தினசரி                                             சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ்  பத்திரிக்கை

லாலுகுடி தாலூகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப்பற்றி நெடுநேரம் பேசினார்கள். திரு.ஈ.வெ. இராமசாமி, தினசரி அவசியமில்லை என்றும் தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப் பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆகவேண்டுமென்றும் நீங்கள் முன் வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதை தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப்பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச் சொன்னதின் பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆnக்ஷபணையில்லை யென்றும் சொன்னார்.  அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது.  பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திரு.சொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.  மற்றும் இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதர வளிக்க முன் வந்தார்கள்.  சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் தோன்றியபோது 6 மாதம் திருச்சியில் நடத்திப் பார்த்து முடியாவிட்டால் சென்னையிலேயே நடத்தலாம் என்றும் பேசப்பட்டது. பத்து பங்குகள் அதாவது 5000ரூ.க்கு அங்கேயே விதாயம் ஏற்பட்டது.  சமீபத்தில் நடைபெறும் நன்னில சுயமரியாதை மகாநாட்டிலும் அடுத்தவாரம் போல் கொடைக்கானலில் நடைப்பெறப் போகும் சுயமரியாதை சங்க நிர்வாக கமிட்டியின் போது சங்கத் தலைவரைக் கலந்தும் இவ்விஷயம் மேற்கொண்டு யோசிக்கப்படும்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 07.06.1931

You may also like...

Leave a Reply