போலீஸ் யோக்கியதை

உப்பு சத்தியாக்கிரக சட்டமறுப்பு காலங்களில் இருந்து போலீசாருக்கு ஒரு புதிய யோக்கியதை ஏற்பட்டுவிட்டது. அதாவது போலீசு எவ்வளவு அக்கிரமமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்துகொண்டாலும் அதற்கு எவ்வித கேள்வியும், கேழ்ப்பாடும் கிடையாது என்பதாகும். போலீசு இலாக் காத் தலைமை அதிகாரிகளுக்கும் நிர்வாக தலைவர்களுக்கும் சட்டசபை அங்கத்தினர்கள் கேட்ட கேள்விகளாலும், தேசிய பத்திரிகைகள் வைத வசவுகளாலும், பொது ஜனங்கள் மண்ணை வாரித்தூற்றிசாபம்கொடுத்து சபித்ததாலும், புத்தியும் நாணையமும், யோக்கியப் பொருப்பும் காப்புக்காச்சி மறத்துப் போய்விட்டதுடன் அவர்களது தோல் காண்டாமிருகத் தோலுக்கு சமமாய் போய்விட்டது. இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் போலீசு இலாக்காவை திருத்தவோ, அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவோ யாராலும் முடியாது என்கின்ற பதவியை அது அடைந்து வருவதாகத் தெரியவருகின்றது. இது அந்த இலாக்காவுக்கு ஒரு கௌரவம்தான் என்றாலும் நம்மைப் பொருத்தவரை இனி நம்மால் போலீசு இலாக்காவைத் திருத்த முடியாவிட்டாலும் போலீசு இலாக்காவினால் நாமாவது திருத்துப்பாடடைந்து இனிமேல் இப்படிப்பட்ட விஷயங்கள் நம் கண்ணில் தென்படாமலும், காதில் கேட்கப்படாமலும் உள்ள நிலையை அடையவேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம். ஏனெனில்,

சமீப காலத்துக்குள் இரண்டு இடங்களில் போலீசு அட்டூழியம் ஏற்பட்டு விட்டது.

ஒன்று காரைக்குடியில் ஒரு நாட்டுக்குக் கோட்டை நகரத்து வாலிப ரையும் மற்றும் இரு தோழர்களையும் தெருவில் நடக்கும் போது அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்தது.

இரண்டு நீடாமங்கலத்தில் தோழர் கே. ராமையாவையும் மற்ற இரு நண்பர்களையும் தெருவில் நடக்கும் போது ஒரு நண்பரை யார் அடிக்கிறார் என்று ஒருவர் தலை நிமிர்ந்து பார்த்ததற்காக அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்து மூன்று நாள் தண்டித்து கொடுமைப்படுத்தியது ஆகிய காரியங்களுக் கும் மற்றும் அவர்கள் குடிகாரன், வெறிகாரன் போலும் கீழ் மக்கள் என்ப வர்கள் போலும் வைவதும் நடந்து கொள்ளுவதுமான காரியங்களைப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.

சுயமரியாதைக்காரர்கள் எந்த இடத்திலாவது இதுவரை போலீசு அல்லது நீதி நிர்வாக இலாகா உத்திரவுகளை மீறியோ அல்லது சட்டம் என்பதற்கு விரோதமான காரியங்களைச் செய்தோ இருந்தால் இவ்வித காரியங்களைப்பற்றி பேசவோ, எழுதவோ ஒருநாளும் வெளிவர மாட்டோம். அனாவசியமாய் பார்ப்பனர்கள் இடம் கூலி பெறவும் அகஸ்மாத்தாய் தங்கள் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளும் முட்டாள்த்தனமான நடவடிக் கைகளும். பிரசங்கத்தில் வெளியாய் விட்டதாகக் கருதிக்கொண்டும் இந்தப் படி நடந்து கொண்டால் அதன் எல்லை முழுவதையும் பார்த்து விட வேண்டும் என்றும் அந்த இலாக்காவின் யோக்கியதையை வெளிப்படுத்தி விட வேண்டும் என்பது தான் நமது கருத்து.

குடி அரசுதுணைத் தலையங்கம் – 16.04.1933

 

 

 

 

 

 

 

 

 

You may also like...