சுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம்

சென்றவாரம் வெளியான தினசரி பத்திரிகைகளில் தோழர் காந்திய வர்களால் கலப்புமணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்பதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்த வாரம் வந்த தினசரிகளில் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட ஆகாரத்தையும் சுயமரியாதையை லட்சியமாய் கொண்ட கலப்பு மணத்தையும் தான் ஆதரிப்பதாகச் சொன்ன தாய் காணப்படுகின்றது.

இதைப் பார்க்கும்போது ஒரு கேள்வி புறப்படுகின்றது.  அதாவது சம ஜாதி மக்களால் சமைக்கப்பட்ட ஆகாரம் சம ஜாதி மக்களுடன் கூட இருந்து உண்ணும் ஆகாரம் ஆகியவைகள் சுகாதார முறைப்படி சமைக்கப் பட வேண்டிய அவசியமில்லையா என்ற கேள்வி பிறக்கின்றது.  ஒரு சமயம் இரண்டு வித மக்களுடனும் கலந்து உட்கார்ந்து உண்ணும் ஆகாரத்துக்கும் சுகாதாரமுறை பக்குவம் வேண்டுமானால் அதை இந்த சமயத்தில் தனியாய் குறிப்பிடக் காரணம் என்ன? என்கின்ற கேள்வி பிறக்கின்றது.

அதுபோலவே சுயஜாதி மணம் செய்து கொள்வதானாலும் சுய மரியாதை இலட்சியம் இருக்க வேண்டியது அவசியம் என்றால் கலப்பு மணத்தைப் பற்றிச் சொல்லும் போது மாத்திரம் சுயமரியாதை இலட்சியத்தைப் பற்றிக் கவலைப்படுவானேன்? என்கின்ற கேள்வியும் பிறக்கின்றது. ஒரு சமயம் கலப்பு மணம் இல்லாவிட்டால் திருமண விஷயத்தில் சுயமரியாதை இலட்சியம் தேவையில்லையோ என்கின்ற சந்தேகமும் பிறக்கின்றன.

எது எப்படி இருந்தாலும் கலப்பு மண விஷயத்திலாவது மக்களுக்கு சுயமரியாதை இலட்சியம் இருக்க வேண்டும் என்றும் தோழர் காந்தி ஒப்புக் கொண்டதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 29.01.1933

You may also like...