காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?

 

ஏன் அபேட்சகரை நிறுத்தவில்லை

ஜஸ்டிஸ் கட்சியில் காலியான இரண்டொரு சென்னை சட்டசபை ஸ்தானங்களுக்கு அபேட்சகரை நிறுத்தாததால் ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து போய் விட்டதென்றும் அதற்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கில்லை என்றும் காங்கிரஸ்காரர்களும் காங்கிரசின் பேரால் வாழும் பத்திரிகைகளும் செய்த விஷமப் பிரசாரத்துக்கு எல்லை இல்லை.

சில பாமர மக்கள் இதை நம்பிக் கொண்டும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது “பகுத்தறிவு’ அதற்குத் தக்க பதில் புள்ளி விபரத்தோடு எழுதியிருந்தது.

ஐயோ பாவம்! இந்த விஷமப் பிரசாரம் நடந்து 8 நாள் கூட ஆகவில்லை. இப்போது காங்கிரஸ் ஒழிந்து விட்டதா? நாட்டில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய காலம் வந்துவிட்டது. என்னவென்றால் சமீபத்தில் காலியாகும் சென்னை நகரசபை ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் அபேட்சகர்களை நிறுத்துவதில்லை என்று தீர்மானம் செய்துவிட்டதாம். இது எல்லா பார்ப்பனப் பத்திரிகைகளிலும் காணப்படுகிறது.

ஆகவே எந்த ஸ்தாபனமும் சமய சந்தர்ப்பம் சௌகரியம் ஆகியவை களை கவனித்துத் தான் ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் அபேட்சகர்களை நிறுத்த முயற்சிக்குமே ஒழிய கண் மூடிக் கொண்டு ஒவ்வொரு ஸ்தானத்துக்கும் சடங்கு மாதிரி ஆள்களை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அந்தப்படி நிறுத்தப்படாததாலேயே அந்தக் கட்சி ஒழிந்து போய்விட்டது, செல்வாக்கு அற்றுப் போய்விட்டது என்று சொல்வதும் முட்டாள்தனமேயாகும்.

குடி அரசு  கட்டுரை  24.02.1935

You may also like...