“காந்தியின் மிரட்டல்”
காந்தியவர்கள் “உயிர் விடுகிறேன்! உயிர் விடுகிறேன்” என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப்பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம். ஆனால் பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது. ஏனென்றால் இந்த ‘மகாத்மா’ உயிர்விட்டால் அவருக்கு சமாதி கட்டி, குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்கு பிழைப்பு ஏற்படுத்திக் கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர்களால் முடியும். ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர்களிடம் மாத்திரம் செல்லாது. ஆகையால் காந்தி மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டு மானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு “மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன்” என்று உப்புக் காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும்படி செய்யும் வேலைக்கோ, ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப் படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லா விட்டால் எப்படியாவது ராஜி செய்து கொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்லதாகும்.
குடி அரசு – கட்டுரை – 05.02.1933