5 ரூபாய் இனாம்
– சித்திரபுத்திரன்
திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாக்கிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் பெரிதும் பார்ப்பனர்களே கலந்து அவர்களே முழுவதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன?
திரு. காந்தி இந்த சத்தியாக்கிரகப் போருக்கு பணமே வேண்டிய தில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோபாலாச்சாரியார் பணம் வேண்டுமென்று கேட்பதின் இரகசியமென்ன?
அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூட்சி யென்ன?
இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார்களையே ஏற்படுத்தி பிரசாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன?
இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்க காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையனுப்பியவர்களுக்கு குடி அரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனாமாகவும் அளிக்கப்படும்.
குறிப்பு : – முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான விடை எது என்பதை நிர்ணயிப்பதற்கும் நானே தான் ஜட்ஜு எனக்கு மேல் அப்பிலோ கேழ்வியோ கிடையாது.
– சித்திரன் –
ஊ/ டி குடி அரசு . ஈரோடு
குடி அரசு – அறிவிப்பு – 30.03.1930