காங்கிரசும் ஒத்துழைப்பும்
சுயமரியாதை இயக்கத்திற்குள்ளாக சுயமரியாதை சமதர்மக்கட்சி என்ப தாக ஒருகிளை தோன்றி அது சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவை களைக் கைப்பற்றவேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் என்போர்கள் சிலருக்குள்ளும் சட்டசபைக்குச் செல்லவேண்டும் என்கின்ற ஆசை தோன்றி அதை வெளிப்படுத்த சமயம் பார்த்துக்கொண்டே இருந்து அதற்கு சில சாக்குகள் ஏற்பாடு செய்து இப்போது மெள்ள மெள்ள வெளியாக்கிவிட்டார்கள்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “காங்கிரசுக்காரர்கள் வைதீகர்களைப்போல் பிடிவாதக் காரர்கள் அல்ல. அவர்களுக்கு சட்டசபைகளின் மூலம் பலன் ஏற்படும் என்று தோன்றினால் உடனே சட்ட சபைகளுக்குச் செல்வார்கள்” என்று குறிப்பிட்டி ருந்ததை வாசகர்கள் படித்திருக்கலாம். இந்த அறிக்கையின் கருத்தானது காங்கிரஸ் சட்டசபை நுழைவை அனுமதிக்கப்போகின்றதென்றும், ஆகை யால் சட்டசபை செல்ல ஆசையுள்ளவர்கள் காங்கிரசை விட்டு விட்டு வேறு கட்சியில் சேர்ந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளுவதேயாகும். அன்றியும் அதற்கேற்றாற்போல் சட்டசபைகளை லக்ஷியம் செய்தும் ஆதரித்தும் தோழர் காந்தியவர்கள் “அநேக விஷயங்களுக்கு சட்டம் தடையாயிருப்பதால் அத்தடையை விலக்க சட்டம் செய்ய வேண்டும்” என்று அடிக்கடிபேசியும், எழுதியும் வருவதின் மூலம் ஜனங்களுக்கு சட்டசபையின் அவசியமும், பிரதானமும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றதுடன் தோழர் ராஜகோபாலாச்சரியார் தீண்டாமை விலக்கு, கோவில் பிரவேசம் ஆகிய மசோதாக்களின் சாக்குகளை வைத்துக்கொண்டு அடிக்கடி டெல்லிக்குப் போவதும் சட்டசபை மெம்பர்களுடன் பேசுவதும் அவர்களுக்கு அறிக்கை விடுவதுமான காரியங்களால் சட்டசபை பிரவேசம் அவசியம் என்று .ஜனங் களுக்குப் படும்படி செய்வதும், அதில் ஜனங்களுக்கு மோகம் உண்டாகும்படி செய்வதுமான காரியத்தைச் செய்துவருகிறார்.
இந்தக்காரணங்கள் சட்டசபை பிரவேசம் என்பதை மாத்திரம் காட்டு வதாயில்லாமல் காங்கிரசானது சர்க்காருடன் ஒத்துழைக்கத் தயாராயிருக் கின்றது என்பதையும் வெளிப்படுத்த ஒரு தந்திரமாகும்.
ஏனெனில் லார்ட் வில்லிங்டன் பிரபு“தோழர் காந்தியையும் மற்ற சில காங்கிரசு தொண்டர்களையும் விடுதலை செய்யவேண்டுமானால் காங்கிரசின் சட்டமறுப்புக் கொள்கை மாறவேண்டும்” என்றும், தோழர் காந்தியவர்கள் சட்ட மறுப்பு செய்வதில்லை என்று சூசனை காட்டவேண்டும் என்றும் பல தடவை சொல்லி வந்திருப்பதை உத்தேசித்து சர்க்காருக்கும் இந்த விஷயம் தெரியட்டுமென்று கருதி இப்படிச் செய்கிறார்கள். இதைக்கண்ட பின்பு சர்க்காரார் உடனே காங்கிரசுக்காரர்களை விடுதலை செய்து விடவும் கூடும்.
இந்த சமயம் காங்கிரசுக்காரருடைய உதவி சர்க்காருக்கு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் இந்நாட்டில் மாத்திரமல்லாமல் உலகம் முழுவதிலுமே இது சமயம் ஏற்பட்டிருக்கும் சமதர்ம உணர்ச்சியை வீழ்த்தி ஒழிக்க ஐரோப்பிய வல்லரசுகள் எல்லாம் இந்தியாவைத்தான் நம்பியிருக் கின்றன. அதாவது இந்தியாவைத் தனது சொத்தாகக் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வலுவேதான் இன்று உலக சமதர்மத்திற்கு எதிராயிருக்கின்றது என்று தைரியமாயிருக்கின்றன. அன்றியும், இந்தியா தனது சொத்து என்கின்ற உரிமை பிரிட்டனுக்கு என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றே உலக சமதர்ம உதயகாலம் என்று அநேக சமதர்மவாத நிபுணர்கள் அபிப்பிராயப்படு கின்றனர். உண்மையும் அப்படியே தான் இருக்கின்றது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியா பிரிட்டிஷாருக்குச் சொந்தம் என்கின்ற தத்துவம் மாறாமல் இருப்பதற்காகவே புதிய அரசியல் சீர்திருத்தத்தில் மகாராஜாக் களைப் பிணைத்தும், மற்றும் காங்கிரசையும் காந்தியாரையும் பிணைத்தும் கொண்டதுமான காரியங்களாகும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத் திலிருந்து விடுபடவேண்டுமானால் காங்கிரசும் அதன் அஸ்திவாரமான இந்திய முதலாளித் தன்மையும் ஒழிந்தாலொழிய முடியவே முடியாது என்பது பிரிட்டனுக்கு நன்றாய் தெரியும். அதுவே உண்மையுமாகும்.
ஆதலால்தான் வெகு சீக்கிரத்தில் முதலாளி தத்துவத்தின் மீது கட்டப் பட்டிருக்கும் காங்கிரசும், முதலாளி தத்துவ ஆட்சியாகிய சர்க்காரும் தங்களு டைய போட்டியை விட்டுவிட்டு வெகு சீக்கிரத்தில் வெளிப்படையாகவே தோளோடு தோள் பிணைந்து வெளிக்கிளம்பி சமதர்ம உணர்ச்சியை நசுக்கப் புறப்படப் போகிறார்கள். இதுவே நமது உறுதி, அதன் சூசனைகளே தான் இப்போது சர்க்கார் காந்தியையும் காங்கிரசுக்காரரையும் விடுதலை செய்ய “காங்கிரஸ் இனிசட்ட மறுப்பு செய்வதில்லை” என்ற சூசனையை கேட்பதும் காந்தியும், காங்கிரஸ் சட்டசபையைக் கைப்பற்ற வேண்டும் என்று கருது வதாகச் சொல்வதன் மூலம் சர்க்காரோடு ஒத்துழைக்கப் போகின்றோம் என் கின்ற சூசனையைக் காட்டுவதுமான காரியங்களாகும். இந்த சூசனை களானது வெகு சீக்கிரத்தில் சர்க்காரும், காங்கிரசும் ஊடலில் இருந்த நாயகனும் நாயகியும் ஊடல் தீர்ந்தபின் அடையும் காதல் பாவத்தின் பலன் போல் கட்டிப் புரளச்செய்யப் போகின்றது என்பதில் சிறிதும் சந்தேகப்பட இடமே இல்லை.
இதை தேசீயவாதிகள், தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் மேள தாளத்தோடு ஆதரித்து வரவேற்கப்போகின்றார்கள் என்பதிலும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
இப்பொழுதே தேசிய பத்திரிகைகள் இது விஷயத்தில் தங்களது அபிப்பிராயங்களை தெரிவித்துவிட்டன. அதாவது தமிழ்நாடு பத்திரிகை யானது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சட்டசபை என்றவுடன் “ஆச்சாரியாருக்கு இப்பொழுதாவது புத்திவந்ததா” என்று கேட்டு விட்டு இதை “நல்ல யோசனை” என்றும் சொல்லிவிட்டது. இந்து, சுதேசமித்திரன் என்ற பார்ப்பன பத்திரிகைகளும் காங்கிரஸ் ஸ்தம்பித்துப்போய் விட்டது, ஆதலால் வேறு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்தாகவேண்டும் (என்று எழுதுகின்ற பாவனையில்) “காங்கிரசு சட்டமறுப்பில் செலவழித்த ஊக்கத்தை சட்டசபையில் செலவழித்திருந்தால் எவ்வளவோ பலன் அடைந்திருக் கலாம்” என்றும் எழுதிவிட்டன.
சுயராஜ்யா என்னும் ஆந்திர பார்ப்பன தேசிய பத்திரிகையும் சட்ட சபை பிரவேசமே நல்ல மருந்து என்று கருதி இருப்பதாக ஜனங்களுக்கு காட்டிக்கொண்டுவிட்டது. ஆகவே சட்டசபை தேர்தல் வந்தவுடன் காங்கிரஸ் வாதிகளை, தேசிய வாதிகளை சட்டசபைகளுக்கு அனுப்புங்கள் என்று காந்தியும் ராஜகோபாலாச்சாரியும் “ஸ்ரீமுகம்” (உத்திரவு) வெளியிட வேண்டி யதும் அதை மற்ற தேசியபத்திரிகைகள் கொட்டை எழுத்தில் வெளிப்படுத்தி விளம்பரம் செய்யவேண்டியதும் தான் பாக்கி இருக்கிறது. சிறையிலிருந்து வெளியாகும் தொண்டர்களுக்கு தேர்தல்வரை என்ன வேலை கொடுப்பது என்பதுதான் இப்போது காந்திக்கும் ஆச்சாரியாருக்கும் பெரிய கவலை என்றாலும் அதை உத்தேசித்தே ஹரிஜன வேலையை சிருஷ்டித்துப் பார்த்தார்கள். ஆனால் இதில் பட்டினி விரதப்புரட்டுகள் வந்து புகுந்ததால் அதன் செல்வாக்கும் இப்பொழுது ஒரு வழியில் குறைந்து போய்விட்டது.
ஆகவே இப்போது எப்படியாவது சிறிது காலத்திற்கு அதாவது அடுத்த தேர்தல்வரை காங்கிரசு ஸ்தம்பித்தது–ஸ்தம்பித்தபடிதான் இருக்கும். தேர்தல் வந்தவுடன் இந்து சுதேசமித்திரன் வேண்டிக்கொண்டிருப்பது போலவே காங்கிரஸ் இரட்டிப்பு முயற்சியுடன் வெளிக்கிளம்பக் கூடும். எப்படி இருந்தபோதிலும் சமதர்ம உணர்ச்சியையும், புரட்சியையும் இந்த தந்திரங்கள் எல்லாம் அழித்துவிடமுடியாது என்கின்ற தைரியத்திலேயே தான் நாம் இருக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 05.03.1933