இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
உயர்திரு காந்தி அவர்கள் தமது 30-7-31 ² “யங் இந்தியா” பத்திரிகை யில் “நாம் இன்று செய்ய வேண்டியது எது?” என்னும் தலைப்பின் கீழ் “பொது ஜனங்களால் அதிகமாகக் கண்டிக்கப்படும் கராச்சி காங்கிரஸ் ஜீவாதார உரிமைகளைப் பற்றிய தீர்மானங்கள்” என்று ஆரம்பித்து, அவைகளை எல்லாம் எடுத்தெழுதி, அவைகளைப் பற்றி தமதபிப்பிராய மென்பதாக எழுதியிருப்பது என்னவென்றால்,
“ஜீவாதார உரிமைத் தீர்மானத்தில் குறிப்பிட்ட பல விஷயங் களில், அனேக விஷயங்களை இன்றே நடத்தி வைக்கக்கூடியவை களாகும். ஆதலால், அவற்றுள் சர்க்காரார் மூலம் சட்டம் செய்து நிறைவேற்றப்பட வேண்டிய சில விஷயங்கள் தவிர, பொது ஜனங் களால் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்பொழுதே நாம் செய்து முடிக்காவிட்டால் பிறகு, இதே பொது ஜனங்கள் தயவாலே இருக்கவேண்டிய அரசாங்கத்தால் எப்படி அவைகள் செய்து முடிக்கப்பட முடியும்?”.
“இன்றைய தினமே, கண்டிப்பாய் மாற்றித்தீர வேண்டிய முக்கிய விஷயங்களை செய்யாமல் விட்டு விட்டால், நமக்கு அதிகாரம் வந்தபிறகு அவற்றில் நமக்கு அலக்ஷியம் ஏற்பட்டு விடும்.” உதாரணமாக
- ஒருவருக்கொருவர் மதங்களை மரியாதை செய்வது,
- பெண்களை எல்லா விஷயங்களிலும் சமத்துவமாய் நடத்துவது,
- தீண்டாமையை ஒழித்து விடுவது……………. ஆகிய காரியங் களைச் செய்ய இப்பொழுதே நம்மால் முடியாவிட்டால் சுயராஜியம் வந்தபிறகு சுயராஜிய அரசாங்கத்தாருக்கு மக்களை நிர்ப்பந்தப் படுத்தி மேற்கண்ட சீர்திருத்தங்களைச் செய்வதற்கு சக்தியில்லாமல் போய்விடுமென்றே நான் தீர்க்கதரிசனம் சொல்லுவேன். ஏனெனில் ஜன அபிப்பிராயங்களுக்கு விரோதமாக ஒரு ஜன செல்வாக்குப் பெறவேண்டிய அரசாங்கமானது ஒரு நாளும் ஒரு காரியத்தையும் செய்ய முடியவே முடியாது. அப்படியேதாகிலும் செய்ய முடியுமே யானால், அந்த அரசாங்கம் உடனே அழிக்கப்பட்டு விடும்”.
“பகுத்தறிவு ஞானமும், கட்டுப்பாடுமுள்ள ஜனநாயகம் தான் சரியான ஜனநாயகமாகும். அப்படிக்கில்லாமல் பாரபட்சமும், பாமரத்தன்மையும், மூட நம்பிக்கையுமுள்ள மக்களின் ஜனநாயக மானது எப்படியிருந்தாலும் முடிவில் வீண் குழப்பமேற்பட்டு தானாகவே அழிந்தே தீரும்”.
“ஆகவே, தீண்டாமை யொழித்தல் முதலிய விஷயங்கள் கொண்ட ஜீவாதார உரிமைகளென்பது இப்பொழுதே செய்து தீர வேண்டியதே யொழிய, பின்னால் செய்ய வேண்டியதென்றோ, செய்துவிடலா மென்றோ சொல்லக் கூடியவைகளல்ல. தேசம், உண்மையான சுயராஜியத்திற்கு தயாராயிருக்கின்றது என்று சொல்லுவதானது வாஸ்தவமானால், மேற்கண்ட வேலைகள் செய்வது சிறிதும் கஷ்டமானதல்ல. ஆதலால் ஆங்காங்குள்ள காங்கிரசுக்காரர்கள், ஆங்காங்குள்ள முக்கிய குறைகளென்று தங்களுக்குத் தோன்றும் காரியங்களை முன்னதாகத் திட்டங்கள் போட்டுக்கொண்டு அதற்காக வேலை செய்ய வேண்டும்”
என்று எழுதியிருக்கின்றார்.
இதே அபிப்பிராயங்களை நாம் இதற்குமுன் பலதடவைகளில் எடுத்து சொல்லி, பேசியும், எழுதியும் வந்திருக்கின்றோம். உதாரணமாக திருவாங்கூர் (கோட்டாறு) உபன்யாசத்தில், “முதலாவது திரு. காந்தியும் திரு. ஜவஹர்லாலும் கேட்கும் சுயராஜியம் ஜனநாயக சுயராஜியமா? ஏகநாயக சுயராஜியமா? என்பதை முதலில் விளக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஜன நாயகமானால் தீண்டாதவர்களை கோவிலுக்குள் விடமாட்டேன் குளத்தில் விட மாட்டேன்” என்று சொல்லுகின்றவர்கள் யார்? பிறகு அந்த கோவிலை யும் சொத்தையும் பறிமுதல் செய்கின்றவர்கள் யார்? என்று யோசித்துப் பாருங்கள். ஜனங்கள் விடமாட்டேன் என்று சொன்னால் அந்த ஜனப் பிரதிநிதி சர்க்கார், யார் மனதையும் புண்படுத்தாத சர்க்கார், கோவிலை எப்படி பறிமுதல் செய்ய முடியும்? கோவிலுக்குள் பறையனைவிட இஷ்டப் படாத ஜனங்கள், இஷ்டப்படும் பிரதிநிதியை தெரிந்தெடுப்பார்களா? என்பதை யோசித்துப்பாருங்கள். ஜனங்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் நடக்கும் இராஜியபாரம் ஜனநாயக இராஜிய பாரமாகுமா? மற்றும் இந்திய ஜனங்கள் தங்களுக்குள் இருக்கும் ஜாதி வித்தியாசத்தையும், தீண்டாமை யையும் ஒழிப்பதற்கு ஜனநாயக சுயராஜியம் வேண்டுமென்றால் இது பித்தலாட்டமா அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள். இன்றைய தினம் தீண்டாமை ஒழிப்பதை யார் வேண்டாமென்கின்றார்கள்? இஸ்லாமானவர் கள் ஆnக்ஷபிக்கின்றார்களா? கிறிஸ்துவர்கள் ஆnக்ஷபிக்கின்றார்களா? அல்லது கிறிஸ்துவ அரசாங்கமும் ஆnக்ஷபிக்கின்றதா? ஆரம்பத்திலேயே புரட்டு பேசும் சுயராஜிய அதிகாரம் வந்தால் கொடுமை செய்யுமா? நன்மை செய்யுமா? இன்று தீண்டாமை அனுசரிக்கும் ஜனங்களுக்கு சர்வ அதிகாரம் வந்தால் தீண்டாமையை பலப்படுத்துவார்களா? தளர்த்துவார்களா? எந்த அரசாங்கத்தில் தீண்டாமை இருந்தாலும் தீண்டாமையை அனுசரிக்கின்ற வர்கள் இன்று சுயராஜியம் கேட்கும் இந்துக்களே யொழிய வேறல்ல,
ஆகவே, இந்த மாதிரி வார்த்தைகள், மக்களை ஏய்க்கும் தந்திர வார்த்தை அல்லவா என்பதை யோசித்துப்பாருங்கள்” என்றும் சொல்லி யிருக்கின்றோம்.
ஆனால், அவற்றை நாம் சொல்லும்போது அவைகளைப் பார்த்த நமது நாட்டு “தேசீய வீரர்”களும், “ காங்கிரஸ் பக்தர்”களும் ஆத்திரங் கொண்டிருப்பார்கள். இப்பொழுதோ அவர்களுடைய “குருநாதர்” “மகாத்மா” “காங்கிரசின்-தேசீய சபையின் ஏகநாயகர்” “உலகம் போற்றும் உத்தமர்” “தேர்களிலும் இரதங்களிலும் கடவுளுக்குப் பக்கத்திலிருத்தி வைத்து, பூஜை, நைவேத்தியங்கள் செய்து கும்பிடவேண்டியவ” ரென்று சொல்லப்படுபவரான திரு.காந்தியவர்களின் 30.7.31ந் தேதி “யங் இந்தியா” வில் இம்மாதிரிசொல்லியிருக்கின்றாரே இதற்கென்ன சமாதானம் சொல்லப் போகின்றீர்கள்? என்றுதான் கேட்கின்றோம். அதோடு கூடவே மற்றொரு விஷயத்தையுமிப்பொழுதே குறிப்பிட விரும்புகின்றோம். அதாவது, திரு. “காந்திக்கு அடுத்தவ”ரென்றும், “தென்னாட்டு காந்தி” யென்றும் பல தேச பக்தர்களால் கொண்டாடும்படியான திரு. சி. இராஜகோபாலாச்சாரியார வர்கள் தமது குழாத்துடன் ஈரோட்டிற்கு வந்து, காந்தி பிரசாரம் செய்த காலத் தில் ஈரோடு காங்கிரஸ் பக்தர்களான, நவஜவான் பாரத சபை வீரர்களான சில நண்பர்கள் திரு. ஆச்சாரியாரை நடுக்கூட்டத்தில் “தீண்டாமை விஷய மாக தாங்கள் ஏன் எவ்வித பிரசாரமும் செய்வதில்லை? காங்கிரசிலும் வேலைத்திட்டமாக நடத்துவதில்லை? அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட ஏன் பேசுவதில்லை?” என்று கேட்டபொழுது, அதற்கு திரு.ஆச்சாரியார வர்கள் சொன்ன பதில் என்னவென்றால்,
“எங்களுக்குத் தீண்டாமை பிரசாரம் செய்ய மகாத்மா காந்தியவர்கள் கட்டளையிடவில்லை. ஆதலால் நாங்களதைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை” யென்று தைரியமாய்ச் சொன்னார்.
ஆனால், திரு. காந்தியவர்களின் இந்த மேற்கண்ட வாக்கியங்க ளிலோ, “சுயராஜ்யம் பெறுவதற்கு முன்பாகவே தீண்டாமை விலக்கு வேலை செய்தாகவேண்டும். அதைச் செய்ய முடியாத ஜனங்களால் சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை யொழிக்கப் பட முடியாமல் போவதோடு கிடைத்த சுயராஜியம் தானாகவே அழிந்து நாசமாய்ப் போய்விடும்” என்று அழுத்தந் திருத்தமாக சொல்லியிருப்பதுடன், “காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளுக்குள்ளிருக்கும் ஜீவாதார உரிமை விஷயங்களில் எதை முன்னால் செய்யவேண்டுமென்று யோசித்துப் பார்த்து, திட்டம் போட்டுக்கொண்டு அவைகளை உடனே செய்ய புரப்பட வேண்டு” மென்பதாக எழுதியிருக்கின்றார்.
( இவையெல்லாம் 4-8-31ந்தேதி “சுதேசமித்திரன்” 10ம் பக்கம், 5-வது கலத்திலிருக்கிறது.) ஆகவே திரு. இராஜகோபாலாச்சாரியாரவர்களும், அவரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராய்க் கொண்ட காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களென்று சொல்லிக் கொள்பவர்களும் மற்றும் சுயமரியாதையியக்கத்தை வைது வாழும் தேசீய வீரர்களும் இதற்கென்ன பதில் சொல்லுகின்றார்களென்று கேட்கின்றோம்.
ஜவுளிக்கடை மறியலினால், வெளிநாட்டுக்குப் போகும் செல்வம் நமது நாட்டில் நிற்கலாமென்றே வைத்துக் கொள்ளுவோம். அதனால் லட்சாதிபதியாயிருக்கும் மில் முதலாளிகள், கோடீஸ்வரர்களாகிவிடுவார்க ளென்றே வைத்துக் கொள்ளுவோம். அவர்களால் காங்கிரசுக்கும் லட்சம் லட்சமாய் பணம் கொடுக்கப்பட முடியுமென்றும் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் இன்றைய தினம் இந்திய பொருளாதார நிலைமையில் எந்தக் கூட்டம் கஷ்டப்பட்டு கால் பட்டினி, அரைப்பட்டினியாயிருக்கின்றதோ அவர்களுக்கு என்ன லாபம் என்பதை யோசித்தால் அதன் பயனற்ற தன்மையும் விளங்கும். வெளிநாட்டுத்துணி ஒரு அங்குலம் கூட இந்தியா வுக்குள் இரங்காமல் செய்தாலும் நூற்பவர்களுக்கு தினம் 1-க்கு 1 அணா வுக்கு மேல் கூலியில்லை யென்பதை அதுவும் கட்டுகின்றவன் ஒன்றுக்கு இரண்டாய், மூன்றாய் விலை கொடுத்தால் தான் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
அதுபோலவே கள்ளு மறியலால் கள்ளுக்கடைகள் எல்லாம் எடு பட்டுப் போனதாகவே வைத்துக் கொள்ளுவோம். சர்க்காராருக்கு வரும் கள் இலாக்கா வரும்படியைக் குறைப்பதின் மூலம் சர்க்காராரை ஸ்தம்பிக்கச் செய்து விடலாமென்றே வைத்துக்கொள்ளுவோம். குடிகாரர்களும் பகிரங்க மாய்க் குடிக்கும் கள்ளுக்குடியை விட்டுவிடுவார்களென்றே வைத்துக் கொள்ளுவோம். இவைகளெல்லாம் கீழ்ஜாதிக்காரனென்றும், தீண்டாதவ னென்றும் தெருவில் குளத்தில் பிரார்த்தனை ஸ்தலத்திலிருக்க, அருகில் வரமுடியாதவரென்று சொல்லப்படுகிற இழிவை ஒரு நிமிஷ நேரமாவது வைத்துக்கொண்டிருக்கும் அவமானத்தைவிட முக்கியமானதா? என்று கேட்கின்றோம்.
மற்றும் “திரு. காந்தியின் உண்மைத்தோற்றம்” என்னும் தலைப்பின் கீழ் மதுவிலக்கு விஷயமாய் திரு காந்தியவர்கள் எழுதிய விஷயத்தை எடுத்துப்போட்டிருந்தோம். அதாவது,
“கள்ளு, சாராயக்கடைகளை மூடுவது நம்முடைய வேலையல்ல.”
“குடிகாரர்கள் திருட்டுத்தனமாய் கள்ளு, சாராய உற்பத்தி செய்து எப்படியாவது குடித்துத்தான் தீருவார்கள்.”
“ஆதலால், கள்ளு, சாராயக்கடைகள் மூடப்பட்டாலும் இப்பொழு திருப்பது போலவே கள்ளு, சாராயம் விற்பனையாகிக்கொண்டும், குடிக்கப் பட்டுக் கொண்டுந்தானிருக்கும்”
என்று திரு. காந்தியவர்கள் எழுதியிருந்ததை எடுத்துக்காட்டியிருந் தோம். அப்படியிருந்தும் மறியல்களென்பது ஒரு நாடகம் போல் நடத்தப் பட்டுக் கொண்டு வருகின்றது.
திரு காந்தியவர்கள் எழுதின விஷயத்தை காற்றில் பறக்கவிட்டு விட்டு “காந்திக்கு ஜே! ” என்று கூப்பாடு போட்டுக்கொண்டே கள்ளுக் கடைகளிலும், ஏலம் விடப்படும் இடங்களிலும் தொண்டர்கள் மறியல் செய்து கொண்டு வருவதும், இம்மறியலால் குடி நின்று விடுமா? என்றால் “அரசியல் காரியத்திற்கு மறியல் செய்கின்றோம்” என்பதும், அரசியல் மறியல் செய்து கைவிடப்பட்டு விட்டதே என்றால் “ஒழுக்கத்துக் காக செய்கிறேன்” என்பதுமாய் சமயத்திற்குத் தகுந்தபடி பேசி மறியல் செய்யப் பட்டு வருகின்றது.
இதனால் கவர்ன்மெண்டுக்கு வரும்படி குறைந்து போகலாம். ஆனால் இந்தக் காரணத்தைக் கொண்டே கவர்ன்மெண்டார் செய்து தீரவேண்டிய அநேக நல்ல விஷயங்கள் கல்வி, சுகாதாரம், போக்குவரவு முதலிய துறைகள் இந்தச் சாக்கைச் சொல்லிக்கொண்டு செய்யப்படாமல் நிறுத்தப்பட்டும் போக நேரிட்டுத் தீருமேயல்லாமல், எந்த உத்தியோகஸ் தருடைய சம்பளமாவது லஞ்சமாவது காலணா குறைந்து விடுமா என்று பாருங்கள்.
அன்றியும் இதனால் பொதுஜனங்களுக்கோ, குடிக்கின்ற கூட்டத்தார் களுக்கோ ஒருவித இலாபமும் ஏற்படப்போவது கிடையாது. ஏனென்றால்,
இன்றைய தினம் ஏலம் மறியலால் ஏலத்துகை மாத்திரம் குறையுமே யன்றி, ஏலத்தில் எடுத்தவர்களுடைய வியாபாரங்களொன்றும் பிரமாத மாய்க் குறைந்து விடப்போவதில்லை. அவர்கள் பதினாயிரம், லட்சம் என்ப தாக லாபம் அடைந்து மறியல் தொண்டர்களுடன் வியாபாரம் பேசி தாராள மாய் செல்வவான்களாகப் போகின்றார்கள். எப்படியும் முன்னிலும் செல்வாக்காய் கிளர்ச்சியாய் வேடிக்கையாய் வியாபாரம் நடக்கத்தான் போகின்றது. குடிகாரர்களும் நன்றாய்க் குடிக்கப்போகிறார்கள். இந்தப் படியல்லாமல் ஒரு சமயம் கொஞ்சநஞ்சம் மறியல் நடப்பதாயிருந்தாலும், சந்துக்கடைகள் மூலமும், தோட்ட விற்பனைகள் மூலமும், திருட்டுத் தனமாய் சாராய வகைகள் காய்ச்சியும், சாராயக் கடைகளிலிருந்தும் வீடு வீடாய் கொண்டுபோய் கொடுத்துக் கொண்டிருக்கின்ற காரியங்களால், குடியும், குடி வியாபாரக்காரர்களுடைய லாபமும் எப்பொழுதும் போலவே நடந்து கொண்டு தானிருக்கப் போகின்றது.
ஆகவே, இன்றைய கள்ளுக்கடை, ஏலஸ்தலம் ஆகியவைகளின் மறியல், குத்தகைதாரர்களுக்கு இலாபத்தைக் கொடுக்கப் போகின்றதென் பதைத் தவிர, கலால் இலாக்கா சட்டங்களும், ஹத்தும் இயற்கையாகவே அமுலுக்கு வராதிருக்கும்படியாக செய்யப்படுவதைத் தவிர, வேறு ஒரு இலாபமும் ஏற்படப் போவதில்லை.
ஆகவே, இதுவரையில் நாம் காங்கிரசையும் காங்கிரஸ் நடவடிக்கை களையும் குற்றம் சொல்லிக் கொண்டு வருகின்றோமென்று நினைத்துக் கொண்டிருந்த வஞ்சனை, சூட்சியறியாத பாமர மக்களும், மூடப்பழக்க வழக்கங்களிலடிமைப்பட்டு, பகுத்தறிவை யுபயோகிக்கத் தைரியம் பெறாத பொதுஜனங்களும் இவ்விஷயங்களையெல்லாம் நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்த பிறகாவது, சுயபுத்தியுடன் ஒரு முடிவுக்கு வர மாட்டார்களா வென்று ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 09.08.1931