இந்தியாவில் பெண்கள் நிலை
தோழர்களே! இந்தியப் பெண்கள் நிலைமையைப் பற்றி பேசுவ தென்றால் அது மிகவும் பரிதாபகரமான விஷயமாகும். அங்குள்ள ஆண், பெண், வித்தியாசமானது முதலாளி தொழிலாளிக்கு உள்ள வித்தியாசத் தைவிட மிகக் கடினமானது. ஒரு தொழிலாளியானவன் எப்படியாவது பணம் சம்பாதித்துக் கொண்டானேயானால் அவன் மெள்ள மெள்ள முதலாளி கூட்டத் தில் கலந்து கொள்ளக்கூடியவனாகி விடுவான். ஆனால் இந்தியப் பெண்களோ அப்படியில்லை. அவர்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்கு அடிமையாகவும், அவர்களுடைய அனுபவப் பொருளாகவும், ஆண் களையே தெய்வமாகக் கருதி பூஜித்து தொண்டு செய்து கொண்டிருக்க வேண்டியவர்களாகவும் இருப்பார்கள்.
பெண் இழிவான பிறவி
இந்தியாவில் இந்து பெண்கள் இந்துமத சம்பிரதாயப்படி பாப ஜன்மங் களாகக் கருதப்படும். அதாவது சென்ற ஜன்மத்தில் அவர்கள் செய்த பாப காரியங்களால் இந்த ஜன்மத்தில் பெண்களாய்ப் பிறக்கிறார்கள் என்பது ஒரு சாஸ்திர விதி. ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தை இருந்தாலும் அக்குடும்பத்திற்கு ஆண் குழந்தை இல்லாவிட்டால் அதை பிள்ளையில்லாத குடும்பம் என்றே சொல்லுவது வழக்கம். ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அது அவ்வீட்டுக்கு அதிருப்தி தரத்தக்க விஷயமாகவே கருதப் படும். ஆண் குழந்தை பிறந்தால் வெகு திருப்தியுடன் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஏதாவது ஒருசபை அல்லது கூட்டம் யாரும் பேசாமல் நிஸப்த மாய் இருப்பதாய் இருந்தால் அதைப்பார்த்து “என்ன பெண் பிறந்த வீடு போல் இருக்கிறதே” என்று கேட்பது வழக்கம். எவ்வளவு பெண் குழந்தை இருந்தாலும் ஒருவனுக்கு ஆண் குழந்தை இல்லாவிட்டால் வேறு குடும்பத் தில் இருந்து ஒரு ஆண்பிள்ளையை சுவீகாரம் எடுத்துக் கொள்வார்களே ஒழிய பெண் குழந்தையை வார்சு குழந்தையாய்க் கருதுவதில்லை.
பெண்கள் எந்த நிலையிலும் சுதந்திரத்திற்கு அருகதை அற்றவர்கள் என்பதே மதசம்பிரதாயம். ஒரு பெண்ணானவள் குழந்தைப் பருவத்தில் தாய் தகப்பன் மேற்பார்வையிலும், வாலிபப்பருவத்தில் புருஷன் மேற்பார்வை யிலும், வயோதிகப் பருவத்தில் தன் மக்கள் மேற்பார்வையிலும் இருக்க வேண்டுமே ஒழிய, சுதந்திரமாய் இருக்க விடக்கூடாதென்று மனுதர்ம சாஸ் திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது மாத்திரமல்லாமல் பெண்களை கடவுள் பிறவியிலேயே விபசாரியாய் பிறப்பித்திருப்பதால், அவர்களை சர்வ ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும் என்று மத சாஸ்திரத்தில் எழுதப்பட்டி ருக்கின்றது.
பெண்களுக்கு கல்வி கூடாது
பெண்களுக்கு கல்வி கற்பிப்பதும் மதசாஸ்திர விரோதமான காரிய மாகும். இவ்வளவு நாகரீகமான காலத்திலும் இந்தியாவில் மொத்த ஜனத் தொகையில் 100-க்கு ஒருவர் வீதந்தான் பெண்கள் கல்வி கற்றிருக்கக்கூடும். அப்படிக் கற்றிருந்தாலும் அந்தக்கல்வி அவர்களது வாழ்க்கையில் யாதொரு காரியத்திற்கும் பயன்படுவதில்லை. பெண்களுக்கு கற்றுக்கொடுப்பதெல்லாம் வீட்டு சமையல் வேலை முதலிய வேலைகளைச் செய்யத்தான் கற்றுக் கொடுப்பது வழக்கம். சிறு பருவ முதலே அவர்களை ஆண் குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்கவேண்டுமென்று கருதுவதால் பொதுப்பள்ளிக் கூடங்களுக்கு அவர்களை அநேகமாய் அனுப்பவே மாட்டார்கள். மற்றபடி சிறு குழந்தைப்பருவத்தில் யாருக்காவது சங்கீதம் பாட்டு முதலியவை கற்றுக் கொடுக்கப்பட்டாலும் அவை அப் பெண்ணின் வாழ்க்கையில் சிறிதும் பயன்பட சந்தர்ப்பம் இருப்பதே கிடையாது.
கல்யாணம்
கல்யாண விஷயம் என்பது மிகவும் பரிதாபகரமானது. அநேகமாக பெண்களுக்கு 10, 12 வயதிற்குள்ளாக கல்யாணம் ஆகிவிடும். பிறந்த ஒரு வருஷத்திலிருந்தே எப்பொழுது வேண்டுமானாலும் கல்யாணம் செய்யலாம். சில வகுப்புகளில் எப்படியானாலும் 10 வயதிற்குள் கல்யாணம் செய்தாக வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் உண்டு. கல்யாணம் என்பது பெண்கழுத்தில் ஆண் ஒரு கயிற்றை கட்டுவதுதான் கல்யாணம். தாலிகட்டுகின்றது என்கின்ற சடங்கு வரையிலும் பெண்ணுக்கு மாப்பிள்ளை இன்னார் என்றே அடை யாளம் தெரியாது. மாப்பிள்ளைக்கும் பெண் இன்னார் என்றே அடையாளம் தெரியாது. கல்யாணம் என்பது பெண் மாப்பிள்ளை ஆகியவர்களின் பெற்றோர்கள் செய்து கொள்ளும் ஏற்பாடே ஒழிய, பெண் மாப்பிள்ளை ஆகிய இருவருடைய சம்மதம் என்பது கிடையாது. பெண்ணுக்கும் மாப் பிள்ளைக்கும் பொருத்தம் என்பது ஜோசியத்தின் மூலமும், சகுனத்தின் மூலமும் பார்ப்பதே தவிர பிரத்தியட்ச யோக்கியதை முதலியவைகளைக் கொண்டு பார்ப்பதில்லை. 5, 10 வயதுள்ள சிறு பெண்களுக்கு 40, 50 வயதுள்ள மாப்பிள்ளையை கல்யாணம் செய்வதும் உண்டு. 10 வயது பையனுக்கு 20 வயது பெண்ணை கட்டுவதும் உண்டு. 60, 70 வயது கிழவனுக்கு சிறு பெண்களை கல்யாணம் செய்வதும் உண்டு. சென்ற வருஷத்தில்கூட 90 வயது கிழவன் ஒரு சிறு பெண்ணை கலியாணம் செய்து கொண்டான். பெண்ணின் தாய் தகப்பன்மார் யாருக்கு கல்யாணம் செய்து கொடுப்பதானாலும் பெண் சம்மதித்துதான் ஆகவேண்டும். பெண் ஏதாவது தனது அதிருப்தியை காட்டினால் அது பெண்ணின் கற்புக்கே விரோதமானது என்று சொல்லி விடுவதால் பெண் தன்னை யாருக்கு கொடுக்கப்படுவதானாலும் சம்மதித்தாகவேண்டும்.
புருஷன் வீட்டில் பெண் நிலைமை
கல்யாணம் செய்யப்பட்ட பெண் புருஷன் வீட்டு வேலைக்கே கல்யாணம் செய்யப்பட்டதாய் கருதி புருஷன் வீட்டில் மாமனார், மாமி, நாத்தி, கொழுனன் ஆகியவர்களுக்கு வேலையாளாக இருந்து சகல வேலையையும் பார்க்கவேண்டும். சில வகுப்புகளில் பெண் புருஷனின் தகப்பன்மாருக்கும், சகோதரர்களுக்கும்கூட பெண்சாதியாய் இருக்க வேண்டும். இதற்கு சட்டத் திலும் இடமுண்டு. பெண் தாய் வீட்டிலிருந்து புருஷன் வீட்டிற்கு போகும் போது அழுதுகொண்டே போகும். பெற்றோர்கள் பெண்ணுக்கு சொல்லி அனுப்பும் புத்திமதி யெல்லாம் “புருஷன் வீட்டில் உள்ளவர்களுக்கு பணிந்து, நல்ல வேலைக்காரியாய் நடந்துகொள்” என்றுதான் சொல்லி அனுப்புவார்கள். அந்தப்பெண்ணை புருஷன் எவ்வளவு கொடுமையாய் நடத்தினாலும் கேள்வி கிடையாது. சில சமயங்களில் புருஷனுடைய பெற்றோர்கள் கொடுமைப்படுத்தினாலும் கேள்வி கிடையாது. புருஷன் எவ்வளவு அயோக்கியனாகவும், குடிகாரனாகவும், சூது, விபசாரம் செய்பவனாகவும், இருந்தாலும் பெண்ணுக்கு கேள்க்க அதிகாரம் கிடையாது.
அவன் வரும்படி இல்லாமல் திரிந்தாலும் பெண் தானே கூலி வேலை செய்தாகிலும் அவனுக்கு போடவேண்டும். பெண் இவற்றையெல்லாம் தனது முன் ஜன்மத்தின் கர்ம பலனென்று எண்ணிக்கொள்ள வேண்டும்.
கல்யாண ரத்து கிடையாது
புருஷன், மேல்கொண்டு எத்தனை பெண்சாதி வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொண்டு வாழலாம். எத்தனை தாசிகளை வேண்டுமா னாலும் வைத்துக் கொள்ளலாம். இந்து மத கடவுள்கள் 60 ஆயிரம் பெண் களை கட்டிக்கொண்டதாகவும், 12 ஆயிரம் தாசிகள் வைத்திருந்ததாகவும் மத ஆதாரங்கள் உண்டு. எந்த நிலையிலும் கல்யாண ரத்து என்பது கிடையவே கிடையாது. பெண்ணுக்கு ஒரு தடவை கல்யாணம் ஆகிவிட்டால் சாகும்வரை அவனிடமேதான் இருந்தாக வேண்டும். புருஷன் கொடுமை சகிக்காமல் பெண் தாய் வீட்டுக்கு போய்விட்டால், புருஷன் கோர்ட்டில் தாவா செய்து டிக்ரி பெற்று பெண்ணை சுவாதீனம் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்ணுக்கு புருஷனிடமிருந்து ஜீவனாம்சம் பெறத்தான் பாத்தியமுண்டு. அதுவும் பெண் விபசாரி என்று புருஷன் ருஜுப்படுத்திவிட்டால் அந்த ஜீவனாம்சமும் இல்லை.
சொத்துரிமை
பெண்ணுக்கு தகப்பன் சொத்தில் சிறிதும் பங்கு கிடையாது. புருஷன் சொத்திலும் பங்கு கிடையாது.
விதவைத்தன்மை
புருஷன் இறந்துவிட்டால் பெண் விதவை என்று அழைக்கப்படுவாள். புருஷன் இறக்கும்போது அவள் எவ்வளவு செல்வத்துடன் மேன்மையாய் இருந்தாலும், கணவன் இறந்தவுடன் இவள் ஒரு அபசகுன உருவமாக ஆகி விடுவாள். நகை அணியக்கூடாது, புஷ்பம், வாசனை, நல்ல உடுப்பு ஆகியவை அணியக்கூடாது. ஒரே வேளை – அதுவும் சத்தற்ற ஆகாரந்தான் சாப்பிட வேண்டும். சில வகுப்புகளில் தலையை மொட்டையடித்து, வெள்ளை உடுப்பு அணிந்து கொண்டு வீட்டிற் குள்ளாகவே வீட்டு வேலைகள் செய்து கொண்டு இருக்க வேண்டும். விதவையைக் காணுவது அபசகுனமாகப் பாவிக்கப்படும். விதவைக்கு குடும்ப காரியங்களில் அல்லது சடங்குகளில் எவ்வித பாத்தியமும் கிடையாது. சாப்பாட்டுக்கு மாத்திரம் பெற பாத்திய முண்டு. வேறு கல்யாணம் செய்து கொள்ளவும் கூடாது. 5 அல்லது 10 வயதில் புருஷன் இறந்து போனாலும் பெண் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது. ஆனால் புருஷன் தனது பெண்ஜாதி இறந்த 10 நாளிலேயே கல்யாணம் செய்து கொள்ளலாம்.
அவன் எவ்வளவு கிழவனாயிருந்தாலும் மறுமணம் செய்து கொள் வதில் எவ்வித ஆட்சேபணையும் கிடையாது. புருஷன், குழந்தை இல்லா விட்டாலும், ஆண் குழந்தை இல்லா விட்டாலும் வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம். பெண் தனது குழந்தை பருவத்தில் புருஷன் இறந்து போனாலும் வேறு கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.
தனி வகுப்புகளில்
இவை பொது நிலைமையாகும். இனி சில தனி வகுப்புகளில் உள்ள பெண்கள் நிலைமையைப் பற்றி சில குறிப்பிடுகின்றேன். சில வகுப்புகளில் பெண்கள், ஆண்கள் கண்களுக்கே தென்படக்கூடாது உடம்பு, தலை, முகம் ஆகிய எல்லாவற்றையும் ஒரு துணியினால் போர்த்தி மூடிக் கொள்ள வேண்டும். கண்கள் மாத்திரம் தெரியும்படி ஓட்டை விட்டு பார்த்துக் கொண்டே போக வேண்டும். பெண்கள் தனியே எங்கும் போகக்கூடாது. சிறு பெண்ணை அதாவது 8, 10, 12 வயது பெண்ணை 20, 30, 40 வயதுக் காரர்களுக்கு கட்டிக் கொடுத்தாலும் கல்யாணமான அன்று இரவே படுக்கை வீட்டில் பெண்ணையும் ஆணையும் தனியாய் படுக்க வைத்து விடுவார்கள். அவன் அதை காமாகாரமாய் எப்படி மிருகத்தனமாய் வேண்டுமானாலும் சில சமயங் களில் நடத்துவான்.
சில வகுப்புகளில், மகனுக்கு கல்யாணம் செய்த பெண் மாமனாருக்கும் பெண்ஜாதியாய் இருந்தாக வேண்டும். 10 வயது பையனுக்கு 20 வயது பெண்ணை கல்யாணம் செய்து பையன் 18 வயது நிரம்புவதற்குள் பெண் ணுக்கு 2, 3 குழந்தைகள் பிறந்து விடும். அது மாமனாருக்கோ அல்லது புருஷனுடைய அண்ணனுக்கோ பிறந்ததாக இருந்தாலும் அக்குழந்தைகள் சட்டபடி பிறந்த லெஜிட்டிமேட் குழந்தைகளாகவே பாவிக்கப்படும்.
சில வகுப்புகளில் குடும்பத் தலைவன் மாத்திரம் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு அவனுடைய சகோதரர்கள் உள்பட யெல்லா ருமே அப்பெண்ணை பெண்ஜாதியாய் அனுவிப்பது உண்டு.
சில வகுப்புகளில் ஒரு குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம்தான் கலி யாணம் செய்து கொள்ளலாம். மற்ற இளைய சகோதரர்கள் வேறு ஜாதி பெண் களை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். இந்தப்படி வைப்பாட்டியாக வைத்துக் கொண்ட பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தால், அவற்றை தகப்பன் காப்பாற்ற வேண்டும் என்கின்ற நிபந்தனை இல்லை. தகப்பன் சொத்தில் அவைகளுக்கு பங்கும் இல்லை.
சில வகுப்புகளில் உயர்ந்த ஜாதிக்காரன் என்கின்ற பிராமணன் மற்ற வகுப்புப் பெண்களைக் கூப்பிட்டால் அவனுக்கு அவள் இணங்கியே ஆக வேண்டும்.
பிராமணன், ஒரு பெண்ணினுடைய புருஷனைக் கூப்பிட்டே அவனு டைய பெண்ஜாதி மீது தனக்கு ஆசையாய் இருப்பதாகவும், அவளை அழைத்து வரும்படியும் கேட்டால் புருஷன் உடனே அழைத்துக் கொண்டு போகவேண்டும். பெண் சம்மதிக்காவிட்டால் நிர்பந்தப்படுத்தி, அல்லது கொடுமைப்படுத்தி சம்மதிக்கச் செய்வதுமுண்டு. சில வகுப்புகளில் குரு கூப்பிட்டால் இணங்கியே ஆகவேண்டும். முன் குறிப்பிட்ட, அதாவது ஒரு குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம் கல்யாணம் செய்து கொள்ளலாம் மற்றவன் வேறுவகுப்பில் வைப்பாட்டி வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்ட வகுப்பில் பெண்கள் மீதி ஆகி அனேக பெண்கள் சாகும் வரை கல்யாணம் இல்லாமல் கன்னிப் பெண்ணாகவே இருந்து சாவது வழக்கம். இப்படிப்பட்ட பெண்களுக்கு அவர்கள் செத்த பிறகு பிணத்திற்கு ஒருவனைக் கொண்டு தாலிகட்டச் செய்து பிறகு நெருப்பில் வைத்துக் கொளுத்தி விடுவது வழக்கம்.
சில வகுப்புகளில் கடவுளுக்கு பெண்ஜாதி ஆகிறது என்று கோயிலில் வைத்து கடவுளை கல்யாணம் செய்து கொண்டதாக ஏற்பாடு செய்து பொது விபசாரியாய் வாழச் செய்வது உண்டு. இவர்களுக்குப்பெயர் தேவதாசி.
ஒரு கல்யாணமான பெண்ணுடன் மற்றொரு ஆண் சம்பந்தம் வைத் துக் கொண்டதாகத் தெரிந்தால் அந்த ஆண் சட்டப்படி தண்டனைக்குள்ளா வான். பெண்ணை ஜாதியை விட்டு தள்ளி வைத்துவிடுவதுமுண்டு.
ஒரு பெண் விபசாரியாய் ஆகிவிட்டால், அல்லது தேவதாசியாக இருந்தால் சொத்து வைத்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்கலாம். இல்லா விட்டால் சொத்து உரிமை இல்லை, சுதந்திரமும் இல்லை.
இந்து விதவைகள் நிலைமையைப் பற்றியும், அவர்கள் சம்பந்தமான சட்டங்களைப் பற்றியும் விபரமாய் மற்றொருசமயம் நேரிடும்போது பேசு கிறேன்.
குறிப்பு: ஐரோப்பாவில் பெண்கள் கூட்டத்தில் இந்தியப் பெண்கள் நிலையைப் பற்றி பேசியது,
குடி அரசு – சொற்பொழிவு – 05.02.1933