“தொழிலாளர் நிலைமை”

தோழர்களே!

இது பரியந்தம் தோழர் பொன்னம்பலனார்வாலிபர் கடமை என்ன?” என்பது பற்றி விபரமாக உங்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர் சங்கராச் சாரியாரின் விஷயத்தைப் பற்றிப் பேசும்போதும் மத சம்பந்தமான அக் கிரமங்களைக் கூறும் போதும் கடுமையாகப் பேசியதாக நீங்கள் கருதலாம். சகிக்க முடியாத அக்கிரமங்கள் மதத்தின் பேரால் நடைபெறும் பொழுது அதை மேல் பூச்சாகப் பேசிப்போவதற்கு சாத்தியப்படாததாகவே இருக்கிறது. சென்னையில் கொள்ளையடித்தது போன்று மக்களிடம் மூடத்தனத்தைப் புகட்டி கொள்ளையடிப்பதை நேரில் சென்னையில் போய்ப் பார்த்திருந் தீர்களானால் தெரியும். இவ்விஷயத்தில் அவர் வாலிபரும் உணர்ச்சியுள்ள வருமாதலால் மிக்க ஆவேசத்துடனே தான் பேசினார். இன்னும் கவனித்தால் இன்றையதினம் கேவலமாக மக்களை மதிக்கப்படுகிற தீண்டாமை விலக்குக் கிளர்ச்சிக்கும் காங்கிரசில் பிரபல தேச பக்தர்கள் என்பவர்களும், ஏன் தோழர் காந்தியாரும்கூட உண்மையில் மத சாஸ்திர சம்மந்தமான அபிப்பிராயங் களைக் காட்டுவதன் மூலம் தீண்டாமை விலக்குக்குத் தடைசெய்து வரு கிறார்கள். சங்கராச்சாரி பிரசங்கமும் மதசம்பந்தமானதுதான். மத சம்பிரதாயப் படிக்கு இருவரும் நம்மை தேவடியாள் மக்கள் (சூத்திரர்கள்) சண்டாளர்கள் என்று தான் சொல்லுகிறார்கள். மதத்தைப் பொறுத்தவரையில் ஒற்றுமை யாவதற்கு வேறு வழியுண்டா என்பது யோசித்தால் எதுவும் கிடையாது. நமக்குள் வெகு காலமாக ஒற்றுமை இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் காந்தி காங்கிரஸ் வந்தபின்பு சுயராஜ்யம் ஏற்பட்டால் ஒற்றுமை ஏற்பட்டுவிடும் என்று சொல்லிக்கொண்டு இருந்து இன்றைக்கு யார் கோவிலுக்குள் போகலாம் என்ற கேள்வி வைதீகர்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் அவர் இன்று அரசியல் சங்கராச்சாரி என்பதற்கு என்ன தடைசங்கராச்சாரிக்கும் காந்தியாருக்கும் மத விஷயத்திலும், ஜாதி வர்ணம் என்பதிலும் நெருங்கிய சம்பந்தம் உண்டு தான். இன்று கோவிலுக்கு போக வேண்டுமென்றோ, போக வேண்டாமென்றோ போகாதேயுங்கள் என்றோ சொல்வதில் நமது விஷயமும் வராமலில்லை. கோவிலுக்குப் போவது விஷயமாக தடை செய்யப்பட்ட மக்களுக்கு இன்றும் தடை ஏற்படுத்தி அதற்கு ஆதாரம் சொல்லி உயர் ஜாதி என்பது இருக்க வேண்டும். என்று சொல்லி ஆதாரம் காட்டவே இம்மடாதிபதிகளும் சங்கராச்சாரிகளும் கிளம்பி வருணதர்மத்தைப் பலப்படுத்துகிறார்கள். இவர்கள் விஷயத்தை ஒப்புக் கொண்டு விடுவதால் நமது நிலைமை மாறப்போவதுமில்லை. பழைய நிலைமை கெட்டிப்படும். மாறவேண்டுமானால் அடியோடு இம்மத சம்பந்தமான வழக்கம் மாற்றப்பட ஒரு புரட்சி ஏற்பட வேண்டும். தோழர் பொன்னம்பலனார் சொல்வதைப்போன்று இவ்விஷயமும் மத சம்பந்தமான அக்கிரமங்களையும் தடுக்க வேண்டுமானால் தைரியமாக எடுத்துச் சொல்ல வேண்டியது தான். ஏனெனில் சமூகத்திற்கு விளக்கிக் காட்டக்கூடிய அளவுக்கு வரும் பொழுது தைரியமாகக் கண்டித்துப் பேசுவதினாலேதான் மக்கள் மனதில் படுகிறது. அதிலும் சங்கராச்சாரி கொள்ளையைப் போன்ற அக்கிரமங்களைத் தடுக்க வேண்டுமானால் கண்டிப்பாக எவ்வித எதிர்ப்புக் கும் அஞ்சாது சொல்லித் தீரவேண்டியதாகவே இருக்கிறது.

சங்கராச்சாரி போன்றவர்களும், லோககுருக்களும் சொல்லித் திரி கின்ற மதத்தை ஒப்புக்கொண்டால் இன்று உங்களைப் போன்ற தொழிலாளி களும் கூட தொடப்படாத மக்களாகவே ஆகிவிடுகின்றீர்கள். இதற்கு ஆதாரம் நமது புராணமும் காந்தியார் வர்ணாசிரம தருமமும் ஜாதிமுறையுமே போதுமானது.

ஏனெனில் இந்து மதத்திலுள்ள எந்த சாஸ்திரங்களும், சரீரத்தால் பாடுபட்டுழைக்கும் மக்களைத் தீண்டக்கூடாத ஜாதி என்றே சொல்லுகிறது. அதற்கு நாம் இதுவரை கொடுத்து வந்த மரியாதையாலேயே இக்காலமுள்ள இத்தனை ஜாதிகளும் இருக்கிறது. மத தரகர்கள் சங்கராச்சாரிகள் சொல்வ தற்கும் சேர்த்து மரியாதை செய்தால் அடுத்த நாளே இன்னும் பல கோடி மக்கள் தீண்டாதார் ஆகிவிடுவார்கள் என்பதற்குச் சந்தேகமே இல்லை. வேண்டுமானால் வருணாசிரம தருமம் தவறாமல் நடைபெற்று வரும் மலையாளத்தில் இன்றைக்கும் உழைத்துக்கொட்டும் மக்கள் குளத்திலுள்ள தண்ணீரையும் தொடக்கூடாது, தொட்டால் தீட்டு என்று சொல்வது மட்டுமல்ல அடி உதை, அப்புறம் சட்டப்படி கைதியாகி சிறை செல்ல வேண்டியதுதான். அதே வருணாச்சிரம முறைப்படி இன்று தோழர் காந்தியாரும் கூட மலை யாளத்தில் கோவிலுக்குள் போக முடியாது. லஜபதிராயும் ஜவகர்லாலையும் கூட மலையாளத்தில் ஆலயத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியாததல்ல, லஜபதியும், காந்தியும் அனுமதிக்காத கோவில் இன்று எத்தனை ஆபாசப் பார்ப்பனர்கள் நுழைந்து அக்கிரமங்கள் செய் கிறார்கள் என்பவைகளை தான் தோழர் பொன்னம்பலனாரவர்கள் விளக்க மாகச் சொன்னார்கள். இவைகள் எல்லாம் கவனித்தால் சங்கராச்சாரி காந்தி மாளவியாக்கள் சொல்லிய எந்தப்புராணத்தையும் ஒப்புக்கொள்வதின் மூலம் என்ன ஏற்படுகிறது என்பது விளங்கவில்லையா? இதை தடுத்து அடியோடு நிறுத்தப்பட வேண்டுமானால் பலமான பிரசாரம் மட்டும் போதாது புரட்சியும் சட்டமும் அவசியமாகவே இருக்கிறது. எத்தனை தான் பணத்தைக் கொட்டிக் கொடுத்து காலில் விழுந்து கும்பிட்டு பெண்சாதி பிள்ளையுடன் அழுக்கு நீரைக் குடித்தாலும் பின்னும் நம்மைச் சூத்திரன், வேசி மகன், அடிமை, சண்டாளன் என்றுதான் சொல்லுகிறான் என்பதை இக்கூட்டத்தில் யாரேனும் மறுக்க முடியுமா என்று தான் கேட்கிறேன். (தொடர்ச்சி 02.04.1933 குடி அரசு)

குறிப்பு: 05.03.1933 ஆம் நாள் அனுப்பப்பாளையம் பாத்திரத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் ஆற்றிய உரை,

 குடி அரசுசொற்பொழிவு – 26.03.1933

 

 

 

 

 

You may also like...