சுயமரியாதை  மகாநாடுகள்

 

சுயமரியாதை  மகாநாடுகள்  தமிழ்நாட்டில்  ஜில்லாக்கள்,  தாலூக்காகள்  தோறும்  வாரம் தவறாமல்  அடுத்துஅடுத்து நடந்து வந்தது  நேயர்கள்  அறிந்ததாகும்.

தோழர் ஈ.வெ. ராமசாமி  ராஜத் துவேஷக் குற்றத்திற்காக  சிறைசென்ற  பின்  சுயமரியாதை  சங்க  நிர்வாகக் கமிட்டியார்  கூடி மகாநாடுகள்  கூட்டக்கூடாது  என்று கண்டிப்பான  உத்திரவு  போட்டதான  தீர்மானம்  நிறைவேற்றியதையே  காரணமாய் வைத்து,  5, 6  மாத காலமாக  மகாநாடுகளே  எங்கும் நடக்காமல்  போய்விட்டது  என்பது  ஒரு காரணமாய்  இருந்தாலும்  அந்தத் தீர்மானம்  திருச்சி நிர்வாக  சபைக்  கூட்டத்தில்  ஓரளவு  தளர்த்தப்பட்டு  இருந்தும்  வேறு  பல காரணங்களால் தீர்மானம் தளர்த்தப்பட்டதை  வெளியிடாமலும்,  பல இடங்களில்  இருந்து மகாநாடு  நடத்தவேண்டும்  என்று முயற்சித்த  முயற்சிகளையும்  உற்சாகப் படுத்தாமல்  இருந்து வந்திருக்கிறது.  அதாவது  சுமார் நான்கு   மாதங்களுக்கு  முன்  பகுத்தறிவு   3வது  மலரின்  தலையங்கமொன்றில்  “”நாம்  எப்படி நடந்து  கொள்ள  வேண்டும்”  என்கின்ற  தலைப்பு கொண்ட  தலையங்கத்தில்  “”சமீபத்தில்  நடைபெறப் போகும்  ஜஸ்டிஸ்  கட்சி  மகாநாடும்,  காங்கிரஸ்  மகாநாடும்,  காங்கிரஸ்  மாகாண  மகாநாடும்  நடந்த உடன் சுயமரியாதை  மகாநாடோ  அல்லது சுயமரியாதை  இயக்கத்   தொண்டர்கள் மகாநாடோ  ஒன்று  கூட்டி  அதில் முடிவு  செய்து  கொள்ள  வேண்டியவர்களாய்  இருப்பதால்  அது வரையில்  நம் தோழர்கள்  எல்லாத்  துரையிலும்  பொருத்து  இருக்கவேண்டும்  என்பதோடு  அதை எதிர்பார்த்தே  நானும்  பொறுத்து இருக்கிறேன்”  என்று தோழர்  ஈ.வெ.ரா. தனது சொந்த கையொப்பத்துடன் ஒரு வேண்டுகோள்  விடுத்திருந்ததாகும்.

இப்போது  மேற்குறிப்பிட்ட  எல்லா மகாநாடுகளும் நடந்தாய்  விட்டதால்  மேல் குறிப்பிட்டபடி  சுயமரியாதை  மாகாண  மகாநாடோ  அல்லது சு.ம.  இயக்கத்  தொண்டர்கள்  மகாநாடோ  ஒன்று கூட்ட  வேண்டியது  அவசியமான  காரியம்  என்பது  நமது அபிப்பிராயம்.

இதை  அனுசரித்து  சுமார்  10,20  இடங்களில்  இருந்து மகாநாடு  கூட்டவேண்டுமென்று  தீர்மானங்களும்,  வேண்டுகோள்களும்  வந்திருப்பதோடு  சில இடங்களில் தாங்களாகவே  ஜில்லா,  தாலூக்கா  மகாநாடுகள் கூட்டுவதாகவும்  தெரிவித்து  இருக்கிறார்கள்.  குறிப்பாக தஞ்சை  ஜில்லா  மகாநாடு  கூட்ட தஞ்சை  சு .ம.  சங்கக் காரியதரிசி தோழர்  ஏகாம்பரம்  அவர்கள் ஏற்பாடு  செய்து  காரியாதிகளும்  நடந்து வருவதாகத் தெரிகின்றது.

இந்த நிலையில்  ஜஸ்டிஸ்  கட்சியில் சில எதிர்பாராத  சம்பவங்கள் நடந்துவிட்டதால்,  எதற்காக  “”ஜஸ்டிஸ்  கட்சி மகாநாடு, காங்கிரஸ் மகாநாடு, மாகாண  காங்கிரஸ் மகாநாடு  ஆகியவைகள்  நடந்தபிறகு”  என்று  குறிப்பிடப்பட்டதோ  அக்காரியம் முடிவு பெற்றதாகக் கருதமுடியாமல்  போய்விட்டது  என்றாலும்  இனியும்  கால  தாமதம்  செய்து கொண்டு  போவதில்  பயனில்லை. எப்படியாவது  ஜனவரி  மாதத்தில்  நாம் சுயமரியாதை மாகாண மகாநாடு  கூட்டவோ, அல்லது தொண்டர்கள்  மகாநாடு  கூட்டி மாகாண மகாநாட்டுக்கு  வேண்டிய  ஏற்பாடு செய்யவோ  வேண்டியது  மிக அவசியமான  காரியம்  என்றே  கருதுகிறோம்.

தொண்டர்  மகாநாடு  என்று  ஒன்று  தனியாகக்  கூட்டுவதைப்  பார்க்கிலும்  ஜனவரி  மாதத்தில்  நடக்க  ஏற்பாடாகிவரும் தஞ்சை  ஜில்லா  மகாநாட்டுடனேயோ அல்லது அதற்குச் சகல தொண்டர்களும்  வரும்படியான  ஏற்பாடு செய்தோ அதில் முடிவு  செய்வதும்  பொருத்தமான  காரியம்  என்றே  கருதுகிறோம்.  எப்படியாவது  ஜனவரி மாதத்தில்  சுயமரியாதை  இயக்கம்  தனது வேலைத்திட்டத்தைப் புதுப்பித்து  காங்கிரசினுடையவோ,  ஜஸ்டிஸ்  கட்சியினுடையவோ,  அல்லது இரண்டினுடைய  கூட்டுறவுடனேயோ  அல்லது இரண்டின்  கூட்டுறவும் இல்லாமல்  தனித்து நின்றோ  தொண்டாற்ற  முற்பட வேண்டியது  அவசியம்  என்பதை  வலியுறுத்துகின்றோம்.

காங்கிரசானது  சட்டமறுப்பு  தத்துவங்களை  அடியோடு விட்டுவிட்டு  சட்ட முறைகளுக்குக் கட்டுப்பட்டு சர்க்காருடன்  ஒத்துழைத்துத்   தொண்டாற்ற  முன் வந்தபிறகு, அந்தப்படி  இல்லாத வேறு  எந்த  இயக்கங்களையும்  அரசாங்கம்  அடியோடு  நசுக்கப் பார்க்கும் என்பதில்  யாதொரு ஆ÷க்ஷபணையும் இல்லை.

காங்கிரசானது  தனது சட்டமறுப்பு  எண்ணங்களைக் கைவிட்டுவிட வேண்டியதுதான்  என்ற  முடிவுக்கு வந்துவிட்டவுடன் சர்க்காருக்குக் காங்கிரசைத் தோற்கடிக்கச் செய்துவிட்டோம்  என்கின்ற மகிழ்ச்சி  ஏற்பட்டு விட்டதும் அம்மகிழ்ச்சியின்  வேகம் சுயமரியாதை  இயக்கத்தில்  பாய்ந்து  சுயமரியாதைச் சங்கங்களை ஒழிக்கப்  பார்த்ததும்  யாரும்  அறியாததல்ல.

சுயமரியாதை  இயக்கத்தில் எந்தக் காரியத்துக்கும்  சட்ட மறுப்பு  செய்வதோ, “”சத்தியாக்கிரகம்”  செய்வதோ,  பலாத்காரம் ஏற்படும்படியான  எந்தக்  காரியங்களையாவது  செய்வதோ  ஆகிய  திட்டங்களோ  உணர்ச்சிகளோ இல்லை  என்பது  யாவரும் அறிந்ததாகும்.

ஆனால்   சமுதாயத் துறையில்  பழமை  என்னும்  பேராலும், வழக்கம்  என்னும் பேராலும்  இருந்து  வரும் அனேக முறைகளில்  பெரியதொரு  மாற்றம் ஏற்பட வேண்டும்  என்று கருதுகின்றது  என்பதை நாம்  மறைக்கவில்லை.

ஆதலால்  சீக்கிரத்தில்  அதன் வேலைத்திட்டங்களை  விளக்கி  திருத்தியோ, புதுப்பித்தோ,  மகாநாடுகள்  கூட்டுவதன்  மூலம்  பிரசாரம்  செய்து அமுலுக்குக் கொண்டு வரச் செய்ய வேண்டியதே அவசர  வேலையாய் இருக்கிறது  என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.

பகுத்தறிவு  தலையங்கம்  30.12.1934

You may also like...