முட்டாள்களுக்கு  வரி

 

சித்திரபுத்திரன்

முட்டாள்களுக்கு  வரி  விதிக்க  வேண்டும்  என்கின்ற  ஆசையின்  மீதே  நமது  அரசாங்கத்தார்  லாட்டரி  சீட்டுகளையும்,  போட்டிப்  பரிசுகளையும்,  குதிரைப்  பந்தயங்களையும்  அனுமதித்துக்  கொண்டிருக்கிறார்கள்  என்று  தரும  தேவதை  சொற்பனம்  அருளுகிறது.

இதை  மிகவும்  சரி  என்றே  சொல்ல  வேண்டும்.

உதாரணமாக  ஒரு  தாசி  தன்  தாயாரை  நோக்கி  எனக்கு  இன்பம்  கொடுக்கும்  ஆடவர்கள்  எனக்குப்  பணத்தையும்  கொடுத்து  என்னை  வணங்குவதும்  ஏன்  என்று  கேட்டபோது  அந்த  தாசியின்  தாயாரானவள்  மகளைப்  பார்த்து,  நல்ல  காரியத்துக்கு  தங்கள்  பணத்தைச்  செலவு  செய்யாத  அயோக்கியர்கள்  பணம்  செலவாவதற்காக  வேசிகளாகிய  நம்மையும்,  கள்ளு  சாறாயத்தையும்,  சூது  ஆட்டங்களையும்  கடவுள்  அனுமதித்துக்  கொண்டிருக்கிறார்  என்று  சொன்னாளாம்.

அதற்கு  ஒரு  பாட்டும்  உண்டு.

அன்னையே  அனையதோழி

அறந்தனை  வளர்க்கும்மாதே,

உன்னையோர்  உண்மை

கேட்ப்பேன்,  உரை

தெரிந்துரைத்தல்  வேண்டும்,

என்னையே  வேண்டுவோர்கள்

எனக்கும் ஓர்  இன்பம்  நல்கி,

பொன்னையும்  தந்து

பாதப்  போதினில்

வீழ்வதேனோ?  (அம்மா)

பொம்மெனப்புடைத்து  விம்மி

போர்மதன்  மயங்கி  வீழும்,

கொம்மை  சேர்முலையினாளே

கூறுவேன்  ஒன்று  கேளாய்,

செம்மையில்  அறஞ்செய்யாதார்

திரவியம்  சிதர வேண்டி,

நம்மையும்  கள்ளும்  சூதும்

நான்முகன்  படைத்த  வாறே.

அதுபோல்  பகுத்தறிவில்லாத  முட்டாள்களுக்கு  வரி  போடுவதற்காக அரசாங்கத்தார்  கருதி  போட்டிப்  பரிசு  பத்திரிகைகள்,  லாட்டரிச்  சீட்டுகள்,  குதிரைப்  பந்தயங்கள்,  எலக்ஷன்கள்,  சர்விஸ்  கமீஷனுக்கு  உத்தியோகத்துக்காக  விண்ணப்பங்கள்,  1ரூ  15  அணாவுக்கு  ஒரு  கெடிகாரமும்,  125  சாமான்களும்  என்கின்ற  விளம்பரங்கள்,  மூன்று  வேளை மருந்தில்  முப்பது  ஸ்திரீகளை  கெஞ்சும்படி  செய்யத்தக்க  மன்மத  சிந்தாமணி,  வீரியவிர்த்தி,  தாதுபுஷ்டி  லேகிய  விளம்பரங்கள்,  தாயத்து  விளம்பரங்கள்  ஆகியவைகளை  அரசாங்கத்தார்  அனுமதித்து  வருகிறார்கள்.

இதனால்  போட்டிப்  பத்திரிகை  மீதாவது,  விளம்பரக்காரர்கள்  மீதாவது  “”சத்தியமாய்”  நாம்  சிறிதுகூட  குற்றம்  சொல்ல  வரவில்லை.  ஏனென்றால்  நம்  நாட்டு  முட்டாள்கள்  எத்தனை  பேர்கள்  என்று  கணக்கெடுக்க  இது  ஒரு பதிவு  (ரிஜீஸ்ட்டர்)  புஸ்த்தகமாகும்.  ஆதலால்  இது  நடக்க  வேண்டியதுதான்.

இதுபோலவே  அறிவாளிகளுக்கு  வரி  போடவும்,  அறிவாளிகளைக்  கணக்கெடுக்கவும்  சில  காரியங்கள்  இருக்கின்றன.  அவற்றைப்  பின்னால்  தெரிவிக்கலாம்.  இப்போது  ஒன்றும்  அவசரமில்லை.

குடி அரசு  கட்டுரை  27.01.1935

You may also like...