சத்தியமூர்த்திக்கு சனியன் பிடித்தது சேச்சே இல்லை

 

சித்திரபுத்திரன்

தோழர் சத்தியமூர்த்தியார் காங்கிரஸ் தலைவரானது முதல் தமிழ்நாட்டில் காங்கிரசின் யோக்கியதை மணல் வீடு சரிவதுபோல் சரிந்து வருவது ஒருபுறமிருக்க, சில புது மதமாற்றக்காரர்கள் அதாவது புதிதாய் காங்கிரசில் இருந்து வருபவர்கள் சத்தியமூர்த்தியாரைத் தலைவராய்க் கொள்ளவும், அவரைத் தலைவர் என்று வாயில் சொல்லவும் இஷ்டப் படாமல் தயங்குவதாலும், அய்யர், அய்யங்கார் ஜாதி உணர்ச்சியால், பல அய்யங்கார்கள் சத்தியமூர்த்தி அய்யர் தலைமை ஸ்தானத்தைப் பற்றி பொறாமைப்பட்டு முணுமுணுப்பதாலும், காங்கிரசில் ஏற்கனவே இருந்து வரும் தோழர்கள் சாமி வெங்கிடாசலம் செட்டியார், முத்துரங்க முதலியார், திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் போன்றவர்கள் சத்தியமூர்த்தியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வெளியில் தலைநீட்ட வெட்கப்படுவதாலும், தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் சிறிதும் அடக்கம் ஒடுக்கம் இல்லாமல் காங்கிரசின் உத்தியோக ஆசையையும், பதவி ஆசையையும் வெட்ட வெளிச்சமாய் வெளியில் காட்டி காங்கிரசின் கொள்கையை சந்தி சிரிக்க வைத்து விட்டதாலும், தான் மந்திரி பதவி வகிக்க வேண்டும் என்பதாலும் தானேதான் முதல் மந்திரி பதவி வகித்துத் தீர வேண்டும் என்று சொல்லுவ தாலும், தோழர்கள் சி.ஆர். ரெட்டி, டாக்டர் சுப்பராயன், டி.எ. ராமலிங்கம் செட்டியார் முதலியவர்களும் முதல் மந்திரி வேலை தங்களுக்கே வேண்டும் என்றும் தனித்தனியாய் இப்போதே வாக்குறுதி கேட்பதாலும், இவ்வளவு சனியனும் ஒன்றாய் சேர்ந்ததோடு “”புழுத்ததின் மீது நாய் விட்டை இட்டது” என்பதுபோல் நமது தொட்டது தொலங்காப் பிரபு தோழர் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு இந்த தடவை காங்கிரசுக்கு மந்திரி வேலை கிடைத்துவிடக் கூடும் என்கின்ற நம்பிக்கை உண்டாகி, தான் ஏன் அப்பதவிக்கு வரக் கூடாது என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டதாலும், அவர் தனது சொந்தத்தில் இருந்து நன்றாய்ப் பணம் செலவு செய்வார் என்கின்ற எண்ணத்தினால் பழய அவரது கூலிகள் ஸ்ரீனிவாசய்யங்கார் தலைவராய் வந்தால் முன் அரித்துத் தின்னது போல் இப்பவும் அரித்துத் தின்ன ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படும் என்று கருதுவதாலும், தோழர் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஒரு யோகம் “”சுக்கிர திசை” அடிக்கப் போகிறபடியால் நமது தோழர் சத்தியமூர்த்தியாருக்கு “”சனிதிசை” எட்டிப்பார்க்கிறது.

இந்த சமயம் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் அய்யர்கள் பலம் இல்லை. எல்லாம் அய்யங்கார்கள் பலமாகவே போய்விட்டது. பத்திரிக்கைகளும் அய்யங்கார் பலமாகவே ஆகிவிட்டது.

அதாவது தோழர்கள் கே. சீனிவாசய்யங்கார், சி.ஆர். சீனிவாசய்யங்கார், கே. சந்தானமய்யங்கார் ஆகியவர்களே பத்திராதிபர்களாக இருக்கிறார்கள். வேறு ஆட்கள் பத்திராதிபர்களாக இருக்கும் பத்திரிக்கைகள் இருந்தாலும் அவற்றின் நஷ்ட ஈடுகளுக்கும், நடப்பு ஈடுகளுக்கும் அய்யங்கார் உதவியும், அய்யங்கார்கள் கிராண்டும் தான் தேவையாயிருக்கிறது.

ஆகவே இந்த தடவை சீனிவாசய்யங்கார் உறைத்து உறுதியாய் நின்றுவிட்டால் மூர்த்தியார் நிலைமை அதோ கதிதான்.

ஐயோ பாவம். மூர்த்தியாரின் நிலைமைக்கு நாம் மிகவும் இரங்குகிறோம்.

“”நல்ல சமயத்தில்” இம்மாதிரி ஆனது மிகவும் பரிதபிக்கத்தக்க விஷயமாகும்.

எப்பொழுதும் இந்த அய்யங்கார் பார்ப்பனர்கள் ஆழம் பார்ப்பதற்கு மாத்திரம் சத்தியமூர்த்தியாரை விட்டுப் பார்க்கச் செய்வதும், ஒன்றும் அபாயமில்லை என்று தெரிந்தால் பிறகு அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு தாங்கள் அனுபவிப்பதுமாகவே செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் என்னதான் செய்தாலும் மூர்த்தியார், மிக நல்லவர். இதற்கெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார்.

ஏன் என்றால் கோபித்துக் கொண்டால் அப்புறம் எங்காவது போய் ஒண்டுவதற்கு ஆவது இடம் வேண்டுமே. ஆதலால் “”பூமாதேவி” பொறுமையைவிட மூர்த்தியார் பொறுமை மிகவும் ஆத்ம சக்தி கொண்ட பொறுமை ஆகும்.

நமது மூர்த்தியார் ஒரு எக்கிறிமெண்டு செய்து கொண்டு அதாவது சீனிவாசய்யங்கார் முதல் மந்திரியாக வந்தால் அவரிடம் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் இருக்குமானால், தனக்கு முதல் மந்திரி காரியதரிசி பதவி கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து மற்றதையெல்லாம் உடனே மறந்துவிட்டு இன்று சத்தியமூர்த்தியார் தலைமையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை சீனிவாசய்யங்காருக்கு தன் கையாலேயே கழட்டி சாத்திவிடுவார்.

இந்த உத்தியோகத்தினால் குறைந்தது மந்திரி சம்பளத்துக்கு கம்மியில்லாத படியாவது சரிப்படுத்திக் கொள்ளக்கூடிய  சக்தியும் தைரியமும் அவருக்கு உண்டு. அவர் மூலமாகவே தான், முதல் மந்திரி யாரிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் பேச வேண்டும் என்று ஒரு ஜி.ஒ. பிறப்பித்து விடுவதாய் இருந்தால் பிறகு நம் சத்தியமூர்த்தியாருக்கு எவ்வித அதிருப்தியும் இருக்காது. அவர் வீட்டிலும் மனக்கோணல் இருக்காது.

ஆனால் மற்றொரு விஷயம். நமது அய்யங்கார் இவ்வளவோடு நிற்பாரா என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும்.

சென்னை மாகாணத்துக்கு மாத்திரம் காங்கிரஸ் தலைவராய் இருப்பது அவருடைய கவுரதைக்கு பொருத்தமானதல்லவே.

ஏனெனில் அவர் ஒரு காலத்தில் சோகத்தில் நடந்த அகில இந்திய காங்கிரசுக்கு தலைமை வகித்த அகில இந்தியத் தலைவராயிற்றே! ராஜேந்திர பிரசாத்துக்குக் கீழாக இருக்க மனம் வருமா? என்பது நியாயமாகவே யோசிக்கத் தகுந்த விஷயமாகும். ஆதலால் தற்கால சாந்தியாகவாவது அகில இந்திய காங்கிரசில் ஏதாவது ஒரு பெரிய ஸ்தானம் வேண்டியிருக்கிறது.

இது சமயம் ஒரு தகுந்த வேலையும் காலி இருக்கிறது. அதற்குத் தகுந்த ஆள் இல்லாமல் காங்கிரஸ் தலைவர்களும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதென்னவென்றால் அதுதான் லக்னோ காங்கிரசுக்கு தலைவர் கிடைக்காமல் திண்டாடும் காரியம். அதற்குத் தோழர் சீனிவாசய்யங்காரை நியமித்து எல்லா இந்திய காங்கிரசுக்கு  தலைவராக்குவதாய் இருந்தால், தமிழ்நாட்டில்  ஏன் சென்னை மாகாணத்தில் சட்டசபை தேர்தல்களுக்கு ஏற்படும் செலவுகளையும் ஒப்புக் கொள்ளக்கூடும். ஏனெனில் 5 வருஷம் மந்திரி வேலை பார்த்தால் வருஷம் 50 ஆயிரம் வீதம் ரூ. 250000 கிடைக்கும். இதில் வட்டிக்கு 50000 தள்ளிவிட்டாலும், 2 லக்ஷ ரூபாய் காங்கிரசுக்கு கொடுத்துவிடுவார். வக்கீல் வேலைக்கு மகன் இருக்கிறார். தனியாகவும் யோசனை சொல்ல சவுகரியமிருக்கிறது. ஹைக்கோர்ட் ஜட்ஜிகளில் பார்ப்பன ஜட்ஜிகளாவது சலுகை காட்ட நியாயமிருக்கிறது. ஆதலால் அந்த வரும்படியும் பிரமாதமாய் எதுவும் குறைந்துவிடாது.

எனவே இப்போது தோழர்கள் பாஷ்யம், சி.ஆர். சீனிவாசய்யங்கார் விருந்து வைத்து அய்யங்காரை அழைத்ததிலும் தோழர்கள் கல்யாணசுந்திர முதலியார், முத்துரங்க முதலியார், சாமி வெங்கிடாசலம், அப்துல் அமீத்கான் முதலிய பக்தர்கள் காங்கிரசுக்கு வரும்படி அழைத்ததிலும், தோழர் ஸ்ரீமான் அய்யங்கார் தேசம் விரும்பினால் வருகிறேன் என்று சொன்னதிலும் எவ்வித தவறுதலும் இல்லை. ஸ்ரீமானை தேசம் விரும்புவதிலும் எவ்வித ஆ÷க்ஷபணையும் இல்லை. அதைப் பற்றியும் இப்போதே “”ஜோசியம்” கூறுவோம்.

ஏனெனில் தேசம் என்றால் தெரியாதா?

சக்கரைச் செட்டியார், குப்புசாமி முதலியார், அண்ணாமலை பிள்ளை, எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர், என்.எஸ். வரதாச்சாரியார், உபயதுல்லா சாயபு, அமீத்கான் சாயபு, செல்வபதி செட்டியார் முதலாகிய பல தடவை சிறைச் சென்றுவிட்ட தேச பக்தர்கள் தானே. ஆகவே இவர்கள் அழைப்பு வெறும் அழைப்பு மாத்திரம் இருக்காது. மேளதாளத்துடனும், சதிர்ப் பாட்டுக் கச்சேரியுடனும் தான் இருக்கும்.

எனவே இதன் பயனாய் இனி தமிழ்நாட்டில் புதியதோர் சகாப்தம், புதியதோர் உணர்ச்சி, புதியதோர் எழுச்சி (யாருக்கு? என்று கேட்காதீர்கள்) உண்டாக்கப்படுவதோடு தேசபக்தி விண்ணப்பங்கள் சர்வீஸ் கமிஷனுக்கு எஸ்.எஸ்.எல்.சி. விண்ணப்பங்கள் போல் பறப்பதுடன் காங்கிரசில் வந்து ஞானஸ்நானம் பெற புதிய புதிய ஆட்களும் வந்து சேரக் கூடும்.

கடைசியாய் நாம் ஒன்று சொல்லுகின்றோம். அதாவது அய்யங்கார் ஜாதகம் ஒன்று இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் மேலே அது ஜோசிய ஜாதகமல்ல. அனுபவ ஜாதகம் என்பது தான்.

குடி அரசு  கட்டுரை  15.12.1935

You may also like...