காங்கிரஸ் வாக்குறுதிகள் எங்கே?

 

வகுப்பு தீர்ப்புக்கு ஆதரவு

சமஷ்டி அரசாட்சி வேண்டாம்

இந்திய சட்டசபையில் பார்லிமென்ட் கமிட்டி அறிக்கையைப் பற்றி மூன்று தினங்கள் தொடர்ந்து விவாதம் நடந்தது. காங்கிரசின் சார்பில் þ அறிக்கையை ஒப்புக் கொள்ள முடியாதென்று கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும், வகுப்புத் தீர்ப்பில் நடுநிலமை வகிப்பதாகக் கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும் ஏராளமான ஓட்டுக்களால் தோற்கடிக்கப்பட்டன.

வகுப்புத் தீர்ப்பை அங்கீகரிப்பதாகவும், மாகாண சுயாட்சித் திட்டத்தைத் திருத்தி அமைப்பதோடு சமஷ்டி சர்க்கார் முறையை விட்டுவிட்டு இந்திய சர்க்காரில் பொறுப்பாட்சியை ஏற்படுத்த வேண்டு மென்பதாகவும் தோழர் ஜின்னா அவர்களால் கொண்டு வரப்பட்ட திருத்தத் தீர்மானங்கள் ஏராளமான ஓட்டுக்களால் வெற்றி பெற்றன.

ஜனநாயக சபை கூட்டி இந்திய சுயாட்சியைப் பற்றித் தீர்மானம் செய்யப் போவதாகத் தேர்தல் காலத்தில் சரமாரியாக வாக்குறுதி கூறிய காங்கிரஸ்காரர் ஒருவரேனும், இந்த விவாதத்தின்போது ஜனநாயக சபை கூட்டும் விஷயமாக ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்கவில்லை.

பார்லிமெண்ட் கமிட்டி அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறிச் சென்ற காங்கிரஸ்காரர்கள், தங்களுடைய திருத்தத் தீர்மானத்தில் “”நிராகரிப்பு” என்ற வார்த்தையில் ஒரு எழுத்தைக்கூட சேர்க்கவில்லை.

இதுபற்றி நமது அபிப்பிராயம் அடுத்த வாரம் விரிவாக வெளிவரும் எதிர்பாருங்கள்.

குடி அரசு  செய்தி விளக்கம்  10.02.1935

You may also like...