உதிர்ந்த மலர்கள்
1. “கண்ணுக்கும், மனதிற்கும், அறிவிற்கும் எட்டாததும், வாயினால் விவரிக்க முடியாததுமாக ஒன்று உண்டு. அது தான் கடவுள்” என்று சொல்லு வார்களானால் அவர்கள் தான் பகுத்தறிவற்றவர்கள் ஆவார்கள், ஏனெனில் அவர்கள் தாங்கள் சொல்லுவதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாயிருப் பதை அறிகிறார்களில்லை. 2. தான் செய்யும் அக்கிரமங்களுக்கு பரிகாரமும் மன்னிப்பும் கிடைப் பதற்காகவும், அடுத்த ஜன்மத்தில் சுகமடைவதற்காகவும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் பக்தி செலுத்துகின்றவர்களும் சமயச் சின்னங்கள் அணிபவர்களும் திருடர்கள் அல்லது மூடர்களே ஆவார்கள். 3. “மோட்சத்திற்காக நாமம், விபூதி தரித்து தாரகம், பஞ்சாட்சரம் ஜெபிப்பவர்களும், சுயேச்சையாக கதர் உடுத்தி, கதர்க் குல்லாய் போட்டுக் கொண்டு இராட்டினம், தக்ளி, நூல் நூற்பவர்களும் ஒரேவிதமான மூட நம்பிக்கையின் பாற்பட்டவர்களும், சுய அறிவற்ற செம்மறியாட்டுக் கூட்டத் தில் சேர்ந்தவர்களுமேயாவார்கள்”. 4. “கடவுள் தங்களுக்கு “நன்மை” செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டுமென்று சிலர் சொல்லுவதனால் கடவுள் பலருக்குத் “தீமை” செய்ததற்காக தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன செய்ய வேண்டும்?” 5. “கடவுள் தன்னை பணக்காரனாகப் பிறப்பித்ததற்காக ஒரு பணக் காரன் கடவுளுக்குக் கோயில் கட்டினால் ஏழையாகப் பிறப்பித்ததற்காக அந்த ஏழை மகன் அக்கோயிலை இடித்துத் தகர்க்க வேண்டாமா? அல்லது அந்தச் சாமியை . . . . . வேண்டாமா?” 6. “நமது நாட்டில் வெள்ளைக்கார ஆதிக்கம் பார்ப்பனனின் தயவிலி ருக்கின்றது. பார்ப்பன ஆதிக்கம் மதத்தின் தயவில் இருக்கின்றது. மத ஆதிக்கம் சாஸ்திரத்தின் தயவிலிருக்கின்றது. சாஸ்திரத்தின் ஆதிக்கம் கடவுள் தயவிலிருக்கின்றது. ஆகவே கடவுளின் ஆதிக்கத்தை முதலில் ஒழித்தால்தான் மற்ற ஆதிக்கங்கள் குறைந்து நாட்டை நலமடையச் செய்ய முடியும்”. 7. “அரசாங்க வரியையும், மதவரியையும் கணக்குப் பார்த்தால் அரசாங்க வரியைவிட மதவரியே அதிகமாகும்”. 8. “வெள்ளைக்காரர்களின் கொள்ளையையும், நமது கடவுள்களின் கொள்ளையையும் கணக்குப் பார்த்தால் நமது கடவுள்கள் கொள்ளையே வெள்ளைக்காரர்கள் கொள்ளையைவிட பல மடங்கு அதிகமாகும்” 9. “இந்த வைகாசி மாதத்தில் மாத்திரம் தென்னாட்டில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் மூன்று கும்பாபிஷேகங்கள் நடந்திருக்கின்றன. இந்தக் கோயில்கள் மூன்றும் சுமார் 10 அல்லது 12 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டவைகளாகும்”. 10. “இன்றைய தினம் நமது தமிழ்நாட்டில் மாத்திரம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் எஸ்டிமேட்டுகள் (திட்டம்) போடப்பட்ட பல கோவில்களின் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன”. இவைகளுக்கு பல லட்ச ரூபாய் முதலாக வைத்து பல கடைகளில் லேவாதேவி முதலிய வியாபாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 11. “பணக்காரர்களிடம் போய்ச் சேரும் பணங்கள் பெரும்பான்மை யும், கோயில் கட்டுதல் கும்பாபிஷேகம் செய்தல், உத்சவம் செய்தல், லட்சம் பார்ப்பன போஜனம் செய்தல் முதலாகிய இந்த தேசத்தின் நாச வேலைக்கே போய்ச் சேருவதால், பணக்காரர்களின் மீதும் போர் தொடுக்க வேண்டியது அவசரமான அவசியமாகின்றது”. 12. “பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ள “கற்பு”த் தான் ஆண்களின், ஒழுக்கக் கேட்டிற்கும், மிருக சுபாவத்திற்கும் முதற்காரணமாயிருக்கிறது”. 13. “இந்தியாவில் சரியான கல்வி இல்லாமல் போனதற்குக் காரணம் மதக் கொள்கையும், கடவுள் செலவுமேயாகும்”. 14. “புருஷர்கள் தாசி, வேசி, வைப்பாட்டி வைத்துக் கொள்வது சகஜ மாயிருப்பது போலவே, ஒவ்வொரு பெண்ஜாதிகளும் ஆசை நாயகன் வைத்துக் கொள்வது சகஜமென்று ஆகிவிட்டால் புருஷர்கள் தாசி முதலியன வைத்துக் கொள்வதை உடனே நிறுத்தி விடுவார்கள்”. 15. “தீண்டாமையை ஒழிக்கும் படி மேல் ஜாதியார் என்பவர்களிடம் 40 வருஷம் பணிந்து பணிந்து செய்த வேலையை விட “நீங்கள் தீண்டாத வர்கள்” அல்ல என்பதாக “தீண்டப்படாதவர்கள்” என்பவர்களிடம் ஒரு வருஷம் செய்த வேலையானது எத்தனையோ பங்கு அதிகமான பலனைக் கொடுத்திருக்கின்றது”. 16. “பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கும்படி ஆண்களிடம் 40 வருஷம் கெஞ்சிக் கெஞ்சி வேலை செய்ததின் பலனை விட பெண்களிடம் “நீங்கள் அடிமைகள் அல்ல, ஆண்களைப் போலவே உங்களுக்கும் எல்லா வித சுதந்திரமும் உண்டு” என்று ஒரு வருஷம் செய்த வேலையால் எவ்வளவோ பயன் விளைந்திருக்கின்றது”. 17. “இந்தியாவின் ஈன நிலைமைக்கு அர்த்தமற்ற முறையில் சமய சந்தர்ப்பமில்லாமல், தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தையே வைது கொண்டி ருக்கும் வரை நாங்கள் பெரிய தேச பக்தர்களாகவும், தியாகிகளாகவும் கருதப் பட்டோம். ஆனால் இப்போது அந்த ஈன நிலைமைக்கு உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து அதன் அஸ்திவாரத்தில் கையை வைத்து அடி யோடு சாய்க்க ஆரம்பித்தவுடன், பார்ப்பனர்களாலும், அவர்கள் தாசர்களான சமயப் பிழைப்புக்காரர்களாலும் நாங்கள் பார்ப்பன துவேஷிகளாகவும், நாஸ்திகர்களாகவும், மதத் துரோகிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கருதப்படுகிறோம்”. 18. “இந்து மதம் என்பதற்கு ஆங்கில அகராதியில் “மகமதியர்கட்கு விரோதமானது” என்று அர்த்தம் எழுதப்பட்டிருக்கின்றது”. தமிழ் அகராதியில் மகமதியர்கள் என்பதற்கு “மிலேச்சர்” என்று அர்த்தம் எழுதப் பட்டிருக்கின்றது. வட மொழி நூல்களில் “ஒரு மகமதியனைத் தொட்டால், தொடப்பட்ட நமது பாகத்தை வெட்டித் துண்டித்து விட வேண்டும்” என்று குறிப்பிட்டிருப் பதாகச் சொல்லப்படுகிறது. மகமதிய மத ஆதாரங்களில், ஒரு கடவுளுக்கு மேல் வணங்குகிறவர் களையும், கடவுளுக்கு உருவம், பெண்டு பிள்ளைகளைக் கற்பிக்கின்றவர் களையும் “காபர்” என்றும், அவர்களைக் கொன்றால் கூடக் குற்றமில்லை என்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த நிலைமையில் இரு மதத்தையும் வைத்துக் கொண்டு இந்து -முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்த முடியுமா?” 19. “கோவில் கட்டவும் தேர் செய்யவும் உத்சவம் நடத்தவும் பணம் கொடுக்கும் ஜனங்கள் எவ்வளவு பகுத்தறிவுடனும் நல்ல காரியம் என்கின்ற பிரதி பலன் உணர்ச்சியுடனும் கொடுக்கின்றார்களோ அந்த அளவு பகுத்தறி வும் அந்த அளவு பிரதி பலனுடைய உணர்ச்சியோடு தான் தேசீய காரியத்திற் கும் ஜனங்கள் பணம் கொடுக்கிறார்கள்”. 20. “கோவில் டிரஸ்டிகளின் உண்டிகையில் போடும் பக்தர்களின் காணிக்கைகள் என்ன பலன் அடைகின்றதோ அந்த பலன் தான் தேசீய “டிரஸ்டிகள் வைத்திருக்கும்” தேசிய நிதி” உண்டிகையில் போடும் காணிக் கைப் பணங்களும் அடைகின்றன”. 21. “சாமி பேரால் கோவில் பூசாரிகளின் தட்டத்தில் போடப்படும் பணம் என்ன பலனடைகின்றதோ அந்தப் பலன் தான் தேசீயப் பூசாரிகளின் தட்டத்தில் (கையில்) போடும் பணமும் அடைகின்றது.” 22. “கோவில் உர்ச்சவத்திற்கு என்றும், அபிஷேகத்திற்கென்றும், பஜனைக்கென்றும், கட்டளைக்கென்றும், வேல், மணி செய்வதற்கென்றும் பணம் கேட்கவும் வசூலிக்கவும் யாருக்கு வேண்டுமானாலும் எப்படி உரிமை யுண்டோ அப்படியே தான் தேசீயத்திற்கு பணம் வசூலிக்கவும் யாருக்கும் உரிமையுண்டு”. –
ஈ.வெ.ரா . குடி அரசு – துணுக்குகள் – 22.06.1930