அன்னிய அரிசிக்குத் தடையா?

 

தோழர்களே!

இந்திய சட்டசபையில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. அதைப் பற்றி பொது ஜனங்கட்கு கூற வேண்டுமென்றும், அதனால் ஏழைகட்கு ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி அன்னிய அரிசிக்கு வரி விதிக்கக் கூடாதென்றும் இது போன்ற சங்கங்களால் தீர்மானங்கள் செய்து சர்க்காருக்கு அனுப்ப வேண்டு மென்றும் குடிஅரசில் இதற்கு முன் எழுதப்பட்டிருந்தன. அதன்படியே கோவை, திருச்சி, சென்னை முதலிய பல இடங்களில் தொழிலாளர்களால் அன்னிய அரிசிக்கு வரி விதித்தால் எங்கட்கு மிகுந்த கஷ்டமேற்படும் என்று தீர்மானித்து அரசாங்கத்தாருக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஏழை மக்களை உத்தேசித்து வேண்டுமென்றேதான் அரசாங்கத்தார் அன்னிய அரிசிக்கு வரி விதிக்க முன்வரவில்லை. ஆனால் நமது பிரதிநிதிகளாக இந்திய சட்டசபைக்குச் சென்றிருப்பவர்கள் தான் அதற்குக் கவலை எடுத்துக் கொண்டு வரிவிதிக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதை நாம் கண்டிக்க வேண்டாமா? நமது உண்மையான நிலையை சர்க்காருக்கு எடுத்துக்காட்ட வேண்டாமா?

இதை இப்படியே விட்டுவிட்டால் இனி என்னென்ன செய்வார்கள் என்பதை எடுத்துக் கூற வேண்டியதில்லை. அன்னிய அரிசிக்கு வரி விதிக்க வேண்டுமென்பதற்குக் காங்கிரஸ்காரர்கள் சொல்லும் காரணங்களைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டு அரிசியின் விலை குறைந்துவிட்டதாம். அதனால் நமது மிராசுதார்கள் மிக சங்கடமான நிலமையில் இருக்கிறார் களாம். அச் சங்கடமான நிலைமையைத் தடுக்க வேண்டுமானால் அன்னிய அரிசியைத் தடுத்து நம் நாட்டு அரிசி அதிக விலைக்கு விற்கும்படி செய்ய வேண்டுமாம். இதன் யோக்கியதையைப் பாருங்கள்.

கந்தாயம் குறைக்க வேண்டுமென்று நம் மிராசுதார்கள் கூறுகிறார்கள். குறைத்துக் கொண்டு போகட்டும். நாம் அதற்குத் தடை கூறவில்லை.

இன்று அரிசி பட்டணம்படி 50 கொண்ட மூட்டை ஒன்றுக்கு ரூபா 10 முதல் 12லீ வரையும், சின்னப்படிக்கு படி இரண்டணா வீதமும் விற்கிறது. இது சல்லிசான விலை என்றால் உயர்ந்த விலை என்று எதைச் சொல்லுவது. வெளிநாட்டிலிருந்து இந்த வருஷம் 5லீ லட்சம் மூட்டை அரிசி இறக்குமதியாக்கி இருக்கிறது. அப்படி இருந்தும், ரூபாய்க்கு பட்டணம் படியில் 4 படி அரிசிதான் விற்றிருக்கிறது. அந்த அரிசி வராவிட்டால் நமது கதி என்ன ஆகியிருக்கும். இந்த நிலையில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கும் பட்சம் மிராசுதார்கட்கு லாபமும் குடியானவர் களான ஏழைகட்கு நஷ்டமும், பெருங்கஷ்டமும் ஏற்படும் என்பதை காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? இந்த பத்து வருடகாலத்திற்கு முன் அரிசி சாப்பிட்டவர்களை விட இப்பொழுது பத்து மடங்கு அதிகமாக அரிசி சாப்பாடு சாப்பிடுகிறார்கள்.

முன் கம்பு, கேப்பை, சோளம், திணை முதலிய தானிய வகைகளை வாங்கிச் சாப்பிட்டவர்கள் இப்போது அரிசி சாப்பாடு சாப்பிடுகிறார்கள். ஏன்? என்றால் அரிசி சாப்பிடுவதை சிலர் நாகரீகமென்று கருதி இருக்கிறார்கள். சிலர் தானியம் சாப்பிட்டால் கேவலம் என்று நினைக்கிறார்கள். சிலர் தாங்கள் பணக்காரர்கள் என்பதற்கு அரிசி சாப்பிடுவது ஒரு அடையாளம் என்று நினைத்து அரிசி சாப்பாடு சாப்பிட்டு வருகிறார்கள். கோவை ஜில்லாவில் 20 லட்சம் ஜனத்தில் 15 லட்சம் ஜனங்கள் கொஞ்ச காலத்திற்கு முன் தானிய சாப்பாடு சாப்பிட்டார்களென்று சொல்லலாம். இப்போது 15 லட்சம் பேர்கள் அரிசி சாப்பாடும், 5 லட்சம் பேராவது தானியச் சாப்பாடும் சாப்பிடுகிறார்களா? என்று சொல்ல முடியாது. இந்தப்படி கணக்குப் பார்த்தால், நம் நாட்டில் விளையும் அரிசி நம் நாட்டு ஜனங்கட்குப் போதாது, வெளிநாட்டிலிருந்தும் அரிசி வந்தால் தான் நம் நாட்டில் அரிசி பஞ்சமில்லாமல் சவுக்கியமாக இருக்க முடியும். வெகு காலமாகவே நமக்கு ரங்கூன் அரிசி வந்து கொண்டுதான் இருந்தது. முன் நமக்கு சௌகரியம் இல்லாததால் இங்கிருந்து வெளிநாட்டிற்கு சாமான்கள் ஏற்றுமதி ஆகாததால் இங்கு விளையும் சாமான்களை இங்கேயே செலவு செய்தார்கள். மீதி இருந்ததை குழியில் போட்டு மூடி பஞ்சத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

முன் நமது நாட்டில் அடிக்கடி பஞ்சம் ஏற்படும். இப்போது எங்கு பார்த்தாலும் ரயில்வே போக்குவரத்து ஏற்பட்டிருப்பதால் பஞ்சமில்லாது விளைந்த இடத்திலிருந்து விளைவில்லாத இடத்துக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு ஒரு அளவு பஞ்சம் இல்லாமலிருக்கிறது. போக்குவரவு சாதனம் ஏற்பட்டிருப்பதே இதற்காகத்தான். அப்படியிருக்க அன்னிய அரிசியை, ஆகார சாமானைத் தடுக்க வேண்டுமென்று சொல்லுவது ஞாயமா? ஒழுங்கா? என்று ஏழைகள் கவனிக்க வேண்டுகிறேன்.

இப்போது அன்னிய அரிசியைத் தடுக்க வேண்டுமென்பது அரசாங்கமா? அல்லது ஏழைகளுக்காக பாடுபடுவதற்காக இந்திய சட்டசபைக்குச் செல்லு கிறோம் என்று கூறிச் சென்ற நமது பிரதிநிதிகளா என்று உங்களைக் கேட்கிறேன்.

இந்த அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதால் ஏழைகளுக்குத்தான் கஷ்டம். பணக்காரர்களுக்குக் கஷ்டம் இல்லை. இன்று இந்திய சட்டசபையில் இருக்கும் பிரதிநிதிகள் யார் என்று உங்களைக் கேட்கின்றேன். பணக்காரர் களின் தரகர்கள்தான் இன்று இந்திய சட்டசபையில் இருக்கிறார்கள். அங்கு சென்றுள்ள பிரதிநிதிகள் ஏழை மக்களின் கஷ்டத்தை நீக்கவே நாங்கள் வந்திருக்கிறோம் என்று கூறுவார்கள். இது பித்தலாட்டம். சர்க்கார் ஓடுகின்ற மாட்டின் வாலை பிடிப்பவர்கள்; ஏனெனில் அங்கு சென்றுள்ள பிரதிநிதிகள் சொல்லுகின்றபடி அவர்கள் செய்துவிட்டு நாம் கேட்டால் உங்கள் பிரதிநிதிகள்தான் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கும்படி செய்தார்கள் என்று கூறி விடுவார்கள். அன்னிய அரிசிக்கு வரி விதித்து தடையேற்பட்டு நமது நாட்டு அரிசிக்கு விலையேறி விடுமானால் இன்று சர்க்காரைக் கண்டிக்கும் மிராசுதாரர்களும், அவர்கள் தரகர்களாகிய இந்திய சட்டசபை பிரதிநிதிகளும் சர்க்காரைப் பாராட்டுவார்கள். இன்று அன்னிய அரிசிக்கு வரி விதிக்க வேண்டுமென்று கூறுகின்ற இவர்கள் சிகரெட்டுக்கும், வைரம், கெம்பு, பட்டு, மோட்டார் முதலியவைகட்கும் இன்னும் இரட்டிப்பு வரி விதிக்கட்டுமே. இன்று ஏழைகள் கஷ்டமின்றி சாப்பிடுகின்றார்களா? எவ்வளவு பேருக்கு வேலை இல்லை? இந்நிலையில் அரிசிக்கு வரியா?

இன்று சர்க்கார் 5000 சம்பளம் கொடுப்பவருக்கு 2000மும், 2000 கொடுப்பவருக்கு 1000மும், 1000 கொடுப்பவர்கட்கு 500ம், 500 கொடுப்பவர்கட்கு 200ம், 200 கொடுப்பவர்கட்கு 100ம் 100 கொடுப்பவர்கட்கு 50 கொடுக்கட்டுமே. ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு ரூ.30 போதும். ஒரு கூட்டத்தாருக்குச் சம்பளம் மூன்று சைபர், நாலு சைபர் கொடுத்து வருகிறார்கள். இதைக் குறைக்க எந்தப் பிரதிநிதிகளும் பாடுபட்டதாகத் தெரியவில்லை. அன்னிய அரிசியை மட்டும் குறைத்து விடுவதால் மாத்திரம் இன்று உள்ள கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமா?

இதைப் பற்றி “”ஏழைகளுக்காக பாடுபடுகின்றோம்; தேசத்திற்காகப் பாடுபடுகின்றோம்” என்று கூறிக் கொண்டு திரியும் ஒரு தேசீயப் பத்திரிகையாவது, காங்கிரஸ் பத்திரிகையாவது, பார்ப்பன பத்திரிகையாவது எழுதிற்றா? குடிஅரசு பத்திரிக்கை ஒன்று தான் அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதால் ஏழை மக்களுக்கும், கூலிக்காரர்களுக்கும் கஷ்டம் என்று கூறி வந்தது. கோவை, வட ஆற்காடு, சேலம் ஜில்லாக்களின் பிரதிநிதியாக சென்றிருப்பவர் கொஞ்சமும் நெஞ்சில் ஈவு இரக்கமின்றி, “”சென்னை மாகாணத்தில் அரிசி விலை சல்லீசாய் விட்டது, அன்னிய நாட்டு அரிசி இறக்குமதியைத் தடுத்து (அரிசி விலை ஏறும்படியாக) உடனே கவர்மெண்டு தக்க ஏற்பாடு செய்ய வேண்டு”மென்று சட்டசபையில் பேசியிருக்கின்றார். இந்த பிரபுதான் காங்கிரஸ்காரர்களால் அனுப்பப்பட்டவர். நான் கேட்கின்றேன். கோவை, சேலம், வடாற்காடு ஜில்லாவில் மொத்த விஸ்தீரணத்தில் 100ல் 1 பங்கு பூமியாவது நெல் விளைகின்றதா என்று கேட்பதுடன், மொத்த ஜனத் தொகையில் 100ல் ஒரு பாகம் ஜனங்களாவது கேப்பை, (கேழ்வரகு) கம்பு, சோளம், திணை இன்று சாப்பிடுகின்றார்களா? தஞ்சை ஜில்லா மிராசுதாரர்கள் தான் அன்னிய அரிசி இறக்குமதியால் கஷ்டப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆடம்பரச் செலவிற்கும், தாசி வீட்டுக்குச் செல்லும் செலவிற்கும் எலக்ஷன்களுக்கு 20 ஆயிரம் 30 ஆயிரம் செலவுக்கும் பணம் கிடைக்காது கஷ்டப்படுகிறார் களேயொழிய இவர்கள் கூறுவது போல அவர்கட்கு சாப்பாட்டுக்கு கஷ்டமா? வரிக்கு கஷ்டமா? கலம் 2ரூ 3ரூ காலத்தில் குவிந்த பணமெல்லாம் எங்கு போயிற்று? அன்னிய அரிசிக்கு வரி விதித்து அரிசி விலை இன்னும் உயரும்படி செய்தால் இது ஏழை மக்கட்கு திமிர் வரி விதிப்பது போலல்லாமல் வேறென்ன என்று கேட்கிறேன்.

இதை நாம் சர்க்காருக்கு எடுத்துக் கூற வேண்டும். எடுத்துக் கூறவில்லையானால் நாம் ஒப்புக் கொண்டவர்கள் ஆவோம். சர்க்காருக்கு அரிசிக்கு வரிவிதித்து ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லை. நம்மவர்கள் தான் உள்ளே புகுந்து குடைகின்றார்கள். ஆதலால் சட்ட சபையில் உள்ளவர்கள் நமது பிரதிநிதிகள் அல்லவென்றும் அவர்கள் பணத்துக்கும் மிராசுக்கும் பிரதிநிதிகள் என்றும் சொல்ல வேண்டும் என்பதாகவும், இன்னும் வாலிபர்கள் கடமையைப் பற்றியும், வாலிபர்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் மிக விளக்கமாகப் பேசினார்.

குறிப்பு:            ஈரோடு மகாஜன வாசக சாலையில் 24.02.1935 இல் “”அன்னிய அரிசிக்குத் தடையா?” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு  சொற்பொழிவு  10.03.1935

You may also like...