கராச்சி கலகத்திற்கு மதமே காரணம்

 

இந்த வாரம் கராச்சியில் நடந்த கலகத்தைப் பற்றிய செய்தி முழுவதையும் தினசரிப் பத்திரிகைகளில் அநேகர் படித்திருக்கலாம். இக் கலகத்தினால் நிரபராதியான மக்களில் 40 பேர்கள் வரையில் போலீசார் சுட்டதன் பயனாக மாண்டதோடு சுமார் 100 பேர் வரையில் காயம் அடையும் படியும் நேர்ந்துவிட்டது.

இது நேரடியான இந்து முஸ்லீம் கலகமில்லாமல் போலீசாருக்கும், முஸ்லீம்களுக்கும் உண்டான கலகமானாலும் இதற்குக் காரணம் இந்து முஸ்லீம் மதவெறி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாதுராம் என்னும் இந்து ஒருவர், முஸ்லீம் மார்க்கத்தைத் தூஷித்து எழுதியதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அவரை அப்துல்காயம் என்னும் முஸ்லீம் ஒருவர் நடுக்கோர்ட்டிலேயே கொலை செய்த குற்றத்துக்காக வேண்டி அப்துல் காயத்திற்குக் கோர்ட்டாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே கலகத்திற்கு அடிப்படையான காரணமாகும்.

இதற்கு முன் பல தடவைகளில் வடநாட்டில் நடந்த கலகங்களுக்கு எல்லாம் மத சம்பந்தமே காரணமாக இருந்திருக்கிறது என்பதும் நேயர்கள் அறியாதது அல்ல.

ஜனங்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கு என்று ஒரு மதமும், ஜனங்கள் ஒன்றுபடாமல் தனித்தனியாகப் பிரிவுபட்டு வாழ்வதற்கென்று ஒரு மதமும், வீரத்தோடு வாழ்வதற்கென்று ஒரு மதமும், பேடிகளாய் வாழ்வதற்கு என்று ஒரு மதமும், தாங்கள் எப்பொழுதும் உயர்ந்த சாதியாராகவே யிருந்து கொண்டு மற்றவர்களைத் தமக்குக் கீழாக்கி அவர்களை யெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருப்பதற்கென்றே ஒரு மதமும், தாம் எப்பொழுதும் அடிமையாகவே யிருந்துகொண்டு பிற சமூகத்தினரின் கொடுமையைச் சகித்துக் கொண்டு மானமற்று உயிர் வாழ்வதற்கென்றே ஒரு மதமும் இருக்குமானால் இத்தகைய கொள்கைகளையுடைய மதங்களையே அந்தந்த மதத்தை அனுசரிக்கும் மக்கள் பிடிவாதமாகக் கைப்பற்றி நடப்பதே தமது கடமையென்று நினைத்திருப்பார்களானால், ஒரு தேசத்தில் எப்படி ஒற்றுமையும், சமாதானமும், மனிதத் தன்மையும் சுயமரியாதையும் குடி கொண்டிருக்கும் என்று கேட்கின்றோம்.

இந் நிலை மாற வேண்டுமானால் எல்லா மக்களுக்குள்ளும் சகோதர உணர்ச்சியை உண்டாக்கத்தக்க ஒரு மதத்தில் மற்ற மதத்தினர் அனைவரும் சேர்ந்து விடுவதன் மூலமாகவோ அல்லது எல்லா மதங்களையும் அடியோடு ஒழித்து மதத் தொல்லைகளின்றி வாழ்வதன் மூலமாகவோதான் தேசத்தில் ஜன சமூகச் சச்சரவு உண்டாகாதபடி சமாதானமும் ஒற்றுமையும் உள்ள வாழ்க்கை நடத்த முடியுமே ஒழிய வேறு எந்த விதத்தினால் சமாதான வாழ்க்கை நடத்த முடியும் என்பதை யோசித்துப் பதில் சொல்லும்படி மத பக்தர் களையும், மதப் பாதுகாப்பு கோரும் தேசீயவாதிகளையும் கேட்கிறோம்.

இந்த விஷயத்தைப் பற்றி ஒரு சிறிதும் லட்சியம் பண்ணாததோடு சமாதான பங்கத்திற்குக் காரணமாக இருக்கின்ற எல்லா மதங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாப்போடு கூடிய சுயராச்சியம் தான் வேண்டும் என்று கூச்சலிடுவதும், அது தான் தேசீயம், தேசாபிமானம், பாரத மாதாவுக்குச் செய்யும் ஊழியம், தேச பக்தர்களின் கடமை என்பதும், இதற்கு மாறாக இருப்பவர்களையெல்லாம் அதாவது ஜனசமூகத்தை ஒன்றுபடுத்த வேண்டும், ஒன்றுபடுவதற்கு விரோதமாக இருப்பவைகளையெல்லாம் அடியோடு ஒழிக்க வேண்டும் என்பவர்களையெல்லாம் தேசத் துரோகிகள், நாஸ்திகர்கள், மதத் துரோகிகள் என்றும் கூறித் தூற்றுவதெல்லாம் சுத்த முட்டாள்தனமானதும், விஷமத்தனமானதும் ஆகும் என்று சொல்லுவது குற்றமாகுமா? இந்த நிலையில் கேட்கப்படும் சுயராச்சியம் என்பது, ஒரு கையினால் எழுதி மறு கையினால் அழித்துவிடுவதைப் போன்றதல்லவா?

குடி அரசு  துணைத் தலையங்கம்  24.03.1935

You may also like...