மாளவியாஜீ

சேர்மாதேவி குருகுல சம்பந்தமாய் தூத்துக்குடி டி.ஆர். மகாதேவய் யர் என்கின்ற பார்ப்பனரை 100க்கு 90 பார்ப்பனரல்லாதார் நமது நாட்டில் குற்றம் சொன்னார்கள்-சொல்லுகின்றார்கள். இதனாலேயே அவரை அரசியல் உலகத்தை விட்டு ஓட்டியும் விட்டார்கள். அவரும் தனக்கும் அரசியலுக்கும் தகுதியில்லை என்று கருதி வாழ்க்கைக்கு வேறு வழியையும் தேடிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? “பார்ப்பனன் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதவன் பார்க்கக் கூடாது. பார்ப்பனனும் மற்றவனும் சமபந்தியாய் உட்காரக்கூடாது” என்று அவர் சொன்னதேயாகும். ஆனால் பண்டிதர் மதன்மோகன் மாளவியாஜீ அவர்கள் எந்த விதத்தில் திரு.மகா தேவய்யரைவிட  மேலானவர்? அரசியல் உலகத்திலிருக்கத் தகுந்தவர்? என்று கேட்கின்றோம். மகாதேவய்யராவது தன்னைப் பொறுத்தவரை நம் எதிரில் சாப்பிட்டார் – நம்முடன் உட்கார்ந்து சாப்பிட்டுமிருக்கிறார். மாளவியாஜீ  அவர்களோ, “கீழ்ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது” என்றும், “அவர்களுக்கு வேறு இடம் வேறு கோவில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும்” என்றும் சொல்லுகிறார்.

தனது சம்மந்தி பார்ப்பனரல்லாதவனிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு  அவரை ஜாதியைவிட்டுத் தள்ளினவர். பார்ப்பனரல்லாதார் இடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கட்டிய, ஏற்படுத்திய காசி இந்து யூனிவர்சிட்டி பள்ளிக்கூடத்தில் தீண்டாதவர்கள் உள்ளே வரக்கூடாதென்றும், பார்ப்பனரும், அல்லாதாரும் சம்பந்தியாய் இருக்கக்கூடாதென்றும், அவருக்கு வேறுபடிப்பு, இவருக்கு வேறுபடிப்பு என்றும், ஏற்பாடு செய்துவைத்து அதற்கு தானே எஜமானனாய் இருந்து நடத்தியும் வருகின்றார். இப்படிப்பட்ட ஒருவர் இன்றைய தினம் இந்திய நாட்டு மக்களுக்குத் தலைவர் என்றும், பிரதிநிதி என்றும், சொல்லுவதானால் இந்திய மக்களுக்கு சுயமரியாதையோ, ஞானமோ இருக்கின்றதாகக் கொள்ளமுடியுமா? என்றுகேட்கின்றோம். இன்றைய தினமும் பண்டித மாளவியாஜீ ஒரு பார்ப்பனரல்லாதான் முன் தாகத்திற்குத் தண்ணீர் சாப்பிட்டால் பாவம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றவர். சுய ராஜியம் வாங்கப்போகும்போதுகூட இந்தியாவிலிருந்து பார்ப்பனர் களாலேயே பர்த்தி செய்த ஏனங்களில் தண்ணீர்கொண்டு போகின்றார். தனி சமயலறையில் சமைத்துக்கொண்டு போகிறார். இது யாவருமே அறிந்த தாகும். ஆகவே இவரால் இந்தியாவுக்கு எவ்விதம் சமதர்மமுள்ள சுயராஜி யம் கிடைக்கும் என்பதை ‘தேசபக்தர்கள்’ கவனிக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம். இதைச்சொன்னால் நம்மை கெட்டவன் என்றும், பாவி என்றும் சொல்லுகின்றார்களேயொழிய அவர் அப்படிச் செய்வது நியாயமா? அல்லது சுயமரியாதைக்கேற்றதா? என்று யாரும் சிந்திப்பதில்லை யென்றால் பிறகு நாம் என்னதான் செய்வது? இவர்களைப்பற்றி நாம் என்ன தான் நினைப்பது? நமது மக்களை எப்படித்தான் நினைப்பது? என்பது நமக்கு விளங்கவில்லை. சுயமரியாதைக்காக பாடுபடுவதாகச் சொல்லுகின்ற வர்கள் இதையெல்லாம் எப்படி மறைத்து வைப்பது என்பதும் நமக்கு விளங்கவில்லை.

பண்டித மாளவியாஜீ அவர்கள் நம்மெதிரில் சாப்பிடுவதால் நமக்குப் பசி அடங்கிவிடும் என்பதாகக் கருதி நாம் அதை இங்கு குறிப்பிட வில்லை. ஆனால் அவர் அப்படி மறைவாய் சாப்பிடும் போது நம்மை என்னமாய்க் கருதி அப்படிச் சாப்பிடுகின்றார் என்பது தான் கவனிக்கத் தக்கது என்று சொல்லுகின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 06.09.1931

 

You may also like...

Leave a Reply