத்ம ஞானமும் ஆத்ம ஞான போதனையும் நாசமாகும்படியான உலக விவகாரத்தில் அதிக தொடர்பும் ஆசையும் வளரும்படியான சொத்து, வம்பு வழக்கு சம்பந்தமான லௌகீகத் தொல்லை இருக்குமானால் அவன் எப்படி உண்மையான ஆத்ம ஞானியாக இருக்க முடியும்? ஆத்ம ஞானத்தைப் போதிக்க முடியும் என்று இப்பொழுது கூச்சல் போடும் மடாபிமானிகளைக் கேட்கிறோம்.

ஆகவே, தற்பொழுது ஆலோசனையில் இருந்து வரும் மசோதாவைச் சட்டமாக்குவதனால், மடங்களுக்கோ, மடாதிபதிகளுக்கோ, அவர்களுடைய “”ஆத்மஞான”ங்களுக்கோ, “”ஆத்ம ஞான போதனை”களுக்கோ, மதங்களுக்கோ எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை என்பது உறுதி. ஆதலால் உண்மையான வழியில் நடக்க விரும்பும் மடாதிபதிகளும், அவர்களுடைய சிஷ்யர்களும் இந்த மசோதாவை முழுமனதோடு வரவேற்க வேண்டுமே ஒழிய, கண்டிக்கவோ, அரசாங்கத்தார் மதத்தில் தலையிடுகிறார்கள் என்று வீண் கூச்சல் போடவோ சிறிதும் நியாயமில்லை. இது இப்பொழுது இம்மசோதாவைக் கண்டிக்கும் கூட்டத்தார்க்குத் தெரியாத விஷயமும் அல்ல. ஆனாலும் சுயநல வயிற்றுப் பிழைப்புக் கூட்டத்தார்கள் மதங்களின் பாதுகாப்பையே நோக்கமாகக் கொண்ட இந்த நல்ல மசோதாவை பலமாக கண்டிப்பதற்குக் காரணம் சுயநலமும் வயிற்றுப் பிழைப்புமே என்பதே தவிர வேறு எதாக இருக்க முடியும் என்று யோசித்து பார்த்தும்கூட நமக்கு ஒன்றும் விளங்கவில்லை.

நம்மை பொறுத்த வரையிலும் இந்த மடங்களைப் பற்றியோ, இவர்களுடைய மதப் பிரசாரத்தைப் பற்றியோ, “”ஆத்ம ஞான போதனை”யைப் பற்றியோ எவ்வித கவலையும் இல்லையென்பதோடு இந்த மடங்களெல்லாம், அடியோடு நாசமானாலும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம். ஆனால் தேச பொது ஜனங்களால் ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட இந்த மடங்களின் சொத்துக்கள் ஒருசில கூட்டத்தாரால் மட்டிலும் கொள்ளையடித்துக் கொண்டும் யாருக்கும் பிரயோஜனமில்லாத வீண் வழிகளில் செலவாகிக் கொண்டும் வருவதைத் தடுத்து அவைகளை நல்ல வழிகளில் தேச மக்களுக்குப் பயன்படுமாறு செலவாகும்படி செய்ய வேண்டும் என்பதற்காகவே இம்மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆதலால் சட்டசபை அங்கத்தினர்களும், உண்மையில் மடங்களின் நிர்வாக விஷயத்தில் கவலையுடையவர்களாயிருந்தால், யாருடைய எதிர்ப்புக்கும் அஞ்சாது இதை நிறைவேற்றி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  10.03.1935

You may also like...