செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு
சகோதரிகளே! சகோதரர்களே!!
நான் திரு. சண்முகம் அவர்களைப் பற்றிப் பேசுவது எனக்கே கொஞ்சம் சங்கடமாகத்தானிருக்கின்றது. ஏனெனில், அவர் எனது ஜில்லாக் காரர். அத்தோடு, இவ்வியக்கத்தில் ஈடுபட்டு, ஒத்துழைக்கும் எனது நண்பரும் ஆவார். அப்படிப்பட்ட ஒருவருடைய பெருமையைப்பற்றி எடுத்துச் சொல்ல ஏற்பட்டது எனக்கும் சங்கடமான நிலைமை, எனது நண்பருக்கும் சங்கடமான நிலைமை ஏற்பட்டது தானென்று சொல்ல வேண்டும். ஆனபோதிலும், கடமை யைச் செலுத்தவேண்டிய அவசியம் நேர்ந்த காலத்தில் சொந்த அசௌகரி யத்தை உத்தேசித்து நழுவிக்கொள்ளப் பார்ப்பது நியாயமாகாது. ஆகவே, சில வார்த்தைகள் சொல்லவேண்டியவனாகயிருக்கின்றேன். ஏனெனில் இந்த நாட்டில், சுயமரியாதை பிரசாரம் நடை பெறக்கூடாதென்றும், இந்த மகாநாடு இங்கு நடத்தப்படக் கூடாதென்றும், பல சிவநேயர்களும், பண நேயர்களும் பெரிய முயற்சிகள் எடுத்து, எவ்வளவோ சூழ்ச்சிகளும் கஷ்டங்களும் செய்து பார்த்தார்களாம். ஒன்றும் பயன்படாமல்போய், பிரசாரமும் தாராளமாய் நடைபெற்று, மகாநாடும் இவ்வளவு ஆடம்பரத்தோடு இத்தனை ஆயிர ஜனங்களுடைய ஆதர வோடு ஆண் -பெண், மேல் ஜாதி – கீழ் ஜாதி, பணக் காரன்-ஏழை என்கின்ற பாகுபாடும், வித்தியாசமுமில்லாமல் நடைபெறுவதை பார்த்தவுடன், மேற்படி பணநேயர்கள் “யாரோ சில காலிகள் வந்து கூட்டம் போட்டு, கத்திவிட்டுப் போகின்றார்”களெனவும், சிவநேயர்கள் “ யாரோ சில அறிவற்ற பாமரமக்கள் வந்து கூப்பாடு போடுகின்றார்” களெனவும், அதைப் பற்றி யாரும் கவனிக்கப்படா தெனவும் சொல்லிக்கொண்டு, இளைப்பாரு வதாகக் கேள்விப்பட்டேன். ஆதலால்தான், இந்தக் கூட்டத்தில் வந்திருக்கும் காலிகளும் அறிவற்ற பாமர மக்களுக்கும் யார் யார் என்பதை தெரிவிப்ப தற்காகவும், இதிலிருந்து இந்தப்படி சொன்னவர்கள் யாராயிருக்கக் கூடுமென் பதை உங்களையே யூகித்து அறிந்து கொள்ளச் செய்வதற்காகவும் சில வார்த்தைகள் பேசுகின்றேன். திரு. சண்முகம் அவர்கள் ஒரு பணக்காரரும், இயந்திர சாலை முதலாளியும், நிர்வாகியுமாவார். அவர் பி.ஏ.பி.எல். பட்டம் பெற்ற படிப்பாளியாவார், நான்கு ஜில்லாக்களுக்கு பிரதிநிதியாக இந்திய சட்டசபை அங்கத்தினருமாவார். அது மாத்திரமல்லாமல், இந்தியாவின் பிரதிநிதிகள் அடங்கிய இந்திய சட்டசபைக்கு உபத்தலைவருமாவார். உயர் திரு. காந்தி முதலியவர்கள் செல்லும் வட்டமேஜை மகாநாட்டிற்கு இந்திய பிரதிநிதியாக செல்ல தெரிந்தெடுக்கப்பட்டவருமாவார். தமிழ்நாட்டி லிருந்து எப்பொழுதும் திரு. ஐயங்கார்களே இந்திய சட்டசபைக்குச் செல்வதாக யிருந்த வழக்கத்தை, இவர் ஒருவர்தான் மீறி, அங்கு போனவரும், மற்றவர் களையும் ஒவ்வொரு ஐயங்கார்களாக ஒழித்துக்கொண்டு வரும்படியாக ஏற்பாடும் செய்தவருமாவார். திரு.ஷண்முகம் அவர்கள் பள்ளியில் படிக்கும் பொழுது முதலே, நல்ல அறிவாளியென்றும், பேச்சாளியென்றும் தங்கப் பதக்கமும், போட்டிப்பரிiக்ஷ வெற்றி பத்திரமும் பெற்றவர். அவர் வக்கீல் தொழிலிலும் பிரபலமும் சாமார்த்தியமும் பொருந்தியவர். மாதம் 3000 ரூபாய் சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகம் கிடைக்க விருந்ததை வேண்டாமென்று சொன்னவர். இவைகள் மாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கக் கொள்கை களை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளா விட்டால் தான் காங்கிரசில் இருக்க மாட்டே னெனவும் சொன்னவர். அன்றியும், சுயமரியாதை இயக்கம், நாஸ்தீக இயக்க மல்லவென்று எங்கும் பேசி, வெற்றிபெற்று வருபவர். ஆகவே, இப்படிப்பட்ட பிரமுகர்கள் கலந்து, தலைமை வகித்து நடத்தப்படும் இந்த மகாநாடு யாரோ இரண்டுகாலிகள் வந்து பேசிவிட்டு போனதாகுமா யென்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் இதைச்சொன்னேன். மற்றும், சுய மரியாதைச் சங்கத் தலைவராகிய டபுள்யூ.பி.ஏ சௌந்திரபாண்டியன் அவர் களும், மற்றும் அவர்போன்ற இரண்டொரு கனவான்களும் இதில் கலந்து உழைப் பதையும் நீங்கள் பார்க்கின்றபோது, இந்த ஊரிலுள்ள காலிகளில்லாத பணக்காரர்களென்பவர்களுக்கு இவர்கள் எந்த விதத்திலாவது சிறிதும், இளைத்தவர்கள் அல்லவென்பது உங்களுக்கு நன்றாய்த்தெரியும். அறிவு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் இந்தப்பக்கத்திலுள்ள, எந்தப்பெரிய ஆள் என்பவரின் அறிவிற்கும், சுயமரியாதை இயக்கத்திலுள்ள எந்த சாதாரண ஆளின் அறிவும் குறைந்ததல்ல வென்பதை நீங்கள் நன்றாக இதுவரை உணர்ந்திருப்பீர்கள். ஏதோ, இந்தப் பக்கங்களிலுள்ள சில அதிகாரி களை தங்களுடைய பணச் செருக்கினால் சுவாதீனப் படுத்திக் கொண்டிருக் கின்றோம் என்கின்ற ஆணுவத்தால், சில்லரைத் தொல்லைகள் விளைவிக் கின்ற ஒரு காரியத்தைத் தவிர வேறு எந்த விதத்திலும், இந்த மகாநாடுகள் பாதிக்கப்படகூடியதல்ல. ஆகையால், இச்சிறு உரைகளோடு திரு. ஷண்முகம் அவர்களை இம்மகாநாட்டின் தலைமை வகித்து, நடத்திக் கொடுக்கும்படியாக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு : காரைக்குடியில் 07.04.1931 அன்று நடைபெற்ற செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டில் தலைவரை முன்மொழிந்து ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 19.04.1931