கொழும்பில் ஈ.வெ. இராமசாமி
தமிழ் நாட்டில் நான் செய்துள்ள சிறிய தொண்டை முன்னிட்டும் எமது மேல் நாட்டு பிராயணத்தை முன்னிட்டும் எம்மை உபசரிக்கும் நோக்கமாகச் செய்த வந்தனோபசாரங்களுக்கு நான் எனது உண்மையான நன்றியறிதலை செலுத்துகிறேன். நீங்கள் என்னை அதிகம் புகழ்ந்து விட்டீர்கள். இருந்தும் எனது கொள்கையை நீங்கள் பூரணமாக ஒப்புக் கொள்ளுகிறீர்கள் என்று இதனால் எனக்குத் தோன்றுகிறது.
இன்று உலகத்தில் விடுதலையின் பேரால், சுதந்திரத்தின்பேரால் எவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன. மதாபிமானம், தேசாபிமானம், கடவுளபிமானம் என்ற பேரால் எத்தனை பேர் வயிறு பிழைக்கின்றனர். லக்ஷக் கணக்கான நமது சகோதரர், உடன் பிறந்தார், ஊணுடையின்றிக் கஷ்டப்பட்டுச் சாகின்ற இந்நாட்களில் அவர்களுடைய இன்னல்களை நீக்க வழி தேடுவதை விட்டுக் கடவுளைப் பற்றி பேசி என்ன பயன்?
நாம் ஆலோசனைக்காரார். அதுவே நமது கொள்கை; அதுவே சுயமரியாதைக் கட்சியின் அடிப்படையான கொள்கை. நமக்குத் தோன்றுகிற எண்ணங்களை ஆலோசித்து அலசிப் பார்க்க வேண்டும். அதற்குப் பயப்படக் கூடாது. எனக்குக் கடவுளைப் பற்றியே கவலையில்லை. உலகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அதுபோல் கடவுளும் ஒருவர் இருக்கட்டும். அதுபற்றி என்ன விசாரம்? ஆனால் நாள்முழுதும் பாடுபட்டும், வேலை செய்தும் குடிக்கக் கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களை திரும்பிப் பார் என்றால் நமது மதப்பிரசாரகர்கள் கடவுளைப் பார் என் கின்றார்கள்.
மக்கள் கஷ்டத்தினின்றும் விடுதலையடைய வேண்டும். இதற்குச் சம்மதமான கடவுள் இருக்கட்டும் மற்றக் கடவுள்கள் வேண்டாம். இவ்வளவுதான் நாம் சொல்வது.
மக்கள் கஷ்டங்களை நிவர்த்தி பண்ண முடியாத தேசபிமானம் வேண்டாம். தேசாபிமானம் நாளைக்கு; இன்றைக்கு வயிற்றுச் சோற்றுக்கு.
விஷயங்களைப் பரிசோதனைசெய்து பாருங்கள். பார்த்து அதற் கேற்றவாறு நடவுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.
நான் மனிதன். என் அறிவைக் கொண்டு விஷயங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம். அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள், இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச் சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப்பாருங்கள். ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்ட காலம் மலையேறி விட்டது. சுயஅறிவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது.
நாம் எண்ண வேண்டியது, ஆராய வேண்டியதெல்லாம் முன்னேயே எமது ஆன்றோரால் ஆய்விட்டது என்று நீங்கள் கொள்ள வேண்டாம். நான் சொல்லுவது முற்றும் சரியென்றும் நீங்கள் கொள்ள வேண்டாம். எதையும் ஆராய்ந்து உண்மை தேறிக்கொள்ளுங்கள்.
எனக்கு மதாபிமானம் இல்லையென்று நீங்கள் கருத வேண்டாம். 25 வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்மகர்த்தாவாகவிருந்து, அக் கோயிலின் கிரமங்களையெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்கு தேசாபிமானம் இல்லையென்றும் நீங்கள் சொல்லவேண்டாம். 1 தடவைக்கு 3, 4 தடவை தேசீய விஷயமாக ஜெயிலுக்குஞ் சென்றேன். ஆனால் இந்த அபிமானமெல்லாம் நம் ஏழைச் சகோதரருக்கு விமோசனம் கொண்டுவராது. ஆதலால் தான் அபிமானமொன்றும் நமக்கு வேண்டாம். மனுஷாபிமானமே வேண்டுமென்று ஜனங்களுக்கு நான் எனக்குத் தோன்றிய வரை போதிக்கத் தலைப் பட்டேன். சோம்பேறி ஞானமும் மதாபிமானமும் பசி கொண்ட மகனுக்கு அவன் பசியைத் தீர்க்குமா? எண்ணத்துக்குச் சுதந்திரம் கொடுங்கள். மனுஷாபிமானத்தையும் சுயமரியாதையையும் காப்பாற்றுங்கள். ஏழைகளின் கஷ்டத்திற்கு நிவாரணந் தேடுங்கள்.
குறிப்பு : 23-10-1932 ஆம் நாள் கொழும்பு மருதானை எல்பின்ஸ்டோன் காட்சி சாலையில் மலையாளி சுயாபிமானிச் சங்கத்தாராலும் கொழும்பு சுயமரியாதைச் சங்கத்தாராலும் அளிக்கப்பட்ட வரவேற்பு பத்திரம் அளிக்கப்பட்ட கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 30.10.1932