உபாத்தியாயர்கள்

நமது நாட்டில் உள்ள தொழில் வகுப்புத்தொகுதிகளில் உபாத்தியாயர் வகுப்புத்தொகுதி என்பதே மிகவும் மோசமானதும், முட்டாள் தனமானது மான தொகுதி என்று சொல்லுவோம்.

அக்கூட்டத்தாரில் பெரிதும் அநேகருக்குச் சிறிதும் பகுத்தரிவு என்பதும், உலக கல்வி என்பதும் கிடையாது என்பது நமது 40, 50 வருஷத்திய அனுபவமாகும்.  அதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களைப் போன்றதும் பண்டித  உபாத்தியாயர்களைப் போன்றதுமான முட்டாள் தனமும் அசந்தர்ப்ப குணமும் அதிகப்பிரசங்கித்தனமும் மற்ற உபாத்தியாயர்களிடம் சற்று குறைவாகவாக இருக்கலாம்.

பொதுவாகவே உபாத்தியாயர்கள் என்பவர்களுக்குப் பகுத்தறிவு உதயத்திற்கு வழியில்லாமலே போய் விடுகின்றதான தன்மையே அவர்களது மூடத்தனத்திற்குக் காரணமாகும்.

முதலாவது உபாத்தியாயர் தொழில் என்பது இப்போது நமது நாட்டில் கிராமபோன் யந்திர வேலையாகவேதான் இருக்கின்றது.

என்னவெனில், ஏதோ ஒன்றைப் படிப்பது, அதை ஒப்புவிக்கும் முறையில் பரீட்சை கொடுப்பது, மறுபடியும் அதை பிள்ளைகளுக்கு கிராம் போன் மாதிரி போதிப்பது ஆகிய காரியங்களைத் தவிர வேறு பகுத்தறிவு பெற சிறிதும் நேரமும், அவசியமும், சௌகரியமும் இல்லாத வாழ்க்கை யிலேயே இருந்து வருவதால் அவர்கள் மூடர்களாகவே இருக்கக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்கள் படிக்கும் புஸ்தகமும்  சொந்த வாழ்க்கையும் பெரிதும்  மூடநம்பிக்கையும் இயற்கை விரோதமும் இழி தகைமையும் கொண்ட சமய சம்மந்தமான நூல்களும் கொள்கை களுமாகவே ஏற்பட்டு விட்டால்  இவர்களது அறிவுத்திறத்தை  வர்ணிக் கவும் வேண்டுமா என்று கேட்கின்றோம்.

இந்த மாதிரியான மூடர்களிடமே மாணாக்கர்களாயிருந்து கல்வி பெறும் நமது  மக்களுக்கு எவ்வளவு  அறிவு இருக்கும் என்பதை நாம் விளக்கவேண்டியதில்லை .

இன்னும் நல்ல உதாரணம் வேண்டுமானால் வடமொழியிலும் தென் மொழியிலும் வல்லவர்கள் என்கின்ற சாஸ்திரிகள், வித்துவான்கள் ஆகியவர்களின் சொந்த பகுத்தறிவுகளை நிதானமாய் தனித்துத்தனித்து  கவனித்துப்  பார்த்தால் அதிலிருந்தே மற்ற படித்தவர்கள் யோக்கியதைகள் எல்லாம் கூட விளங்கும்.

இவற்றை உத்தேசித்துத்தான் பல சுயமரியாதை மகாநாடுகளில்  உபாத்தியாயர்களை தற்காலம் தற்பித்து செய்யும் முறை தவறு என்றும்,. அவர்களுக்குப் பாடப்புத்தகமாக வைக்கும் புத்தகங்கள் இன்ன இன்ன மாதிரி இருக்கவேண்டும் என்றும், பல தீர்மானங்கள் செய்து வருகின்றோம்.   ஆனாலும் நாடு இன்னமும் பார்ப்பன ஆதிக்கத்திலேயேயும் வைதீக அழுக்கு மூட்டைகள் ஆதிக்கத்திலேயும் இருப்பதாலும் அரசியல் ஒழுக்க இயல், அறிவுஇயல் முதலியவை சம்மந்தமான ஸ்தாபனங்கள் எல்லாம் சமய ஆதிக்கத்தினால் வாழும் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதாலும் நமது கருத்துக்களுக்கு ஒருசமயம் மதிப்பு ஏற்பட்டாலும் அவை  நடை முறைக்கு சாத்தியமில்லாமல் இருக்கின்றன.  நிற்க,

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு உபாத்தியாயரின் யோக்கியதையைப்பற்றி சிறிது விளக்குவோம். அதாவது:-

நமது ஜில்லாவில் ஒரு கனவானிடம்  ஒரு பார்ப்பன உபாத்தியாயர் ஒரு தக்க சிபார்சுடன் வந்து தனக்கு ஜீவனத்திற்கே மிகக் கஷ்டமாயிருப்ப தாகவும், எப்படியாவது தனக்கு ஒரு உபாத்தியாயர் வேலை போட்டுத்தர வேண்டுமென்றும் கேட்டார். அக்கனவான் தன்னிடம் உபாத்தியாயர்  உத்தி யோகம் காலி யில்லையென்று சொல்லியும் பட்டினிக்கிடப்பதாக துக்கப்பட்ட தனால் மனமிளகி, டெம்பரவரியாக, தற்கால சாந்தியாக ஒரு உத்தி யோகத்தை காலியாக்கி பதிலியாகக் கொடுத்தார். மற்றும் இந்தப்படியே அடிக்கடி காலி வேலைகளை பதிலியாகவே இவருக்குக் கொடுத்துக் கொண்டும் வந்தார்.

ஆகவே இந்த உபாத்தியாயருக்கு அப்பெரியார் தன்னுடைய ஜில்லா எல்லைக்குள் ஏற்படும் தற்கால காலி ஸ்தானங்களை எல்லாம் இவருக்கு அப்போதைக்கப்போது கொடுத்துக்கொண்டுவந்திருக்கிறார். என்றாலும் டெம்பரரியாக நியமிக்கப்பட்ட இப்படிப்பட்டவருக்கு பள்ளிக்கூட வெயில்கால நீண்டவிடுமுறைச்சம்பளம் கொடுக்க சட்டப்படி நியாயம் கிடையாது என்பது யாவரும் அறிந்ததாகும்.

இப்படி இருக்க சென்ற வருஷம் ஒரு நாள் அதாவது வேலையில்லாத காலத்தில் உபாத்தியாயர் அப்பெரியார் வீட்டிற்கு வந்து தனக்கு சாப்பாட் டிற்கே வழி இல்லையென்றும் இரண்டு மூன்று நாள் பட்டினி கிடப்பதாகவும் சொன்னார். இதை நம்பி அப்பெரியார் தனது சொந்தப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கையில் கொடுத்து அனுப்பினார்.  இதைப் பெற்றுக்கொண்டு ஊருக்குப் போன உபாத்தியாயருக்கு பள்ளிக்கூடம் திறந்தஉடன் மறுபடியும் ஒரு காலி ஸ்தான பதிலி உத்தியோகம் கொடுத்தார்.  இந்தப்படி யாக இந்த உபாத்தியாயருக்கு அக்கனவான் அடிக்கடி வேலைகொடுத்து காப்பாற்றி வந்திருக்கின்றார்.  இப்படிப்பட்ட பெரியாருக்கு அந்த உபாத்தி யாயர் எழுதி ரிஜிஸ்டர் செய்து அனுப்பி இருக்கும் கடிதத்தில் கண்டசில குறிப்புகளை குறிப்பிடுகின்றோம்.  அதாவது:-

ஐயா……. “நான் தங்களிடம் வேலைபெற்றதில் ஒருவருஷம்தான் கோடைகால லீவு சம்பளம் கிடைக்கப்பெற்று இருக்கிறேன்.  மற்ற வருஷ­ விடுமுறை காலங்களில் சம்பளமில்லாமல் தவித்து இருக்கிறேன்……..  ஒரு பிராமணன் இவ்வாறு அலைக்கப்படுவது நியாயமா?

உங்களுக்கும் இந்தக் கதியை நான் விரும்பாவிட்டாலும் நீங்கள் இம்மாதிரி கஷ்டப்பட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்?

செல்வம் தங்கி இராது,  அதிகாரம் நிலைக்காது…….. தங்கள் ஆத்மா பாவத்தைச் செய்யலாகாது.

நான் சென்ற மே மாதத்தில் தங்கள் வீட்டில் பட்டினி விரதமிருந்த போது தாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தீர்கள்.  அந்த ஒரு ரூபாய்க்கு ஸ்டாம்பு இதில் அனுப்பி இருக்கிறேன்.

எங்கள் குடும்பம் வேதம் ஓதிய பெரியவாள் வம்சம்.

உங்கள் ஆத்துமா பரிசுத்தமடைய வேண்டுமானால் அந்த பக்தர்கள் நிறைந்த வம்சத்திற்கு தீங்கு செய்யலாகாது.

என்னைக் காப்பாற்றுவதன் மூலம் தங்களை  காத்துக் கொள்ளுவீர்கள் என்று நம்புகின்றேன் .

வேதம் உண்மை – கடவுள் சத்தியம், காயத்திரி ஜபம் வீணாகாது,   பதிவிரதைகள் வாக்கு பலியாமல் போகாது.

பிராமணர்களை சதா கஷ்டத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.

தாங்கள் அடைந்துள்ள பதவியில் மமதைக்கொண்டு  ………….பதவி பூர்வ புண்ணியத்தால் உண்டானது.

அடுத்த ஜன்மத்திற்கு உங்கள் குலத்தின் nக்ஷம லாபத்தைத் தேடுங்கள்.

ஏழைகளுக்குச்  செய்யும் தீமை தங்களுக்குச்செய்து கொண்டதாகும்.

“நான் அடையும் இன்ப துன்பம் பகவான் சத்திய ரூபிக்கு சாறும்” என்பதாக எழுதியிருக்கிறார். இவர் ஒரு பார்ப்பனர் ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்டவர்.

இன்றைய உபாத்தியாயர்களில் 100-க்கு 90க்கு மேற்பட்டவர்களின் யோக்கியதையும்  இப்படிப்பட்டதாகும் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் நம்மிடமிருக்கின்றன.

மற்றொரு சமயம்  ஹெட்மாஸ்டர் ஒரு பள்ளிக்கூட காரியதரிசிக்கு கடிதம் எழுதும்போது ஆனால் கையbழுத்தில்லாமல் மொட்டை கடிதமாய் எழுதப்பட்டது. அதாவது,

“ஐயா நீர் இப்போதுதான் சீமைக்கு அனுப்பி கல்வி கற்பித்த உம்மு டைய மகனைத் தின்று இருக்கிறீர்.  இன்னும் ஒரே ஒரு பெண்தான் இருக் கிறது.  எனக்கு துன்பம் செய்தால் பகவான் அந்த ஒரு பெண்ணையும்  தின்று விடும்படி செய்து விடுவார்” என்று எழுதியிருந்தார்.

இதிலிருந்து இந்த உபாத்தியாயர்கள் வேதம் முதலியவற்றைப் போற்றுவதைப்பற்றியும்  நன்றி விசுவாசம் முதலிய குணங்கள் இல்லாத தைப்பற்றியும் நாம் குற்றம் சொல்லவரவில்லை.  ஆனால் இவர்கள் எவ் வளவு மூடர்கள், இவர்களது மூடநம்பிக்கை எவ்வளவு, இவர்களின் அற்ப புத்தியின் நிலைமை எவ்வளவு? இந்த மாதிரி தரமுள்ள மக்களை பிள்ளை களுக்கு படிப்பு கற்றுக்கொடுக்கும்படி சொன்னால் அந்தப் பிள்ளைகள் உருப்படுவார்களா? அறிவு பெறுவார்களா? என்றுதான் கவலைப்படு கின்றோம்.  ஆகவே இன்று நம் நாட்டு மக்களில் படித்தவர்கள் என்பவர் களிலேயே 100க்கு 90 பேர்கள் பகுத்தறிவற்ற மூடர்களாய் இருப்பதற்கும் மூட பக்திக்காரராய்  இருப்பதற்கும் காரணம் எல்லாம்  இந்த மாதிரி முழு மூடர்களான உபாத்தியாயர்களிடம் படிப்புப் பெறச்செய்தி ருக்கும்  முறையே யாகும்.  இந்த நிலையில் இவர்களுக்கு இந்த உபாத்தியா யர்களுக்கு   கொடுக்கப்படும் சம்பளமோ  நினைத்தால் அளவுக்கு எத்தனையோ மடங்கு மீறியதாகும்.  சாதாரணமாக இன்றைய நிலையில் உபாத்தியாயர்களுக்கு  µ 20 ரூ.க்கு கம்மி இல்லாமலும் 50 ரூ.க்கு மேற் படாமலும் சம்பளம் கொடுத்தால் தாராளமான சம்பளமாகும்.  ஆனால் இன்றைய சம்பள திட்டம் ஏழைகள் படிக்கக்கூடாது என்றும், உடல் பிரயாசைப்பட்டு சம்பாதிக்கின்ற தொழிலாளி பிள்ளைகள் படிக்கக்கூடாது என்றும், ஆனால் ஊரை ஏமாற்றி சோம்பேரி யாய் இருந்து அயோக்கியத் தனம்  செய்து   பாட்டாளிகளின் பலனைக் கொள்ளை அடிக்கும் அயோக்கிய வஞ்சகர்களின் சந்ததிகளே படிக்க வேண்டும் என்றும், அவனும் மூடனாகவும் அயோக்கியனாகவுமே இருந்து இந்த நிலைமையை வளர்க்க வேண்டும் என்றும் அடிப்படையான தத்துவத்து டனேயே கல்வித்துறையை ஏற்பாடு  செய்யப்பட்டிருக்கின்றதென்றே கருத வேண்டி யிருக்கின்றது. ஆகவே, சம்பள விகிதத்தைப்பற்றியும்,  அதன் தகுதியைப் பற்றியும் பின்னால்  எழுதுவோம்..  இப்போது அவர்களது தகுதியைப்பற்றி குறிப்பிடவே இதை எழுதினோம்.  இந்தப்படி இன்னும் பல உதாரணங்கள் உண்டு.

குடி அரசு – கட்டுரை – 10.05.1931

You may also like...

Leave a Reply