முஸ்லீமும்  பிராமணரும்  ஒன்றா?

 

வீரசிங்கம்பேட்டைக் கலவர வழக்கை  விசாரிக்க  ஆரம்பித்துவிட்டார்கள்.  அதற்காக  ஸ்பெஷல்  மாஜிஸ்ட்டிரேட்டும்  ஏற்படுத்தி  இருக்கிறார்கள்.  ஒருவாரமாக  விசாரணையும்  நடந்துவருகிறது.

இவ்  வழக்கு  நடந்துவருகையில்  அப்பிரதேச  நிலையைச்  சரிப்படுத்தத்  தண்டப்  போலீசாரைச்  சர்க்கார்  நியமித்திருக்கிறார்கள்.    இத்  தண்டப்  போலீசின்  செலவினத்தை  இக்கிராமவாசிகளே  ஒப்புக்கொள்ள வேண்டுமென்று  சர்க்கார்  அறிக்கை  கூறுகிறது.  இதைப்பற்றி  நாமெதும்  கூற  விரும்பவில்லை.  ஆனால்  இத்  தண்டப்  போலீசுக்கு  ஆகும்  செலவீனம்  இருக்கிறதே  அதைப்  பற்றி  விபரம்  கூறும்போது  மேற்படி  கிராமவாசிகள்  கொடுக்க  வேண்டுமென்று  சொல்லிவிட்டு  மேற்படி  கிராமத்திலுள்ள  “பிராமணர்கள்  முஸ்லீம்கள்’  இவர்கள்  நீங்கலாக  என்று  கூறியிருப்பதுதான்  நமக்குப்  பெரும்  சந்தேகத்தை  உண்டாக்குகிறது.

இன்றைக்கெல்லாம்  மாதம்  450  ரூபாய்க்குள்தான்  டிவிஷனல்  மாஜிஸ்ட்டிரேட்  தெண்டச்  சிலவு  மாதா மாதம்  விதிக்கக்கூடும்.  300  வீடுகள்  அங்கே  இருக்கிறதென்று  வைத்துக்கொண்டால்,  வீட்டுக்கு  மாதம்  ஒன்றரை  ரூபாய்  வரக்கூடும்.  ஒரு  வருடத்திற்குப்  பதினெட்டு  அல்லது  இருபது  ரூபாய்க்கு  அதிகம்  வருவதற்கில்லை.  இது  ஓர் பிரமாதமான  சிலவென்றுகூட  நாம்  கருதவில்லை.  தெண்ட  தீர்வை  கொடுக்க  வேண்டியவர்களில்  முஸ்லீம்களை  விலக்கி  இருப்பது கூட  ஓர்  விதத்தில்  நியாயம்.  ஆனால்  பார்ப்பனர்  நீக்கம்  நியாயமானதா?  என்று  சிந்திக்க  வேண்டியவர்களாக  இருக்கிறோம்.

எந்தவிதம்  எண்ணி  அல்லது  கருதி  இவ்விதிவிலக்கு  சர்க்காரால்  புகுத்தப்பட்டது  என்பதை  அறிய  நாம்  ஆவலுருவதைப்  போலவே,  நமது  வாசகர்களும்  ஆசைப்படக்கூடும்.

சர்க்கார்  உத்திரவில்  “கருதுவதால்’  என்ற  பதம்  முஸ்லீம்களைப்பற்றி  சொல்வது  நியாயம்.  அவர்கள்  மாரியம்மன்  என்பதை  ஓர்  தெய்வமாக  அவர்கள்  கருதுவதில்லை.  இக்  கலக  வழக்கு  சகாப்தத்துக்கும்  அவர்களுக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை  என்பதை  சர்க்கார்  கருதுவது  முற்றிலும்  நியாயம்.

ஆனால்  ஐயரை,  பிராமணர்களை  விதி  விலக்கின்  மூலியம்  விலக்க  கருதுவதுதான்  நமக்கு  விளங்காததில் ஒன்றாக  இருக்கிறது.  “”ஹிந்து”  என்ற  மதத்தினர்களின்  சாமிகளில்  ஒன்று  மாரியம்மனாகும்.  ஹிந்து  மதத்தில்  முதன்மையானவர்கள்  என்று  சொல்லிக்  கொள்பவர்கள்  பிராமணர்கள்.  இவர்கள்  வீடு  அக்கிராமத்தில்  5  அல்லது  6  வீடுகள்  இருக்கக்கூடும்.  ஆறு  அய்யர்மார்  வீட்டுக்கு  தெண்ட  வரி  விதிக்க  வேண்டுமென்று  சொல்ல  அவ்வளவு  குறுகிய  மனப்போக்கு  நமக்கில்லை.  சர்க்கார்  அப்படிச்  செய்தால்  ஓர்  பிராமணரல்லாத  தேவரிடமோ,  சேர்வையிடமோ,  அவர்கள்  சென்று,  சூத்திரர்களால்  பிராமணர்களுக்கு  தெண்ட  தீர்வை  கூட  கொடுக்க  வேண்டியிருக்கிறது,  இந்த  பாவம்  லேசில்  போகாது  என்றால்,  ஐயருக்கு  தேவரிடம்  இரண்டு  மூன்று  வருடத்துக்கு  கொடுக்கக்கூடிய  அளவு  பணம்  வசூலாகி  விடும்  என்பதும்  நமக்கு  தெரியாததல்ல!  ஆனால்  இச்சிறு  உத்திரவினால்  மற்றவர்கள்  உரிமை,  மற்றவர்களின்  நியாயமான  நிலைமை,  இவைகள்  சீர்  குலைக்கப்பட்டு,  சின்னா  பின்னமாக  இட  மேற்பட்டு  விடுமோ!  என்றுதான்  அஞ்சுகிறோம்.  பண  மிச்சத்துடன்  மட்டும்  பார்ப்பனர்கள்  பங்கு  இதில்  லாபமாய்  விடுகிறது  என்று  கூற முடியாது.

ஐயர்மாரை  விலக்கியது  தவறி வந்ததா?  சரியானதா?  அல்லது  ஆங்கில  பதப்பிரயோகம்  அசந்தர்ப்பத்தால்  வீழ்ந்து  விட்டதா(!)  என்பதை  எல்லாம்  சிந்திக்க  வேண்டுமெனக்கூறி  இக்  குறிப்பை  இத்துடன்  நிறுத்துகிறோம்.

புரட்சி  துணைத் தலையங்கம்  13.05.1934

You may also like...