ஸ்ரீவில்லிப்புத்தூர்
சகோதரர்களே!
நாங்கள் இங்கு சுயமரியாதை இயக்கசம்மந்தமான பிரசாரம் செய்யவே அழைக்கப்பட்டோம். இங்குள்ள முனிசிபல் தகராறுகளைப்பற்றி எங்களுக் குக் கவலை இல்லை. யாருக்கும் ஓட்டுவாங்கிக் கொடுக்க நாங்கள் இங்கு வரவில்லை. உங்களில் சிலர் நாங்கள் யாரோசிலருக்கு ஜஸ்டிஸ் கக்ஷி பேரால் ஓட்டுவாங்கிக் கொடுக்க வந்திருப்பதாய்க் கருதிக்கொண்டு ஆத்திரப் பட்டதாய் தெரிகின்றது. நாங்கள் பணம் வசூல் செய்யவும் இங்கு வரவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் என்னைப் பொருத்தமட்டில் இரண்டு காரியங்கள் உறுதி. அதாவது இயக்கத்தின் பேரால் யாரையும் போய் நான் எனக்கு ஓட்டு கேட்பதில்லை. இயக்கத்தின் பெயரால் வயிரு வளர்க்கவோ அல்லது யாரையும் போய் பணம் கேட்கவோ போவதில்லை. இந்த இரண்டு காரியங் களைப் பொருத்தவரை நான் உறுதியாக இருக்கின்ற தாய் நான் என்னைக் கருதிக்கொண்டிருக்கும்வரை எப்படிப்பட்டவர்களுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் வராது என்றும் எனதுகொள்கை எதுவானாலும் அதை வெளியி லெடுத்துச் சொல்ல பயப்படவேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் கருதி இருக்கின்றேன். இந்த உறுதிதான் இந்த இயக்கம் ஆரம்பித்த காலம்முதல் என்னை இயக்க விஷயத்தில் எவ்வித ராஜிக்கும் இணங்காமல் ஒரே பிடியாய் இருக்கவும் மேலும் மேலும் முற்போக்கான கொள்கையை எடுத்துச் சொல் லவும் செய்து வருகிறது. இதில் சேர்ந்திருக்கும் மற்றவர்களைப் பற்றியும் நான் குறைகூறுவதில்லை. அவரவர்கள் நிலைமையைப் பார்த்து அவரவர்களை அதற்கு தகுந்தபடி மதித்துவிட்டு அவரவர்களால் கூடுமான உதவியை இவ் வியக்க நலத்திற்கு பெற்றுக் கொண்டு வருகிறேன். எனவே யார் வேண்டுமா னாலும் எனது கொள்கை முரணை எடுத்துக்காட்டி அதன் மூலம் இவ்வியக் கத்திற்கு ஏதாவது குற்றம் சொல்ல வந்தால் மாத்திரம் நான் பயப்படுவேனே ஒழிய வேறு எந்த வழியில் யார் மிரட்டினாலும் நான் பயப்படக் கூடாதவனாய் இருக்கிறேன்.
சகோதரர்களே! மற்றும் நான் சொல்லுவ தென்னவென்றால் எந்தக் காரணத்தாலும் இந்த இயக்கம் அழிவுபடவும் முடியாது என்பதை தயவு செய்து உணருங்கள். என் நடத்தையாலோ என் சாவினாலோ இயக்கம் சிறிது கூட அடங்க முடியாது. என் சாவைப்பற்றி எனக்கு 12 வருஷ காலமாகவே கவலையற்று இருக்கின்றேன்.
ஆதலால் தான் இவ்வளவு தலைகீழான இயக்கத்தை ஆரம்பித் திருக்கின்றேன். ஆதலால் தான் இவ்வளவு தலை கீழான கொள்கைகளைத் தைரியமாய் வலியுறுத்துகின்றேன். நான் சாவுக்கோ, அடி, உதைக்கோ பயந் திருந்தால் கடவுளைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்றும், கோயில்கள் ஒழிய வேண்டுமென்றும், தீர்த்தங்கள் தூர்க்கப்பட வேண்டும் என்றும், கதர் திட்டம் பயனற்றது என்றும், காங்கிரஸ் புரட்டு காந்தீயம் மயக்கம் என்றும், கற்பு என்பது பித்தலாட்டமென்றும், காதல் என்பது இல்லையென்றும், இராமன் என்பவன் கெட்டவன், இராவணன் என்பவன் நல்லவன், புராணம் என்பது ஆபாசம், வேதம் என்பது சூது, மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம், கல்யாண விலங்கு வேண்டாம், பிள்ளைகள் பெறவேண்டாம், பணக்காரத் தன்மை ஒழியவேண்டும். பார்ப்பனீயம் அழிய வேண்டும். கடவுளைப்பற்றிக் கவலை கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டும், மற்றும் இதுபோன்ற பல பழையதும், உணர்ச்சியானதுமான விஷயங்களையும் குற்றம் சொல்ல முன் வந்திருப்பேனா என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தப்படி சொன்ன அநேகர் இதற்கு முன் பட்டதை எல்லாம் நான் தெரிந்து கொண்டு எல்லா வற்றிற்கும் துணிந்துதான் இப்படிச் சொல்லுகிறேனா அல்லது தெரியாமல் சொல்லுகின்றேனா என்று யோசித்துப்பாருங்கள். இப்போது நாங்கள் எங்கிருந்துவருகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ன தீர்மானம் நிறைவேற்றிவிட்டு வரு கின்றோம் என்பது உங்களுக்குத்தெரியுமா? என்று கேட்கின்றேன்.
தூத்துக்குடியில் இருந்து வருகின்றோம். தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டில் திரு. காந்தி அவர்களிடம் நம்பிக்கையில்லை என்று தீர்மானித்து விட்டு வருகின்றோம். ஜாதிமத வித்தியாசங்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுவிட்டு வருகின்றோம்.
ஆகவே நாங்கள் எங்களுக்குத் தோன்றிய விஷயங்களை எடுத்துச் சொல்ல பயப்படவில்லை என்பதை உணருங்கள். அப்படி நாங்கள் சொல் வதால் ஏதாவது கெடுதி ஏற்படுமென்று தோன்றினால் நீங்கள் மறு கூட்டம் கூட்டி தக்க காரணங்களோடு மறுத்துச் சொல்லுங்கள். அப்படிச் சொல்ல முடியாவிட்டால் உங்களிடம் போதிய சமாதானம் இல்லையென் றும், நீங்கள் சொல்லுவதை மக்கள் மதிப்பதில்லை என்றும், அல்லது நீங்கள் கோழைகள் என்றும்தான் அருத்தம். காங்கிரசிலாவது, கதரிலாவது நாங்கள் உங்களைவிட இளைத்தவர்களல்ல. தமிழ் நாட்டில் கதர் ஸ்தாபனம் ஏற் படுத்தியவர்களே நாங்கள்தான். நாங்கள் கதருக்குத் தனி ஸ்தாபனம் ஏற்படுத் தியவுடன் தங்கள் லாபம் போய்விட்டதே என்று உங்கள் ஊர் கதர் வியா பாரிகளும் மற்றும் கதர் வியாபாரிகளும் கூப்பாடு போட்டது எனக்குத் தெரியும். கதரைப்பற்றியும், காந்தியைப் பற்றியும் கிராமம் கிராமமாய் நடந்து சென்று, பிரசாரம் செய்தவர்கள் நாங்கள்தான். எங்களைப் பார்த்துத்தான் அநேகர் காங்கிரசைப் பற்றியும், கதரைப் பற்றி பேசவும், பிரசாரம் செய்யவும் பழகினார் கள் என்று ஆயிரக்கணக்கான தடவைகளில் நீங்களே சொல்லி இருக்கின் றீர்கள். அப்படிப்பட்ட நாங்கள் ஏன் இன்று கதர், காங்கிரஸ், காந்தியம் ஆகிய மூன்றையும் கண்டித்துப் பேசுகின்றோம் என்று யோசித்துப்பாருங்கள். எங்க ளுக்கு ஏதாவது சுய நலம் கற்பிக்கின்றீர்களா? உங்கள் மனதில் இருந்தால் தைரியமாய்ச்சொல்லுங்கள். திரு.எஸ். இராமநாதன் அவர்களை இன்னமும் திரு. காந்தியும், திரு. ராஜ கோபாலாச்சாரியும் அழைத்துக்கொண்டுதான் இருக் கின்றார்கள். அவர் காங்கிரசில் இருந்தால் மாகாண காரியதரிசி மாத்திர மல்லாமல் இந்திய காங்கிரஸ் காரியதரிசியாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவார். பணமும், மாதம் 300, 400 பெறப்படுவார். அவர் காங்கிரசைவிடும்போதும், கதர் போர்டில் மாதம் 150, 200 வீதம் சம்பளம் கொடுக்கப்பட்டதை வேண்டாம் என்று தள்ளிவிட்டுதான் வந்தார். நாளதுவரை அவரைப்பற்றி யாரும் எவ்வித உள்எண்ணமும், கற்பித்துப் பேசமுன்வரவில்லை. அவருடைய அபிப்பிரா யங்களை மறுத்துச் சமாதானம் சொல்லவும் முன் வரவில்லை. இன்றைம் தினம் அவர் பேரில் குற்றம் சொல்லுகின்றவர்களோ, அவரது கொள்கைகளுக் காக அவரைக் கண்டிக்கின்றவர்களோ 100-க்கு 90பேர்கள் ஏதோ ஒரு வகை யில் காங்கிரஸ் பேரிலோ, கதர் பேரிலோ, தேசீயத்தின் பேரிலோ தொழிலில் ஊதியம் சம்பாதிப்பவர்களாகவே இருப்பதை நீங்கள் கவனித்துப்பார்த்தால் உணரலாம். அவ்வளவுயில்லாவிட்டாலும் நானும் காங்கிரசில் மாகாணத் தலைவராகவும், கதரில் கதர் போர்டு பிரசிடெண்டாகவும், காந்தீயத்தில் மாறு தல் வேண்டாத வைதீக காந்தி சீடனாகவும் இருந்தவன்தான். வேறு ஒன்றும் சொல்லாமல் நான் இதுவரை காங்கிரசில் இருந்திருந்தால் திரு. ராஜகோபா லாச்சாரியைப்போல் நானும் ஒரு மடாதிபதியாய் இருந்து கொண்டு கையில் 2, 3 லட்சம் ரூபாய் ஆதிக்கம் வைத்துக்கொண்டு, பல சிஷியர்களையும் உடையவனாக இருப்பேன்.
முன் ஒத்துழையாமை ராஜிக்கு திரு. காந்தி என் மனைவியைக் கேட்டுத்தான் பதில் சொல்லவேண்டுமென்று சொன்னதுபோல் உப்பு சத்தியாக்கிரக ராஜிக்கும் நம்மைக் கேட்டுத்தான் திரு. இர்வினுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும்படியான மனிதனாகி இருப்பேன். அதனால் எனக்கும் சிறிதுகூட பொருள் நட்டமோ, சரீர சௌக்கியக் குறைவோ ஏற்பட் டிருக்கவுமாட்டாது.
அன்றியும், காங்கிரஸ்காரர்கள் பதவியோ, உத்தியோகமோ பெற நேரும்போது முதல் பங்கு எனக்குக் கிடைக்கவும் ஒரு சந்தர்ப்பம் உண்டு. ஆகவே நாங்கள் ஏன் இன்று உங்களிடம் வசவு கேட்கின்றோம். கதர், காங்கிரஸ், காந்தி என்னும் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். நாடு பிற்போக்கடைகின்றது. ஏழைகளும், தாழ்த்தப்பட்டோரும் தலை தூக்க முடியாமல் அழுத்தப்படுகின்றதை எங்களால் பார்க்க, சகிக்க முடியவில்லை.
கதர்
இந்த நாட்டில் கதரையும், காங்கிரசையும், காந்தியையும் பற்றிச் சொல்லிக்கொண்டு, வாழ்வதற்குப் பல சௌகரியங்கள் ஏற்பட்டு விட்டதால் அவற்றிற்குச் செல்வாக்குப் பலத்து விட்டது. அதற்கு வக்காலத்துப் பேச அநேகர் ஏற்பட்டு விட்டார்கள். ஆதலால் அதை எதிர்ப்பவர்களுக்குக் கஷ்டம் அதிகமாகிவிட்டது. 50 வருஷ காங்கிரசினால் கண்ட பயன் இதைத் தவிர வேறு என்ன? 10 வருஷ கதரில் கண்ட பயன் என்ன? நான் கதர்தான் கட்டுகிறேன். என் நண்பர்கள் பலர் இன்னும் கதர்தான் கட்டுகிறார்கள். கண்ட பலன் என்ன? ஒன்றுக்கு மூன்றாய், நான்காய்ப் பணம் கொடுக்கின்றோம். ஆனால், ‘அசௌகரியத்தால் அடிக்கடி கஷ்டப்படுகின்றோம். கஷ்ட மாவது சகித்துக் கொள்ளலாம்’ என்றால் பணம் எத்தனை நாளைக்கு நஷ்டப்படுவது? கெஜம் 3 அணாவுக்கு வாங்கக்கூடிய துணிக்குப் பதிலாக அதைவிட மட்ட மான துணிக்கு கெஜம் 10 அணா கொடுக்கின்றோம். கதரை குற்றம் சொல்லு கின்றீர்களே யொழிய 3 அணா துணிக்கு 10 அணா கொடுக்கின்றீர்களே என்று நீங்கள் சற்றுகூட யோசியாமல் இருக்கின்றீர்கள். காயலாக்காரன் காயலா தீருவதற்கு மருந்து சாப்பிடுவதுபோல் என்று சொன்னால் வாயிதா காலம் வரை மருந்து சாப்பிடலாம். அப்படிக்கின்றி காயலா வராமல் இருக்க வேண்டுமானால் எப்போதும் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்கிற முறையில் எத்தனை நாளைக்கு மருந்தே சாப்பிட்டுக் கொண்டி ருப்பது. அறிவிருந்தால் வேறு வைத்தியனைத் தேட வேண்டாமா? என்று கேட்கின்றேன். உங்கள் கதரினால் அநேக சோம்பேரிகள், பித்தலாட்டக் காரர்கள் கொள்ளை லாபமடைந்து பிழைக் கின்றார்கள். யாரோ பாட்டிமார் கல்வி அறிவு கொடுக்கப்படாமல் அடக்கி வைக்கப்பட்டிருப்பவர்கள் சிறிது கூலிபெறுகிறார்கள். அதுவும் ஒரு மணிக்கு ஒரு தம்பிடியேபெருகின்றார்கள். இந்த திருப்தி போதுமா? உங்கள் அறிவை நடு நிலைமையில் வைத்து யோசியுங்கள். பணமுள்ளவன் இடமிருந்து, அல்லது பைத்தியகாரர்கள் இடமிருந்து பணம் செலவு செய்யத்தான் கதர் பயன்படுகின்றதே அல்லாமல் ஏழை மக்கள் 100-க்கு 75 பேர்களான ஏழை மக்கள் 20 பேர்களான நடுத்தர மக்கள் ஆகியவர்களுக்கு கதர் பயன்படக் கூடியதா சாத்தியப்படக்கூடியதா என்று யோசியுங்கள். நாட்டுக்கும், சமூகத்திற்கும் அறிவிற்கும் அனுபவத் திற்கும் பொருத்த மில்லாத திட்டங்களை வகுத்துக்கொண்டு தேசம் என்னும் பேரால் பொது மக்களை கதர் கட்டுகின்றாயா இல்லையா என்று மிரட்டினால் கதர் திட்டம் யோக்கியமான புத்திசாலித் தனமான திட்டம் ஆகுமா என்று கேட்கின்றேன். இன்று கதர் ஒருவித கொள்கையுடையவர்களுடைய வேஷச் சின்னமாய் இருக்கின்றதே யொழிய அந்தக் கொள்கைகளில் ஒன்றாய் இருப்ப தாகத் தெரியவில்லை. எப்படி யென்றால் சிவ பக்தர்கள் என்பதற்கு அடையாளம் விபூதியும் ருத்திராட்சமுமாய் இருப்பது போல் தேச பக்தர்கள் என்பதற்கு அடையாளம் கதருடையாயிருக்கின்றது. மற்றபடி இரண்டுக்கும் வேறு வித்தியாசமில்லை.
ஆகவே இந்த மாதிரியான காரியங்களில் மக்களைக் கட்டாயப் படுத்துவது மனிதனை அடிமைப்படுத்துவதேயாகும்.
காங்கிரஸ்
தவிர காங்கிரஸ் விஷயத்திலும் நானறிய இந்த 20 வருட காலமாய் காங்கிரசினால் ஏழை மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை. மக்களுக்குச் சரீரப்பிரயாசையாவது மனக்கவலையாவது மானமற்ற தன்மையான இழி வானது சிறிதும் குறைந்ததாகயாரும் சொல்லமுடியாது. இனி வரப்போகும் சுதந்திரத்திலாவது மக்களின் இவ்விதகஷ்டம் குறையத்தக்கநிலைமை ஏற்படும் என்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. இது வீணாக ஏழைகளையும் முட்டாள்களையும் கைமுதலாய் வைத்துக்கொண்டு சிலரால் செய்யப்படும் தேசீய வியாபாரமே தவிர இதனால் கடுகளவும் மக்களுக்கு நன்மை உண்டாகப்போவதில்லை. ஏதாவது உண்டாயிற்று அல்லது உண்டாகப் போகின்றது என்று உங்களுக்குத் தோன்றினால் எடுத்துச் சொல்லுங்கள்.
சமய சமூகம்
மற்றபடி சமய சமூகத்துறைகளில் நமக்குப் பல நூற்றாண்டுகளாக உள்ள கஷ்டமும் நஷ்டமும் சிறிதுகூடக் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகின்றது. அதை ஒழிக்க யாரும் பாடுபடுவதில்லை. அதைப்பற்றி யாரும் நினைப்பதுமில்லை. அந்தத்துறையும் பலருக்கு ஜீவனத்திற்கு ஆதாரமாய் விட்டதால் அதை வளர்த்துக்கொண்டிருக்க சௌகரியம் ஏற்பட்டு விட்டது. சமயங்களை அழித்து சமூகக் கட்டுப்பாடு களை ஒழிப்பது என்றால் உங்களுக்குப் பிராணன் போகின்றது போல் இருக்கின்றது. அதனால் உண்டாகும் கஷ்டங்கள் எவ்வளவானாலும் சகித்துக் கொண்டிருக்கப் பின் வாங்குவதில், காப்புக்காய்த்துபோன இடத்தில் அடிபட்டால் எப்படி வலி தோன்றுவதில்லையோ அப்படியே மூட நம்பிக் கையில் காப்புக் காய்த்துபோன முட்டாள் தனம் தடிப்பேரியிருப்பதால் நஷ்டம் தெரிவதில்லை. கஷ்டம் தெரிவதில்லை. மானாவமானம் தெரிவதில்லை.
உங்கள் சாமிக்கு எத்தனை ரூபாய் பாழாகின்றது என்பதை உணர்ந் தீர்களா? உங்கள் மகாத்மா உணர்ந்தாரா? உங்கள் காங்கிரஸ் உணர்ந்ததா? உங்கள் காங்கிரஸ் தலைவர்கள் பக்தர்கள் உணர்ந்தார்களா? இதையெல்லாம் விட்டு விட்டு மானமற்று நாம் தேசீயம் தேசீயம் என்று கூப்பாடு போடுகின் றோம். சோம்பேரிகளிடம் வேலை வாங்க நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. சோம்பேரிகள் விர்த்தியாகாத மார்க்கம் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. சும்மா வெறுமனே காந்திக்கு ஜே என்கின்றீர்கள். திருப்பதி வெங்கிடாசல பதிக்கு கோவிந்தா! என்பதற்கும், பழனியாண்டவருக்கு அரோகரா! என்பதற்கும் காந்திக்கும் ஜே! என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கவனித்துப்பாருங்கள். ஒவ்வொருவீட்டுக் குழந்தைகளுக்கும் காந்திக்கு ஜே கற்பிக்கப்பட்டு வருகின்றதைப் பார்த்துத்தான் வருகின்றேன். இது மூட நம்பிக்கைத் தடிப்பும் அல்லாமல் இதில் அறிவும் கவலையும் சிறிதாவது இருக்கின்றதா என்று கவனித்துப் பாருங்கள். இந்த நிலையில் உள்ள மக்களாகிய நீங்கள் எங்களைக் குற்றம் சொல்ல வருகின்றீர்கள். உங்களைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. பரிதாபப்படுகின்றேன். உங்களை ஏய்த்து இந்தக் கதியாக்கிய தந்திரசாலிகளின் கூற்றையும் முயற்சி யையும் ஒழிக்க ஆசைப்படுகிறேன்.
குறிப்பு : ஸ்ரீ வில்லிபுத்தூர் பொதுவாசகசாலைக்கு முன்புறம் 06.04.1931 அன்று நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 12.04.1931