மோசம்போனேன்! ஈ°வரா! – ஒரு தொழிலாளி
உலகில் நடைபெற்றுவரும் சகல காரியங்களும் ஈ°வரனாகிய உன்னாலேயே நடத்தப்பட்டு வருவதாக நான் நம்பி மதிமோசம் போனேன்! ‘அவனன்றி ஓரணுவுமசையாது’ என்ற சோம்பேரி வேதாந்தத்தை உண்மை யாக நம்பி இந்தக்கதிக்கு ஆளானேன். நான் பிறந்ததிலிருந்து இதுவரை அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறப்பதற்கு, நான் “முன்ஜென்ம” த்தில் செய்த “பாவமே” காரணமென நம்பி என்னை நானே கெடுத்துக் கொண் டேன்! ஒரு சில ஆசாமிகள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் என் போன்ற ஏழைத் தொழிலாளிகளின் உதவிகொண்டு இன்ப வாழ்வு நடாத்தி வருவதற்கு அவர் கள் “முன்ஜன்மத்தில்” செய்த “பூஜா” பலனே காரணம் என நம்பி நான் முழுமூடனானேன்! “கடவுளை நம்பினவர் கைவிடப்படார்” என்றதை மெய்யென நம்பி எனது தற்போதைய இழிந்த நிலைக்கு ஆளானேன்!
நான் சுகவாழ்வை அடையவேண்டுமானால்-என்போன்ற ஏழைத் தொழிலாளிகள் இன்ப வாழ்க்கையை எய்த வேண்டுமானால் முதலில் ஈ°வர நம்பிக்கையிலிருந்து விடுவித்துக் கொள்வதன் மூலமே அதை அடைய முடியும் என்ற உண்மையை இப்போதே உணரும் பாக்கியத்தை யடைந்தேன். ஆகவே ஏ! “ஈ°வரா” இனி நான் மதிமோசம் போக மாட்டேன்! உன் பெயரைக் கூறி அதன் மூலம் சுயநல முதலாளிக் கூட்டங் களும், மன்னர் கூட்டங்களும் இனி என்னை-எனது தொழிலாளர் குழுவை-ஒருக்காலும் ஏமாற்றவிடமாட்டேன்! இது நிச்சயம்! இது உறுதி!! இது சத்தியம்!!!
என்போன்ற ஏழைத்தொழிலாளர்கள் குடிக்கக் கால்வயிற்றுக் கஞ்சிக்கு வழியின்றியும், வசிக்கக் குடிசையின்றியும், கட்டத் துணி யுமின்றியும் கஷ்டப்பட்டு வந்திருப்பதற்கு-வருவதற்கு முக்கிய காரணம் நீயே என்பது பளிச்சென எனக்கு புலனாகிவிட்டது! எனவே எங்கள் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆதிமூலமாயிருந்து வரும் உன்னை ஒழிக்க நான் முன்வந்து விட்டேன்! உன்னை நினைக்க நினைக்க என்நெஞ்சு பகீரென்கிறது! ஓ! பணக்காரர்களின் பந்துவே! உன் ஜம்பம் இனி என்னிடத் தில் செல்லாது.
உன்னாலேயே நான் இந்த இழி நிலைக்கு ஆளானேன் என்பதை இப்போது உணர்ந்துகொண்டு விட்டேனாதலால், நான் முக்கால்வாசி விடுதலையை அடைந்துவிட்டேனென்பது மிகையாகாது. ஆம்! இனி முதலாளிகள், அரசர்கள் என்ற சுயநலக்காரர்களிடத்திலிருந்து வெகு சுலப மாக நான் விடுதலையடைந்து விடுவேன்! உனது பேராலேயே சுயநலக் கூட்டத்தார் எங்களை ஏமாற்றி வந்திருக்கிறார்க ளாதலால் இப்போது உனது பேர் எங்களிடம் செல்லுபடியாகப் போவதில்லையாதலால் இனி முதலாளி கள் பாடு அந்தரத்தில் தான் தொங்கப்போகிறது. உன்னையே நாங்கள் சட்டை செய்யாதபோது முதலாளிக்கூட்டத்தார்தான் எம்மாத்திரம்?
நான் எனது ஐம்பது வருட அனுபவத்தில் நடந்திருப்பவற்றில் இரண்டொரு விஷயங்களைக் கூற ஆசைப்படுகிறேன். எனது ஏழாவது வயதில் பீடித் தொழிற்சாலையில் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்திலமர்ந்தேன். எனது பெற்றோர் பரம்பரை ஏழைகளாதலால் நான் அரைவயிற்று கஞ்சிக்கும் வழியின்றி வாழ்ந்தேன். பதினைந்து வயதுவரையில் பீடித் தொழிற் சாலையில் ஏழு ரூபாய் சம்பளம் பெற்று வந்தேன். அதன்பின் பஞ்சாலை யில் 11 ரூபாய் வேலையில் அமர்ந்தேன். 25 வயதுவரையில் அதே வேலை யிலிருந்து வந்தேன். எனது பெற்றோர்கள் வேலை செய்யச் சக்தியில்லாத வர்களாக ஆகிவிடவே, குடும்பப் பாரம் என் தலையிலேயே வந்து விழுந்தது. நான் பட்ட பாடு ஒருநாய்கூடப் பட்டிராது! பதினொரு ரூபாயை கொண்டு எப்படி ஜீவிப்பது! நான் தினந்தோறும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்து வந்தபோதெல்லாம் எனது பெற்றோர் “நீ ஏன் வருந்து கிறாய்! கடவுள் நமக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான், இதைக் கொண்டு நாம் திருப்தியடைய வேண்டியது தான்! வீணாக வருத்தப் படாதே” என்பார்கள். எனக்கு இந்தச் சமாதானம் முதலில் சரியானது போலத்தோன்றிவந்ததானாலும் நாளாக ஆக அந்த நம்பிக்கையில் ஆட்டங்கொடுக்கலாயிற்று. கடவுள் சர்வ தயாபரர் என்கிறார்களே எல்லாம் செய்ய வல்லவர் என்கிறார்களே அப்படியிருந்தால் என் போன்றவர்கள் சதா துன்பப்படுவதற்கும், ஒரு சிலர் மட்டும் nக்ஷமமாக வாழ்ந்துவருவதற்கும் காரணமில்லையே என்ற ஒரு எண்ணம் ஏற்பட லாயிற்று. இதற்கு அவரவர் கர்மபலனே காரணம் எனச் சிலர் கூறினார்கள். இதையும் என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை, ஏனென்றால் எந்த ஒரு மனிதரையும் முதலில் படைத்தவர் கடவுள் என்று ஒரு கூற்றிருந்து வருவதால், கடவுளாலேயே அப்படிச் செய்யப்பட்டு வருவதாக நான் உணர்ந்தேன். முதலிலேயே கடவுள் ஒவ்வொருவரையும் நல்லவர்களாகப் படைக்காமல் சிலரை ஒருவிதமாகவும், வேறு பலரை மற்றொருவிதமாகவும் படைக்கிறார் என்று நினைக்க இடம் ஏற்படுகிற தல்லவா! அப்படியாயின் கடவுள் சர்வ தயாபரர் என்று எப்படி நம்பவோ, ஏற்கவோ கூடும்? இந்த எண்ணம் எனக்கு உண்டாகவே பலத்த குழப்பமாக விருந்தது. கடவுள் இருக்கிறார் என்பது உண்மைதானா? அவர் இருந்தால் அவர் தயாபரர் தானா? அப்படி அவர் ஜீவதயாபரராகவிருந்தால் எல்லாரும் சுகமாக வாழும்படி செய்யாமல் ஒரு சிலர்மட்டும் சுகமாக இருக்கவும் பெரும்பாலர் துக்கக் கடலில் ஆழ்ந் திருக்கவும் அவர் செய்வாரா? என்பதைப் போன்ற கேள்விகள் எனக்குள் ளேயே எழுந்து என்னைச் சுயேச்சை சிந்தாக்கிரந்தனாக்கிற்று. ஆகவே கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்ற உண்மையை அடையும் பேறு பெற்றேன்!
ஒரு சில சுயநலக் கூட்டத்தார் தாங்கள் மட்டும் சுகமாக வாழவிரும்பி அதற்காகக் கற்பிக்கப்பட்ட கற்பனையே கடவுள் என்பது நன்றாக விளங்கி விட்டது. ஆகவே அந்தக் கடவுள் நம்பிக்கையிலிருந்து என்று விடுதலை அடைகிறோமோ அன்றே முக்கால் விடுதலையை அடைந்துவிட்டதாகத் திட்டமாகக் கூறலாம்.
கடவுள், கர்மபலன், மறுபிறவி என்ற வெற்று வெடிகளால் நாம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம் இவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு மேலே நிமிர்ந்து பார்க்க வேண்டும். நாம் சதா ஈன நிலைமையில் உழல்வதன் காரணங் களைக் கண்டு அதன் அ°திவாரத்தில் கைவைக்கவேண்டும். அதுதான் கடவுள் என்ற கற்பனையே என்பது நன்கு விளங்கும். நம்மைச் சதா இக் கட்டுகளிலும், கஷ்டங்களிலும், இழி நிலைமையிலுமிருக்கச் செய்து வருவது அந்தக் “கடவுளே” யாகும். அவர் தயாபரராகவிருந்தால் நம்மை இப்படித் துன்புறவும், முதலாளிக்கூட்டம் எப்போதும் இன்புறவும் செய்து வருமா? என்பதை நன்கு யோசித்துப்பாருங்கள்! “முன்ஜென்மத்தால் அவரவர் செய்திருக்கும் செயல்களுக்கேற்ப இப்போது நடக்கின்றன” என்றால் முதலில் எல்லோரையும் படைத்தவர் கடவுளே என்கிற படியால், அப்போதே அதாவது முதலிலேயே ஏன் எல்லாரையும் ஒரே மாதிரியாகப் படைத்திருக்கக்கூடாது என்பதை யோசித்துப் பாருங்கள்!
ஆகவே ஏழைகளை ஏணிகளாக உபயோகித்து அதன் மூலம் சிலர் நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்து வரச்செய்து வைத்திருக்கும் கடவுள் போன்ற கட்டுப்பாடுகளை உடனே உடைத்தெரியுங்கள். நம்மைக் கண் விழிக்கச் செய்து வரும் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி, நமது உண்மையான நன்றியையளித்து அந்த இயக்கத்தில் நாமும் இரண்டறக் கலந்து நம்மைக்கெடுத்து வந்திருக்கும் கடவுள், மதம், முடியரசு என்பவை களை அடியோடு ஒழிக்க ஆண்மையோடு முற்படுங்கள். ஆண்டவன் நம்பிக்கை அடியோடு ஒழிக! புரட்சி ஓங்குக!! பொதுவுடமை வாழ்க!!!
குடி அரசு – கட்டுரை – 13.08.1933