பிரிட்டிஷ் ஆக்ஷியின் இன்றைய தீமைகள் ஐ நியாயம் வழங்கு முறை சிவில் இலாகா

பிரிட்டிஷார் ஆக்ஷியின் பயனாய் இந்திய மக்களுக்குள்ள கஷ்டங் களில் முக்கியமான கஷ்டங்கள் இரண்டு.  அவை  வரிக்கஷ்டமும் அல்ல, வியாபாரக்கஷ்டமும் அல்ல.

ஆனால் இந்திய அரசியல் பிழைப்புக்காரர்கள் பாமரமக்களை ஏமாற்றி தாங்கள் தான் இந்திய ஜனப்பிரதிநிதிகள் என்று காட்டிக்கொண்டு அரசாங்கத்தாரிடம் உத்தியோகம், பதவி, பட்டம், பெற வரியைப்பற்றியும், வெளிநாட்டு வியாபாரத்தைப்பற்றியும் கள்ளைப்பற்றியுமே எடுத்துச் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். அறிவோடு கூடி நடுநிலைமையில்  இருந்து ஒரு மனிதன் யோசித்துப் பார்த்தானேயானால் இவைகள் யெல்லா வற்றையும்  விடமுக்கியமாய் இருக்கும் குறைகள் தானாகவே புலப்படும்.  அதாவது வக்கீல் தன்மைகளும் உத்தியோக தன்மைகளுமேயாகும்.  இவ் விரண்டும் இந்தநாட்டில் பிரபுத்தன்மையைக்  காப்பாற்ற இருக்கின்றதே ஒழிய நியாயத்தைச்செய்யவோ ஏழைகளைக் காப்பாற்றவோ  இல்லவே யில்லை.  அரசியல் துறையில் சம்மந்தப்பட்டதான வக்கீல்  முறையும்  உத்தி யோக முறையும் இந்தியாவில் இந்த மாதிரி இல்லாதிருந்திருக்கு மானால் இந்த நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும் நாணயக்குறைவும் தரித்திரமும் மக்களுக்கு கஷ்டமும் அலைச்சலும் இருக்க முடியவே முடியாது என்ப தோடு இவ்வளவு தூரம் வித்தியாசப்படும்படியான ஏழைத்தன்மையும் பணக்காரத்தன்மையும்கூட இருக்கமுடியாது என்று உறுதியாய்ச் சொல்லு வோம்.

ஏழைகளையும் மத்திய தரத்தாரையும் இந்த நாட்டில் தலையெடுக்க வொட்டாமல் செய்து வருவது இந்த வக்கீல் முறையும் உத்தியோக முறை யுமே தவிர வேறு ஒன்றுமேயில்லை.

ஏனெனில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதோடு பணக்காரனாயிருப்பவன் தனது பணத்தின் மகிமையினால் 100க்கு 90 விஷயங்களில் தன் இஷ்டப்படியே நியாயம் பெறுகின்றான். நியாயாதி பதிகள்  என்பவர்களும்,  வக்கீல்களும் ஏழை மக்கள் நீதி பெறுவதற்கு இடையூ றாகவும், பணக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி நீதி  பெறுவதற்கு அனுகூல மாகவுமே இருக்கின்றார்கள்.

இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும்.  அதுமாத்திரமல்லாமல் தேசத்தின் ஒழுக்கமும், நாணய மும், சுயமரியாதையும் கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்லுவது சிறிதும் மிகைபடக் கூறுவதாகாது என்பதே  நமதபிப் பிராயம்.

நமது நாட்டுப் பணக்காரர்களில் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக்குறைவும் ஏற்படவும், அவர்கள் நாட்டின் நலனுக்கு பொருப்பற்ற தன்மையாய் நடந்து  கொள்ளவும் காரணமே நமது வக்கீல் களாவார்கள்.

இந்த நாட்டு விவசாயக்காரர்கள் பெரிதும் கடன்காரர்களாக இருக்க வேண்டி ஏற்பட்டதற்கு காரணமும் இந்த  நமது வக்கீல்களேயாவார்கள்.

மக்களுக்கு விவகாரத்தில் அதிக நம்பிக்கையும், ஆசையும் ஏற்படு வதற்கு  காரணமும் வக்கீல்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அன்றியும், நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்துக்கொண்டு போவ தற்கும், நியாயஸ்தலங்கள்  அதிகமாவதற்கும், வக்கீல்கள்தான் காரணஸ்தர் களாவார்கள்.  இன்னும் உண்மையை ஒளிக்காமல் தெளிவாய்ச் சொல்ல வேண்டுமானால் மக்கள் அயோக்கியர்களாவதற்கும், நாணயக்குறைவாயி ருப்பதற்கும்கூட நமது  வக்கீல்கள் பெரிய பொறுப்பாளிகளாவார்கள்.

இதற்கு காரணம் பிரிட்டிஷ் அரசாங்கமா? இந்திய மக்களா? என்று பார்ப்போமேயானால் பிரிட்டிஷ் அரசாங்கத்தைவிட இந்திய மக்களே மிக அதிகமான பொறுப்பாளியாவார்கள்.

ஏனெனில், பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் இந்திய மக்களுக்கு சம்மந்தமும், பங்கும் இருக்க வேண்டும் என்று  கேட்க ஆரம்பித்த காலத் திலேயே இந்த வக்கீல் கூட்டங்களேதான் இந்திய மக்களின் பிரதிநிதிக ளாயிருந்து  வக்கீல் தொழில் விர்த்தியாகி  வக்கீல்கள் தாராளமாய் பிழைப்ப தற்கு ஏற்றதான திட்டங்களையே இந்திய சுதந்திரத்திற்கும், அரசாட்சியில் பங்கும், சம்மந்தம் பெறுவதற்கும் அனுகூலமான கொள்கை என்று பாமர மக்களுக்குச் சொல்லி நம்பச்செய்து ஏமாற்றி அரசாங்கத்தாரையும் ஒப்பச் செய்து அரசாங்க சீர்திருத்த மூலமாகவும் சட்ட மூலமாகவும் அவைகளைப் பெற்றுக் கொண்டு, தங்கள் தொழிலில் மிக்க தாராளமாகவும், தைரியமாகவும், அயோக்கியத்தனங்களையும் நாணயக்குறைவுகளையும்  உபயோகித்து வந்து, நாளுக்கு நாள் அது முதிர்ந்து, இன்று நாட்டிற்கும் சமூகத்திற்கும் இந்தநிலை ஏற்பட்டு விட்டது.

இந்தமாதிரி வக்கீல் ஆதிக்கமானது இன்றைக்கும் நமது பாமர மக்களுக்கு யோக்கியமாகவும், நாணயமாகவும் இருக்க முடியாத  வக்கீல் களின் பிரதிநிதித்துவம் தான் பிடிக்கச்செய்கின்றதேஒழிய உண்மையான பிரதிநிதித்துவம்  ஏற்படுத்திக்கொள்ள யோக்கியதை இல்லாமல் செய்து விட்டது.

ஆகவே இதன் பயனாய் வெள்ளைக்கார வக்கீல்களிடமும் வெள்ளை கார அதிகாரிகளிடமும் காணமுடியாத அநேக ஒழுக்கக்குறைவுகளும்  நாணயக்குறைவுகளும்,  நடுநிலையற்ற தன்மையும் நம்ம வக்கீல்கள் இடமும், நம்ம உத்தியோகஸ்தர்கள் இடமும் தாராளமாய்  இருந்துவரு கின்றன. அது மாத்திரமல்லாமல் ஒழுக்கமும்,   நாணையமும் உள்ளவர்கள் வக்கீலுக்கும், உத்தியோகத்திற்கும் அருகதையற்றவர்களாகியும் விட்டார்கள்.  குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சிவில் இலாகா என்று சொல்லப்படும் அதாவது சொத்துக்களின் உரிமைகளைப்  பொறுத்த விவகார இலாகாக்களை எடுத்துக் கொண்டால் கீழே இருந்து அதாவது ஒரு சம்மன் சார்வுசெய்யும் சேவகன் முதல் குமாஸ்தா  இலாகா உள்பட உள்ள சிப்பந்திகள்  வரை உள்பட அவர் களது ஒழுக்கமும்   நாணயமும், யோக்கியப்பொறுப்பும் மிக மிக மோசமான தாகவே நடைபெற்றுவர வெகு காலமாய் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற தென்றே  சொல்லவேண்டும். இவ்விலாகாவில் லஞ்சமும், மாமூலும், மோச மும் ஹைகோர்ட் ஜட்ஜிகள், இலாகா தலைவர்கள்  என்பவர்கள் ஆகிய எல்லோருக்குமே     தாராளமாய் தெரிந்து வேண்டுமென்றே அனுமதித்துக் கொண்டு இருக்கும் அளவை  மனிதனால் சொல்லத்தரமுடையவைகள்  அல்ல என்றே சொல்லுவோம்.  வக்கீல்கள் தொல்லைகளும்,  நீதிபதிகள் தொல்லைகளும் ஒருபாகம் என்றால் மேல்கண்ட சிப்பந்திகள், நடுத்தர உத்தியோகஸ்தர்கள் ஆகியவர் களின் தொல்லைகள் சகிக்கமுடியாதவை யாகும்.  இந்தத்துறைகளில் சீர்திருத்தமோ ஒழுங்கோ செய்ய இன்றையதினம்  இந்தநாட்டில் ஒரு அரசியல் வாதியாவது  ஒரு தேசீயவாதியாவது கிடையவே கிடையாது. இதனால் வலுத்தவன் இளைத்தவனை நேருக்கு நேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி  அவனிடம் உள்ளதை கையைத்திமிரிப் பிடுங்கிக் கொள்ளுவதைவிட கோர்ட்டு மூலமும், வக்கீல்கள் மூலமும் பிடிங்கிக் கொள்வதோ தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதோ மிகவும் சுலபமானதும் சட்ட பூர்வமானதுமான  காரியமாகவே இருந்து வருகின்றது.

ஆகவே இந்த முறையானது பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூல மாகப் போய்விட்டதால் அவர்களும் அதாவது நம்நாட்டுப் பணக்காரர்களும் சந்தோஷமாகத்தங்கள்  முழுபலத்தோடு இதை ஆதரிக்க வேண்டியவர் களாகி விட்டார்கள்.

எனவே இந்தமாதிரியான நடுநிலைமையற்ற அதிகாரிகளும் நாணயமும், ஒழுக்கமும், யோக்கியப்பொறுப்புமற்ற வக்கீல்களும் நியாய இலாகா சிப்பந்திகளும்  தாங்கள் இந்த  காரியங்கள் செய்வதற்காக அடையும் ஊதியத்தை,  வரும்படியைப்பார்த்தால் உலகத்தில் எந்த யோக்கியமான, நாணையமான மனிதனும் தொழிலாளியும் அடையும் ஊதியத்தைவிட எத்தனையோ மடங்கு அதிகமாகவே பெறுகின்றார்கள்.  ஒரு  முனிசீப்பு என்பவர் 300 ரூபாயில் ஆரம்பமாகி மேல்கண்ட அக்கிரமங்களைச்  செய்வ தன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும்   ஹைகோர்ட் ஜட்ஜ்வரையில் உயர்த்தப்படுகிறார்.  ஒரு வக்கீல் மாதம் 100 ரூ. முதல் அக்கிர மும், அயோக்கியத்தனமும்,  நாணயக்குறைவும்,  பித்தலாட்டமும் செய்யும் அளவுக்குத் தக்கபடி படிப்படியாய் கெட்டிக் காரனாகி மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம் 50 ஆயிரம் ரூ. வரை பெறும் படியான யோக்கியதை யுடையவனாகிறான்.

உலகத்தார் எல்லோராலுமே ஒழுக்கமற்றதென்றும், நாணய மற்ற தென்றும்,  வெளிப்படையாய் தெரியும்படியாக நடந்து கொள்ளும் ஈனத் தன்மையுடைய ஒரு தொழிலில் சட்டப்பூர்வமாகவே இந்தப்படி கொள்ளை அடிக்க இடமிருந்தால், இந்த அரசாங்கத்தின்  வேறு எந்த வரியை – யார் செய்யும் காரியத்தை நாம் அக்கிரமம்  என்று சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை.  இந்தத்தொழில்களில் இவ்வளவு அக்கிரமம் செய்வதற்கு இவர்களுக்கு எப்படி வழிகிடைத்தது என்று பார்ப்போமானால்,

1.வக்கீல்களும், நியாயாதிபதிகளும் ஒரேகூட்டத்தினரா யிருப்பது. அதாவது வக்கீலே நியாயாதிபதி ஆவதும், நியாயாதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும்.

  1. சட்டமானது ஒரு வர்ஜா வர்ஜநமில்லாமல் பத்ததி நிர்ணயம் ஆகியவை இல்லாமல் ஒவ்வொரு மனிதனுடைய இஷ்ட மும் ஒரு சட்டமாவதும், ஒருவனுடைய இஷ்டத்தை மற்றொருவன் இஷ்டப் பட்டால் பின்பற்றலாம், இல்லாவிட்டால் பின்பற்ற வேண்டியதில்லை என்பதும், மற்றும் தனக்கு  இஷ்டமானவர்கள் அபிப்பிராயத்தை பின்பற்றலாம் என்பதும், அவற்றை யெல்லாம் விட்டுவிட்டு தன் இஷ்டப்படி நடக்கலாம்  என்று இருப்பதுமான லா ரிப்போர்டுகளை அதாவது வேறுபல ஜட்ஜுகளின் அபிப்பிராயங்களை சட்டமாக ஏற்றுக்கொள்ள வசதி இருக்கும் முறைகளே சட்ட உலகத்தில் நீதி உலகத்தில் இவ்வளவு ஒழுக்க ஈனங்களை கற்பித்து நீதிபதிகளையும், வக்கீல்களையும் இவ்வளவு ரூபாய்கள் கொள்ளை அடிக்க வசதி செய்து கொடுத்து  வருகின்றது.

நியாயஉலகம் சீர்படவேண்டுமானால் அதில் ஒழுக்கத்திற்கும், கிரமத்திற்கும், சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால் முக்கியமாக மேல் கண்ட இரண்டு முறைகளையும்  ஒழித்துவிட வேண்டும்.

மேலும், வக்கீல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுவதையும், கணக்குவழக்கில்லாமல் வக்கீல்களை தொழில் நடத்த அனுமதி கொடுக்கப் படுவதையும் நிருத்திவிட வேண்டும்,

இந்தக்  காரியங்கள், அதாவது இந்தமாதிரி வக்கீல்கள் பெருகுவதான காரியங்கள், இந்த நாட்டின் நியாயத்தையும் ஒழுக்கத்தையும் சாந்தியையும் கெடுப்பதற்கு ஏற்பட்ட விஷக்கிருமிகளை வளர்ப்பதற்கே ஒப்பாகும்.

இனி விவகார முறையில் இருக்கும் அக்கிரமங்கள் இந்த ஒரே வியாசத்தில் சொல்லக்கூடியதல்ல. உதாரணமாக ஒருவிவகாரம் தொடுத்து 20 வருஷத்திற்கு மேலாகியும் இன்னமும் முடிவு  பெறாத விவகாரங்கள் பல இருக்கின்றதென்றால் விவகார முறையின் யோக்கியதையைச்  சொல்ல வேண்டுமா  என்று கேட்கின்றோம்.

ஆகவே அவற்றைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் – 10.05.1931

 

 

 

You may also like...

Leave a Reply