கடலூரில் சுயமரியாதைக் கூட்டம்

தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேசவேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு.பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொது கூட்டத்தில் பேசவேண்டுமென்றஆசை அநேக நண்பர்களுக்கு இருந்ததால் நானும் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சிறிது பேசலா மென்றே கருதுகின்றேன்.

சுயமரியாதை இயக்கத்தின் தீவிரமான கொள்கைகளை யெல்லாம் இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது சற்று கஷ்டமானதா யிருக்குமென்றே கருதுகின்றேன்.

ஏனென்றால் இதற்குமுன் இங்கு இந்தப் பிரசாரம் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதன் தீவிரக் கொள்கைகளை நீங்கள் முதல் முதலாக கேட்கும்போது அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். அவற்றின் உண்மையை அறிவது என்பது இன்றே சுலபத்தில் புலப்படக்கூடியதாகாது. ஆதலால் உங்களுக்கு சிறிது நிதானமான முறையில் தான் பேச வேண்டிய வனாயிருக்கிறேன். அதாவது இந்த நான்கு, ஐந்து வருஷங்களுக்கு முன் கிராம ஜனங்களின் முன் நான் எந்த நிலையில் பேசினேனோ அது போல் முதல் பாடத்திலிருந்து பேச வேண்டியவனாகயிருக்கிறேன். ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால் திரு.பெருமாள் வீட்டுக் கல்யாணத்திற்கு பார்ப்பான் வரவழைக்கப்படாததாலேயே இவ்வூரார் அவர்மீது மிகுந்த கோபமாய் இருப்பதாகவும், நான் கோவில் குளங்களைப் பற்றி குற்றம் சொல்லுகின்றவன் என்பதாகவும் ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வந்திருக் கின்றேன் என்பதாகவும் குற்றம் சொல்லி இந்தக் கூட்டத்திற்கு யாரும் போகக்கூடாதென்று சிலர் பிரசாரம் செய்தார்களாம். இப்படிப்பட்ட முயற்சிக் காரர்கள் முன்னால் பார்ப்பனர்களின் நடத்தையையும் கோவில் குளங்க ளினுடைய தொல்லையையும் எடுத்துச் சொன்னால் எப்படி அது உங்க ளால் நடுநிலையில் கிரகிக்கப்படும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். புதிய சங்கதி எதுவானாலும் காதைமூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றார்கள். சிறு குழந்தைப் பருவத்தில் நமக்குப் புகுத்தப்பட்ட விஷயங்களையே ஆராய்ச்சியின் மூலம் அறிவின் மூலம் கண்ட முடிவென்று கருதி அதற்குத் தலைகொடுத்துக்கொண்டு இருக்கின் றோம். நமது உள்ளத்தில் எது எது பதிக்கப்பட்டு விட்டதோ அதெல்லாம் தேர்ந்த ஞானிகளாலும் தெய்வத் தன்மை பொருந்திய அவதார புருஷர் களாலும் சொல்லப்பட்ட உண்மைகள் என்ற உறுதியுடனே புகுத்தப்பட்டி ருக்கின்றோம்.ஆகையால் புதிய நோக்கங்களையும் தோற்றங்களையும் காண சகிக்காதவர்களாக இருக்கின்றோம்.

உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மை அடையவும், பாராட்டிப்பேசவும், தயாராய் இருக்கின்றோமே அல்லாமல் அதை நமது வாழ்க்கையுடன் நமது நாட்டு எண்ணங்களுடன் பொருத்திப் பார்ப்பதற்கு சிறிதும் எண்ணுவதே கிடை யாது. நமது மக்களின் இந்த மாதிரியான நிலையைப் பார்த்துப் பார்த்து மனம் கஷ்டப்பட்டதால் தான் நாங்கள் இந்த துறையில் இரங்கி தொண்டு செய்ய வேண்டியவர்களானோம்.

சுயமரியாதை

சுயமரியாதை இயக்கம் என்பதின் முக்கிய கொள்கைகள் என்பவை ஒன்றும் புதிதானதோ அல்லது ஏதாவது அதிசயமானதோ என்று நீங்கள் மலைக்கவேண்டியதில்லை. அது மனிதன் அறிவுபெறவும் சமத்துவம் அடையவும் சுதந்திரம் பெறவும் பாடுபடுகின்றது. அறிவுக்கும் சமத்துவத் திற்கும் சுதந்திரத்துக்கும் எதிராயும் தடையாயும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்க தைரியம் கொள்ளுகின்றது. இந்த நிலையில் மக்களின் மூடத்தனத்தினாலும் தாழ்வினாலும், அடிமைத்தனத்தினாலும் பயனடைந்து வாழ்கின்றவர்களுக்கு சுயமரியாதை இயக்கம் ஒரு கோடாலியாய் காணப் படுவதானால் அதிசயமொன்றுமில்லை. எங்களைக் கண்டால் துவேஷமும், வெறுப்பும் ஏற்படத்தான் செய்யும். எங்களை வையவும் தொல்லைப் படுத் தவும் அவரவர்கள் மனம் தூண்டத்தான் செய்யும். இவ்வியக்கத்தை கையாளுகிறவர்களுக்கு அவற்றையெல்லாம் சமாளிக்க சக்தி இருந்தால் தான் இவ்வியக்கத்தால் ஏதாவது பலன் ஏற்பட முடியும். எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் பயந்தால் ஒரு காரியமும் நடவாமல் போவதோடு பிற் போக்கும் ஏற்பட்டுவிடும்.

சாதாரணமாக நாங்கள் இந்த ஊர் பொதுஜனங்களின் பாராட்டு தலையும் வணக்கத்தையும் மரியாதையும் பெற்று கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டு போகவேண்டுமானால் எங்களால் சுலபத்தில் முடிந்து விடும். நமது ஜனங்களின் முட்டாள்தனம் எங்குஎங்கு இருக் கின்றது என்பது எங்களுக்கு நன்றாய்த் தெரியும்.

உதாரணமாக நாங்கள் தேசபக்தர்களைப்போல கதர் வேஷம் போட்டு கையில் கொடியைப் பிடித்துக்கொண்டு பாரதமாதவுக்கு ஜே! சுயராஜியத்திற்கு ஜே! மகாத்மாவுக்கு ஜே! என்று கூறிக்கொண்டோ, அல்லது பெரிய கடவுள் பக்தர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு மஞ்சள் உடையோ, காவி உடையோ கட்டிக்கொண்டு பட்டை நாமம் போட்டுக் கொண்டு குடை, சேகண்டி இவைகளுடன் நாராயண மூர்த்தி கோவிந்தா, கோவிந்தா என்றோ சொல்லிக்கொண்டு பஜனைக் கோஷ்டியுடனோ கூட்டமாய் வந்தோமானால் நீங்கள் கும்பிட்டு காசுகொடுத்து விட்டுப் போவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாய்த்தெரியும். இதற்காக ஒரு துரும்பைக் கிள்ளிப்போட வேண்டிய அவ்வளவு சிறிய கஷ்டம் கூட நாங்கள் படவேண்டியதில்லை.

ஆனால் நாங்களோ இன்று அப்படி சொல்லி வயறு வளர்ப்பதனு டைய புரட்டுகளை எடுத்துச் சொல்லுகின்ற வேலையை மேற்போட்டுக் கொண்டிருக்கின்றோமாதலால் சோம்பேரிப் பிழைப்புக்காரர்களுடைய கோபத்திற்கும் பழிதீர்த்துக்கொள்ளும் வஞ்சகத்திற்கும் ஆளாக வேண்டிய வர்களாக இருக்கின்றோம். இந்திய நாடு சூக்ஷிகாரருடைய ஆக்ஷிக்கு உட்பட்ட காலம் முதலே எங்களைப்போல் ஒரு கூட்டம் பல தடவை தோன்றி சூக்ஷிகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றதானாலும் சூக்ஷிக் காரர்களின் சாமாத்தியமானது, அவற்றை லக்ஷியப்படுத்தக்கூட முடியாமல் செய்து கொண்டே வந்திருக்கின்றது.

இன்றைய தினம் அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் சுதந்திரத் திற்கும் விரோதமான காரியங்கள் என்று எதை எதை நாங்கள் கருது கின்றோமோ அவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னும் அநேக பெரியார் கள் கருதி வெகு கடினமாக கண்டித்து பேசி இருக்கிறார்கள்.

உதாரணமாக ஜாதி மதத்தை கண்டித்தும் வேத சாஸ்திரங்களைக் கண்டித்தும் கோவில், குளம், கல்லுருவம், தாம்பர உருவம் ஆகியவை களை கண்டித்தும் பூஜை, உற்சவம், சடங்கு ஆகியவைகளைக் கண்டித்தும் எத்தனையோ பெரியார்கள் பேசியிருக்கின்றார்கள். “சாஸ்திரத்தைச் சுட்டு சதுர்மரையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக் கொண்டு சுகம் பெருவதெக் காலம்” என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். ஒரு பெரியவர் “கல்லையும் செம்பையும் வணங்கும் கசடர்கள்” என்று சொல்லியிருக்கின்றார். சாதி மத பேதமெல்லாம் சூட்சியால் ஏற்படுத்தப்பட்டது என்றும் சொல்லியிருக் கின்றார். இன்னும் எவ்வளவோ சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் நம் மக்களோ அப்பெரியார்களையெல்லாம் தெய்வீகத்தன்மை கொண்டவர்கள் என்றும், ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் கருதி இன்றும் வணங்கு கின்றார்கள். ஆனால் அப்பெரியார் சொன்னவைகளை கவனித்துப் பார்க்கும்படி யாராவது சொன்னால் மாத்திரம் அவர்கள் மீது மிருகப் பாய்ச்சல் பாய் கின்றார்கள். இது ஒன்றே போதாதா நம்மக்களின் அறிவின் திரத்தை அளந்து பார்ப்பதற்கு என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரியான பாமர உணர்ச்சியும் பயங்காளித்தனமும் வைத்ததைச் சுமக்கும் மிருக சுபாவமும் இன்னாட்டு மக்களின் உயர்குணங்களாகப் பாவிக்கப் பட்டு வருவதாலேயே உலகத்தில் இந்திய நாடு மாத்திரம் வெகுகாலமாகவே அடிமை நாடாகவே, கூலி நாடாகவே சுயமரியாதையும் அறிவும் ஞானமும் அற்ற நாடாகவே இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் இன்னது தான் என்பதை கண்டுபிடிக்க நம்மவர்களுக்கு இன்னமும் அறிவு ஏற்படவில்லை. ஒரு நாய் வளர்த்துகின்றவன் தன் நாயை மற்றவன் மேல் ஏவிவிடுவது போல் நம்மை யார் சூட்சி செய்து இக்கெதிக்கு ஆளாக்கினார்களோ அவர்களே தான் அச்சூக்ஷியை ஒழிக்க வரும் ஆட்கள் மேல் நம்மை உசுபடுத்தி விடுவதால் உண்மையை உணர கவலை கொள்ளாமல் அவர்கள் கை காட்டின பக்கம் திரும்பிக் கொண்டு கத்துகின்றோம்.

நமது நாட்டு அடிமைத்தனம் எத்தனை காலமாய் இருந்து வருகின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். தர்மராஜ்யம், இராமராஜ்யம், சத்தியகீர்த்தி அரிச்சந்திரராஜ்யம் முதலிய அவதார ராஜ்யம் முதல் தெய்வீகத்தன்மை பொருந்திய மூவேந்தர் முதலிய சரித்திர ராஜ்யம் வரை இந்திய மக்கள் நிலைமையை சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டு பாருங்கள். அந்த நிலைக்கு இந்த நிலை மேலானதா? கீழானதா? என்று சுயமரியாதைக் கண்ணாடி மூலம் பாருங்கள். ஞானக் கண்ணாடி மூலம் பாருங்கள். சுதந்திரம், சமத்துவம் என்கின்றதான கண்ணாடிகள் மூலம் பாருங்கள்.

நீங்கள் எந்த பார்ப்பனர்களையும் கேட்டுப்பாருங்கள். தங்கள் நிலை “இன்றையைவிட அன்று அதாவது அவதார ஆட்சியிலும் மூவேந்தர் ஆட்சியிலும் மேலாயிருந்தது. ஆனால் இன்று கீழாயிருக்கின்றது” என்று தான் சொல்லுகின்றார்கள். ஆனால் அவர்கள் தவிர மற்ற மக்களாகிய “சூத்திரர்கள்” பெண்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியார்கள் என்று இழிவுபடுத்தி இருக்கிற நம்மில் 100க்கு 99 ஜனங்களை கேட்டு பாருங்கள், நெஞ்சில் கையை வைத்து நினைத்துப் பாருங்கள். அன்றுக்கு இன்று எவ்வளவு மேலான நிலையில் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு துறையாய் ஆராயுங்கள். உண்மை காண்பீர்கள். இதோடு நின்று விடாமல் இந்த நிலை யோடு திருப்தி அடையாமல் இன்னும் மேலே போக வேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு மேலே போகவேண்டுமானாலும் நானும் கூடவே வர பாடுபடுகின்றேன். ஆனால் பழைய நிலையேமேல் அதற்கே போக வேண்டும் என்று சொன்னால் அதை சகிக்க முடியவில்லை.அரை நிமிஷம் கூட அதை ஆதரிக்க முடியாது. உலகம் அறிவு பொருள் முதலிய அகத் திலும் புறத்திலும் சமத்துவத்தையும் பூரண சுயேச்சையையும் அடைய தீர்மானித்து விட்டது. இந்தியா மாத்திரம் மூடர்களாய், அடிமைகளாய் இழி மக்களாய் இருக்கும் அவதார ராஜியத்திற்கு போக வேண்டுமென்றால் இந்நாடு அடியோடு அழிந்து போவதே மேலான காரியமல்லவா?

நண்பர்களே உலகத்தை ஒரு கண்ணில் பார்த்து இந்தியாவை ஒரு கண்ணில் பார்த்து, இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணருங்கள். நம் கல்வி, செல்வம், வாழ்வு, விவசாயம்,வீரம், மானம், அறிவு ஆராய்ச்சி, முற்போக்கு ஆகியவைகள் எல்லாம் எப்படி இருந்து இருக்கிறது. மற்ற நாடுகள் எப்படி இருந்தது இருக்கின்றது என்பவைகளை சிந்தித்துப் பாருங் கள் என்று சொல்லி ஒவ்வொன்றிலும் வெளி தேசத்தையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பார்க்கும்படி விளக்கிக் காண்பித்து விட்டு உட்கார்ந்தார்.

“உபசாரப் பத்திரம்”

இந்த சமயத்தில் ஒரு வாலிபர் கடலூர் வாலிபர்கள் சார்பாக திரு. இராமசாமி பெரியாருக்கு உபசாரப்பத்திரம் படிக்க வேண்டும் என்று சொல்லி அதன் பிரதி ஒன்றை தலைவரிடம் கொடுத்தார். தலைவர் அதை வாங்கி தானே வாசித்துப் பார்த்தார். அவ்வுபசாரப்பத்திரத்தில் முதல் இரண்டு மூன்று வாக்கியங்களில் திரு. இராமசாமியை பாராட்டும் பாவனையாகவும் பின் இரண்டு வாக்கியத்தில் கதரைப் பற்றிய அபிப்பிராயத்தை விளக்க வேண்டு மென்றும், தாலிகட்டுவது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்றும் சொல்லும் தங்கள் மனைவியார் ஏன் தாலிகட்டி இருக்கின்றார்கள் என்றும் கேள்வி கேட்கும் பாவனையாக எழுதப்பட்டிருந்தது. தலைவர் எழுந்து கதரைப் பற்றிய விபரம் தெரிய வேண்டுமானால் தானே சொல்லுவதாகச் சொல்லி அதைப்பற்றி புள்ளிவிபரங்களுடன் 15 நிமிஷம் பேசினார். (அது ஒரு தனி வியாசமாக சீக்கிரத்தில் பிரசுரிக்கப்படும்) அதன் பேரில் கடலூர் திரு தேவநாயக அய்யா அவர்கள் பேச விரும்பியதின் மீது சில விஷயங்கள் பேச அனுமதிக்கப்பட்டார். அவர் கதரைப்பற்றி பேசினார்.

பின்னர் திரு.இராமசாமி எழுந்து பதில் சொல்லும் முறையில் தாலி கட்டிக்கொண்டிருப்பது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்று அனேக பெண்கள் இன்னமும் உணரவில்லையென்றும் உணர்ந்த பல பெண்களும் தாங்கள் அடிமைகளாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார் கள் என்றும் சிலர் சமூகத்துரைக்கு பயந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எந்த எண்ணத்தின் மீது தனது மனைவியார் கட்டிக் கொண்டிருந் தாலும் அவர்களது இஷ்டத்திற்கு விரோதமாய் பலவந்தம் செய்யத் தான் துணியவில்லை என்றும் சொன்னார். ஒருவர் மத்தியில் எழுந்து “உங்கள் குடும்ப மனைவியையே நீங்கள் அடக்கி ஆள முடியவில்லையானால் மற்றவர்களை எப்படி திருத்தமுடியும்” என்றார். இதற்கு திரு.இராமசாமி சமாதானம் சொல்லுகையில் மனைவியை அடக்கி ஆளவில்லை என்று சொன்ன நண்பர் மனைவி என்றால் அடிமை என்கின்ற நமது பழைய கொள்கையை மனதில் வைத்துக்கொண்டு பேசுகின்றாறேயொழிய அவர்கள் இஷ்டப்படி நடக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் சிறிதும் கவனியா மல் சொல்லுகிறார் என்றே கருதுகின்றேன் என்றும், பெண்களுக்கு கல்வியறிவும் சுதந்திர உணர்ச்சியும் சுயமரியாதையும் ஏற்பட்டால் தானாகவே தாலியை அறுத்தெரிந்து விடுவார்கள் என்றும் சுதந்திர உணர்ச்சி உள்ள பெண்கள் இனி தாலிகட்ட கழுத்தைக் கொடுக்கமாட்டார்கள் என்றும் இவ்விஷயங்களில் மற்ற வெளிஜனங்கள் என்பவர்களுக்கும் குடும்பத்தார் என்பவர்களுக்கும் பிரமாத வித்தியாசம் இல்லையென்றும் சொல்லிவிட்டு கடைசியாக இந்தக்கூட்டத்தில் அரசியல் சம்மந்தமான பேச்சை தான் வேண்டுமென்றே பேசாமல் விட்டுவிட்டதாகவும் ஏனெனில் இதுவே முதல் கூட்டமானதால் அதிகமான விஷயங்களை ஜீரணம் செய்விக்க முடியா தென்று கருதியே அப்படிச் செய்ததாகவும் ஆனபோதிலும் காங்கிரசுக்காரர் கள் என்கின்ற முறையில் சிலர் அவர்களாகவே நம்மை பேசும்படி செய்ததால் தான் அதற்கு நன்றி செலுத்துவதாகவும் கூறி கதரைப்பற்றியும் அதற்கும் அரசியலிற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியும் அது எவ்வளவு தூரம் தொழில் முறையிலோ, பொருளாதாரத் துறையிலோ உதவி இருக்கின்றதென்றும் அது சமதர்ம கொள்கைக்கும் மனிதனின் இயற்கையான ஆசாபாசங்களுக்கும் முன்னேற்றத்திற்கும் எவ்வளவு இடையூரென்றும் எடுத்துக் காட்டியதுடன் திரு.காந்தியே மில்லை ஆதரிக்க வந்து விட்டதுடன் புதிய இயந்திரம் கண்டுபிடிக்க ஆசைப்பட்டு கண்டுபிடிப்பவருக்கு ரூ. 100000 சன்மானம் கொடுக்க முன்வந்து விட்டார் என்றும், கதர் தற்கால சாந்திதான் என்பதாக திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லி யிருக்கும் அபிப்பிராயங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு கதரை ஒரு தர்ம கைங்கரியமாக வைத்துக் கொண்டாலும்கூட ஏழைகள் பிழைக்க வென்று மக்களிடம் கதரின் பேரால் 4 அணா வசூலித்து அவர்களுக்கு ஒரு அணா போய்ச் சேரும்படி யிருப்பது தர்ம கைங்கரியம் ஆகாதென்றும் எப்படியெனில் ஒரு நாளைக்கு கால் ராத்தல் நூல் நூற்று ஒரு அணா கூலி அல்லது ஒண்ணே கால் அணா கூலி பெருகின்றார்கள் என்றால் அந்த கால் ராத்தல் நூலால் நெய்யப்பட்ட கதரை வாங்க வேண்டியவர் 6 அணா கொடுக்கிறார். இந்த நீளமுள்ள துணியை, மில் துணியாக வாங்கினால் 0-2-6 அணாவுக்கு வாங்கலாம். ஆகவே ஒரு அணா தர்மம் செய்ய மற்றவனிடம் 3-6 தட்டிப் பரிக்க வேண்டி இருக்கின்றது என்று புள்ளி விபரத்துடன் எடுத்துக்காட்டினார். பிறகு திரு. தேவனாயகய்யா பேச அனுமதிக்கப்பட்டார்.

அது சமயம் அவர் கதர் விலை இப்போது அதிகமாயிருந்தாலும் நாளாவட்டத்தில் குறைந்து விடும் என்றும் மூன்று நான்கு வருஷத்திற்கு முன் கதர் கஜம் 0-10-6 அணாவாக இருந்தது இப்போது 0-9-6 அணாவாக இருக்கின்றதென்றும் சமதர்மம் ஆரம்பித்தால் நமக்குள் கலகம் வரும், போலிசார் கவர்மெண்டார் அனுகூலமாய் இருக்கமாட்டார் என்றும் சொன் னார். இதற்கு திரு.இராமசாமி எழுந்து கதர் விலை கெஜத்திற்கு ஒரு அணா குறைந்ததற்கு கதர் முன்னேற்றமடைந்ததால் அல்லவென்றும் பஞ்சு பாரம் 350 ரூ. இருக்கும்போது கெஜம் 0-10-6 அணாவுக்கு விற்றது இப்போது பஞ்சுபாரம் 116 ரூ. க்கு வந்த பிரகு அதாவது மூன்றில் ஒரு பங்குக்கு பஞ்சு விலை வந்தபோது கதர் விலையில் 10-ல் ஒரு பங்கு குறைத்து ஒரு அணா மாத்திரம் குறைக்கப்பட்டிருக்கின்றது என்று கதரின் குணத்தில் பார்த்தாலும் கூட தான் கதர் இலாக்காவில் இருக்கும்போது 50 இஞ்சு 10கெஜம் மூன்றறையே அரைக்கால் மூன்றேமுக்கால் றாத்தல் இடைதானிருந்தது. இப்போது 4 ராத்தல் இடை ஆகிவிட்டது என்றும் எடுத்துச் சொல்லிலிட்டு திரு தேவநாயக அய்யா அவர்களை இனியும் ஏதாவது கேட்கின்றீர்களா என்று கேட்டார். அவர் இவ்வளவுதான் என்று சொன்னார். பிறகு இனியும் யாருக்காவது தான் பேசியதில் ஏதாவது சந்தேகம் உண்டா என்றார். மற்றொரு வாலிபர் ஒரு சந்தேகம் என்று சொல்லி வருணாச்சிரம தர்மத்தின் அவசியத்தையும் அர்ச்சகர் புரோகிதர்கள் அவசியத்தையும் பற்றி பேசினார். தலைவர் தாங்கள் சந்தேகங்களையோ கேழ்விகளையோ சொல்லுங்கள் என்றார். உடனே அவர் 1. கடவுள் உண்டா இல்லையா? 2. கடவுளை அடை யும் மார்க்கம்  என்ன? 3. மனிதன் கடமை என்ன என்று கேட்டார்.

இதற்கு திரு.இராமசாமி கடவுள் என்பதை தான் ஒரு அர்த்தமற்ற வார்த்தை என்று கருதி யிருப்பதாகவும் ஆனால் கடவுளைப் பற்றி பேசு பவர்கள் அதற்கு தனித்தனி அர்த்தம் கற்பித்து கொள்ளுகிறார்கள் என்றும் கேழ்வி கேட்பவர் கடவுளுக்கு இன்ன விதமான அர்த்தம் கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தால் அது உண்டு இல்லை என்றும் எப்படி அடைவதென்றும் ஒரு வார்த்தையில் முடித்து விடலாம் என்று சொன்னார். இதற்கு கேள்வி கேட்டவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

பிறகு மனிதனுடைய கடமை என்பது தனியாக ஒன்று இல்லை என்றும் அவரவர் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் சரி என்று பட்ட விஷயங்களின்படி அவரவர் நடந்து கொள்ளுவதைதான் கடமையாக கொள்ள வேண்டுமென்று சொன்னார்.

குறிப்பு : 13.09.1931 அன்று கடலூர் பழைய டவுனில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 20.09.1931

 

You may also like...