கான்சாகிப் சேக்தாவுத் அவர்கட்குப் பாராட்டு

தோழர்களே! இன்றுதோழர் சேக்தாவுத் அவர்கட்கு கான்சாயபு பட்டம் கிடைத்ததைப் பாராட்டுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டதற்கு நன்றி செலுத்துகிறேன்.

இம்மாதிரியான பட்டங்களை சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பு கருதியதைப் போல் இதுசமயம் மக்கள் அவ்வளவு மேன்மையாகக் கருதுவதில்லை.

உதாரணமாக இரண்டொரு வருஷங்களுக்கு முன் ஒரு நண்பருக்கு கிடைத்த ஒரு பட்டத்திற்கு பெருத்த பாராட்டுதல்கள் நடக்கும்போது நான் அவரைப் பார்த்து “பட்ட சம்பந்தமான பாராட்டுவிழா தொந்திரவு உங்களுக்கு இனி கொஞ்சநாளைக்கு இருக்கும்.  உங்கள் மனமும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கும்” என்று சொன்னேன்.  “பட்டங்களால் பிரமாதமான பலன் இல்லாவிட்டாலும் இந்த சந்தோஷத்திற்காவது இடமிருக்கிறதே” என்று சொன்னேன்.  அதற்கு அவர் அப்படிக்கூட இதில் ஒன்றும் பெருமைப்பட இடமில்லை  என்றார்.  உடனே நான் ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இதோ இவ்வருஷம் பட்டம் வழங்கி இருக்கும் லிஸ்ட்டைப் பாருங்கள். எனக்கும் பட்டம் கிடைத்திருக்கிறது.  இன்னொரு வருக்கும் பட்டம் கிடைத்திருக்கிறது.  அவரைப்பற்றியோ, தங்களுக்கும், உலகத்திற்கும் நன்றாய்த்தெரியும், சர்க்காருக்கும் நன்றாய்தெரிந்திருக்கலாம்.  ஆகவே நான் பட்டம் கிடைத்ததே என்று பெருமைப்படவா? அல்லது என்னையும், அவரையும் ஒரே லிஸ்டில் சேர்த்திருக்கிறார்களே என்று அவமானப்படவா என்று சொன்னார். அந்தச் சமயம் எனக்கு மிகவும் பரிதாப மாகவே இருந்தது. இதற்காகப் பாராட்டுவதா? அனுதாபப்படுவதா என்பது எனக்கே புரியவில்லை.  இம்மாதிரியாகவேதான் பெரும்பான்மையான பட்டங்கள் பயன்பெறுகின்றன.  ஆகவே பட்டங்களுக்கு யோக்கியதை யையும், செல்வாக்கையும் உண்டாக்க வேண்டும் என்கின்ற உத்தேசத்தில் ஒன்று இரண்டு தகுந்த நபர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று தான் நான் கருது கிறேன்.  உண்மையிலேயே கான்சாயபு பட்டமானது தோழர் ஷேத் தாவுத் துக்கு வந்து சேர்ந்ததால் இவருக்கு ஏதாவது அதிக பெருமை ஏற்பட்டு விட்டது என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை. ஆனால் அந்தப் பட்டம் இவரை வந்து அடைந்து (அடைக்கலம் புகுந்து) பெருமை அடைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இனி வருங்காலத்தில் பட்டங்கள் லட்சியமற்றதாக ஆகிவிடும்.

இப்பொழுதே பார்க்கலாம். பட்டம் பெற்றவர்களைவிட ஜெயிலுக்கு போனவர்கள் ஜனங்களுக்காக பாடுபடுகின்றவர்கள் என்று கருதியே அதிக மாக மதிக்கச் செய்கின்றார்கள் என்பதாகும்.

உண்மையில் பார்த்தாலும் ஏழை ஜனங்களுக்காகப் பாடுபடுகின்ற வர்கள் தங்கள் பட்டத்துக்கு உரியவர்கள் என்று சர்க்கார் பெரிதும் கருது வதில்லை என்பதை யாரும் அறியலாம்.

இதற்குக் காரணம் எப்படி இருந்தாலும் ஏழை ஜனங்களுக்கும், சர்க்காருக்கும் நல்ல பிள்ளையாய் இருக்க சுலபத்தில் இனி முடியாது.  ஜனங் களுக்கு அறிவும், அனுபவமும் ஏற ஏற அனேக விஷயங்கள் தலைகீழ் புரட்சியை அடைவது இயல்பேயாகும். ஆகவே அதற்குத் தகுந்தபடி திருத்துப்பாடடைய வேண்டியது அறிவுடமையாகும்.  இன்று இந்த ஊரில் பட்டம் உடையவர் தோழர் ஷேக்தாவுத் அவர்களேயாகும்.

இதற்குமுன் யாராவது இருந்தார்களா என்றால் அதுவும் இவருடைய தகப்பனாரேயாகும். இவரது தகப்பனார் தோழர் கே. அலாவுதீன் சாயபு அவர்கள் கான்பஹதூர் பட்டம் வழங்கப்பட்டவர். ஆனால் அது இவருக்குக் கூட- இந்த ஊரில் அனேகருக்கு கூட தெரியாது.  ஏனெனில் அந்தக் காலத்திலேயே அதை அவர் அவ்வளவு பிரமாதப்படுத்திக் கொள்ளவில்லை.  தோழர் கே. அலாவுதீன் சாயபு அவர்கள் இந்த ஊர் பொது நடவடிக்கை விஷயத்தில் அக்கால மாதிரிக்கேற்றபடி எல்லாப் பொருப்புகளையும் வகித்து வந்தவர். இவரைப் போலவே மிகவும் அடக்கமானவர், கூட்டங்களில் பேசவேமாட்டார். அதுபோலவே இவரும் யெல்லாப் பொருப்புகளையும் வகித்து இருக்கின்றார். ஆனால் பேசுவதில்லை.  பேசவேண்டி ஏற்பட்டு விடுமோ என்று அவர் அனேக கூட்டங்களுக்கு போவதில்லை. போனாலும் பின்னால் ஒளிந்துகொள்வார்.  ஆனால் இன்று அவர் பேசியதில் எவ்வளவு கருத்துக்கள் இருந்தது என்பதை பாருங்கள்.  என் விஷயத்தைப்பற்றி பேசிய பல விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் அறிவும், கருத்தும் நிறைந்தவைகளாகும். இதுவரை வேறு யாருடைய நிர்வாகத்திலும், ஈரோடு முனிசிபாலிட்டியானது  இவ்வளவு ஒற்றுமையாய் கலகமில்லாமல் நிர்வாகத்திற்கு எவ்வித குந்தகமும் இல்லாமல் நடைபெற்று வந்ததாகக் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாகும்.  ஊர் ஒற்றுமைக்கும், ஊர் ஜனங்களுக்கு முனிசிபாலிட்டியிடம் இருக்கும் மதிப்புக்கும் ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன்.

இந்த முனிசிபாலிட்டியில் இந்த ஊருக்கு மின்சார விளக்குத் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்து அதைச் சொந்தத்தில் வைத்து நடத்துவதற்குப் பணங் களும் ஏற்பாடுசெய்து காரியங்கள் துவக்கப்படும்போது சர்க்காரார் தங்க ளுக்கு உள்ள அதிகாரத்தை தப்பு வழியில் செலுத்தி அதற்கு உரிய அனு மதியை ஒரு வெள்ளைக்கார முதலாளி கம்பெனிக்கு அளித்துவிட்டார்கள்.

நமது மந்திரிகள் ஈரோடு முனிசிபாலிட்டி நன்மையைவிடத் தங்கள் உத்தியோகம் நிலைக்கவேண்டிய நன்மையையே அதிகமாய் கணித்து ஆட்டுக் குட்டிக்கும் புலிக்குமுள்ள கதைபோல் “நீ செய்திருக்காவிட்டாலும் உன் தகப்பன் செய்திருப்பான்”  என்று சொல்லி அதாவது உமக்கு முன் இருந்தவர்கள் நடத்திய நிருவாகத்தால் இந்த முனிசிபாலிட்டி லைசென்ஸ் பெறத் தகுதி அற்றது என்று சொல்லி விட்டார்கள்.   இதைப்பற்றி நான் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் மனிதர்களின் சராசரி யோக்கியதைக்கு இது குறைந்ததல்ல. ஆதலால் அப்போதைய மந்திரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதைப் பிரதானமாய் கருதியதை குற்றமாகக் கருதவில்லை.  ஆனால் அதை ஈரோடு ஜனங்கள் தங்களை அலட்சியமாய் கருதியதாய் கருதி இப்போது முன் குறிப்பிட்ட மின்சார திட்டம் வெள்ளைக்கார கம்பெனியாரால் நிறைவேற்றி அமுலுக்கு கொண்டுவந்து ஒரு வருஷமாகியும் அதை நிவர்த்தில்லாத இரண்டொருவர் தவிர மற்றும் யாரும் அதை உபயோகப் படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.  இது பாராட்டக் கூடியதேயாகும். இனியும் இதுபோலவே ஒற்றுமையாயும் பொருப்பாயும் பொது ஜனங்க ளுடைய நன்மைக்கும், முற்போக்குக்குமான காரியங்கள் நடைபெறவேண்டு மென்றே விரும்புகிறேன்.

குறிப்பு : 15.01.1933 இல் ஈரோடு முனிசிபல் சேர்மன் கே.ஏ.ஷேக் தாவுது சாயபு அவர்களுக்கு ‘கான் சாயபு’ பட்டம் கிடைத்ததற்கு முனிசிபல் அலுவலக அதிகாரி களால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கு தலைமை யேற்று ஆற்றிய உரை,

குடி அரசு – சொற்பொழிவு – 22.01.1933

 

You may also like...