ஒரு யோசனை
ஈ.வெ.ரா.
“குடி அரசி”ன் ஆறாவது வருஷ வேலை முறைகளைப் பற்றி வாசகர்களையும் அபிமானிகளையும் ஒரு யோசனை கேட்க விரும்பு கின்றேன். அது விஷயத்தில் வாசகர்களும் அபிமானிகளும் தயவு செய்து ஆர அமர நிதானமாய் யோசனை செய்து தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன். “குடி அரசு” ஆரம் பித்த இந்த ஐந்து வருஷ காலத்தில் அது இந்தியாவிற்கும் சிறப்பாக தென் இந்தியாவிற்கும் செய்திருக்கும் வேலை யைப் பற்றி பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை.,
சரியோ, தப்போ அது தனக்குத் தோன்றியதைத் துணிவுடன் வெளி யிட்டு வந்திருக்கின்றது என்பதையும், அதன் கொள்கைகள் ஒவ்வொன்றும் பொது ஜனங்களிடையில் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிப் படித்தவர்கள் என்பவர்கள் முதல் பாமரர்கள் என்பவர் வரையிலும் அவர்களது உணர்ச்சி களைத் தட்டி எழுப்பி இருப்பதுடன், பொது மக்களிடையில் பெரிய மன மாறுதலையும் ஏற்படுத்தி இருக்கிறது. “குடி அரசி”ன் கொள்கைகளால் பாதிக்கப்படும் சுயநலக்காரர்கள் கூடத் தைரியமாய் மறுக்கவோ எதிர்க்கவோ முடியாமல் சிலர் மறைமுகமாகப் பிரசாரம் செய்வதும் சிலர் “குடி அரசு” க் கொள்கைகளோடு கலந்து கொண்டு வேஷம் போட்டு உள்ளே இருந்தே ஏமாற்றப் பார்ப்பதுமான வகைகளில்தான் எதிர்க்க முடிந்ததே தவிர வேறில்லை. இதற்கெல்லாம் காரணம் அதனுடைய கொள்கைகளின் சக்தியே தவிர வேறில்லை என்பதை மனப்பூர்த்தியாய்த் தெரிவித்துக் கொள்ளு கிறேன். ஆனால் அது இன்னமும் இந்தியாவுக்கும், உலகத்திற்கும் செய்ய வேண்டிய வேலைகள் நிரம்ப இருக்கின்றன. அவைகளை செய்வதற்கு “குடி அரசி” ற்கு இனியும் சற்று சுயேச்சை அதிகமாக வேண்டியிருக்கிறது.
இது வரையிலும் “குடி அரசு” சுயேச்சையோடு இருந்தது என்று சொல்லுவதானாலும் அது சில சமயத்தில் அரசாங்கத்தையும், சில சமயத்தில் செல்வவான்களையும் சில சமயத்தில் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களையும், சில சமயத்தில் பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள் என்பவர்களையும், சில சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களையும், சில சமயத்தில் மந்திரி களையும், சில சமயத்தில் தொண்டர்கள் என்பவர்களையும் ஆதரித்தும், அவர்களிடம் தாட்சண்யங்கள் காட்டியும், அவர்களின் குற்றங்களைத் தைரிய மாய் வெளியில் எடுத்துக் காட்டாமலும் இருந்து வந்திருப்பதை நான் மறைக்க முயற்சிக்கவில்லை. நமது கொள்கைகள் சற்று கடினமாய் இருந்தாலும், எதிர்ப்புகள் மிக்க பலமாயிருந்ததாலும் பொது ஜனங்களில் பெரும்பாலோர் மிகப் பாமர மக்களாய் இருந்ததாலும் அவைகள் பரப்பப்படுவதற்கு பாமர மக்களின் அறிவுக்கும் நிலைமைக்கும் தகுந்தபடி, நமது நிலைமையைச் சரிபடுத்திக் கொள்ள வேண்டி இருந்ததால் மேல் கண்டவர்களுக்கு நாம் தாட்சண்யம் காட்ட வேண்டி இருந்தது. இந்த ஐந்து வருஷ வேலையின் பலனாகவும் பொது மக்களிடம் காணும் உணர்ச்சியாலும் நிலைமையினாலும் இனியும் அவ்வித தாட்சண்யங்களுக்கு ஆளாக வேண்டியதவசியமென்று தோன்றவில்லை. ஆதலால் நடைபெறும் வருஷம் சற்று நிர்தாட்சண்ய மாகவே இருக்க வேண்டுமென்று ஆசைப்படவேண்டி இருக்கின்றது.
அதற்காக பாமர மக்களின் ஆதரவு அதிகம் உண்டாக்கிக் கொள்வதற்கு பத்திரிகை இன்னமும் சற்று அதிகமாய் பரவத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டியதவசியமாகும். “குடி அரசு” ஏற்பட்டதின் பலனாயும் அது மிக்க குறைந்த சந்தாவோடு அரிய விஷயங்களைக் கொண்டு வெளியானதின் பலனாயும் நானும் வாரந்தோறும் இரண்டு நாள் மூன்று நாள் “குடி அரசின்” கொள்கைகளைப் பரப்புவதற்கு ஆங்காங்கு பிரசாரத்திற்குச் சென்று வந்ததன் பலனாயும், தமிழ் நாட்டில் தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கு இதுவரையில் சேர்ந்திராத அளவு சந்தாதாரர்கள் சேரும்படியானதோடு பத்திரிகைப் படிக் கும் மக்களையும் அதிகமாக உண்டாக்கி இருக்கிறது. இப்பொழுது எனது உடல் நிலையானது அதிகமாகப் பிரசாரங்களுக்கு வெளிச்செல்ல முடியா திருக்கிறபடியாலும் புதிய வருஷ வேலை முறைகளின் பயனாய் எதிர்ப்புகள் பலமாக கூடுமானதாலும் பத்திரிகை விஷயத்தில் அடியில் கண்டபடி மாறுதல் செய்ய விரும்புகிறேன். ஆதலால் சந்தாதாரர்களும் அபிமானிகளும் யோசித்து தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். அதாவது. “குடி அரசு” வாரப் பத்திரிகையின் வருஷ சந்தா மூன்று ரூபாயாக விருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாமென்பது.
2. பத்திரிகையை இப்பொழுதிருந்து வரும் 20 பக்கத்திற்கு பதிலாக தற்காலம் பன்னிரண்டு பக்கமாகவும் பதினையாயிரம் சந்தா சேர்ந்த பிறகு அதாவது ஆறு மாதத்தில் பதினாறு பக்கமாகவும், பன்னிரண்டு பக்கமாயிருக்கும் போது நாலு பக்கத்திற்குள்ளாகவே விளம்பரமும், பதினாறு பக்கமாயிருக்கும் போது சுமார் 5 பக்கத்திற்குள்ளாகவே விளம்பரமும் வைத்துக் கொள்ளுவது.
இந்தப்படி இது தொடங்கும் போதே பகுத்தறிவு என்னும் மாதப் பத்திரிகையும் வருஷத்திற்கு எட்டுஅணா சந்தாவில் தொடங்குவது. ஏஜண்டு களும் பத்திரிகைகளை, முக்காலணாவிற்கு விற்று காலணா கமிஷன் எடுத்துக் கொள்வது, மற்றொரு விஷயம் அதாவது:-
பத்திரிகையின் மேல் பக்கத்திய இதழ்கள் வர்ண காகிதமாயில்லாமல் வெள்ளைக் காகித மாகவே இருக்க வாசகர்கள் சம்மதித்தால் ஆரம்பத்தி லிருந்தே வருஷம் ரூ 2 – 0 – 0 சந்தாவிற்கு 16 பக்கம் போடுகிறதென்பது. இந்தப்படி செய்வதற்கு சந்தாதாரர்கள் ஆசைப்பட்டு அனுமதி கொடுப்பதா யிருந்தால் தங்களுக்கு இருக்கிற பொறுப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பூட்டுகிறேன்.
அதாவது இந்தப்படி செய்ய அநுமதியளிக்கும் ஒவ்வொரு அபிமானி களும் மேற்கண்ட மாதிரியில் பத்திரிகை தொடங்கிய கால முதல் ஒரு மாதத்திற்குள்ளாக குறைந்தது 25 சந்தாதாரர்களுக்கு குறையாமல் 50 சந்தா தாரர்கள் வரையில் சேர்ப்பதற்கு உறுதி கொண்டு, உறுதிவாக்கும் கூடவே அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு தொடங்கப் போகும் புதிய முறைப் பத்திரிகைகளில் செய்தி களுக்கு இடமிருக்காது என்பதையும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஏன் எழுத நேருகிறதென்றால் இப்பொழுது “குடி அரசு” க்கு வரும் செய்திகள் ஒரு தினசரிக்குக் கூட வர முடியாத அளவு வந்து கொண்டிருக்கிறது. ஆதலால் அவைகளை எல்லாம் பத்திரிகையில் போட முடியாமல் மூட்டைக் கட்டி பையில் போட்டுக் கொண்டு வரப்படுகிறது என்பதை மிக்க வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
எச்சரிக்கை
பத்திரிகையின் கொள்கைகளைப் பற்றி முன்னமே “குடி அரசில்” தெரிவித்திருக்கிறதானாலும், சுருக்கமாக முக்கியமான கொள்கையை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.
அதாவது இப்போதுள்ள சமயங்களென்பவைகளைக் கண்டிப்பாக ஒப்புக் கொள்வதில்லை என்பதும் சாமிகள் என்பவைகளின் சங்கதிகளைத் தாட்சண்யமில்லாமல் வெளிப்படுத்தி விடுவதென்பதும், செல்வவானாயிருப் பதும், ஏழையாயிருப்பதும் கடவுள் செயலால் என்கின்ற எண்ணத்தை மக்களி டமிருந்து அடியோடு போக்கி செல்வத் தன்மையின் கொடுமைகளையும் புரட்டுகளையும் தெளிவுபடுத்தி விடுவதும் அதுபோலவே அரசாங்கமும் கடவுளுடைய கட்டளை என்பதை மாற்றி ஜனங்களுக்காக எல்லாரையும் சம மாய் நடத்தும் சமதர்ம ஆட்சிதான் நிலைபெறவேண்டிய ஆட்சி என்பதை நிரூபிப்பதுமாகும். இதற்கு இடையூறாய் வரும் சமையக்காரனையோ, சாமி பக்திக்காரனையோ, பண்டிதனையோ, பணக்காரனையோ, அரசாங்கத் தையோ, ஆட்சியையோ முடிவு வரையில் எதிர்த்து நிற்பதேயாகும்.
ஆகவே இவைகளை ஆதரிக்கக் கூடிய அபிமானிகள் தயவு செய்து தங்களது இஷ்டத்தை சீக்கிரத்தில் அறிவிப்பார்களானால் அநுகூலமாயி ருக்குமென்று தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன்.
குடி அரசு – தலையங்கம் – 25.05.1930