தீபாவளிக் கொள்ளை நோய்
ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயினால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத்தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி விடும் கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச வேண்டும். அத்தகைய கொள்ளை நோய்கள் இந்து மதத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவைகளில் எல்லாம் மிகவும் பெரியதாகிய கொள்ளை நோய் தான் இவ்வாரத்தில் வருகிறது. அக் கொள்ளை நோய் தீபாவளிப் பண்டிகை யேயாகும். ஆகையால் எல்லா மக்களையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அக்கொள்ளை நோயின் கொடுமைகளை எடுத்துக் காட்ட முன்வந்தோம்.
இந்தியர்கள் அவர்களுக்குள்ளும், இந்துக்கள் என்பவர்கள் மற்ற சமூகத்தாரைக் காட்டிலும் செல்வத்திலும், அறிவிலும், வீரத்திலும் தாழ்ந்து அடிமை மனப்பான்மை மிகுந்தவர்களாயிருப்பதற்குக் காரணம், இந்து மதமும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள பண்டிகைகளுமே என்பதை நமது இயக்கம் நன்றாய் விளக்கிக் காட்டியிருக்கின்றது. இந்து மதமும் இந்து மதத்தின் பேரால் ஏற்பட்டு வழங்கிவரும் பண்டிகைகளும் இல்லாதிருக்கு மானால் நமது மக்கள் எவ்வளவோ உயர்ந்த நிலையிலும், சுதந்திர முடைய வர்களாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இன்று மதத்தையும், மதப்பண்டிகைகளையும், லட்சியம் பண்ணாமல் தங்கள் சொந்த புத்தியின் வழியே நடந்து, இவ்வுலகத்தில், சுகமாக வாழ்வதற்கு வழியைக் கண்டு பிடிப்பதில் முனைந்து நிற்கும் மக்களே பகுத்தறிவு உடைய வர்களாகவும், அடிமைத் தன்மை இல்லாதவர்களாகவும், தரித்திரமில்லாத வர்களாகவும், வாழ்வதை நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிலைமையிலிருக் கிறோம். இருந்தும் நமது நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாக ஆர்ப் பாட்டம் புரிந்து கொண்டிருக்கும் எவரும், மற்ற நாட்டு மக்கள் சுதந்திரமடை வதற்குக் கைக்கொண்ட உண்மையான வழிகளைப் பற்றிச் சிந்திக்கவோ அது பற்றி நமது மக்களிடையே பிரசாரம் பண்ணவோ முன் வராமலிருக்கின்றனர். ஆனால் நாம் மாத்திரம் ஆதிமுதல், இந்துமதமும், இந்துமதப் பண்டிகை களும் ஒழிந்தாலொழிய நமது மக்கள், செல்வத்திலோ, அறிவிலோ, சமத்துவத் திலோ ஒரு நாளும் முன்னேற முடியாது என்று சொல்லி வருகிறோம்.
இப்பொழுது நமது கண்முன் நிற்கும் தீபாவளிப் பண்டிகையை எடுத்துக் கொள்ளுவோம். இப்பண்டிகையினால் நமது நாட்டு மக்களுக்கு உண்டாகும் பொருள் நஷ்டம் சரீரத் துன்பம் எவ்வளவு? அன்றியும் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையுள்ள எல்லோர் மனத்திலும் பதியும் மூட நம்பிக்கை எவ்வளவு? இவற்றை எல்லாம் ஜன சமூகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களைச் சீர்திருத்த எந்த தேசாபிமானியாவது முயற்சி எடுத்துக்கொள்கின்றானா?
முதலில் இப்பண்டிகையினால் மக்களுடைய அறிவு எவ்வாறு மழுங்க வைக்கப்படுகிறது என்பதைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். இதை அறிய வேண்டுமானால் இதன் பொருட்டு – அதாவது இப்பண்டிகையை ‘தெய்வீக’மானது என்று மக்கள் நம்பவைக்கும் பொருட்டு ஏற்பட்டிருக்கும் புராணக் கதையை ஆராய்ந்தாலே இதன் உண்மை விளங்கும். ஆதலால் அக்கதையைக் கீழே குறித்துக் காட்டுகிறோம்.
“பூமி தேவி” என்னும் இந்த மண்ணுக்கும், “மகா விஷ்ணு” என்று சொல்லப்படும் ஒரு தெய்வத்திற்கும் “நரகா சூரன்” என்னும் ஒரு மகன் பிறந்தானாம். அவன் அதிக பலசாலியாக இருந்து கொண்டு பார்ப்பனர் களுக்கு துணைவராகிய “தேவர்கள்” என்பவர்களை யெல்லாம் மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தானாம். ஆதலால், தேவர்களெல்லாம், தமிழர் குலமாகிய அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாகச் சொல்லப்பட்ட “நரகாசுர” னுடைய கொடுமையை சகிக்க முடியாமல் “மகாவிஷ்ணு” என்னும் அந்த தெய்வத்தினிடம் சென்று முறையிட்டார்களாம். மகா விஷ்ணு என்பவரும், அந்த நரகாசுரனைக் கொன்று தேவர்களுடைய கஷ்டத்தை நீக்குவதாகக் கூறினாராம். அப்பொழுது பூமிதேவி, நரகாசுரனைக் கொல்லும் போது தன்னையும் உடன் வைத்துக் கொண்டே தன் மகனைக் கொல்லும்படி வேண்டிக் கொண்டாளாம். அதற்கு மகா விஷ்ணுவும் சம்மதித்தாராம்.
அதன் பிறகு மகா விஷ்ணு கிருஷ்ணனாகப் பிறந்து, சத்திய பாமையாகப் பிறந்திருந்த பூமி தேவியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் ஒரு தீவில் வசித்து வந்த நரகாசுரனைக் கொன்றானாம். கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறந்த நாளை பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டுமென்று “வரம்” கேட்டானாம் கிருஷ்ணனும் அவ்வாறே “வரம்” கொடுத்தானாம்.
இது தான் தீபாவளிப் பண்டிகைக்காகக் கற்பிக்கப்பட்டிருக்கும் கதை. இக்கதையை நம்பி தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் மக்களை சிறிதாவது புத்தியுள்ளவர்களென்று கூறமுடியுமா என்பதை நன்றாய் யோசனை செய்துப் பாருங்கள்!
முதலில் நமது கண்ணுக்கு முன் காணப்படும் இந்த மண் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா? இரண்டாவது ‘மகாவிஷ்ணு’ என ஒரு தெய்வம் கடைகளில் விற்கும் பண்டங்களில் இருப்பது போல, பல பெண்ஜாதிகளுடன், ஒரு குருவியின் மேல் உட்கார்ந்து கொண்டோ, அல்லது பாம்பின் மேல் படுத்துக்கொண்டோ, சமுத்திரத்தில் மிதந்துகொண்டோ இன்றும் இருப்பதாகக் கூறப்படுவதும், இதற்குமுன் இருந்ததாகச் சொல்லப்படுவதும் அறிவுக்குப் பொருத்தமான செய்தியா?
இப்படிப்பட்ட ஒரு தெய்வத்திற்கும் மண்ணுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்று சொல்லுவது எவ்வளவு புரட்டு? ஆரம்பமே புரட்டாயிருக்கும் போது மற்றவைகளெல்லாம் எப்படியிருக்குமென்பதை இன்னும் நாம் விரித்துக் காட்ட வேண்டியதில்லை. ஆகவே, இத்தகைய அர்த்தமற்ற கதையைத் “தெய்வீக”முள்ளதாக நம்பிக்கொண்டு, இதன் பொருட்டு ஒரு தேசம் கோடிக்கணக்கான பொருளை ஒரே நாளில் செலவு செய்யுமானால், அதை அறிவுடைய தேசமென்று சொல்ல முடியுமா?
இந்தக் கதையை நம்பியே “நரகசதுர்த்தி” என ஒரு நாளைக் குறிப்பிட்டுக் கொண்டு அன்று விடியற் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து முழுகுவதும், எண்ணெய்ப் பலகாரங்களை வயிறு புடைக்கத் தின்பதும் பட்டாசுக் கட்டுகளைக் கொளுத்துவதுமான செயல்களை செய்து பண்டிகை கொண்டாடுகின்றனர்.
இவ்வாறு செய்வதனால், மக்களுக்கு மதப் புரட்டிலும், பண்டிகை புரட்டிலும், புராணப் புரட்டிலும், அவதாரப் புரட்டிலும் பார்ப்பன வம்சத்தைச் சேர்ந்ததேவர்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள், உயர்ந்தவர்கள், தமிழர் வம்சத்தை சேர்ந்தவர்களாகிய அசுரர்கள் அனைவரும் அயோக்கியர்கள், தாழ்ந்தவர்கள் என்னும் புரட்டிலும் நம்பிக்கையுண்டாகி, அவர்கள் அறிவு குன்றிப் போகின்றது. அன்றியும், மக்கள், பண்டிதர்கள், புரோகிதர்கள், மதவாதிகள் என்னும் புரட்டர்களுக்கு இன்னும் அடிமையாகவே இருக்கக் கூடிய நிலையையும் அடைகிறார்கள் என்பதை யார் மறுக்க முடியும்?
இனி இப்பண்டிகையினால் உண்டாகும் பொருள் நஷ்டத்தையும், சுகாதாரக் குறைவையும் கவனிப்போம். ஏழை முதல் பணக்காரன் வரையுள்ள எல்லா இந்துக்களும் இதையொரு “தெய்வீக” மான பண்டிகையென்று கருதுவதால், எப்பாடுபட்டாவது எவ்வளவு பணத்தை செலவழித்தாவது, பணமில்லாவிட்டால் கடன் வாங்கியாவது, இதைக் கொண்டாட வேண்டுமென்று தமது அறியாமையால் நினைக்கிறார்கள்.. இவர்களில் பணக்காரர்கள், இப்பண்டிகையின் பொருட்டு எக்கேடு கெட்டாலும், எந்தச் சந்தியில் நின்றாலும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் ஏழைமக்களும், பணக்காரர்களைப் பார்த்தும், அர்த்தமற்ற தெய்வீகத்தையும் புராணக் கதைகளையும் நம்பியும், வீணாக அறிவின்றிக் கஷ்டப்படு கின்றார்களே என்றுதான் நாம் பரிதாபப் படுகின்றோம். ஏழை மக்கள், தீபாவளிப் பண்டிகை வர ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, பண்டிகை கொண்டாடுவதற்காக பலகாரம் தயார் செய்வதற்கு கடைச் சாமான்கள் வாங்குவதற்கும், புது வேட்டிகள் புடவைகள் வாங்குவதற்கும், பட்டாசுக் கட்டுகள் வாங்குவதற்கும், பட்டினி கிடந்து பொருள் சேர்க்கின்றார்கள். அவ்வாறு சேர்த்து வைத்த பொருளும் போதாமல் கடன் வாங்குகிறார்கள். இவ்வாறு வாங்கிய கடனை கொடுப்பதற்கு வேறு வழியில்லாமல் இவர்கள் தேடி வைத்திருக்கும் நகைகளோ பாத்திரங்களோ விற்கப்படுகின்றன. இவ்வாறு ஏழைமக்கள் பொருள் வீண் நஷ்டமாகிறது.
இதற்கு மாறாக முதலாளிகளாக இருக்கும் ஜவுளி வியாபாரிகளும் மளிகைக் கடைக்காரர்களும், இத் தீபாவளியில் நல்ல லாபம் அடைகிறார்கள். அவர்கள் அடையும் லாபம் ஏழைமக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பொருள் என்பதை யார் மறுக்க முடியும். ஆகவே இப்பண்டிகை ஏழைமக்களை இன்னும் பரம ஏழைகளாக்கவும், பணக்காரர்களை இன்னும் கொழுத்த பணக் காரர்களாக்கவும், ஒருவகையில் உதவி செய்கிறதென்பதையும் அறியலாம்.
அன்றியும் வீணாகக் கொளுத்திச் சுட்டு பொசுக்கப்படும், பட்டாசு களும், வாணங்களும், எங்கிருந்து வருகின்றன. இவைகள் பெரும்பாலும் அயல் நாடுகளிலிருந்தே தீபாவளிக்கென்று நமது நாட்டிற்கு வியாபாரத் திற்காகக் கொண்டு வரப்படுகின்றன. சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமான முள்ள பட்டாசுக் கட்டுகளும், வாணங்களுமாவது இந்தத் தீபாவளியில் பொசுக்கப்படுமென்பதில் ஐயமில்லை. இந்த இரண்டு கோடியும் கரியும் புகையுமாக போவதைத் தவிர இதனால் வேறு யாருக்கு என்ன பலன்? நமது தேசப் பணமாகிய இந்த இரண்டு கோடி ரூபாயும் அந்நிய நாட்டுக்குத் தானே போய்ச் சேருகிறது? இன்னும் அன்னிய நாட்டுத் துணிகள் வியாபாரத்தின் மூலம் அயல் நாடுகளுக்குச் செல்லும் பொருள் நாலைந்து கோடி ரூபாய்க்குக் குறையாது என்பது நிச்சயம். இந்த நாலைந்து கோடியும் நமது தேசத்திற்கு நஷ்டம் தானே.
இன்னும் அடை மழை பெய்து கொண்டிருக்கும் இந்த ஐப்பசி மாதத்தில் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து முழுகிவிட்டு எண்ணெய் பலகாரங்களைப் போட்டு வயிற்றை நிறப்புவது சரீரசுகத்துக்கு ஏற்றதா என்று தீபாவளியை நம்பும் எந்த முட்டாளாவது யோசித்துப் பார்க்கிறானா? சாதாரணமாக நமது நாட்டில் “காலரா” என்னும் விஷப் பேதி நோய் பரவுவது இந்த தீபாவளி முதல் தான் என்பதை எவரும் அறிவார்கள். எதனால் இந்த விஷப் பேதி உண்டாகின்றது என்பதை அறிந்தவர்கள் இந்தத் தீபாவளிப் பண்டிகையினால் நமது ஜன சமூகத்திற்கு உண்டாகும் தீமையை மறுக்க மாட்டார்கள். சாதாரணமான அஜீரணமே இந்த விஷ பேதிக்கு முதற் காரணமாகும். விடியற்காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி எளிதில் ஜீரண மாகாத மாவு பண்டங்களைப் போட்டு வயிற்றை நிரப்பினால் வயிற்றில் உள்ள ஜீரணக் கருவிகள் என்ன நிலையடையும்? இதனால் பலவிடங்களில் நமது நாட்டில் விஷ பேதி உண்டாகி விடுகின்றது. இன்னும் பல வகையான நோய்களும் உண்டாகி விடுகின்றன. நாம் கூறுவதில் நம்பிக்கையில்லை யானால் தீபாவளியன்று மறுநாள் நமது நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று பாருங்கள்! எத்தனை அஜீரண நோயாளிகள் வருகிறார்களென் பதைத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் சமாச்சாரப் பத்திரிகைகளைக் கவனித்துக் கொண்டிருப்பீர்களானால் எங்கெங்கே விஷ பேதி உண்டாகி யிருக்கிற தென்பதையும் அறியலாம்.
இதுவுமல்லாமல் பட்டாசுகளிலிருந்து எழும் விஷப் புகையினால் வரும் வியாதிகள் பல. இவ்வாறு தீபாவளி பண்டிகையானது மக்களுடைய மனத்திலும் மூட நம்பிக்கையை உண்டாக்குவதோடு அவர்களுடைய பொருளுக்கும் நஷ்டத்தை உண்டாக்கி சரீர சுகத்தையும் கெடுத்து உயிருக்குக் கூட உலை வைத்துவிடுகிற தென்பதையும் அறியலாம்.
ஆனால் இந்தப் பண்டிகையைப் பற்றியும் இது போன்ற மற்றப் பண்டிகைகளைப் பற்றியும், நமது நாட்டு தேசீயப் பத்திரிகைகளாவது, தேசீய வாதிகளாவது கண்டித்துக் கூறி அவைகளில் உள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும் எடுத்துக் காட்டி, மக்களுடைய செல்வத்தை நஷ்டமாகாமற் செய்யவாவது, அவர்களுடைய மூட நம்பிக்கைகளைப் போக்கவாவது முயற்சி செய்கின்றார்களா என்று பார்த்தால் ஒரு சிறிதும் இவ்வாறு செய்வ தாகக் காணோம். இதற்கு மாறாக, இது போன்ற பண்டிகைகளைப் பற்றி யெல்லாம் விளம்பரப்படுத்துவதும், அவைகளின் “பரிசுத்தத் தன்மை”களை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதும் அவைகளைக் கொண்டாடும்படி செய் வதும் ஆகிய காரியங்களையே செய்து வருகின்றார்கள். உதாரணமாக, இந்தத் தீபாவளியைப் பற்றிச் சென்ற இரண்டு மாதங்களாகவே பிரசாரஞ் செய்யப் பட்டு வருவதை அறியலாம். அதாவது தீபாவளி பண்டிகை நமது தேசீய பண்டிகையென்றும் தேவர்களுக்கு விரோதியாயிருந்த நரகாசுரனைக் கொன்று அவர்கள் சுகமடையும்படி விடுதலையுண்டாக்கிய விடுதலை நாள் என்றும், ஆகையால் அன்று எல்லோரும் தேசீய விடுதலையைக் கருதி கதர்வாங்கிக் கட்ட வேண்டும் என்றும், கதர் பக்தர்களும், காங்கிரஸ் பக்தர் களும், தேசீய பக்தர்களும், கதரின் பேராலும், காங்கிரசின் பேராலும், தேசீயத் தின் பேராலும் தீபாவளிப் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் செய்யும் இந்த பிரசாரம், மக்களை இன்னும் மூட நம்பிக்கையுடையவர்களாக்கவும், குருட்டுப் பழக்க வழக்கங்களை யுடையவர்களாக்கவும், செய்யப்படும் மதப் பிரசாரமா அல்லவா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.
நமது நாட்டுத் தேசீயவாதிகளுக்கு, இது போன்ற பண்டிகைகளின் பேரில் உள்ள பக்திதான் இன்று எடுத்தவைகளெல்லாம் அதாவது, தேசீய ராஜீய காரியங்களைக் கூடப் பண்டிகைகளாக்கி அவைகளைத், “தேசீய மதம்” என்னும் ஒரு புதிய மதத்தின் பேரால் கொண்டாடச் செய்ய வேண்டும் என்னும் எண்ணமுண்டாகி அவ்வாறே செய்தும் வருகிறார்கள். இதற்கு உதாரணமாக, காந்தி ஜெயந்தி, நேரு ஜெயந்தி, திலகர் ஜெயந்தி, தாஸ் ஜெயந்தி, லஜபதி நாள், சத்தியாக்கிரக நாள், டண்டி நாள், புனா ஒப்பந்த நாள், உண்ணா விரத நாள் என்பவை போன்ற பல நாட்களைக் குறிப்பிட்ட அவைகளைப் பண்டிகைகள் போலக் கொண்டாடும்படி செய்து வருவதைக் கூறலாம். ஆகவே இத்தகையவர்கள், புராதனமானதென்று சொல்லப்படும் தீபாவளி போன்ற பண்டிகைகளைப் பற்றி பிரசாரம் பண்ணாமல் விட்டு விடுவார்களா?
இன்று தீபாவாளிப் பண்டிகையின் விசேஷத்தைக் கூறிக் கதர்ப் பிரசாரம் பண்ணும் தேசீயவாதிகள் உண்மையில், பகுத்தறிவுடைவர்களா யிருந்தால், நமது நாட்டுச் செல்வம் அன்னிய நாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற எண்ணமுடையவர்களாயிருந்தால், நமது மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் நோக்கமு டையவர்களாயிருந்தால் தீபாவளிப் பண்டிகையையும் இது போன்ற மற்றப் பண்டிகைகளையும் ஒழிப்பதற்கே முயற்சி செய்ய வேண்டும். தீபாவளிப் பண்டிகையை ஒழிப்பதன் மூலம், அன்னிய நாட்டிற்குப் பட்டாசுகளின் மூலம் செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்களையும், துணிகளின் மூலம் செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் செல்லாமல் தடுப்பதனால் நமது நாட் டிற்கு லாபமுண்டா? அல்லது தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குக் கதர் விற்பனை புரிவதனால் லாபமுண்டாவென்று கேட்கிறோம்.
ஆகவே உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் நமது நாட்டில் உள்ள தேசீயவாதிகளோ, சமயவாதிகளோ, புரோகிதர்களோ, பண்டிதர்களோ, காங்கிரஸ்வாதிகளோ அனைவரும் மக்களை இந்து மதத்தின் பேராலும் பண்டிகைகளின் பேராலும், ஏமாற்றி இன்னும் அடிமைகளாகவே வைத் திருந்து தங்கள் சுயநலத்தைச் சாதித்துக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள் என்பதை அறியலாம்.
ஆதலால், உண்மையில் விடுதலை பெற நினைக்கின்றவர், மூட நம்பிக்கையினின்று நீங்க நினைக்கின்றவர்கள், மதமும் பண்டிகைகளும் ஒழிந்து மக்களைப் பிடித்த பீடை நீங்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அனைவரும், தீபாவளிப் பண்டிகையை அடியோடு ஒழிக்க வேண்டுகிறோம். தீபாவளிப் பண்டிகைக்கென்று, பணத்தையும் செலவு செய்து புத்தியையும் கெடுத்துக் கொள்ளாமல் அந்த நாளையும் மற்றச் சாதாரணமான நாளைப் போலவே கழிக்கும் படி வேண்டுகின்றோம். ஆகவே இக்கொள்ளை நோய்க்கு இடங்கொடாமல், அதைத் தடுக்குமாறு எல்லோருக்கும் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 23.10.1932