ஈ.வெ.ரா. குறிப்பு
தோழர்களே, எனது மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து 11-11-32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன். நீண்ட பிரயாணத்தினால் நான் சிறிது களைப் புற்றிருந்தாலும் சமீபத்தில் களைப்பு நீங்கி இயக்க வேலையை மும்முரமாய் தொடங்க உறுதி கொண்டி ருக்கிறேன். என்னுடன் கூட வந்த தோழர் ராமநாதன் அவர்கள் என்னை மார் செயில்ஸில் இந்தியாவுக்கு கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்கு சென்று இருக்கிறார். அங்கு சில விஷயம் அறிந்து 2 அல்லது 3 மாதத்தில் இந்தியா திரும்புவதாக சொல்லிப் போயிருக்கிறார். அதற்குள் கூடிய சீக்கிரம் நமது இயக்கத் தோழர்கள் பலரை கூட்டிக் கலந்து பேசி ஒரு வேலைத் திட்டத்துடன் தீவிர பிரசாரம் நடத்த உத்தேசித் திருக்கிறேன்.
சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங்களையும், காட்சிகளையும், அதனால் நான் கொண்ட கருத்துக்களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன். நான் இங்கு இல்லாத போது இயக்கத்தை தொடர்ந்து முன்னிலும் பல மடங்கு அதிகமாக எழுத் தாலும் உபன்யாசங்களாலும் மகாநாடுகள் கூட்டியும் மக்களுக்கு உண்மை உணர்ச்சிக்களை ஊட்டி தீவிரமாய் வேலை செய்து வந்த தோழர்கள் யாவ ருக்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன்.
முக்கிய குறிப்பு
இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுவதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக “தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா – ள – ஸ்ரீ, கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். “குடி அரசி” லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக் கிறேன். -ஈ.வெ.ரா
குடி அரசு – அறிக்கை – 13.11.1932