காங்கிரஸ்காரர்களின்
தேர்தல் பிரசார யோக்கியதை
தோழர் வரதராஜுலு நாயுடு M.ஃ.அ. க்கு நிற்பதில்லை என்றும் தோழர் ஸர்.ஆர்.கே.ஷண்முகம் வர்த்தகத் தொகுதிக்கு நிற்பதில்லை என்றும் தெரிய வருவதாகக் காங்கிரஸ் தேசியப் பத்திரிகைகள் எழுதுகின்றன. தோழர் வரதராஜுலு இதை மறுக்கிறார். எனவே இதை விடக் கேவலமான முறை கொண்ட ஒரு பிரசாரம் வேறு யாரும் எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கைக்காரரும் செய்ய முடியாதென்றே சொல்லுவோம்.
சத்தியம், தர்மம், நீதி, ஒழுங்கு, நாணையம் ஆகியவைகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கும் ஸ்தாபனங்கள், கொள்கைகள் ஆகியவைகளைச் சேர்ந்தவர்களாலேயே இவ்வித பிரசாரங்கள் நடக்குமானால், சாதாரண வாழ்வில் இருப்பவர்களால் இனியும் என்ன என்ன காரியம் நடக்காது என்று கேழ்க்கின்றோம். தேர்தல் முறை என்ன என்பது பற்றியும் தேர்தலில் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்வதிலும், எழுதிக் கொள்வதிலும் எவ்வளவு நாணையமும், உண்மையும் இருக்கக் கூடும் என்பதைப் பற்றியும் பொது மக்கள் தெரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணம் போதாதா என்று மாத்திரம் கேட்டுவிட்டு இதை முடிக்கிறோம்.
பகுத்தறிவு துணைத் தலையங்கம் 09.09.1934