அரசியல் சீர்திருத்தம்

அரசியல் சீர்திருத்தத்தின் குறிப்புகள்வெள்ளைக் காகிதஅறிக்கை என்னும் பேரால் வெளிவந்து இருக்கிறது. அதைப்பற்றிய வாதப்பிரதிவாதங் கள் இந்தியப் பத்திரிகைகளின் பக்கங்கள் பூராவையுமே கவர்ந்து கொண்டு தினமும் சேதிகள், பிரசங்கங்கள், அபிப்பிராயங்கள், தீர்மானங்கள் என்கின்ற ரூபங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

என்றாலும் இதைப்பார்த்து நமக்குப் பதினைந்தடுக்குள்ள ஒரு மாளிகையில் நெருப்புப் பிடித்துக் கொளுந்து விட்டெறியும்போது அந்த வீட்டைக்கட்ட வேலை செய்தவனும், குடியிருக்க வீடில்லாமல் சமீபத்தில் ஒரு மரத்து நிழலில் பொங்கிச் சாப்பிட்டு விட்டு வேலையில்லாமல் தலைக்குக் கையை வைத்துத் தரையில் நாளையச் சாப்பாட்டிற்கு வழி என்ன என்று ஏங்கிப் படுத்துக்கிடக்கும் ஒருவனுக்கு எவ்வளவு கவலையிருக்குமோ அவ்வளவு தான் இன்றைய சீர்திருத்த முயற்சியிலோ, வெள்ளைக்காகித அறிக்கை யிலோ நமக்குக் கவலையுண்டு.

ஏனெனில் அந்த வீட்டை நெருப்புப்பற்றி எறிவதிலிருந்து காப்பாற்றப் படுவதில் இந்த மரத்தடியில் பொங்கித் தின்று கிடப்பவனுக்கு யாதொரு பயனுமில்லை.

மற்றும் அந்த வீடு அடியோடு வெந்து சாம்பலாகுமானால் அதை மறுபடியும் புதுப்பித்துக் கட்டுவதன் மூலம் இந்த வீடு வாசலற்றவேலையற்ற ஏழைத் தொழிலாளிக்கு ஏதாவது வேலை கிடைத்துச் சற்று கஞ்சிக்காவது வழியுண்டாகும்.

அந்தப்படி பார்க்கும் முறையில் நாம் இந்த வெள்ளைக்காகித அறிக்கையில் இந்திய மக்களுக்கு லாபம் என்ன? நஷ்டம் என்ன என்று பார்த்தால் நஷ்டம் இருந்தவரையில்தான் நமக்குஏழை மக்களுக்குதாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தொழிலாள உழைப்பாளி மக்களுக்கு நன்மை என்று தான் சொல்லவேண்டும். எப்படி யென்று பாருங்கள்.

 

இந்திய ஏழை மக்களின் பேரால் சுயராஜ்யம் கேட்கப் புறப்பட்டு இன்றைக்குச் சுமார் 40 வருஷ காலம் இருக்கும். இது வரையில் 2, 3 தொகுதி யாய் சுயராஜ்யம்அரசியல் சீர்திருத்தம் வழங்கப்பட்டாய் விட்டது. அதைப் பெற்று அமுலில் நடத்தியும் ஆய் விட்டது.

இதனால் இந்திய ஏழை மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது? சோம்பேரிகளாகிய பார்ப்பனர்களுக்குபிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டியவர்கள் என்னும் பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் எவ்வளவு? அதுவும் எப்படிப்பட்ட உத்தியோகங்கள் என்று பார்த்தால்,

கவர்னர் நிர்வாக சபை அங்கத்தினர், ஜட்ஜுகள், கலெக்டர்கள், திவான்கள் முதலிய 10000, 5000 4000, 3000, 2000, 1000 ரூ. வீதம் மாதம் கிடைக்கத்தக்க இப்படிப்பட்ட உத்தியோகங்கள் கிடைத்தது. மற்றும் அவ்வகுப்பு 100க்கு 100பேர்கள் என்றும் மண்வெட்டியை கையில் தொடாமலும், மூட்டைத் தூக்காமலும் வாழ்வதற்கு சௌகரியம் ஏற்பட்டது. பலர் சர் ஆனார்கள். சிலர் மகாகனம் ஆனார்கள்.

மற்றபடி முதலாளிமார்களுக்கும், பணக்காரர்களுக்கும் 100க்கு 100வீதம் லாபம் கிடைத்து பெரிய பெரிய முதலாளிமில் சொந்தக்காரர்கள்கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

மிராசுதாரர்களும், லேவாதேவிக்காரர்களும், ஜமீன்களாகி, ராஜாக் களாகி, கோடீஸ்வரர்களாகி பரம்பரை ராஜாக்கள் ராஜ வம்சஸ்த்தார்கள் ஆனார்கள்.

மற்றும் பலர் மந்திரிகளானார்கள். மகாத்மாக்களானார்கள்,

ஏழைகள் என்ன ஆனார்கள்ஏழைத் தொழிலாளிகள் என்ன ஆனார் கள்? என்றென்றும் ஏழைகளே ஆனார்கள் என்பதல்லாமல் வேறென்ன?

இதுபோலவே இனியும் வரப்போகும் சுயராஜ்ஜியத்தில்சீர்திருத் தத்தில் இந்த நிலையைத் தவிர வேறு எந்த நிலையை எதிர்பார்க்க முடியும்? ஆதலால் இதுநல்ல சீர்திருத்தமாய்இருந்தால் என்னநாசமாய்ப்போன சீர்திருத்தமாய்இருந்தால் என்ன என்றுதான் கேட்கின்றோம்.

ஆத்து நிறைய தண்ணீர் போனாலும் நாய்க்கு சளப்புத் தண்ணீர் (நக்கி சாப்பிடும்) தண்ணீர்தான்என்ற பழமொழியும்நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலைதான்என்ற பழமொழியும் இந்த இந்திய சுயராஜ்ய சீர்திருத்தத்திற்கே மிகவும் பொறுத்தமாயிருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.

 

வரப்போகும் சுயராஜ்யத்தின் யோக்கியதையைப் பார்க்கவேண்டு மானால் அதற்காகச் செய்யப்பட்ட கிளர்ச்சியின் யோக்கியதையைப் பார்த் தாலே அறிவுள்ளவனுக்குத் தானாக விளங்கிவிடும்.

அதாவது இந்த 10 வருஷ கிளர்ச்சியின் தலைவரான தோழர் காந்திய வர்கள் செய்த கிளர்ச்சியின் தத்துவங்கள் என்ன என்று பார்ப்போமானால்,

1.“பிராமணர்களுக்கு” (பார்ப்பனர்களுக்கு அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் பிரவி மாத்திரத்தாலேயே உயர்ந்த ஜாதியான் அதாவது சரீரத்தினால் வேலை செய்யப்படவே கூடாதவன் என்கின்ற தத்துவம் கொண்ட) வருணாச்சிரம தருமமும்,

2.“க்ஷத்திரியர்களுக்கு” (காந்திஇர்வின் ஒப்பந்தத்தின் பயனா யும், ரவுண்டேபிள் கான்பரன்சுக்கு சென்று வந்ததின் பயனாயும், சுதேச சமஸ்தான ராஜாக்கள் ஜமீன்தாரர் ஆகியவர்களுக்கு) பாது காப்பும்,

3, “வைசியர்களுக்கு” (மில் முதலாளிகளுக்கு 100-க்கு 100 வீதம் லாபம் சம்பாதிக்கத் தகுந்த மாதிரி) அன்னியதுணி பகிஷ்காரமும்,

4, “சூத்திரர்களுக்கு” (ஏழைகளுக்கு நாள் 1-க்கு 10-மணி நேரம் வேலை செய்தால் ஒரு அணாகூலி அதுவும் அந்த துணியை வாங்கு கிறவர்கள் ஒரு ரூபாய், துணிக்கு இரண்டு ரூபாய் விலை போட்டு வாங்கினால் மாத்திரம் அந்த ஒரு அணாகூலியும் கிடைக்கதக்க) கை ராட்டினமும், (அவன் எவ்வளவு மேலான அறிவும், ஞானமும், இருந் தாலும் அவனவன் ஜாதிமுறை படியான வேலையே செய்யவேண்டும் என்னும்படியான) சுதர்ம ஜாதிமுறையும்,

5, “பஞ்சமர்களுக்கு” (தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு என்றும் அவர்களது தாழ்ந்த தன்மை நிலைத்திருக்கவும் அவர் களுக்கு மூடநம்பிக்கை பலப்பட்டு முன்னேறாமல் அவதிப்படவும் ஆஸ்ப தமான) ஹரிஜன பட்டமும், கோவில் பிரவேசமும்,

6,“அறிஞர்களுக்கு” (இனி படித்த பல ஜாதி கூட்டத்தாருக்கு காங்கிரசின் பேரால்) சட்டசபை பிரவேசமும்

தான் இதுவரை அரசியல் கிளர்ச்சியால் பல உள்பிரிவு, தலைப்பு பெயர்களாய் இருந்து கிளர்ச்சி நடந்துவந்திருக்கின்றது. இந்தக் கிளர்ச்சிக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்துவிட்டது. ஒரு சமயம் இந்த மேல் கண்ட தலைப்புகளுக்கு பூராவும் நன்மையும், பாதுகாப்பும் இல்லாமலிருந் தால் அதற்காக வேண்டுமானால் இனியும்போராது போராதுஎன்று சிறிது கூப்பாடுவெளிவேஷக் கூப்பாடு அதுவும் அதாவது வேறு ஒருவர் வீட்டுக்கு இழவுக்குப்போன பெண்கள் ஒப்பாரி வைத்தும், மாரடித்தும் அழும் சடங்கு நடக்கும்போது மாரடித்துக்கொண்டும், அழுவது போன்ற வேஷ அழுகையே அழுவதாயிருந்தால் இருக்கலாம்.

ஆகவே காந்தியார் இஷ்டப்படியும், காங்கிரஸ் கோரிக்கைப் படியும் சுயராஜ்ஜியம் கிடைத்து விட்டது. இதில் இனி சில வார்த்தை திருத்தங்கள் மாத்திரம் பாக்கி இருந்தால் இருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு வேண்டிய சுயராஜ்ஜியம்தொழிலாளிகளுக்கு வேண்டிய சுயராஜ்ஜியம் என்றதின் வாசனையோ நிழலோ, சிறிது கூட இல்லை என்றும் அதற்கான நாம் செய்ய வேண்டிய வேலையும், கிளர்ச்சியும் வேறு என்றும், அதன் முதல்படி இந்த காங்கிரஸ் சூழ்ச்சிகளையும் அதற்காக மேற்கண்ட தலைப்பு கிளர்ச்சி திட்டங் களையும் அடியோடு ஒழிக்க வேண்டியது தான் என்பதோடு நமக்கு இந்த சுயராஜ்ஜியம் வேண்டவே வேண்டாம் என்றும் தொழிலாளி ராஜ்யமே வேண்டும் என்றும் சொல்லுவோம்.

குடி அரசுதலையங்கம் – 26.03.1933

 

 

 

You may also like...