தோழர்களே! கவலைப்படாதீர்கள்
காங்கிர° °தாபனங்கள் மூடப்பட்டது பற்றியும், காந்தீயம் தோற்றுப் போய் விட்டது பற்றியும் பலர் மகா விசனப்படுவதாகத் தெரிய வருகிறது. இன்றைய வரையில் காங்கிரசும், காந்தீயமும் நம் மக்களுக்கு என்ன வித மான பயனை உண்டாக்கிற்று என்பதைப்பற்றி நாம் அதிகம் எழுத வேண்டியதில்லை.
காங்கிர° ஏற்பட்டு ஏறக்குறைய ஐம்பது வருஷ காலமாகின்றது. ஐம்பது வருஷ காலத்தில் அரசாங்கத்தாரால் காங்கிர° கேட்டபடி (சீர்திருத் தங்கள் என்னும் பேரால்) எவ்வளவோ அதிகாரங்களும், பதவிகளும் இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்டுமிருக்கின்றன. இதன் பயனாய் நாட்டில் கோடீ°வரர்கள் பெருகினார்கள். பதினாயிரக்கணக்கான ஏக்கரா பூமியுடைய ஜமீன்தாரர்கள், மிரா°தாரர்கள் அதிகமானார்கள். மாதம் 1 க்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் பெரும் பதவியாளர் களும், உத்தியோக°தர்களும் ஏராளமானார்கள். மாதம் 1000, 10000 ரூபாய் வரும்படி சம்பாதிக்கும் வக்கீல்களும், டாக்டர்களும் லக்ஷக்கணக்கில் பெருகினார்கள்.
தவிர மற்றொருபுரம் பாடுபடாமல் தேசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழும் மக்கள் பலர் பெருகினார்கள். அதாவது “வைதீகத்தில்” ஒரு கூட்ட மக்கள், எப்படி குருமார்களென்றும், பாதிரிமார்களென்றும், சன்னியாசிகளென்றும், சாமியார்களென்றும் சொல்லிக் கொண்டு ஊரார் உழைப்பில் வாழ ஆசைப்பட்டு வேஷம் போட்டுத் திரிகின் றார்களோ அதுபோல், காங்கிரசின் பேரால் ஒரு கூட்ட மக்கள், தேசீயத் தலைவர்கள், தேச பக்தர்கள், தேசீயவாதிகள், தேசாபி மானிகள், தேசீயத் தொண்டர்கள் என்பதாகப் பல பெயர்களை வைத்துக் கொண்டு யாதொரு வேலையும் இல்லாமல், எவ்விதப் பொருப்புமில்லாமல் பதவி பெறவும், வயிறு வளர்க்கவும் ஏற்பட்டார்கள்.
இவைகளைத் தவிர காங்கிரசானது ஏழை மக்களுக்கும்-தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், மற்றும் நாள் 1க்கு 14 மணி நேரம் 18 மணி நேரம், மழை யிலும், வெய்யிலிலும், காடுகளிலும், கழனிகளிலும், மலையிலும், சமுத்திரத் திலும், பட்டரைகளிலும், தொழிற்சாலைகளிலும், வியாபார °தலங்களிலும் அலைந்து மிருகங்கள் போல் உளைத்து போதிய ஆகாரமில்லாமல், சுகாதாரம், வைத்தியம் முதலிய வசதிகள் இல்லாமல், தங்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுக்குப் படிப்பு, உடை முதலியவைகளில்லாமல் ஓட்டைக் குடிசை களில் வதிந்து மடியும் மனித ஜீவன்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது என்று கேட்கின்றோம்? அல்லது காங்கிர° ஏற்பட்டதற்குப் பின் இவர்கள் விஷயத்தில் என்ன மாறுதல் ஏற்பட்டது என்று கேட்கின்றோம்?
இந்த நிலையில் இப்படிப்பட்ட யோக்கியதையுள்ள காங்கிரசானது மூடப்படுகின்றதே, மறைந்து போகின்றதே, செத்துப்போகின்றதே என்று சிலர் விசனப்படுவதைப் பார்த்தால் நமக்கு ஆச்சரியமாகவே தோன்று கின்றது.
இந்த 50 வருஷ காலமாய் காங்கிரசினால் நாட்டுக்கு என்ன-என்ன காரியங்கள் ஏற்பட்டதோ-காங்கிரசினால் மக்களுக்கு என்னென்ன உணர்ச்சி கள் ஏற்பட்டதோ அவைகளை யெல்லாம் இன்று அடியோடு அழித்துத்தீர வேண்டிய அவசியத்தில் உலகம் இருக்கும்போது, அப்படிப்பட்ட காங்கிர° ஒழிந்து போவதனால் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டியதிருக்க எதற்காக விசனப்படுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்திய தேசீயக் காங்கிர° என்பது ஒரு விபசாரித்தனத்திற்கொப் பான °தாபனமாய் இருந்துவந்தது என்று சொன்னால், சமதர்ம ஞானம் உள்ள எவரும் வாய் பேசாமல் ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றே சொல்லுவோம். ஏனெனில் ஏழை மக்கள் பெயரையும், பாமர மக்கள் பெயரையும், கஷ்டப் படும் மக்கள் பெயரையும் சொல்லிக்கொண்டு, அந்த ஏழை மக்களுக்கு மேற்கண்ட காங்கிர° °தாபனம் செய்து வந்த அக் கிரமங்களுக்கும், கொடுமைகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், ஏதாவது எல்லைகட்ட முடியுமா என்று கேட்கின்றோம்?
மக்களுக்கு, அவர்களுடைய மனிதத்தன்மைக்கு அடிப்படை யானதும், மிகவும் முக்கியமானதுமான கல்வி விஷயத்தை எடுத்துக் கொண் டோமேயானால்-முதலாளிகள் குழந்தைகள், ஜமீன்தாரர்கள் குழந்தைகள், உத்தியோக°தர்கள் குழந்தைகள், மேல் ஜாதிக்காரர்கள் குழந்தைகள் ஆகியவர்கள் தவிர மற்றபடி, நாட்டில் 100 க்கு 90 பேர்களா யிருக்கும் சாதாரண மக்களின் குழந்தைகள் படிப்பில் பூஜ்யமாகவே யிருந்து வரு கிறார்கள். கையெழுத்துப் போடக்கூடத் தெரியாதவர்கள் அதிகம் பேர்கள் இருந்து வருகின்றார்கள். சுகாதாரத்தைப்பற்றி எடுத்துக் கொண்டால் அதுவும் மேல் குறிப்பிட்ட வகுப்பார்களைத் தவிர மற்றபடி 100 க்கு 90 மக்கள் சுகாதாரம் அற்று, நோயாளியாகவும் வைத்திய வசதி அற்றவர்களாக வும் மிக்க மெலிந்த வர்களாகவும் இருந்து அகாலத்தில் மரணமடைந்து வருகிறார்கள். ஜீவனோ பாய விஷயத்திலும் வயிறார உண்பதற்கும் தங்கள் பிள்ளை குட்டிகளை சாதாரண நிலையிற்கூட போஷிப்பதற்கும் முடியாம லும் 100 க்கு 75 குழந்தைகள் தங்களது 6 வது 7 வது வயதிலேயே தங்கள் வயிற்றுக்குக் கூலி வேலை செய்து தீர வேண்டிய வர்களாகவும் இருந்து வருகிறார்கள். மனிதனுக்கு வேண்டிய முக்கிய காரியங்களாகிய கல்வி, சுகாதாரம், ஜீவனம் முதலாகிய விஷயங்களில், ஒரு சிறு மாறுதலைக்கூட செய்ய முடியாத °தாபனங்கள் இருந்தென்ன? செத் தென்ன? என்பதை நடுநிலையிலிருந்து யோசிக்கும் எந்த அறிவாளியும் கடுகளவுகூட காங்கிரசு செத்துப் போகின்ற தென்று விசனப் படமாட்டான் என்றே சொல்லுவோம்.
கல்வி முதலிய மேற்கண்ட விஷயங்களில் காங்கிரசினால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதற்கு காங்கிர° பக்தர்கள் சர்க்கார் பேரில் குறை கூறலாம். ஆனால் அந்த காங்கிர° பக்தர்களை ஒன்று கேட்கின்றோம். அதென்னவென்றால் பணக்காரர்கள், மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களு டைய கல்வி, சுகாதாரம், ஜீவனோபாயம் முதலிய விஷயங்களிலும் மற்றும் பெரும் பெரும் சம்பளம், அதிகாரம், பதவி பெறுவதற்குத் தகுதியான கல்வி, சுகாதார ஜீவனோபாய உத்தியோக விஷயத்திலும், இந்த 40, 50 வருஷங் களுக்குள்ளாக காங்கிரசினால் எவ்வளவு சீர்திருத்தங்கள், அனுகூலங்கள் ஏற்பட்டு, அக்கூட்டத்தார்கள் பயன் அடைந்து வருகின்றார்களா? இல் லையா? உதாரணமாக, வக்கீல், வைத்தியம், கணிதம், இஞ்சினீர், ஐ.சி.எ°., பி.சி.எ°. முதலிய படிப்பு விஷயத்தில் எவ்வளவு முற்போக்கு, எவ்வளவு சம்பள உயர்வு, எவ்வளவு உத்தியோக அதிகரிப்பு முதலிய காரியங்கள் நடை பெறவில்லையா? என்று கேட்கின்றோம்.
இவைகள் எல்லாம் எப்படி ஏற்படச் செய்ய முடிந்தது என்று பார்த் தால் காங்கிர° துரோகமும், ஒழுக்க ஈனமும் நன்றாய் விளங்கிவிடும்.
ஆகவே ஒரு நாட்டில் செல்வவான்களுக்கும், மேல் ஜாதிக்காரர் களுக்கும் மாத்திரம் அனுகூலமாயும், ஏழைகளுக்கும், பாடுபடும் மக்களுக் கும் பிரதிகூலமும், துரோக சிந்தனையும் உள்ளதாயுமுள்ள ஒரு °தாபனம் செத்துப்போகுமேயானால் ஜனங்கள் அதற்காக மகிழ்ச்சி யடைவதுடன் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அது மறுபடியும் தலை எடுக்காமல் இருக் கும்படி ஆழக் குழி தோண்டி புதைத்து அதன்மீது குத்துக்கல்களை நட வேண்டியது சமதர்ம அறிஞர்களின் கடமையாகும்.
காங்கிரசின் அயோக்கியத் தனங்களும், துரோகங்களும், பாமர ஜனங் களுக்கு வெளியாகக் கூடிய நல்ல ஒரு சமயத்தில், அதை மறைக்க தோழர் காந்தியாரைப் பிடித்து அவரை மகாத்மாவாக்கி அவர் மூலம் மத சம்மந்த மான உணர்ச்சிகளை மக்களுக்குள் புகுத்தச் செய்து, காங்கிர° பித்தலாட் டங்களுக்கெல்லாம் வேறுவித பாஷ்யம் கூறி, வருணாசிரமமென்றும், பரம் பரைத் தொழில் முறை என்றும், ஏழ்மைத்தன்மையையும், துன்பத்தையும், கஷ்டத்தையும் அனுபவிப்பதே மேல் என்றும் “தத்துவஞானம் பேசச் செய்து மக்களை ஏமாற்றி மறுபடியும் காங்கிர° படுகுழியில் விழும்படி யான காரியத்தைச் செய்வித்து வந்தார்கள்”. “கெட்டிக்காரன் பொய் எட்டு நாளை யில் தெரிந்துவிடும்” என்பதுபோல் காந்தீயத்தின் யோக்கியதை இப்போது இந்தப் பத்து வருஷத்தில் விளங்கிவிட்டதால் இரண்டும் சேர்ந்து மண் வீடு சரிவதுபோல் காங்கிரசும், காந்தீயமும் ”உன்னால் நான் கெட் டேன், என்னால் நீ கெட்டாய் ” என்று ஒன்றை யொன்று சொல்லிக்கொண்டு மாள வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது.
இந்திய தேசீய காங்கிரசும், காந்தீயமும், அழிந்தொழிந்து போவது என்பது இந்திய ஏழை மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலக ஏழை மக்கள் இயக்கத்திற்கே அதாவது சமதர்ம உலகத்திற்கே பெரிய லாபகரமான காரியமாகும்.
இந்தியாவில் சமதர்மக்கொள்கை என்றைக்காவது ஒரு நாள் ஏற்படும் என்று நினைப்போமேயானால் அது தேசீய காங்கிரசும், காந்தீய மும் ஒழிந்த நாளாகத் தான் இருக்குமே தவிர அவை ஒழியாமல் ஏற்படாது என்பது உறுதி.
இந்தியாவைவிட பலமடங்கு அரசியல் கொடுமையும், பணக் காரக்கொடுமையும், பார்ப்பனீய (பாதிரித்தன்மை)க்கொடுமையும் அநாகரி கக் கொடுமையும், அடிமைத் தன்மைக்கொடுமையும் இருந்து வந்த ரஷிய தேசத்துக்கு சமதர்ம உணர்ச்சி எப்பொழுது ஏற்பட்டது என்று பார்ப்போமே யானால் அங்கும் டால்°டாயிசம் என்னும் வைதீகப் புடுங்கலிசம் (காந்தீயம்) ஒழிந்த பிறகு தான் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை. ரஷிய மகாத்மாவான டால்°டாய் என்பவரும், தோழர் காந்தியாரைப் போலவே ஏழ்மை வேஷமும், கடவுளைத் தேடும் தொழிலும், கடவுள் அருளுடன் கலந்திருக்கும் தன்மையையும் கொண்டவராக இருந்துவந்தவர். அவருக்கு செல்வாக்கு இருக்கும்வரை, ரஷியா மக்களுக்கு இந்த உலக வாழ்வு விஷயத்தில் கவலை இல்லாமல் “செத்தபின் வாழும் மேல் உலக வாழ்க்கை யிலேயே கவலை உண்டாகும்படியான உண்ர்ச்சியே வலுத்திருந்தது. ஏழை களுடைய கஷ்டம் இன்னது, தொழிலாளிகளுடைய கஷ்டம் இன்னது என்று உணராமலும், அனுபவ ஞானமில்லாமலும், ஏழ்மைத்தன்மை யையும், உழைப்பையும் சிலாகித்துப் பேசி மக்களுக்குப் பிரசாரம் செய்து வந்தவராவார்.
அப்படிப்பட்ட டால்°டாயிசம் ஒழிக்கப்பட்ட பிறகுதான் முன் சொன்னபடி மக்களுக்கு சமதர்ம உணர்ச்சி பரவத்தொடங்கி நாட்டையும், புரட்சிக்கு தயாராக்கி முதலாளித் தன்மையையும், பாதிரித்தன்மையையும், ஏகாதிபத்தியத்தன்மையையும் இருந்த இடம் தெரியாமல் செய்து இன்றைய ரஷியக் குழந்தைகளுக்கு “ஒரு காலத்தில் சார் (சக்ரவர்த்தி) என்பவன் இருந்தான் அவனுக்கு முதலாளி என்ற அடிமைகளும், பாதிரி என்ற தரகர் களும் இருந்தார்கள்” என்று கதை சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆதலால் அந்த நிலைமை இந்தியாவில் ஏற்படக்கூடிய தின் அறிகுறியாக இருந்த காங்கிரசும், காந்தீயமும் அழிவதானால் நாம் மகிழ்ச்சி அடையவேண்டுமேயல்லாமல் யாரும் அதற்காக கவலைப்பட வேண்டிய தில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
காந்தீயமும், காங்கிரசும் மறைபடவேண்டிய தேற்பட்டதற்கு பணக் காரர்களும், பார்ப்பனர்களும், படித்துவிட்டு உத்தியோகத்துக்கு காத்திருக் கும் சோம்பேரிகளும் தான் விசனப்படவேண்டுமே தவிர மற்றபடி மனித சமூகத் தினிடம் அன்பு கொண்டு சமநோக்குடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமே என்று எவரும் பயப்பட வேண்டியதில்லை.
அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத்தொண்டர்களை இரண்டு கையையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்க சமதர்ம இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம் ஜாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம். பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும், எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம். ஏழை என்றும், பணக்காரன் என்றும், முதலாளி என்றும், தொழிலாளி என்றும், எஜமான் என்றும், கூலி என்றும், ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும் உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும் நிர்மூலமாக்கி தரைமட்டமாக்கும் இயக்கம். மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரியென்றும், முல்லாவென்றும், முன்ஜன்மம் பின் ஜன்மமென்றும், கர்ம பலன் என்றும்; அடிமையையும், எஜமான னையும், மேல் ஜாதிக்காரனையும், கீழ்ஜாதிக்காரனையும், முதலாளியையும், தொழிலாளியையும், ஏழையையும், பணக்காரனையும், சக்கரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மாவையும், சாதாரண ஆத்மாவையும், அவனவ னுடைய முன்ஜன்ம கர்மத்தின்படி அல்லது ஈ°பரன் தம் கடாக்ஷப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங் கொண்ட சோம்பேரிகளின் கற்பனைகள் எல்லாம் வெட்டித்தகர்த்து சாம்ப லாக்கி எல்லோருக்கும் எல்லாம் சமம் எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கம். ஜாதி, சமய தேசச் சண்டையற்று உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்ற சாந்தியும், ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம். இன்று உலகெங்கும் தோன்றி தாண்டவமாடும் இயக்கம். ஆதலால் அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள்! வாருங்கள்!! என்று கூவி அழைக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 30.07.1933