சேலத்தில் ஈ. வெ. ராமசாமி, முத்துச்சாமி வல்லத்தரசு வரவேற்புப்பத்திரங்கள் – பொதுக்கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே! !
தலைவரவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியதில் நான் மேல் நாட்டிற்குச் சென்றதில் ஏதோ பல அறிய விஷயங்களை அறிந்து கொண்டு வந்திருப்பதாக கூறி நான் ஏதோ பல அரிய விஷயங்களை சாதித்து இருப்ப தாகவும் கூறினார். நான் எனது மேல் நாட்டு சுற்றுப்பிராயணத்தில் ஒன்றும் புதிதாக கற்றுக்கொண்டு வரவில்லை. என்னுடைய அபிப்பிராயங்களும், எண்ணங்களும், ஆசைகளும் எனது மேல்நாட்டு சுற்றுப் பிரயாணத்தால் பலப்பட்டன, அசைக்க முடியாத அளவு உறுதி கொண்டு விட்டன. மற்றும் எனது ஆசை வெறும் கனவு ஆசை அல்லவென்றும், எனது அபிப்பிராயம் நடைமுறையில் சாத்தியமில்லாத ஆகாயக்கோட்டை அபிப்பிராயம் அல்ல என்றும், நான் எதையும் அமிதமாக எண்ணி மனப்பால் குடிக்கவில்லை என்றும் உணர்ந்தேன். அதற்கு ஆதாரமாக அநேக விஷயங்களை பிரத்தி யக்ஷத்தில் பார்த்து எனது கொள்கையும் ஆசையும் சாத்தியமே என்றும், சர்வ சாதாரணமே என்றும் அறிந்தேன். இது தான் எனது மேல் நாட்டுச் சுற்றுப் பிராயணச்சேதியென்றும் சுற்றுப்பிரயாண அனுபவமென்றும் ஒரு வார்த்தை யில் சொல்லி முடிக்கின்றேன். மற்றும், தோழர் முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் பேசியபோது பார்ப்பனக் கொடுமையையும், சூழ்ச்சியையும் பற்றிப் பேசியதுடன் பார்ப்பனீயத்தைப் பூண்டர ஒழிக்க வேண்டுமென்று சொன்னார். அதுவே எனது அபிப்பிராயம் என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் பார்ப்பனீயப் பூண்டை அழிப்பதால் பார்ப்பனீ யம் ஒழிந்து விடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில் பார்ப்பனப் பூண்டு தானாக முளைப்பதில்லை. அதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன், அதாவது,
இந்த மண்டபம் நிறைய கொசகொசவென்று கொசுக்கள் இருந்து உங்களை உபத்திரவம் செய்வதாய் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கொசுக்கள் உங்களுடைய ரத்தத்தை உருஞ்சுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும். கொசுக்களைப் பிடித்துப் பிடித்து நசுக்கி விட்டால் போதுமா? இந்த மண்டபத்தை சுத்தம் செய்து வெள்ளை யடித்து புகைபோட்டு இம்மண்டபத்துக்குள் இருக்கும் கொசுக்களைக் கொன்று விட்டால் போதுமா? நன்றாய் யோசித்துப் பாருங்கள். இதனால் எல்லாம் கொசு உபத்திரவம் தீர்ந்து விடாது, முதல் நாள் கொன்ற கொசுக் களுக்குப் பதிலாக மறுநாள் புதிய கொசுக்கள் வந்து புகுந்து விடும்.
மற்றும் ஒரு இடத்தில் ஒரு வியாதி ஏற்பட்டால் வியாதி வந்தவனுக்கு பார்த்துப் பார்த்து மருந்து கொடுத்து கொண்டு வருவதால் வியாதியை ஒழித்துவிட முடியாது. வியாதியின் மூலாதாரத்தைக் கண்டு பிடித்து அதை அடியோடு அழிக்கவேண்டும். அதுபோலவே கொசுக்கள் இந்த மண்டபத் திற்குள் வருவதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்து அதை அழிக்க வேண்டும். இந்த மண்டபத்தில் இவ்வளவு அதிகமான கொசுக்கள் கொச கொசவென்று இருக்கின்றதென்றால் இதற்குக்காரணம் இங்குள்ள ஓதம், அருகிலுள்ள நீர்த்தேக்கம் அதிலுள்ள அசுத்தம் அழுக்கு ஆகிய காரணங் களால் தான் கொசுக்கள் உண்டாகின்றன என்பதை நன்றாய் அறியவேண்டும். கொசு உபத்திரவம் கூடாதென்கின்றவர்கள் மேற்கண்ட அசிங்கங்களையும், நீர்த்தேக்கங்களையும் ஒழிக்கவேண்டும். அக்கம் பக்கம் உள்ள எல்லா இடமும் சுத்தமாக வைக்கப்படவேண்டும். அப்பொழுது தான் கொசுக்கள் ஒழியும். இல்லா விட்டால் “வெட்ட வெட்டத் தழையும்” என்பது போல எவ்வளவு அழித்தாலும் வட்டியுடன் பெருகும் என்பதே எனதபிப்பிராயம்.
ஆகையால் அதுபோலவே பார்ப்பனர்கள் எப்படி உண்டானார்கள், அவர்கள் தொல்லை எதனால் ஏற்பட்டது, அதை எது பாதுகாத்து வளர்க் கின்றது? என்பவைகளைக் கண்டு பிடித்து அவற்றை அழியுங்கள், நசுக் குங்கள். அதுதான் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் மார்க்கமாகும். இல்லாத வரையில் நமது பாடெல்லாம் வீணாகிவிடும். அன்றியும் மற்றவர்களால் வீண் கூச்சலும், குரோதமும், துவேஷமும் என்று தான் சொல்லப்பட்டுவிடும்.
ஆகையால் நாம் இவ்விஷயங்களில் முன்னைய அபிப்பிராயங்களை சிறிதும் மாற்றிக்கொள்ளாமல் மூல காரணங்களைக் கண்டு அதை அழிக்கும் வேலையில் ஈடுபடவேண்டும் என்று சொல்லுகின்றேன்.
அது என்ன வென்றால்? பார்ப்பான் என்பது மேல் ஜாதிக்காரன் என்கின்ற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல் ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேரியாயிருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப் பது என்கின்ற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து இந்த தத்துவ அடிப்படையை இடித்தெரிய முயன்றோமானால் பார்ப்பனர்கள் என்கின்ற வார்த்தையே நாட்டில் இல்லாமல் போய்விடும். பார்ப்பனர் மாத்திரமல்ல, ஒரு ஜாதிக்கு மற்றொரு ஜாதி மேல் என்கின்ற தத்துவமே அழிந்து விடும். அதுமாத்திரமல்ல ஜாதி முறையே அடியோடு அழிந்து விடும்.
சாதாரணமாக இன்று பார்ப்பன ஜாதியை மாத்திரம் ஒழித்து விட்டால் போதுமா? என்று பாருங்கள். இந்த நாட்டில் பார்ப்பனர்கள் கூடாதென்று சொல்லுகின்றபோது அதற்கு அடுத்த ஜாதியராய் விளங்கும் சைவர்கள் முதலியவர்களுக்கு இருக்க இடமுண்டா? என்று யோசித்துப்பாருங்கள். சைவன் என்றால் என்ன? பார்ப்பானைப்போலவே சரீரத்தால் வேலை செய் யாத சோம்பேரி என்று தானே அர்த்தம். எவனெவன் தன்னை மேல் ஜாதிக்காரன் என்று சொல்லிக்கொள்ளுகிறானோ அவனெல்லாம் சரீரத்தில் வேலைசெய்யாமல் மற்றவர்கள் உழைப்பில் வாழுகின்றவன் – வாழ ஆசைப் படுகின்றவன் என்றுதானே அர்த்தம்.
ஆகவே, ஜாதியை ஒழித்தாக வேண்டும் என்றும் எல்லோரும் சரீரத்தால் பாடுபட்டாகவேண்டும் என்றும் நிபந்தனை ஏற்படுத்தியாக வேண்டும். பாடு படாதவனுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்று ஆக்கி விட வேண்டும். அப்பொழுதுதான் பார்ப்பானும் ஒழிவான், பார்ப்பானால் வேறு எந்த வகையிலும் இந்த நாட்டில் இல்லாமல் ஒழியும்.
மேல்நாடுகளில் கூட பல இடங்களில் இந்தக்கொடுமை அதாவது சோம்பேரிகளின் சூழ்ச்சியும் கொடுமைகளும் இருந்துதான் வருகின்றன. அதற்காகத்தான் இன்று அநேக பாகங்களில் சோம்பேரி பாட்டாளி சண்டை களும் கிளர்ச்சிகளும் குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வையுங்கள். அதென்னவென்றால் இந்த சோம்பேரி ஜாதிகளுக்கோ வகுப்புகளுக்கோ ஆதரவும் ஆக்கமும் அளித்துக் காப்பாற்றி வர மற்றொரு கூட்டம் இருக்கின்றது. அதுவும் ஒழிந்தாகவேண்டும் என்பதை கருத்தில் இருத்தினால் தான் இந்த ஏமாற்றமும் கொடுமையும் ஒழிந்துபடும். அதென்னவெனில் அது தான் பணக்கார வகுப்பு, முதலாளி வகுப்பு, மிராசுதார் வகுப்பு என்பனவாகியவைகளாகும். இந்த வகுப்புகளால்தான் பார்ப்பனீயம் அதாவது சோம்பேரித் தத்துவம் இருந்து வருகின்றது. அதையும் மாற்றியோ அழித்தோதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் சுலபத்தில் பார்ப்பனீயம் ஒழிந்துவிடாது.
குறிப்பு 19.02.1933 இல் சேலம் சுயமரியாதை சங்கத் தோழர்களால் மனுர்குல தேவாங்க பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற வரவேற்பில் ஆற்றிய உரை.
தோழர்களே! சுயமரியாதை இயக்கம் என்பது பற்றி பேசுவேன் என்று துண்டுப் பிரசுரங்களில் காணப்பட்டிருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் என்ன? என்பது பற்றி பொது ஜனங்களுக்கு ஒரு விதத்தில் சுயமரியாதை இயக்கத்தார்களைவிட அதன் எதிரிகளே அதிகமாகப் பிரசாரம் செய்திருக்கிறார்கள்.
அதாவது, சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம் என்றும் அது கடவுள், மதம், காங்கிரஸ், அரசன் ஆகியவைகளுக்குத் துரோகமான இயக்கமென்றும், காங்கிரசுக்காரர்களும், இந்து, இஸ்லாம், கிறிஸ்துமதக் காரர்களும் அரசாங்கத்துக்கு விண்ணப்பம் செய்தும் அரசாங்க மந்திரி களுக்கும், சட்ட மெம்பர், மதம் காப்பாற்றும் போலீசு மெம்பருக்கும் தூது நடந்த வண்ணமாயும் விண்ணப்பங்கள் அனுப்பிய வண்ணமாயும் இருக்கின் றார்கள். போதாக்குறைக்கு வெள்ளைப்பத்திரிகையாகிய “மெயில்” பத்திரிகை யும் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அரசாங்கத்திற்கும், காங்கிரசுக்கும், காந்திக்கும் எச்சரிக்கை செய்து சுயமரியாதை இயக்கத்தை அழிக்கச் சொல்லி சூசனை காட்டுகின்றது. அரசாங்கமும் தன்பங்கைச் செலுத்துகின்ற அளவிற் கென்று சுயமரியாதைக்காரர்கள் பின்னால் ஊ.ஐ.னு. களை விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆகவே சுயமரியாதை இயக்கத்தைப்பற்றித் தெரியவேண்டுமானால் அவ்வியக்கத்தின் விரோதிகள் யார் என்பதைத் தெரிந்தாலே விளங்கிவிடும். இவ்வியக்கம் தோன்றிய காலம் முதல் எவ்வளவோ தொல்லைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஆளாகவேண்டியிருந்தது என்பதையும் பார்த்தாலும் விளங்கி விடும்.
ஆகவே இவ்வியக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இனி என்ன சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. மற்றபடி இவ்வியக்கக் கொள்கைகள் சரியா தப்பா என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டியது அவசியமென்றே கருதுகிறேன்.
தோழர்களே!
இந்தப்படிக்கு ஒரு இயக்கம் அதாவது இத்தனை மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி ஒரு இயக்கம் எதற்காக நடத்தப்படவேண்டும்? என்பதை யோசித்துப்பாருங்கள். ஒரு மனிதனுக்கு “நல்லபேர்” வாங்குவ தற்கும் சோம்பேரியாய் இருந்து வாழுவதற்கும் சுலபமானதும், சுகமானது மான பலவழிகள் இருக்கும்போது ஏன் இந்தக் கஷ்டமானதும், பழியும் தொல்லையும் இருக்கக்கூடிய வேலையில் ஈடுபட்டிருக்கின்றோம் என்பதை யோசித்துப்பாருங்கள். எனது சொந்தத்திற்கு ஒரு கௌரவமும் பெருமையும் வேண்டுமானால் நான் சம்பாதித்துக்கொள்ள முடியும். ஆனால் அவைகளால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்படக்கூடும் என்பதை ஆலோசித்துப்பார்த்தாய் விட்டது. மதத்திற்கு நல்ல பிள்ளையாய் இருந்தேன். அரசாங்கத்திற்கும் நல்ல பிள்ளையாய் இருந்தேன், காங்கிரசுக்கும் நல்ல பிள்ளையாய் இருந்தேன், பார்ப்பனர்களுக்கும் நல்ல பிள்ளையாய் இருந்தேன், பார்ப்பனர்கள் அல்லாத வர்களுக்கும் நல்ல பிள்ளையாய் இருந்தேன். ஒவ்வொருவரும் தன்தன் சுயநலத்துக்கு அனுகூலமாய் இருந்தால் மாத்திரம் நம்மை நல்லபிள்ளை என்று சொல்லுகிறார்களே ஒழிய கஷ்டப்படுகின்ற மக்களுடைய நலத்தை கவனிக்க ஆரம்பித்தால் நம்மை விரட்டவும் நம்மை விட்டு ஓட்டம் பிடிக்கவுமே செய்கிறார்கள். அதுமாத்திரமல்லாமல் நம்மைத் தூற்றவும் ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு உழைத்தது காட்டில் கத்தியது போலவே ஆய்விட்டதுடன் கஷ்டப்படுபவர்களுக்கு யாதொரு பயனும் ஏற்படாததோடு சோம்பேரித் தன்மைக்கும் முதலாளித்தனத்துக்குமே ஆக்கமளிக்கத் தக்கதாய்விட்டது.
இதனால்தான் இப்போது கஷ்டப்பட்டு உழைத்தும் முன்னுக்கு வராமலும் தாழ்த்தப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் இருக்கும் மக்களுக்கு உழைக்கவேண்டியது மனிதர் கடமை என்று உணர்ந்தேன். அதுதான் சுயமரியாதை இயக்கம் என்பதும்.
எந்த மதமும் கடவுளும், அரசாங்கமும், ஏழைகள் தலையில் தான் சவாரி செய்கின்றனவே ஒழிய முதலாளிமார்களை ஏன் என்றே கேள்ப்ப தில்லை. அவர்களுடைய விருத்திக்கு உதவி செய்தே வருகின்றன. கேவலம் ஒரு தீண்டாமை என்கின்ற காரியம் எவ்வளவு அக்கிரமமென்றும், அயோக் கியத்தனமானதென்றும், ஆதாரமற்றதென்றும் எல்லா மனிதனுடைய அறிவுக்கு பட்டிருந்தும் இன்று அதை ஒழிப்பது என்றால் எவ்வளவு கஷ்டமாய் இருக்கின்றது என்று பாருங்கள்?
தீண்டாமை ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்ற பிரச்சினையை முடிவு செய்ய “சாஸ்திரம் என்ன சொல்லுகின்றது? சாஸ்திரிகள் என்ன சொல்லுகின்றார்கள்?” என்று பார்ப்பதும் சாஸ்திரிகளுடன் தர்க்கம் செய்வ தும் புத்தியுள்ள காரியமென்றோ நாணையமான காரியமென்றோ சொல்ல முடியுமா? என்பதை யோசித்துப்பாருங்கள்.
சாஸ்திரம் பார்ப்பதென்றால் என்ன அர்த்தம். இன்றைய தினம் தீண்டா மையில் கஷ்டப்படும் மக்களுடைய கஷடத்தை நீக்குவதற்காக இன்றைக்கு 2500 வருஷங்களுக்கு முன் இருந்த மக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது என்பது தானே அதன் அர்த்தம். கஷ்டப்படுகின்ற பறையர், சக்கிலியர்கள் முதலிய மக்களின் கஷ்டத்தை நீக்க சோம்பேரியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்து தொந்தியைப் பெருக்கிக் கொண்டிருக்கும் சாஸ்திரிகளைப் போய் கேள்ப்பது என்பதும் அவர்களிடம் தர்க்கித்துக் கொண்டிருப்பதும் யோக்கியமான காரியமா என்று யோசித்துப்பாருங்கள். இந்தக் காரியங்களால் சாஸ்திரங்களையும் சாஸ்திரிகளையும் ஒப்புக்கொள்ளு கின்றோம் என்றுதானே அர்த்தம். இன்றைய மனித சமூக முன்னேற்ற காரியங்களில் சாஸ்திரங்களுக்கும், சாஸ்திரிகளுக்கும் என்ன வேலை இருக் கிறது? பாடுபடும் மனிதனின் சுக துக்கத்தைப்பற்றிப் பேச பாடுபடுபவனுக்கு உரிமையே ஒழிய சோம்பேரிகளுக்கு எப்படி உரிமை உண்டாகும். ஆகவே இன்றைய நியாயமும், அதிகாரமும் சோம்பேரிகள் கையில் இருக்கின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இந்த நிலைமையை அடியோடு அழிக்கவேண்டும் என்றுதான் சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றது. எல்லா மதங்களினுடைய யோக்கியதையும் எல்லா அரசாங்கத்தினுடைய யோக்கியதையும் இப்படித்தான் இருக்கின்றன. இந்தக் கொடுமையுள்ள தீண்டாமை என்பது இந்த மனித சமூகத்தில் எவ்வளவு காலமாய் இருந்து வருகின்றது? இதை ஒழிக்க இதுவரை எந்தமதம் எந்த அரசாங்கம் பாடுபட்டு ஒழித்தது? கிறிஸ்துவ மதமும், இஸ்லாம் மதமும் தங்கள் மதத்துக்கு வந்து விட்டால் தீண்டாமை ஒழிந்துபோகும் என்கின்றன வேயொழிய இந்த அக்கிரமம் நாட்டில் எப்படி இருக்க முடியும்? ஏன் இருக் கின்றன? என்கின்ற கவலைகள் அவைகளுக்கு இல்லை. இருக்குமானால் கேவலம் ஏதோ அற்ப காரியங்களுக்கெல்லாம் உயிரை விடவும் தலையை வாங்கவும் மக்களுக்கு போதிக்கின்ற மதங்கள் இக்கொடுமைக்கு உயிர்விட ஏன் துணிந்திருக்கக்கூடாது. அரசாங்கங்களும் இந்த தேசத்தில் வெகு காலமாக சுமார் 5000 வருஷமாக இருந்து வருவதாக சரித்திரங்கள் காணப் படுகின்றன. ஒரு அரசாங்கமும் இந்த தீண்டாமையை ஒழித்து மனிதனை மனிதனாக்கச் செய்யவே இல்லை. அனேக பெரிய காரியங்களையும் நாகரிக காரியங்களையும் செய்து சாதித்ததாக கதைகள், புராணங்கள் சரித்திரங்கள் எழுதிவைத்து மகிழ்கின்றன. ஆனால் தீண்டாமை விஷயத்தில் அவை செய்ததென்ன என்றால் தலைகுனிந்துதான் ஆகவேண்டும். அது போலவே எந்தக் கடவுளாவது இந்த மாதிரியான ஒரு கொடுமையை நிவர்த்தித்ததா? இல்லையே. ஆனால் மதமும் அரசாங்கமும் கடவுளும் எல்லா மக்களுக்கும் பொது என்று வாயில் பேசுகின்றன; வெட்கமில்லாமல் எழுதிக் கொள்ளு கின்றன. அந்தப்படி எல்லா மக்களுக்கும் பொதுவாய் காரியத்தில் என்ன செய்திருக்கின்றன? தீண்டாமை என்கின்ற இந்த ஒரு விஷயத்தில் ஒன்றும் இதுவரை செய்ய முடியாத மதங்களும் அரசாங்கங்களும் கடவுள்களும் இனி ஏழைகளுக்கு அதாவது செல்வவான்களால் கொடுமைப் படுத்தப்படும் ஏழைகளுக்கு என்ன காரியத்தைச் செய்துவிட முடியும்? மதமும், கடவுளும் அரசாங்கங்களும் மேல் ஜாதிக்காரர்களுக்கும், முதலாளிமார்களுக்கும் கையாள்களேயாகும். ஆதலால் தான் ஜாதிக்கொடுமையும், பணக்காரத் திமிரும் ஒழிய வேண்டுமானால் அவைகளின் ஆயுதங்களான கடவுள், மதம் அரசன் ஆகியவை சம்மந்தமில்லாத ஒரு ஆட்சியால் முடியும் என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றது. அதன்மீது கோபித்து என்ன செய்ய முடியும். அதில் கலந்துள்ள சிலரை தூக்கில் போடலாம். சிறை வைக்கலாம். அந்த உணர்ச்சியை ஒழித்துவிட முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். இன்று உலகில் நாகரீகம் பெற்று முன்னணியிலிருக்கும் தேசங்களிளெல்லாம் இந்த உணர்ச்சிகள் தான் தான்டவமாடுகின்றன. ஆனால் படித்த மக்கள் என்பவர்களும், பணக்காரர்கள் என்பவர்களும், பார்ப்பனர், பாதிரிகள் என்பவர்களும் இதற்கு விரோதமாகத் தான் இருக்கின்றார்கள். இவர்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது உறுதி. எப்படி யெனில் பணக்கார ஆதிக்கமும், பாதிரி ஆதிக்கமும் மேலோங்கி இருந்த ருஷிய தேசத்தில் அவை ஒழிந்த உடன் அங்கு இன்று தீண்டாமையும் இல்லை, பணக்காரக் கொடுமையும் இல்லை. இந்தநிலை அந்த தேசத்துக்கு எப்படி வந்தது என்று கேட்பீர்கள். அங்கு முதலில் மதத்தையும், கடவுளையும் ஒழித்த பிறகுதான் ஏற்பட்டது என்பதை நீங்கள் யாவரும் உணர்ந்திருக்கலாம். இந்தக் காரணங் களால் தான் மதத்தையும், கடவுளையும் குற்றம் சொல்லுகின்றோமே ஒழிய வேறில்லை. மற்றபடி குரோதம் கொண்டோ, வெறுப்புக்கொண்டோ அல்ல. ஆதலால் நீங்களும் எவ்வித குரோதமும், துவேஷமும் இல்லாமல் பொறுமையாய் நடு நிலையிலிருந்து யோசித்துப்பார்த்து உங்களுக்குத் தோன்றுகிறபடி செய்யுங்கள்.
குறிப்பு: 19.02.1933இல் சேலம் விக்டோரியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் 20.03.1933இல் இராசிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஆகியவற்றில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்,
குடி அரசு – சொற்பொழிவு – 05.03.1933