காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு
தீண்டாமை ஒழிப்பா? நிலைப்பா என்று சென்ற வாரம் நாம் தலையங் கம் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அதற்கு பதில், அல்லது சமாதானம் என்று கருதும்படி தோழர் காந்தியவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், மோர்வி மாஜி திவானுக்கு அளித்த பதிலிலும் காணப்படும் அடியிற்கண்ட விஷயங்கள் நமது கருத்தை ஊர்ச்சிதப் படுத்துவதாக இருக்கின்றதா? இல்லையா என்பதைச் சற்று கூர்ந்து கவனிக்கும்படி வாசகர் களை வேண்டுகின்றோம். தோழர் காந்தியார் கூறுவதாவது:-
“நான் கலப்பு மணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்ப தில்லை” (ஏன்?)
“சுத்தமில்லாமல் இருப்பவர்களையும், மாட்டு மாமிசம் சாப்பிடுபவர் களையும் ஆலயத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்“ என்று கூறி இருக்கிறார்.
காந்தியார் அறிக்கை கூறுவதாவது:-
எனது ராஜி பிரேரேபணையை யார் கண்டித்தாலும் நான் வாப்பீசு வாங்கிக் கொள்ளப் போவதில்லை.
மத விஷயத்தில் நிர்ப்பந்தமென்பது இருக்கக் கூடாது.
மத விஷயத்தில் பிறர் கொண்டுள்ள நம்பிக்கையை முக்கிய விஷயத் திற்கு இணங்கிய அளவுக்கு மதித்து நடக்க வேண்டும்.
ஹரிஜனங்களுடைய ஆலயப்பிரவேசத்தை ஆட்சேபிக்கின்ற வர்களும் மத சம்பந்தமான மன சாந்தியை அடைய உரிமைபெற்று இருக் கிறார்கள்.
ஆதலால் அவர்களுக்கு உரிய அந்த மன சாந்தியை பரிக்காத மாதிரி யில் தான் ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும்.
கோவிலுக்குள் சில ஜாதியார் சென்றால் அங்குள்ள விக்கிரகத்தின் சக்தி குறைந்து போகின்றது என்கின்ற உணர்ச்சி பலருக்கு இருந்து வருகின்றது.
அம்மாதிரி உணர்ச்சி உள்ளவர்களை சட்டத்தைக் கொண்டோ, ஆயுதத்தைக் கொண்டோ, பலவந்தத்தைக் கொண்டோ விடும்படி செய்வது என்பது முடியாத காரியம். (அப்படி ஆனால் பின் எதற்காக பட்டினியும், மெஜாரிட்டி கையெழுத்தும் “சுப்பராயன் மசோதா”வும்?)
இந்து மதத்தில் தங்களுக்கு உள்ள அந்தஸ்த்தை நிலைநாட்டிக் கொள்ளுவதற்காக ஒருவர் பெற்றிருக்கும் நியாயமான கோரிக்கைகளை அவருக்கு மறுத்து அவர்கள் மனதை புண்படுத்துவதை ஹரிஜனங்கள் விரும்பவில்லை என நான் கருதுகிறேன்.
(அப்படியானால் பார்ப்பனர்களை பூதேவர்கள் என்று ஒத்துக் கொள்ள வேண்டியது தான்.)
சம்ரோக்ஷணை என்பது ஆட்சேபகரமான காரியம் தான். அதை ஒப்புக்கொள்ளுவது தீண்டாமையை ஒப்புக் கொண்டதாகும். என்றாலும் இதை ஒப்புக் கொள்ளுவது வைதீகர்களுக்கு காட்டும் ஒரு தயவாக இருக்கும்.
மனித வர்க்கத்தில் தீண்டாமை என்பது ஏதாவது ஒரு ரூபத்தில் சகஜமாக இருந்து தான் தீரும்.
அது மனிதனுடைய தொழில் அல்லது நடத்தையைப் பொருத்ததாக இருக்கும். அப்படிப்பட்ட தீண்டாமையை ஒழிப்பது இந்த இயக்கத்தின் நோக்கமல்ல.
என்று எழுதி இருக்கிறார்.
இது 12-1-33 சு-மி பத்திரிகையில் காணப்படுகின்றது. இதிலிருந்து ஹரிஜன கோவில் பிரவேசத்தின் யோக்கியதையும், தீண்டாமை விலக்கின் தத்துவத்தையும், மதக் கொடுமையை ஒழிக்கும் சம்மதத்தையும் தோழர்களே யூகித்தறிந்து கொள்ளுவீர்களாக.
குடி அரசு – கட்டுரை – 15.01.1933