சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை                                                                                                                         – சித்திரபுத்திரன்

 

சுயமரியாதைக்காரன்:-      வாருங்கள் ஐயா புராணமரியாதைக் காரரே! வெகுநாளாய்க்காணோமே,        எங்கு சென்றிருந்தீர்கள்?

புராண மரியாதைக்காரன்:- எனது வயிற்றுக் கொடுமை தான் உமக்குத் தெரியுமே! புராணக் காலnக்ஷபம் செய்யப் போயிருந்தேன்.

சு-ம:-          அப்படியா? உங்கள் புராணக் காலnக்ஷபம் சரியாய் நடக் கின்றதா? ஜனங்கள் முன்போல் புராணங்களை மரியாதை செய்து கேட்கின் றார்களா?

பு-ம:-அதை ஏன் கேட்கின்றீர்கள்? வரவர புராணம் என்றாலே மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நம்மை யாரும் லட்சியம் செய்வதே கிடையாது.

சு-ம:-ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? புராணங்கள் எல்லாம் பகவான்கள், ரிஷிகள், பரமசிவன், மகாவிஷ்ணு முதலியவர் வாக்கு என்ப தாக இருக்கும்போது புராணங்களுக்கு மரியாதைப் போய் விட்டது என்பது அதிசயமாகவல்லவா இருக்கிறது?

பு-ம:- என்னைப் பரிகாசம் செய்கின்றீர்களா? என்ன? நீங்கள் போடு கின்றபோடுதான் நாட்டையே பாழாக்கி விட்டதே. நம்மைக் கண்டால் பையன்கள் கல்லெடுத்துப்போடுகின்றார்கள்? “ரிஷிகள் சொன்னார், பக வான் சொன்னார்” என்றால் “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட் கின்றார்கள்.

சு-ம:- இப்படியிருக்க சற்று முன் நீங்கள் புராணக் காலnக்ஷபம் செய்யப்போயிருந்தேன்  என்று சொன்னீர்களே?

பு-ம:-அதுவா கேட்கின்றீர்கள். நான் இப்போது காங்கிரசில் சேர்ந்து அதிலிருந்து கொண்டு காங்கிரஸ் மேடைகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சம் புராணப் பிரசங்கம் செய்து வருகின்றேன். இந்த சமயத்தில் காங்கிரசில்லாவிட்டால் புராணங்கள் நெருப்பில் போடப்பட்டிருக்குமே?

சு-ம:- காங்கிரசில் எப்படி ஐயா புராணப் பிரசங்கம் செய்ய முடியும்? அதில் அரசியல் பிரஸ்தாபம்தானே செய்ய முடியும்?

பு-ம:- அந்த இரகசியம் உங்களுக்குத் தெரியாது போல் இருக்கின் றது.  இனி அதிலும் கைவைத்து விடாதீர்கள்.

சு-ம:- தெரியாதே.

பு-ம:- முதலில் மேடையில் ஏறினவுடன் “மகாத்மா காந்திக்கு ஜே, வந்தேமாதரம்!!” “ஜெயஜெயபாரத”என்று சொல்லும்போதே “நமப் பார்வதிபதஹே” என்றும் “ஹரஹர  சங்கரமகாதேவ!வெங்கிட்ரமண கோவிந்தா!!கோவிந்தா!!!”என்றும் சொல்லுவேன்.  அங்குள்ள எல்லா உறுப்படிகளும் கூடவே கத்தும். பிறகு இரண்டொரு தேவாரம்பாடுவேன். பிறகு மெள்ள “மகாத்மா காந்திவாள் இருக்காளே, அவாளை மனிதப்பிறப்பு என்று எண்ணி விடாதீர்கள்! அவர் ஒரு அவதாரபுருஷராக்கும்!!! மகா விஷ்ணுவே அவதாரம் செய்திருக்கிறாராக்கும்!!!அதாவது பகவான் ஸ்ரீமத்                பகவத்கீதையில் திருவாய் மலர்ந்தருளி இருக்கின்றபடி “யுகா யுகங்கள் தோறும்!!!” என்பதாக ஆரம்பித்துவிட்டு பாரதம், ராமாயணம், பாகவதம் முதல் பெரிய புராணம், சின்னபுராணம், மச்சபுராணம், தவளை புராணம், கெருட புராணம், பெருச்சாளி புராணம் வரையில் சும்மா அளந்து கொட்டிவிடுவேன். முண்டங்கள் வாயைத்திறந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றது நின்றபடியே இரவு 10 மணிவரையில் கேட்டுக் கொண்டிருக்கும். உடனே மேல் வேஷ்டியை விரித்துக் கொண்டு கதர் குல் லாய் போட்ட ஒரு பையனை அந்தக்கூட்டத்தில் ஒரு சுத்து சுத்திவர சொன்னால் 10 ரூபாய்க்கு குறையாது வசூலாகிவிடும். மற்றும் எத்தனையோ உறுப்படிகள், சற்று ஸ்குரு லூஸ் ஆனதுகள், பவுண்டன் பேனா, மோதிரம், பேனாகத்தி, கை சங்கிலி, கெடியாரம் முதலியவைகளையும் கழட்டி போட்டுவிடும் பிறகு என்ன குறை?

சு-ம:- பவுண்டன் பேனா கடிகாரமெல்லாம் ஏன் போடுவார்கள்?

பு-ம:- நான் அந்த மாதிரி சொல்லுவேன்.

சு.ம:- எந்த மாதிரி?

பு-ம:- “சத் விஷயம் கேட்டுவிட்டு சும்மா போகாதீர்கள். மடியில் உள்ளதைப் போடுங்கள். அணில் பாலம் கட்ட ராமபிரானுக்கு சிறுமணல் மேலே பூசிக் கொண்டு வந்து உதரி உதவி செய்ததது போல் அவதார புருஷராகிய மகாத்மா காந்தியின்  இப்புனிதமான கைங்கரியத்திற்கு தங்களால் கூடியதை உதவுங்கள், அந்தப்படி உதவாவிடில் நீங்கள் பாவி யாகிவிடுவீர்கள். உங்களுடைய வஞ்சனையை பகவான் உங்கள் மடி யிலிருந்தே அறிந்து கொண்டிருக்கிறார்.” என்று சொல்லுவேன். சொன்ன வுடனே முண்டங்கள் மடியைப்பார்த்தும் ஜேபியைப் பார்த்தும் உள்ளதை எடுத்துப்போட்டுவிட்டு ஒரு கும்பிடு கும்பிட்டு விட்டுப்போய்விடுவார்கள். காசும் பணமும் இல்லாதவர்கள் பேனா,கத்தி, மோதிரம், சங்கிலி முதலி யவைகளைப் போடுவார்கள். பிறகு அதையே ஏலம் போட்டால் அது வேறே ஒன்றுக்கு     இரண்டாய் பணம் வரும். இவ்வளவு தான் நமது புராணக்காலnக்ஷபம். ஏதோ ஒரு வழியில் ஜீவனம் நடக்கின்றது. மகாராஜன் காந்தி தோன்றினான் எங்களையெல்லாம் காப்பாற்ற.

சு-ம:- இப்படிச் செய்தால் திரு.காந்தி முதலிய யாவரும் இதற்கெல் லாம் ஒன்றும் கணக்குகேட்க மாட்டார்களா?

பு-ம:- அந்த வழக்கம் தான் இதில் கிடையாது. அதல்லவா காங்கிரசில் இருக்கும் ஒரு பெருந்தன்மை.

சு-ம:- அதென்ன அப்படி? ஏன் கணக்குக் கேட்கமாட்டார்கள்?

பு-ம:- கேட்டால் தெரியும் சங்கதி? கேட்க ஆரம்பித்தால் திரு.காந்தி முதல் அவர்கள் அப்பன் வரை பதில் சொல்லியாக வேண்டும். அது மாத்திர மல்ல. இதே மாதிரி கணக்குக் கேட்டு “அவன் பணம் எடுத்துக்கொண்டான் இவன் பணம் எடுத்துக் கொண்டான்” என்று கணக்கு வெளி வந்துவிட்டால் பிறகு எவனுக்கும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள். அப்புறம் காங்கி ரசுக்கு ஆளே சேராது. ஆதலால் திருட்டு வசூலைக் கண்டு பிடித்தாலும் வெளியில் சொல்லமாட்டார்கள். அந்த ஒரு பெருந்தன்மை காங்கிரசுக்குத் தான் உண்டு. நீங்களே பாருங்களே எத்தனையோ பேர் திருப்பதி உண்டியல் மாதிரி வசூல் நடத்துகிறார்கள் யாராவது பேசுரார்களா?பாருங்கள்.

சு-ம:- இந்த முறையில் ஒருவாறு உங்களுக்கும் மற்றும் சில ஆட் களுக்கும் வாழ்க்கை நடந்து வருகின்றது என்பதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால் புராணங்களின் யோக்கியதைகளைப் பற்றி உண்மை யிலேயே உங்கள் அபிப்பிராயம் என்ன?

பு-ம:- அதென்ன அப்படி கேட்கின்றீர்கள்? அதெல்லாம் ஒரு மாதிரியாய்த்தான் இருக்கும். அதை வெளியில் சொல்ல முடியுமா? ரிஷிமூலம் நதி மூலம் கேட்கலாமா? பொதுவாகவே புராணங்களை யாராவது குற்றம் சொன்னால் எனக்குக் கோபம் தான் வரும்.

சு-ம:- சரி, சரி கோபித்துக் கொள்ளாதீர்கள். அதை நான் குற்றம் சொல்ல வரவில்லை. அதைப்பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால் கேட்க லாமா?

பு-ம:- பேஷாய்க் கேளுங்கள்.

சு-ம:- அப்படியானால் ஒரு சந்தேகம். ஆனால் நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது.

பு-ம:- கோபம் என்ன? சந்தேகத்திற்குக் கோபிக்கலாமா?

சு-ம:- உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடியின் அடியில் ஒரு குழந்தை அப்பொழுதுதான் பிறந்ததாகக் காணப்படக் கூடியது அழுது கொண்டு கிடக்கக் கண்டீர்களேயானால் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பு-ம:- என்ன நினைப்பது? யாரோ பெற்றுத் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து போட்டு விட்டு போய் விட்டார்கள் என்றுதான் நினைப்பேன்.

சு-ம:- யார்? எப்படிப்பட்டவர்கள் பெற்றார்கள் என்று நினைப் பீர்களா?

பு-ம:- யாரோ “ திருட்டு கர்ப்பம் ” அதாவது விதவையோ, கல்யாணமாகாத பெண்ணோ புருஷன் ஊரில் இல்லாமல் தேசாந்திரம் போனவருடைய மனைவியோ,சோரத்தனமாய் கர்ப்பம் ஆகி, அதைப் பெற்று நமது தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டாள் என்று தான் நினைப்பேன்.

சு-ம:- சரி. இதுதான் நல்ல பகுத்தறிவு என்பது.

பு-ம:- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? இந்தப்படி அல்லாமல் பின்னை என்னமாய் நினைக்க முடியும்? மல்லிகைச் செடியா பிள்ளை பெறும்? அல்லது ஆகாயத்தில் இருந்து வந்து விழுமோ? ஒரு மூடன் கூட இதற்கு மாறாக சொல்ல முடியாது.

சு-ம:- தாங்கள் சொல்லுவது நிரம்பவும் சரி. வேறு விசேஷம் ஒன்றும் இல்லை.               மல்லிகைச் செடியின் கீழ் இருந்தால்தான் அப்படிச் சொன்னீர்கள். ஒரு சமயம் துளசிச் செடியின் கீழ் கிடந்தாலோ?

சு-ம:- எங்கும் அப்படித்தானே கிடக்கும். துளசிச்செடிக்கு மாத்திரம் என்ன கொம்பா முளைத்திருக்கும்? அல்லது அது கர்ப்பமாகி பிள்ளை பிறக்குமோ? இதென்ன சிறுபிள்ளைகள் மாதிரி கேட்கின்றீர்களே?

சு-ம:- இல்லை, ஏதோ ஒரு புராணத்தில் துளசிச்செடி அடியில் ஒரு குழந்தை கிடந்தது. அதைக்கடவுள் அவதாரமாய்க் கருதினார்கள். பிறகு அது கடவுளே ஆகிவிட்டது. இப்போதும் அது கடவுளாயிருக்கின்றது என்று பார்த்ததாக எனக்கு ஞாபகம்.  ஆதலால் அந்த புராணங்களை யெல் லாம் தாங்கள் நம்புவதுண்டா? அல்லது  நம்பும்படி காலnக்ஷபம் செய்வ துண்டா? என்று தெரியலாம் என்பதாக ஆசைப்பட்டுத்தான் தங்களைக் கேட்டேன்.

பு-ம:- நீர் சு.ம. என்பது தெரிந்தும் உம்மிடம் நான் பேசியது சுத்தத் தப்பு. புராணத்தை சந்தேகப்படுகின்ற-தர்க்கம் செய்கின்ற-நாஸ்தீகர்களு டைய முகாலோபனமே செய்யக்கூடாது என்ற பெரியவாள் இதற்காகத் தானே சொல்லி இருக்கின்றார்கள். சு.ம.என்றாலே நாத்திகம் தானே. உம்மோடு பேசிய குற்றத்திற்காக நான் ஒரு முட்டாள் ஆக வேண்டியதும் நியாயம் தானே?

சு-ம:- இப்படிக் கோபித்துக் கொள்ளலாமா? நீங்கள் சொன்னதை உங்கள் வாயைக் கொண்டு, சொன்னதைக் கொண்டு உங்களை என்ன சொல்லுகின்றீர்கள் என்று தான் கேட்டேனே ஒழிய நான் ஏதாவது குற்றமான வார்த்தை சொன்னேனா? அல்லது என் அபிப்பிராயமாக ஏதாவது சொன் னேனா? ஏன் இவ்வளவு கோபம்?

பு-ம:- கோபம் ஒன்றும் இல்லை எனக்கு வேலையிருக்கின்றது. கொஞ்சம் அவசரம். நான் போய் விட்டு வருகின்றேன் (என்று சொல்லிக் கொண்டே நழுவிவிட்டார்.)

குடி அரசு – உரையாடல் – 06.09.1931

 

 

You may also like...

Leave a Reply