பரோடா  பெண்கள்  முன்னேற்றம்

 

புதிய  சட்ட  விபரம்

பரோடா  சமஸ்தானத்திலுள்ள  இந்துப்  பெண்களின்  உரிமைகளைப்  பாதுகாப்பதற்காக  இந்து  சமுதாயச்  சட்டத்தை  பின்வருமாறு  திருத்தி  புதிய  சட்டம்  ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  திருத்தப்பட்ட  அந்தப்  புதிய  சட்டப்படி  ஒரு  இந்து  பொதுக்  குடும்பத்தைச்  சேர்ந்த  ஒருவர்  இறந்துபோனால்  அவருடைய  விதவை  அந்தக்  குடும்பத்தில்  ஒரு  பங்காளி  ஆகிவிடுகிறாள்.  விதவைகளின்  முந்தின  நிலைமையில்  இந்தச்  சட்டம்  ஓர்  பெரிய  மாறுதலை  உண்டுபண்ணி  விட்டிருக்கிறதென்று  சொல்லலாம்.  முந்தியெல்லாம்  ஒரு  விதவைக்கு  அவள்  புருஷன்  குடும்பத்திலே  சோறும்,  உடையும்தான்  கிடைக்கும்.  வேறு  எவ்வித  உரிமையும்  கிடையாது.  இந்தச்  சட்டப்படி  ஒரு  விதவையானவள்  தன்  புருஷன்  குடும்பத்தின்  மற்ற  நபர்களைப்போல்  ஒரு  சம  பங்காளி  ஆகிவிடுகிறாள்.  சொத்தில்  தனக்குள்ள  பாகத்தைப்  பிரித்துக்கொடுக்கும்படி  கேட்பதற்குக்  கூட  இந்தச்  சட்டத்தினால்  உரிமை  ஏற்பட்டிருக்கிறது.

புருஷனுடைய சொத்து அவர் தானே சம்பாதித்த தனி  சொத்தாயிருந்தால்  பழய  சட்டப்படி  அவருடைய  மகனுக்கும்,  பேரனுக்கும்,  பேரன்  மகனுக்கும்தான்  கிடைக்கும்.  இந்த  வார்சுகள்  இல்லாமலிருந்தால்  மாத்திரம்  விதவைக்குக்  கிடைக்கும். இப்போது  இந்தப்புதிய  சட்டத்தினால்  மகன்,  பேரன்  முதலியவர்களைப்  போலவே  விதவையான  பெண்ணும்  சமபாகம்  கிடைக்க  உரிமை  ஏற்படுத்தப்  பட்டிருக்கிறது.  விதவையான  ஒரு  மருமகளுக்கும்,  தாய்க்  கிழவிக்கு  அதாவது  மாமியாருக்கு  அடுத்தபடியான  அந்தஸ்து  ஏற்படுகிறது.

இதற்கு  முன்னெல்லாம்  ஒரு  பெண்ணைக்  கலியாணம்  செய்து  கொடுத்துவிட்டால்  அதன்பின்  அவளுடைய  தகப்பன்  குடும்பத்தில்  அவளுக்கு  எவ்வித  உரிமையும்  கிடையாது.  புருஷன்  வீட்டில்  சாப்பாட்டுக்கு  கஷ்டமாயிருந்தாலும்  கூட  அவளுடைய  தகப்பன்  குடும்பத்திலிருந்து சம்ரட்சனை  பெற  அவளுக்கு  உரிமை  இருந்ததில்லை.  இதனால்  பல  பெண்கள்  கஷ்டம்  அனுபவிக்க  நேரிட்டிருந்தது.

இந்தப்  புதிய  சட்டப்படி  இந்த  நிலைமை  மாற்றப்பட்டிருக்கிறது.  எப்படியெனில்  புருஷன்  இறந்தபின்  ஒரு  பெண்  தன்  தகப்பன்  வீட்டிலேயே  வசித்து  வருவாளானால்,  அவளுடைய  மாமனார்  வீட்டில்  அவளுக்கு  சம்ரட்சனை  செலவு  கொடுக்க  வழியில்லாமல்  இருக்கும்போதும்  தகப்பனுக்கு  அவளை  வைத்துக்  காப்பாற்ற  சக்தி  இருக்கும்போதும்  தகப்பன்  குடும்பத்தாரே  அவளுடைய  ஜீவனத்துக்கு  பணம்  கொடுக்கவேண்டும்  என்று  இந்த  புதிய  சட்டம்  கூறுகிறது.

கலியாண  மாகாத  பெண்ணுக்கு  இதுவரையில்  சம்ரட்சணையும் கலியாணச்  செலவும்  தான்  கொடுக்கப்பட்டு  வந்தது.  சொத்து  பாகப்  பிரிவினை  காலத்தில்  இவ்விரண்டுக்கும்  பதிலாக  சகோதரனுடைய  பங்கில்  நாளில்  ஒரு  பாகம்  கொடுக்கப்படுவதும்  உண்டு.  ஆனால்  சொத்து  பங்கு  போட்டுக்கொடுக்கும்படி  கேட்க  உரிமை  கிடையாது.

இந்தப்  புதிய  சட்டப்படி  அவள்  தன்  பாகத்தைத்  தனியாகப்  பிரித்துக்  கொடுத்துவிடும்படி  கேட்கலாம்.  இதனால்  கலியாண  மாகாத  பெண்களுக்கு  அதிக  சுதந்தரமும்,  சுயாதீனமும்  ஏற்பட்டிருக்கிறது.

சீதன  விஷயமான  பாத்தியதையைப்பற்றி  பழய  சட்டத்திலிருந்த  சில  சிக்கல்களும்  நீக்கப்பட்டிருக்கின்றன.

முந்தின  சட்டப்படி  பெண்கள்  தங்களுக்குக் கிடைக்கிற  சொத்துக்களை  அனுபவிக்க  மாத்திரம்  செய்யலாம்  விற்பனை  செய்ய  முடியாது.  இப்போது  பெண்கள்  12,000  ரூபாய்  வரையில்  தங்கள்  சொத்துக்களை  விற்பனை  செய்யவோ,  அல்லது  வேறு  விதமாக  வினியோகிக்கவோ  þ  புதிய  சட்டம்  பூரண  உரிமை  அளிக்கிறது.  இந்தப்  புதிய  சட்டத்தினால்  பரோடா  நாட்டுப்  பெண்களுக்கு  அதிக  உரிமைகளும்,  பாதுகாப்புகளும்  ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.  இவ்விதமே  பிரிட்டிஷ்  இந்தியாவிலும்,  மற்ற  சமஸ்தானங்களிலும்,  இந்து  சட்டம்  திருத்தப்படுமாயின்  பெண்கள்  முன்னேற்றத்துக்குப்  பெரிதும்  அனுகூலமாயிருக்கும்.

புரட்சி  கட்டுரை  04.02.1934

You may also like...