காந்தியின் யாத்திரை                         போனாலென்ன?  போகாவிட்டாலென்ன?

உயர்திரு. காந்தியவர்கள் இங்கிலாந்து போகும் விஷயமாய் போகா மல் தப்பித்துக் கொள்ள முயற்சித்துச் சர்க்காரார் மீது எவ்வளவோ குற்றப் பத்திரிகை வாசித்துப் பார்த்தும் கடைசியாக இப்போது அந்தப் பிரச்சினை யானது ஒன்று, “போய்த் தீரவேண்டியது” அல்லது “தாம் குற்றவாளியாக வேண்டியது” என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டதால் போவதா? இல்லையா? என்பது ஒவ்வொரு வினாடியும் ஒரு பெரிய விடுகதையாகவே இருந்து வந்தது.

திரு. காந்தியவர்கள் சர்க்காரார் மீது ஒரு வண்டி குற்றங்கள் சுமத்தி நீண்டதொரு குற்றப் பத்திரிகை படித்தார். ஆனால் சர்.சி.பி.இராமசாமி அய்யரை சட்ட மந்திரியாகக் கொண்ட சர்க்காரார் அவ்வளவுக்கும் ஒரே அடியில் பதில் சொல்லி குற்றப்பத்திரிகை ஏற்படுத்தினவர்களை நடுங்கச் செய்து விட்டார்கள். அதன் சுருக்கமாவது:-

“திரு.காந்தியவர்களே! நீங்கள் சாட்டிய குற்றப் பத்திரிகையை சர்க்காரார் ஒப்புக்கொள்ள முடியாது. காங்கிரஸ் ஒப்பந்தத்தை மீறி தப்பு செய்து வந்திருப்பவைகளை சர்க்காரார் அவ்வப்போது உங்களுக்கு எடுத்துக் காட்டி வந்திருக்கின்ற விபரம் தங்களுக்கே தெரிந்ததாகும்”.

“காங்கிரஸ் செய்த தப்பிதங்களுக்கு பதிலுக்கு பதில் செய்யாமல் சர்க்காரார் சாதாரண சட்டத்தின்படியே நடவடிக்கைகள் நடத்தி அவைகளை சமாளித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஒப்பந்தத்தில் காணப்படாத பல விஷயங்களில் கூட சர்க்காரார் உங்களுக்காக வேண்டியே இணங்கி வந்திருக்கின்றார்கள் என்பதும் உங்களுக்கே தெரியும்”.

“லண்டன் மகாநாட்டுக்கு போவதை மறுப்பதானது ஒப்பந்தத்தின் பிரதானமான கொள்கையை பாழ்படுத்துவதாகும் என்பதை உணருங்கள்”.

“ஒப்பந்தத்தில் சாதாரண சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்துக் கொள் வதை நிறுத்தி வைக்க நிபந்தனை கிடையாது என்பதையும் உணருங்கள். தனிப்பட்ட சம்பவங்களையும் நிலைமையையும் சமாளிக்க ஒப்பந்தப்படி சர்க்காராருக்கு எப்பொழுதும் உரிமையுண்டு”.  “இதுவரை சர்க்காரார் கூடு மானவரை பொருமையுடனேயே இருந்து வருகின்றார்கள். இனியும் இருக்க முயற்சிக்கின்றார்கள்”.

“ஆனால் அந்தப்படி இனியும் சர்க்காரார் பொருமையாயிருந்து வருவது என்பது காங்கிரசின் நடவடிக்கையைப் பொறுத்தது என்பதை உணருங்கள். எப்போதும் பொருமையாகவே இருப்போம் என்று சர்க்காரார் உறுதி கூற முடியாது”

என்பதாக பதில் தெரிவித்து விட்டார்கள்.

இதன் பிறகுதான் காங்கிரஸ்காரர்கள் வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத – தப்பித்துக்கொள்ள முடியாத நிபந்தனையாகப் பாவிக்க வேண்டியதாகி விட்டது.

திரு. காந்தியவர்கள் நிலைமை “போனாலும் கஷ்டம் போகா விட்டாலும் கஷ்டம்” என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டது. போகாமல் இருப்பதில் இரண்டு வித கஷ்டங்கள். போவதால் ஒருவித கஷ்டம். அதாவது போவதால் காங்கிரசின் குட்டு வெளியாவதுடன் போய்விடும். போகாவிட்டால் பழையபடி கிளர்ச்சித் தொல்லையை இழுத்துப்போட்டுக் கொள்ள வேண்டியிருப்பதுடன் “உலகத்தின் முன்பாக காங்கிரசின் நாணையம் வெளுத்துப்போகும்” என்கின்ற இரண்டு கஷ்டங்கள் ஏற்ப டுகின்றன.

ஆகவே ஏதாவது ஒரு வகையில் சர்க்காரார் மீது குற்றம் சுமத்தி போகாமல் இருக்கவே முயற்சித்துப் பார்த்தும் அது வெற்றிபெற இடமில் லாமல் போனதால் ஒரு மொண்டிச் சாக்கையாவது வைத்து போய் விட்டே வந்து விடலாம் என்று முடிவு செய்ய வேண்டிய நிலைமை திரு. காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. சர்க்காரார் அதற்கும் இடம் கொடுக்கா மலிருந்ததால் ஒப்பந்த நிபந்தனை சம்பந்தமான பிரச்சினைகளைவிட “ஏதோ ஒரு பஞ்சாயத்துக்கு ஒப்புக்கொண்டால் போதும், நான் போகத் தயாராயிருக் கின்றேன்” என்று சொல்ல வேண்டியதாகி விட்டது. அதாவது இந்த பஞ்சாயத்தானது செய்யும் முடிவுக்கும் “நான் லண்டன் போவதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. எப்படியாவது பஞ்சாயத்துக்கு ஒப்புக் கொண் டால் இப்போதே போய்விடுகிறேன். பிறகு நீங்கள் எப்போதோ யாரையோ பஞ்சாயத்து நியமித்து என்னமோ செய்து கொள்ளுங்கள்” என்கின்ற நிபந்தனையின் மேல் போவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் தெரிகின் றது. ஆகவே லண்டன் போவது ஒப்பந்தப்படி அவசியம் என்பதாக உணர்ந்து விட்டார் என்றே ஊகிக்க வேண்டியதாய் இருக்கிறது. எப்படி இருந்தாலும் லண்டன் மகாநாட்டால் இந்தியாவுக்கு அரசியல் சம்பந்தமான நன்மை ஒன்றும் ஏற்படப்போவதில்லை. அதாவது,

இப்போதைய வரி குறையாது. உத்தியோகம் குறையாது.

உத்தியோகக் கொள்ளை குறையாது. பார்ப்பனீயக் கொடுமை சூக்ஷி குறையாது.

பணக்கார ஆதிக்கம் குறையாது.

படிப்பு என்னும் பேரால் சோம்பேரிகள் வாழ்க்கையும் அவர்களது கொள்ளையும் பொறுப்பற்றவர்கள் கைகளுக்குப் போகும் அரசியல் ஆதிக்கமும் குறையாது. இவைகளுக்குப் பதிலாக அவைகள் அதிகப் படலாம்.

சரீரத்தால் பாடுபடும் தொழிலாளிகளுக்கு எவ்விதத்திலும் கஷ்டம் குறையாது. வேண்டுமானால் தீண்டாதவர்களுக்கும் பெண்களுக்கும் முன்னேற்றமேற்பட சற்று மார்க்கமுண்டாகலாம்.

இதற்கும் காங்கிரசும் பார்ப்பனர்களும் முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் தான் – திரு. காந்தியவர்கள் வருணாச்சிரம மூட்டையை வட்ட மேஜையில் அவிழ்க்காதிருந்தால்தான் முடியும்.

நிற்க திரு. காந்தியவர்கள் லண்டன் சென்றதாலேயே கடைசிவரை இருந்து “காரியம் ஏதோ ஒரு விஷயத்தில் சமாதானமாக முடிந்தது”  என் கின்ற நிலைமையை ஏற்பட இடங்கொடுப்பார் என்று நம்புவதும் பிசகே யாகும்.             ஏனெனில் “அதற்குப்பிறகு காங்கிரசுகாரருக்கு வேலை என்ன வென்பது ஒரு பெரிய விடுகதையாகும்.”  இன்றைய நிலைமையில் “வட்ட மேஜை மகாநாடு முடிவுப்படி ஒரு திட்டம் ஏற்பட்டுவிட்டது” என்று வைத்துக் கொண்டாலும் அதன் பயனாய் ஏற்படும் உத்தியோகங்கள் காங்கிரசுக்காரர்களுக்கு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. எங்கு எப்படியானாலும் தென்னாட்டில் கண்டிப்பாய் கிடைக்கவே மாட்டாது.

ஆதலால் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கும் தேசீயத்தின் பேரால் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும் வேறு ஒரு வழி வேண்டியது அவசியமேயாகும்.

தவிரவும் காங்கிரஸ் அடங்கியவுடன் இனிப் புறப்படப் போகும் கிளர்ச்சி சமதர்மக் கிளர்ச்சியேயாகும். இதில் திரு.காந்தியும் சேரமுடியாது. சேர்ந்தாலும் அவருக்கும் மதிப்பு இருக்காது என்பதுடன் அவர் கலந்த கிளர்ச்சியும் நாணையமானதாய்க் கருதப்படாததாய் போய் விடலாம். பிறகு பணக்காரன், மில் முதலாளி, படித்த ஆட்கள் ஆகிய இந்தக் கூட்டமும் இதில் சேர முடியாது. இவ்வளவும் தவிர தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அதன் கிட்டக்கூட வர முடியாது. ஆகவே இவர்களுக்கெல்லாம் உலகத்தில் இடம் வேண்டுமானால் காங்கிரசின் கிளர்ச்சிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டாவது உயிர் வைத்திருக்க வேண்டியது திரு.காந்தியின் கடமை யாகும். ஆதலால் ஏதாவது ஒரு சாக்கைச் சொல்லிக்கொண்டு வருணா சிரமத்திற்கு மோச மில்லாமல் பார்த்து விட்டு திரு.காந்தியவர்கள் ஓடிவந்து விட வேண்டிய வரேயாவார்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 30.08.1931

 

You may also like...

Leave a Reply