சத்தியமூர்த்தி திருவிளையாடல்
தோழர் “”சத்தியமூர்த்தியின் நாக்குக்கு நரம்பு கிடையாது. அவர் பேச்சுக்கும் மதிப்பு கிடையாது” என்று ஒரு பழமொழி உண்டு. தோழர் சத்தியமூர்த்தி அய்யர் பொது வாழ்வில் விளம்பரம் பெற்ற பிறகு, சுமார் ஒரு ஆயிரந் தடவைக்குக் குறையாமலாவது, தான் பேசியவைகளுக்கும் நடந்து கொண்டவைகளுக்கும் மன்னிப்பு கேட்டிருப்பார்.
ஒரு இரண்டாயிந் தடவைக்கு குறையாமலாவது, தான் வெளிப்படுத்திய அபிப்பிராயங்களுக்குத் தத்துவார்த்தமும், சந்தர்ப்ப அருத்தமும், மாற்று சேதிகளும் வெளியிட்டிருப்பார்.
சந்தையும் அவருடையது; அதில் அடிக்கும் கொள்ளையும் அவருடையது என்பது போல், சத்தியமூர்த்தியும் பார்ப்பனராகவும், அவர் செய்கைகளையும், பேச்சுக்களையும், மன்னிப்புகளையும், மறுப்பு வியாக்கியானங்களையும் வெளியிடும் பத்திரிகைக்காரர்களும் பார்ப்பனர் களாகவும் ஆகிவிட்டதாலும், அவற்றைக் கேட்கும் படிக்கும் மக்களும் ஏறக்குறைய 100க்கு 90 பேர், மூடர்களாகவும் பாமரர்களாகவும் ஆக்கப் பட்டு வருவதாலும் சத்தியமூர்த்தி அய்யரின் திருவிளையாடல்கள் செலாவணி ஆகிக் கொண்டு வருவதற்கு இடமேற்பட்டுவிட்டது.
தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு கொஞ்ச நாளைக்கு முன்பு, ஒரு முனிசீப்பு வேலையோ அல்லது ஒரு சப் ஜட்ஜ் வேலையோ கொடுக்கப் பட்டிருக்குமானால் இந்தியாவில் ராஜபக்திக்கு அவர் ஒரு வெளிப்படையான உருவாரமாய் இருந்திருப்பார்.
நாளைக்கும் அவருக்கு மாகாணச் சட்டசபையில் ஒரு டிப்டி பிரசிடெண்டு வேலை கொடுப்பதாய் இருந்தால்கூட அவருடைய எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்கச் சிறிதும் தயங்க மாட்டார்.
அப்படிப்பட்டவர் இந்திய சட்டசபை மெம்பர் ஆன உடன், சதா சர்வகாலம் மந்திரி பதவியைப் பற்றிய பேச்சும், எண்ணமும் கனவுமாகவே இருந்து வருகிறார். அவர் பேச்சில் 100க்கு 90 பாகம் மந்திரி பேச்சாகவே இருக்கிறது. அவர் போகும் ஊர்களிலெல்லாம் மக்களிடம் தான் மந்திரியாக வரப் போவதாகவும், தனக்கு மந்திரி பதவி வகிக்கக் கூடிய அறிவோ, யோக்கியதையோ இல்லையா என்கின்ற சந்தேகத்தைத் தெளிவு செய்து கொள்வது என்பதையுமே பேசிக் கொட்டி குவித்துவிட்டு வருகிறார்.
இந்தப் பயித்தியம் முத்தி விட்டதின் பயனாய், இச் செய்திகள் மாகாணமெங்கும் பரவியதோடல்லாமல் இந்தியா தேசமெங்கும் பரவிவிட்டது. இதனால் காங்கிரசில் சரியாகவோ, தவறாகவோ, யோக்கியர்கள் என்று பெயர் வாங்கியிருந்த சிலருடைய நிலைமை மிக ஆபத்தாகப் போய்விட்டது.
ஏனெனில் காங்கிரசுக்காரர்கள் உத்தியோகம் பெறுவதில்லை. சர்க்காருடன் ஒத்துழைப்பதில்லை என்றெல்லாம் சொல்லி ஓட்டு வாங்கி இருக்கும்போது ஒரு 2, 3 மாதத்துக்குள்ளாகவே அந்த வாக்குறுதிக்கு விரோதமாக நடக்க ஆரம்பித்தால், அவர்களது மரியாதை கெட்டுப் போவதுடன், மேலால் ஜனங்கள் நம்ப மாட்டார்களே; அடுத்த எலக்ஷன் வரையாவது வாயை மூடிக் கொண்டிருக்கக் கூடாதா என்கின்ற கஷ்டம் வந்து விட்டதால், காங்கிரசை விட்டு விலகிவிட்டதாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறவர்கள் தவிர மற்றவர்களுக்கு மிகச் சங்கடமாகிவிட்டது.
ஆதலால், அவர்கள் சத்தியமூர்த்தியாரைக் கண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதன் பலனாய் சத்தியமூர்த்தியார் ஒரு பல்டி அடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அப் பல்டியில் ஒரு மாபெரும் புளுகு புளுகி இருப்பது மிகவும் கவனித்துப் பெரியதொரு சிரிப்புச் சிரிக்கக்கூடியதான வார்த்தையாக இருக்கிறது.
அதாவது, தான் மந்திரி ஆக வேண்டுமென்று இருந்தால் 15 வருஷத்துக்கு முன்பே மந்திரி ஆகி இருப்பாராம்.
எப்படி ஆகியிருப்பார்; ஏன் ஆகவில்லை என்பது ஜனங்களுக்குத் தெரிய வேண்டிய ஒரு முக்கிய காரியமல்லவா.
ஏனென்றால் 15 வருஷமாக மந்திரி பதவியை வெறுத்து உதைத்துத் தள்ளிய மாபெரும் தியாகியின் விஷயத்தை ஜனங்கள் அறிய ஆசைப்பட வேண்டியதோ, அல்லது ஜனங்கள் அறியும்படி செய்வதோ மிகவும் சரியான காரியமாகும். பார்ப்பனரல்லாத மக்களின் மாபெருந் தலைவரான தோழர் சர்.பி. தியாகராஜ பெருமான் கூட 5 வருஷ காலம் தான் மந்திரி பதவியை வெறுத்து உதைத்துத் தள்ளிவிட்டு அச் சமூகத்துக்கு அரிய தொண்டு செய்து விட்டு இறந்து போனார். சத்தியமூர்த்தியார் 15 வருஷம் எப்படி மந்திரி பதவியை வெறுத்துத் தள்ளினார் என்பது பற்றி யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது உண்மை! உண்மை!! முக்காலும் உண்மை!!! என்றே விளங்கும். எப்படி எனில், தோழர் சத்தியமூர்த்தியார் நாடகப் பிரியர் என்பது உலகம் அறிந்த விஷயம். அவர் கொஞ்ச காலமாக சுகுண விலாச நாடக சபையிலும் ஒரு குறிப்பிட்ட மெம்பராய் இருந்து வருகிறார்.
அதற்கு முன் பல நாடகக் கூட்டத்திலும் சம்பந்தம் வைத்து வந்திருக்கிறார்.
ஆகவே நாடகத்தில் மந்திரி வேஷம் போடும் சந்தர்ப்பம் இவருக்கு பல தடவை கிடைத்து இருக்கலாம். அதிலும் இவர் அரசியலில் இறங்கி விளம்பரம் பெற்ற பிறகு இவரது மந்திரி நடிப்புக்கு அதிக கிராக்கிகூட ஏற்பட்டிருக்கலாம். அதைச் சத்தியமூர்த்தியார் தமது கவரவத்துக்கு குறைவானது என்று கருதி மறுத்தும் இருக்கலாம். அல்லது தனக்குள்ள தகுதியை திருப்தியைக் கருதி வேறு வேஷம் போட ஆசைப்பட்டும் அடைந்துமிருக்கலாம்.
இந்த விஷயங்கள் எல்லாம் மூர்த்தியாருடைய நாடக தோழர்களைக் கேட்டால் இன்னும் நன்றாய் தெரிந்து கொள்ளக் கூடும். ஆகவே அய்யர்வாள் மந்திரி பதவியை வேண்டாம் என்று சொன்னதானது நாடகத்தில் வேஷம் போடும் மந்திரி பதவியே ஒழிய சென்னை அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பாய் இருக்கும் மந்திரி பதவி அல்ல என்பதை வாசகர்கள் அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 02.06.1935