சிவில் கடனுக்கு ஜெயிலா?
ஆண்பிள்ளை பட்ட கடனுக்கு
பெண்டுபிள்ளை பட்டினி கிடப்பதா?
கடன்பட்டு கொடுக்க முடியாமல் போய்விட்டவர்களை சிவில் ஜெயிலில் வைக்கும் முறை அனாகரீகமானதும், மிக்க அனியாயமானதுமான காரியம் என்று இதற்கு முன் பலமுறை எழுதி இருக்கிறோம்.
ஜெயில் என்று சொல்லப்படுவது ஏதாவது ஒரு குற்றம் செய்து தண்டனை அடைந்தவர்களுக்கே உரியதாகும். அப்படிக்கின்றி உலக வாழ்க்கையில் வியாபாரம், விவசாயம், தொழில் முறை முதலிய காரியங்களுக்கு இருதரத்தாரும் லாபத்தை உத்தேசித்து செய்யப்படும் வரவு செலவுகளில் துண்டு விழுந்து கடன் கொடுக்காமல் போய்விட்டால் அதற்காக ஒருவனை ஜெயிலில் வைப்பது என்பது எந்த விதத்தில் நியாயமானது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்து முஸ்லீம் சமூகத்தில், ஏன் ஜர்மனி ஆரிய சமூகத்திலும், ஆண் பிள்ளை வெளியில் சென்று பாடுபட்டு பணம் கொண்டுவர வேண்டியதும், பெண் பிள்ளை சமையலறையையும், படுக்கை வீட்டையும் அலங்கரித்துக் கொண்டிருந்து புருஷனுடன் கூடி பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்க வேண்டியதும்தான் தர்மம் என்றும், சில வகுப்புப் பெண்கள் வாசற்படி கடந்தாலும் கற்பு ஒழுகி விடும் என்றும் சொல்லி அந்தப்படி இருந்து வரும் குடும்பங்களின் தலைவனை புருஷனை ஏதோ ஒரு கடனுக்காக ஜெயிலுக்கு கொண்டு போய் ஆறு வாரம், ஆறு மாதம் அடைத்து வைத்து விட்டால் இந்தக் குடும்பத்தின் பெண்டு பிள்ளைகள் போகும் கதி என்ன என்று கேட்கின்றோம். புருஷன் கடன்பட்டால் அவன் பெண்டு பிள்ளைகள் பட்டினி கிடந்து சாக வேண்டுமா? என்று கேட்கின்றோம்.
பகுத்தறிவுள்ள மனித சமூகம் என்பதில் இப்படிப்பட்ட முறை இருப்பது கொடிது! கொடிது!! மகா கொடியது!!! என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசாங்கத்துக்காவது பச்சாதாபம் இருக்குமானால் ஜெயிலுக்கு அனுப்பப்படும் சிவில் கைதிக்கு படிகட்டும்படி கேட்பதுடன் அவனது குடும்ப நடப்புக்கு அவசியமான இன்றியமையாத செலவையும் சேர்த்துக் கட்டும்படி டிக்கிரிதாரனுக்கு உத்திரவு செய்யும்படியான விதியை ஏற்படுத்த வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒரு சமூக நன்மைக்கு ஏற்றவிதமாகவே விதிகள் செய்து ஜன சமூகத்தில் ஒரு சிறு பகுதி லாபம் சம்பாதிப்பதற்காக சரி பகுதிக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆகிய சமூகம் துன்பப்படும்படி விட்டு வைத்துக் கொண்டு இருப்பது நேர்மையான ஆட்சிக்கு தர்மமாகாது.
ஆதலால் நமது நாகரீக அரசாங்கம் என்ன காரணத்தினால் இவ்வளவு நாள் கவனிக்காமல் விட்டு இருந்தாலும் அதைப் பற்றி லட்சியம் செய்யாமல் இனி உடனே சிவில் ஜெயில் முறையை ஒழித்துவிட வேண்டியது அவசியமாகும். இதைப் பற்றி ஜனப் பிரதிநிதிகள் ஏதாவது முயர்ச்சி முன்பே எடுத்துக் கொண்டிருக்க வேண்டியது யோக்கியமான ஜனப்பிரதிநிதிகளின் கடமையாகும்.
இதுவரை யாரும் சரியானபடி எடுத்துக் கொள்ளவில்லை யாதலால் அரசாங்கத்தாரே ஏதோ ஏழை மக்கள் மீது கருணை வைத்து சென்ற வாரத்திய டில்லி சட்டசபைக் கூட்டத்தில் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள். அதை பொது ஜனங்கள் பாராட்ட வேண்டியதாகும்.
ஜனப் பிரதிநிதி என்பவர்களும் இதுவரை தாங்கள் கொண்டு வராதிருந்ததற்கு வெட்கப்படுவதோடு அரசாங்கத்தார் கொண்டு வந்திருக்கும் மசோதாவை முழு பலத்துடன் பின் தாங்கி ஆதரித்து சீக்கிரம் சட்டமாக்கி சிவில் ஜெயில்களை ஒழிப்பார்களாக.
இதை உத்தேசித்தே இந்த சிவில் ஜெயில் முறையை கண்டிப்பதற்கு அறிகுறியாகவே தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ள ஒரு சிறு தொகைக்காக சிவில் ஜெயிலுக்குச் சென்று வந்ததும் வாசகர் களுக்கு நினைவிருக்கலாம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 24.02.1935