ஈரோடு பெற்றோர் சங்கம் கமிஷனருக்குப் பாராட்டு

 

தலைவர் அவர்களே! தோழர்களே!!

இன்று இங்கு கூடியிருக்கும் கூட்டம் நம் நகரை விட்டுப் போகும் கமிஷனரைப் பாராட்டுவதற்காகக் கூடியிருக்கும் கூட்டமாகும். இதுவரை பல கூட்டங்களில் அவரைப் பாராட்டிப் பேசப்பட்டுவிட்டது. இன்று கமிஷனர் நம் முன் அவர் செய்த வேலைகளையும், செய்யவிருந்த வேலைகளைப் பற்றியும் பேசினார்.

இங்கு பேசிய பலர் கமிஷனர் வந்து பல காரியங்கள் செய்துவிட்டார் என்று புகழ்ந்து பேசினார்கள்.

ஆனால் கமிஷனர் வந்தபின்தான் இந்த வேலைகள் செய்ய முடிந்தது என்றால் சேர்மனும், கௌன்சிலர்களும் இதுவரை தூங்கினார்களா என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

இம்மாதிரி வேலைகள் கமிஷனர்களால்தான் முடியும். கடைவீதி கமிஷனர் வந்தவுடன்தான் அகலமாகவிருக்கிறது என்று ஒரு நண்பர் பேசினார்.

கடைவீதி அகலம் செய்யும் விஷயம் சேர்மனோ, கவுன்சிலர்களோ செய்தால், செய்ய முயற்சித்தால் அடிவிழுகும். ஏனெனில் கடைவீதியில் பாதிக் கடைகள் கௌன்சிலர்கள் கடைகள். கடைவீதியில் பழக்கடை வைத்திருந்ததை எடுப்பதற்கு கமிஷனர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது. அதற்காக அவரை இரவில் அடிப்பதற்குக்கூட முயற்சித்தார்கள். அவர் அதை லக்ஷியம் செய்யவில்லை. இம்மாதிரி ஆபீசர்களால்தான் இம்மாதிரி வேலைகள் செய்ய முடியும். ஏனெனில் கமிஷனர்களெல்லாம் ஊழியர்கள். சேர்மன், கௌன்சிலர்கள், பிரதிநிதிகள். ஊழியர்களால்தான் தைரியமாகவும், தாட்க்ஷண்யமில்லாமலும் செய்ய முடியும். பிரதிநிதிகள் அவ்விதம் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் நாளைக்கு ஓட்டுக்குப் போக வேண்டும்.

புருஷோத்தம் அவர்கள் ஒரு நல்ல ஊழியர். நான் ஏன் அவரை ஊழியர் என்று கூறுகிறேன் என்றால் அவர் தன்னை ஒரு ஊழியர் என்றே கூறிக் கொள்ளுவார்.

அவர் காரியம் சாதிப்பதற்குக் கெஞ்ச வேண்டிய இடத்தில் கெஞ்சி தம் காரியத்தைச் சாதிப்பார்.

இவர் பல குழந்தைகளை விட்டுச் செல்வதாகச் சொன்னார்கள்.

லெஜிட்டிமேட் குழந்தைகள் அதுபோகத் தனக்கு சம்மந்தமில்லாத (இன்லெஜிட்டிமேட்) பல குழந்தைகளை விட்டுச் செல்லுகிறார் என்று நான் கூறுகிறேன்.

ஆனால் இவர் வந்தபின் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது. அதாவது ஆப்பீசர்களும், பொது ஜனங்களும் ஒன்று சேர்ந்து விஷயங்களை உணர்ந்து கொள்ளும்படி செய்தார்.

அவர் இவ்வூரை விட்டுப் போவதால் அவர் செய்துவிட்டுப் பாக்கி விட்டிருக்கும் வேலைகள் நின்று விடாது. இவைகள் யாவும் இது சமயம் நமது ஊருக்கு வந்திருக்கும் புதுக் கமிஷனர் செய்வார் என்று நான் நம்புகிறேன்.

தோழர் புருஷோத்தம் அவர்கள் போகப் போகும் இடம், தகராறுகள் இருக்கும் இடம், முனிசிபாலிட்டியைக் கலைத்துவிட யோசித்துக் கொண்டிருக்கும் இடம். அம்மாதிரி இடத்திற்குப் போய்த்தான் அங்கு சமாதானம் செய்து இம்மாதிரி வேலைகள் செய்ய வேண்டும். ஆகையால் இவர் அங்கு அவசியம் போக வேண்டும். இவர் போனால் சமாதானம் செய்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இவர் போவதால் நம் முனிசிபாலிட்டியைக் கலைத்து விடுவார்களென்று நீங்கள் நினைக்க வேண்டாம். நமது சேர்மன் இருக்கும்போது அம்மாதிரி ஒன்றும் நடைபெறாது.

நமது சேர்மனுக்கு வருகிற கலெக்டர்களை எல்லாம் சுவாதீனம் செய்து கொள்ளத் தெரியும். ஆகையால் நம் ஊருக்கு நன்மையான காரியத்தை செய்துவிட்டு மற்றொரு ஊருக்குப் போகும் கமிஷனரைப் பாராட்டி அனுப்ப வேண்டுகிறேன்.

ங்புதிதாக வந்திருக்கும் கமிஷனர் தோழர் ராமதாஸ் நாயுடு அவர்கள் எழுந்து தோழர் புருஷோத்தம் அவர்கள் செய்துவிட்டுப் போயிருக்கும் வேலைகளைத் தாம் செய்வதாகவும், அவர் செய்து வந்தது போலவே பொது ஜனங்களின் நன்மைக்கும் பாடுபடுவதாகவும் கூறினார்.சி

குறிப்பு:            ஈரோடு முனிசிபல் பாடசாலையைச் சேர்ந்த பெற்றோர்கள் சங்க ஆதரவில் ஈரோடு கமிஷனர் திரு புருஷோத்தம் அவர்கள் திருநெல்வேலி கமிஷனராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நடை பெற்ற பாராட்டுக் கூட்டத்தில் கமிஷனரைப் பாராட்டி ஆற்றிய உரை.

குடி அரசு  சொற்பொழிவு  29.09.1935

You may also like...