ராஜி

 

திருவாளர்கள் ஜயக்கர் அவர்களும், சாப்ரூ அவர்களும் திரு. காந்திக் கும் கவர்ன்மெண்டுக்கும் ராஜி ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்கள்.

இம் முயற்சியின் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய பத்திரிகைக் காரர்களும், பொதுஜனங்களும் வெகு மகிழ்ச்சியுடன் இம்முயற்சியைப் போற்றி ஏதாவது ஒரு வழியில் ராஜி ஏற்பட்டால் போதுமென்று ஆசைப்படு கின்றார்கள். இதிலிருந்து சட்டமறுப்பும், சத்தியாக்கிரகமும் மக்களுக்கு சலிப்புத் தோன்றிவிட்டது என்பது வெளிப்படை. திரு. காந்தி எவ்வளவு விட்டுக் கொடுத்தாகிலும் ராஜி செய்து கொள்ள வேண்டு மென்பதே தேசீய பத்திரிகைகளின் கவலையாகி விட்டது.

சத்தியாக்கிரகத்திற்கு இன்னும் சில நாள்களுக்குள்ளாக பலமான எதிர்ப்புகள் கிளம்பிவிடும் என்பதை “தேசீய வாதிகள்” உணரத் தலைப் பட்டு விட்டார்கள். அனேக வியாபாரிகள் கெட்டுப்போய் விட்டார்கள். கஷ்டத்தில் சிக்கி விழித்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் இனியும் நாலு இரண்டு வருஷங்கள் தாட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் சட்ட மறுப்பின் மீது பழிபோட்டு சீக்கிரத்தில் தீபாவளி ஆக இதை ஒரு சாக்காகக் கொண்டு விட்டார்கள். இதனால் பல மக்களுக்கு சத்தியாக்கிரகத்தின் மீது ஆத்திரம் உண்டாக இடம் ஏற்பட்டு விட்டது.

நிற்க, திருவாளர்கள் ஜயக்கரும் சாப்ரூவும் ராஜி முயற்சிக்கு வைசி ராய்க்கு எழுதிய கடிதத்தில் தங்களுக்கு திரு. காந்தியின் நடவடிக்கையில் அனுதாபம் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார்கள்.

திரு. வைசிராய் பதில் கடிதத்திலும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியத்தை இந்தியர்கள் வசம் ஒப்படைக்க முடியாது என்பதாகச் சொல்லி, இந்தியர்கள் பூரண சுயாக்ஷிக்கு அருகர் அல்ல வென்றும், அவர்க ளது யோக்கியதைக்கு மேல் கொடுக்க முடியாதென்றும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டார். இந்த நிலையில் திரு. காந்தி ராஜிப் பேச்சுக்கு இடம் கொடுப்பது எவ்வளவு தன் மதிப்பு உள்ளது? என்பதை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தவிரவும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியங்கள் எவை என்பதைப் பற்றிக் கூட இப்பொழுது கூற முடியா தென்றும், அது லண்டன் மகாநாட்டில்தான் முடிவு செய்யப்படும் என்றும் வைசிராய் பிரபு சொல்லியிருப்பதிலிருந்து வெகு காலமாகவே சொல்லிக் கொண்டு வருவதைத் தவிர லார்ட் இர்வின் கடுகளவாவது இரங்கி வந்தாரா? என்பது அறிவாளிகள் யோசிக்கத்தக்கதாகும். எனவே இந்த யோக்யதை உள்ள ராஜியில் மக்களும், தலைவர்களும் பத்திரிகைக் காரர்களும் காட்டும் உற்சாகத்திலிருந்து சத்தியாக்கிரகத்தின் குற்றத்தையும், வெற்றியற்ற தன்மை யையும் இப்பொழுதாவது உணர்ந்துவிட்டார்கள் என்றே தெரிய வருகிறது. முன்னைய ஒத்துழையாமையை யாருடைய வேண்டுகோளும் விருப்ப மும் இல்லாமலே திடீரென்று நிறுத்தினார். இப்போது ஏதாவது ஒரு சாக்கைக் கொண்டு நிறுத்த வேண்டியதாயிருக்கின்றது. “எல்லாம் கடவுள் செயல்.”

குடி அரசு – துணைத் தலையங்கம் – 27.07.1930

 

 

 

You may also like...

Leave a Reply