முனிசாமி நாயுடுவின் முடிவு
தோழர் ஆ. முனிசாமி நாயுடு திடீரென்று முடிவு எய்திய செய்தி கேட்டு திடுக்கிட்டு விட்டோம்.
அவருக்கு வயது இப்போது 50தேதான் ஆகின்றது. இவர் ஒரு கெட்டிக்கார வக்கீல் என்று பெயர் வாங்கியர். அவர் ஜஸ்டிஸ் கட்சியில் ஒரு பிரபலஸ்தராய் விளங்கினார். பனகால் ராஜா முடிவெய்திய பிறகு அக்கட்சிக்குத் தலைவராக ஆனார். அதன் பயனாய் முதல் மந்திரி ஸ்தானமும் பெற்றார். மந்திரி போட்டியின் பலனாகவும், காங்கிரசை சில சந்தர்பங் களில் ஆதரித்ததின் பயனாகவும் மந்திரி உத்தியோகம் விட்டுவிட வேண்டி நேர்ந்தது என்றாலும் கட்சியை விட்டு விலகாமலும் எதிர்கட்சியாகிய காங்கிரசினிடம் சேராமலும் ஜனநாயக ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு கட்சி ஏற்படுத்தி அதற்கு தலைவராய் விளங்கி வந்தார்.
சமீப காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியில் இரண்டரக் கலந்து விடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து இந்த மாத முடிவிலோ, அடுத்த மாத துவக்கத்திலோ, ஒரு மந்திரி பதவியை அடையக்கூடிய நிலையில் இருந்தார்.
அதன் பயனாக ஜஸ்டிஸ் கட்சி மிகவும் ஒற்றுமையையும், பலத்தையும் பெறக்கூடிய நிலையும் இருந்தது.
தோழர் முனிசாமி நாயுடு கட்சி விஸ்வாசி என்பது மாத்திரமல்லாமல் ஒரு காலத்தில் அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்கு மந்திரி பதவி போய்விட்டதான 1927ம் வருஷ தொடக்கத்தில் காங்கிரஸ்காரர்களால் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைத்த காலத்தில் ஒரு மந்திரி ஸ்தானத்தை தோழர் முனிசாமி நாயுடுவுக்கும் கொடுப்பதாக கூறி வருந்தி அழைத்த போது அப்பதவியை தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டவரும், ஏழை விவசாயிகள் விஷயமாக ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்னும் விஷயத்தில் சிரத்தை கொண்டிருந்தவர். சட்டசபை நடவடிக்கைகளிலும், சட்டங்களிலும் நல்ல அனுபவம் உள்ளவரும் அவரேயாவார்.
இவருடைய முடிவானது இது சமயம் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு பெரிய நஷ்டம் என்று சொல்ல வேண்டும். எனவே தோழர் முனிசாமி நாயுடுவின் முடிவுக்கு வருந்துவதோடு அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு இரங்கற் செய்தி 20.01.1935