இரட்டைவாக்குரிமையை உறுதியாக ஆதரித்த குடி அரசு

உடல்நலமில்லாத பெரியார் நீண்ட ஓய்வு எடுக்கவேண்டுமென்று மருத்துவர்கள் கூறிய ஆலோசனையை புறக்கணித்து பெரியார் மேலைநாடு பயணத்தை மேற்கொண்டார். ஈஜிப்ட், க்ரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங் கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ப்ரான்ஸ், போர்ச்சுகல் நாடுகளில் சுமார் ஒரு வருடம் பெரியார் பயணம் செய்தார். பயணம் முடித்து கொழும்பு வழியாக தமிழகம் திரும்பிய காலகட்டம் இது.

இலங்கையில் பல பகுதிகளுக்கும் சென்று தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பயணத்தில் நீண்ட காலத்தைச் செலவிட்ட சோவியத் நாட்டின் சோசலிசக் கொள்கைகள் பெரியாரை மிகவும் ஈர்த்திருந் ததை அவரது உரைகள் வெளிப்படுத்தின. நமது நாட்டில் மக்கள் ஓரணியில் திரளாமல் தடுப்பதற்கு கடவுள், மதம்,  சாதி, தலைவிதி, கர்மபலன் போன்ற நம்பிக்கைகளே காரணம் என்றார் பெரியார்.

இங்கிலாந்தில் மாபெரும் தொழிலாளர் பேரணியில் பிரிட்டன் தொழிற் கட்சித் தலைவர் லாம்ஸ் பெரி முன்னிலையில் பெரியார் ஆற்றிய உரை; பெயருக்கு முன்னால் தோழர் என்றே விளியுங்கள் என்று பெரியார் விடுத்த அறிக்கை ஆகியவை இத்தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த பெரியாரின் எழுத்துகள் பேச்சுகள் இக்கால குடி அரசு ஏட்டில் இடம் பெறும் வாய்ப்புகள் இல்லை என்றாலும் அக்கால கட்டங்களில் குடி அரசில் இடம்பெற்ற தலையங்கங்கள், கட்டுரை கள் அதன் முக்கியத்துவம் கருதி தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

ஷெட்யூல்டு மக்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறையை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் தொடங்கிய காலகட்டம் இதுதான். தனித் தொகுதியை உறுதியுடன் ஆதரித்த குடி அரசு காந்தியார் மிரட்டலுக்குப் பதிலடி தந்தது. இந்துமத உயர்சாதியினர் எதிர்ப்பு மட்டுமின்றி கிறிஸ்தவ மதத்தின் எதிர்ப்பையும் குடி அரசு சந்தித்தது. குடி அரசை வாங்கிப் படிப் போர் பதினைந்து நாட்களுக்குள் நிறுத்தாவிட்டால் ‘ஜாதி பிரஷ்டம்’ செய்யப் படுவர் என்று கோவை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைமை மிரட்டியது.

சங்கராச்சாரியின் பித்தலாட்டத்தை எள்ளல் நடையில் கேலி செய்யும் பெரியார் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

– பதிப்பாளர்

You may also like...

Leave a Reply