ஈரோடு மகாநாடு – I
இம்மாதம் 10, 11, 12, 13 தேதிகளில் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மகாநாடும் அதை அனுசரித்து வாலிபர் மகாநாடு, பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு ஆகிய ஐந்து மகாநாடுகள் முறையே திருவாளர்கள் பம்பாய் எம். ஆர். ஜயகர், நாகர்கோயில்
பி. சிதம்பரம், டாக்டர் முத்துலட்சுமி அம்மாள், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், தஞ்சை பொன்னையா ஆகியவர்கள் தலைமையில் நடைபெற்றன. இம் மகாநாடுகளுக்கு வரவேற்புக் கழக அக்கிராசனர்களாக முறையே திருவாளர் கள் ஆர். கே. ஷண்முகம், ஜே. எஸ். கண்ணப்பர், லட்சுமி அம்மாள், கார்குடி சின்னையா, காரைக்குடி சொ. முருகப்பர் ஆகியவர்கள் இருந்து வரவேற்புக் கழக சார்பாய் வரவேற்று இருக்கின்றார்கள். இவை தவிர மேற்படி 4 நாட்களிலும் இரவு 9 மணி முதல் நடு ஜாமம் 2 மணி 3 மணி வரையில் கொட்ட கையில் சொற்பொழிவுகளும் நடைபெற்று வந்தன. மகாநாட்டு காரியங்களை நிர்வகிக்க திருவாளர்கள் ஈரோடு சேர்மென் கே. ஏ. ஷேக்தாவுத் சாயபு, கோவை ஜில்லா போர்டு பிரசிடெண்ட் சி.எஸ்.ரத்தினசபாபதி, எஸ்.ராமநாதன் முதலியவர்கள் பொது காரியதரிசிகளாகவும் திருவாளர்கள் மு. ச. முத்துக் கருப்பஞ் செட்டியார், ஈ. வி. நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, கே.என். நஞ்சப்பகவுண்டர், ஏ.ஆர்.சிவாநந்தம், கி.அ.பெ. விஸ்வநாதம், மா.ராமசாமி, மாயவரம் சி.நடராஜன், சாமி சிதம்பரனார், கேசவலால், காளியப்பன், மு. ச. சுப்பண்ணன், சுப்பராய ஆச்சாரி, அழகிரிசாமி, எஸ்.வி.லிங்கம், எஸ். குரு சாமி, ஈ. வெ. கிருஷ்ணசாமி நாயக்கர் முதலிய பலர் தனித்தனி இலாகா காரிய தரிசிகளாகவும் திருவாளர்கள் வரதப்பன், ஆறுமுகம் ஆகியவர்கள் தொண்டர்படைத் தலைவர்களாகவும் இருந்து மகாநாட்டுக் காரியங்களை எவ்விதத்திலும் குறைவு படாமல் இனிது நடத்திக் கொடுத்தார்கள். மகாநாடு கூடின காலமானது சென்ற வருஷத்திய செங்கல்பட்டு மகாநாட்டைப் போலவே, அதாவது சைமன் கமிஷன் வரவினால் ஏற்பட்ட கிளர்ச்சி சந்தர்ப் பத்தைப் போலவே இவ்வருஷமும் நாட்டில் அதை விட பல மடங்கு அதிக கிளர்ச்சியும் நெருக்கடியுமான சமயம் என்று சொல்லப்படும் உப்புச் சட்டம் மீறும் கிளர்ச்சி சமயத்திலும் திரு காந்தி முதலிய பல நூற்றுக்கணக்கான கனவான்கள் சிறையிலடைப்பட்டும் அடி,சுடு, தள்ளு முதலிய பலாத்காரச் செய்கைகள் இருதரப்பிலும் நடந்து கொண்டு இருக்கும் படியான சமயத்தி லும் மகாநாடு கூட நேர்ந்ததோடு பார்ப்பனரல்லாத பிரமுகர்களுக்குள்ளும் அவர்களது கட்சிகளுக்குள்ளும் அபிப்பிராய பேதங்களும் மனத்தாங்கல் களும் ஏற்பட்டிருக்கும் சமயத்திலும் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தொண்டர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்குள்ளும் அபிப்பிராய பேத மேற்பட்டிருக்கின்றதாக வதந்திகள் கட்டி விட்டுக் கொண்டிருக்கும் சமயத்தி லும் மூட நம்பிக்கையின் பலனால் அரசியல் கிளர்ச்சி என்பதில் பெரிதும் மக்கள் மனம் திருப்பப்பட்டு சுயமரியாதை இயக்கம், நாஸ்திக இயக்கம், பார்ப்பன துவேஷ இயக்கம், சர்க்கார் ஆதரிப்பு இயக்கம், படியாத மக்களால் நடத்தப்படும் இயக்கம், பணக்காரர்களுக்கு விரோதமான இயக்கம், பண்டிதர்களை அழிக்கும் இயக்கம், போல்ஸ்விக் இயக்கம் என்று கிருத்திரப் புத்தியுடன் பலர் விஷமப் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் காலத்திலும் அரசாங்கத்தாராலும் சுயமரியாதை இயக்கமானது அரசியல் சம்பந்தமான இயக்கமாதலால் அதில் சர்க்கார் ஒத்துழைக்க முடியாது என்று கருதப்பட்டு அந்தப்படியே நமக்கும் பல இலாக்காக்களுக்கும் தெரிவித்துவிட்டதுடன் அந்தப்படியே பல இலாக்காக்கள் ஒத்துழைக்காமலும் சில இலாக்காக்கள் விஷமங்களுக்கு இடம் கொடுத்துக் கொண்டும் இருந்த காலத்திலும் மற்றும் நான்கு நாள் இரவும் பகலும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்த காலத்திலும் நடைபெற வேண்டியதாகிவிட்டதுடன் ஏற்பாடு செய்திருந்த தேதியை விட 15 நாள் முன்னதாக வைத்தே நடைபெற வேண்டியதாகி விட்டது. இவ்வளவு அசௌகரியங்களுடன் நடத்த வேண்டியிருந்தாலுங் கூட சென்ற வருஷத்தை விட எவ்விதத்திலும் குறைவில்லாமலும், சில விஷயங்களில் அதற்கு மேலாகவும் சிறப்புடனும் வெற்றியுடனும் மகாநாடு நடந்தேறிற்றேயல்லாமல் எவ்விதத்திலும் குறைவு படவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அன்றியும் திரு. யம். ஆர். ஜயகர் அவர்களை நாம் இம்மகாநாட்டுக்கு தலைமை வகிக்க அழைக்க வேண்டுமென்று முதல் முதல் கருதிய காலத்தில் முதலாவதாக எந்த காரணத்தைக் கொண்டு கருத நேர்ந்ததென்றால் நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கைகளின் காரணமாக பார்ப் பனரல்லாத தலைவர்கள் என்பவர்களுக்குள் அபிப்பிராய பேத மேற்பட்டு மூன்று நான்கு கட்சிகளாகி ஒருவரையொருவர் நசிக்கி விட வேண்டுமென்று கருதி அதற்காக ஒழுங்கையும் நியாயத்தையும் மீறி சில சமயங்களில் பார்ப்பனரல்லாதார் நன்மைகளையும் கூட பலிகொடுத்து மூர்த்தண்ணியமாக நின்று தங்கள் தங்கள் சுயநலப் பிரசாரம் செய்து வருகையில் சென்னை மாகாணத்தில் யாரைத் தலைவராகத் தெரிந்தெடுத்தாலும் அசௌகரியம் நேரிடுமென்று கருதியே வெளி மாகாணங்களில் இருந்து ஒரு கனவானை தெரிந்தெடுக்க நேர்ந்தது. இரண்டாவதாக வெளி மாகாணத் தலைவர்களும் இங்கு வந்து நமது இயக்கத்தின் நிலைமையும் மக்களின் கருத்தையும் அறிந்து போவது நலம் என்பதாகவும் தோன்றிற்று. இந்த இரண்டு காரணங்கள் முக்கியமானதாகும். இந்த நிலையில் திரு. ஜயக்கர் அவர்கள் பெயரை நாம் உச்சரித்ததும் அவர் இந்து மகாசபைத் தலைவர் என்றும் வேத சாஸ்திரப் புராணப் பற்றுடையவரென்றும். நமக்குப் பலர் தெரிவித்தார்கள். இதேபோல் திரு. ஜயக்கருக்கும் நமது இயக்கம் கடவுள் மறுப்பு இயக்கமென்றும் மத எதிர்ப்பு இயக்கமென்றும் அவர் வருவதற்குள் கொட்டகை தீப்பற்றி எரிக்கப்பட்டு விடுமென்றும் வழியிலேயே அவர் கொல்லப்பட்டு விடக் கூடுமென்றும் பல மாதிரியான மிரட்டுக் கடிதங்களும் எழுதினார்கள். இதன் காரணமாக திரு. ஜயக்கர் அவர்கள் நமது சுயமரியாதை இயக்க சம்பந்தமான கொள்கைகள் நடவடிக்கைகள் ஆகிய பிரசுரங்களை அனுப்பும்படி தந்தி அடித்தார். அதற்கு நாம் உடனே “ரிவோல்ட்” பத்திரிகைகளில் சென்ற மகாநாட்டுத் தீர்மானம் தலைவர்கள் உபன்யாசம் நமது போக்கு ஆகியவை கள் அடங்கிய சில பிரதிகளை அவருக்கு அனுப்பியதில் திரு. ஜயக்கர் அக்கொள்கைகளையும் தீர்மானங்களையும் போக்கையும் ஒப்புக் கொண்டு சந்தோஷ மடைந்ததுடன் அதை அனுசரித்தே தான் தமது பிரசங்கம் இருக்குமென்று தந்தி அடித்தார். நாமும் அவரது மற்ற கொள்கைகளைப் பற்றிய விபரம் தெரியாதிருந்தாலும் தீண்டாமை விலக்கிலும் ஜாதிமுறை அழிவிலும் பெண்கள் சம சுதந்திரத்திலும் சைன்சும் மதமும் ஒத்து இருக்க வேண்டும் என்ற கருத்திலும் அவர்கள் செய்யும் காரியங்களும் பேசும் பேச்சுகளும் பத்திரிகை மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் தெரிந்திருந் ததால் அவர் வந்து தென் இந்தியா நிலைமையையும் நமது கொள்கை களையும் தெரிந்து போக ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் என்றே கருதி அவரை அழைத்தோம்.
நிற்க இவ்வருஷம் மகாநாடு நடத்த ஏற்பாடு செய்திருந்த நமது வயல் பூமியில் வெள்ளாமைப் பயிர் இருந்ததாலும் வேறு சில அதாவது சித்திரா பௌர்ணமி, சித்திரைத் திருவிழா, பக்ரீத் பண்டிகை மற்றும் சிலருக்கு ஏற்பட்ட துக்க சம்பவம் ஆகிய முதலியவைகளால் 10, 15 நாள் மகாநாட்டை தள்ளி வைக்கத் தீர்மானித்து 25, 26 தேதிகளுக்கு மாற்றி தந்தி கொடுத்ததில் ஒரு வாரத்திற்கு பிறகே அந்த தேதி தங்களுக்கு சவுகரியப் படாதென்று திரு. ஜயக்கர் தெரிவித்ததால் மறுபடியும் மகாநாடு 10 நாள் இருக்க பழயபடி 15 நாள் முந்தி 10, 11 தேதிகளிலேயே நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆகவே இத்தனை வித எதிர்ப்புகளும் அசௌகரியங்களும் போதிய சாவகாசமில்லாமையும் இருந்தும் மகாநாடானது சுமார் 2000 பெண்களும் 4000 ஆண்களும் அடங்கிய கூட்டமாகவே கடைசிவரையில் இருந்து வந்தது. இதனால் பொது ஜனங்கள் கடவுள் மறுப்புக்கும் மத எதிர்ப்புக்கும் போல்ஸ்விஷத்திற்கும் படியாத மக்கள் தலைமைக்கும் பணக்காரர்கள் ஒழிவுக்கும் பண்டிதர்கள் அழிவுக்கும் சர்க்கார் ஆதரிப்புக்கும் பயப்படாத மக்களாகி விட்டார்கள் என்பது நன்றாய் வெளியாய் விட்டது.
உதாரணமாக ஒத்துழையாமை கிளர்ச்சி நடந்த காலத்தில் பல தாலூகா ஜில்லா மகாநாடுகளிலும் மாகாண மகாநாட்டிலும் தலைமை வகித்தல் ஆஜ ராகி பேசுதல் பிரமுகராயிருத்தல் ஆகிய பல காரியங்கள் நடத்தி யிருக்கின்றோம்.
மற்றும் பார்ப்பனரல்லாதார் இயக்க மகாநாடுகள் பலதையும் சென்று பார்த்திருக்கின்றோம். அவைகள் அவ்வளவிலும் அதிகமான ஜனங்கள் வந்த மகாநாடென்று சொல்லிக் கொள்ளப்படும் மதுரை மகாநாட்டை விட குறைந்தது மிகவும் நான்கு ஐந்து பங்கு மக்கள் அதிகமாக இம்மகாநாட்டிற்கு அதுவும் நெருக்கடியும் அசௌகரியமுமான இந்த சந்தர்ப்பத்தில் வந்திருந் தார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். கொட்டகையானது 50 அடி அகலத் திலும் 120 அடி நீளத்திலும் போடப்பட்டிருந்ததானாலும் மக்கள் அக்கொட் டகை முழுவதும் நிறைந்து இருந்தார்களென்றால் மழையும் உற்சவமும் மற்ற அசௌகரியங்களும் இல்லாதிருந்திருக்குமானால் கொட்டகை இடம் போதாதென்றே சொல்ல வேண்டும். அன்றியும் இதே சமயத்தில் நான்கு நாள் முன்னதாக திருப்பூரில் டாக்டர் ராஜன் தலைமையில் நடந்த அரசியல் மகா நாட்டுக்கு வந்திருந்த ஜனக் கூட்டத்தின் எண்ணிக்கைக்கும் ஈரோடு மகாநாடு ஜனங்கள் எண்ணிக்கைக்கும் கணக்குப் பார்த்தால் பல பூஜ்ஜியங்கள் தான் வித்தியாசமிருக்குமே யொழிய வேறில்லையென்று சொல்லலாம். ஆகை யால் இவ்வியக்கம் பொதுஜன ஆதரவைப் பெற்றுவிட்டதா இல்லையா? என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம். நிற்க மற்றொரு விசேஷ மென்னவென்றால் இதுவரை நமது இயக்க வெளிப்படை எதிரிகளும், ரகசிய எதிரிகளும் நம்மீது ஒரு குற்றம் சொல்லி வந்தார்கள். அது என்னவென்றால் தாலூகா ஜில்லா போர்டு மெம்பர்களும் தலைவர்களும் வேறுதலை உத்தே சித்து நம்மை சுற்றிக் கொண்டு திரிவதாகவும் அவர்களது நலத்திற்காகவே இந்த இயக்கம் வேலை செய்வதாகவும், அரசாங்க அதிகாரிகளும் அவர் களை நாம் ஆதரிப்பதற்காக நமக்கு அனுகூலமாயிருப்பதாகவும் சொல்லி வந்தார்கள். இந்த மகாநாட்டில் அப்பேர்பட்ட கூட்டம் சென்ற மகாநாடு கூட்டத்தில் இருந்தவர்களில் 10-ல் ஒரு பங்கு கூட வரவே இல்லை. இவ்வியக் கத்தால் தங்களுக்கு உதவி ஏற்படாது என்பதை அப்பேர்பட்டவர்கள் நன்றாய் உணர்ந்து கொண்டார்கள். சில தேர்தல் பிரியர்கள் இவ்வியக்கத்துடன் சேர்ந்தால் நமக்கு தேர்தல் ஆகாமல் போகுமோ என்றும் பயந்து கொண்டு தங்கள் பயத்தையும் நமக்கு காட்டி விட்டார்கள்.
ஆதலால் அந்தவித பழியிலிருந்தும் நமதியக்கம் மீண்டுவிட்ட தானது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றபடி தீர்மான விஷயங்களிலும் தீண்டாமை விலக்கு, ஜாதி அழிப்பு, புராண ஒழிப்பு, பெண்கள் விடுதலை, கல்யாணரத்து, கடவுள் செலவு, மதக்குறி பட்டம், சடங்கு ஒழிப்பு, பெண்களுக்கு உத்தியோகம் முதலாகிய வைகளைப் பற்றி தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுடன் சென்ற வருஷத் தைவிட இவ்வருஷம் ஒரு படி முன்னேறி வழிநடை பாதை, குளம், பள்ளிக் கூடம், சத்திரம், சாவடி, ஓட்டல், கோவில் முதலாகியவைகளில் எல்லோருக் கும் சம உரிமை கிடைக்க சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மா னித்து அதற்காக ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க தோடு கூடிய சீக்கிறத்தில் அக்கமிட்டி செய்யும் வேலையிலிருந்து சுய மரியாதைச் சங்கத்தார் வாய்ப்பேச்சு வீரர்களா? கர்ம வீரர்களா? என்பதும் பயங்காளிகளா? தியாகிகளா? என்பதும் நன்றாய் விளங்கிவிடும்.
அன்றியும் சுயமரியாதை வாலிபர் மகாநாட்டில், கூட்ட ஆரம்பங் களிலாவது முடிவிலாவது கடவுள் வணக்கம், ராஜ வணக்கம், தலைவர் வணக்கம் முதலியவைகள் பாடக்கூடாது என்று தீர்மானித்திருப்பதிலிருந்தும், சர்க்கார் சம்மந்தமான எந்த உத்தியோகத்திற்கும் ஆயிர ரூபாய்க்கு மேல் பட்ட சம்பளம் இருக்கக்கூடாது என்று தீர்மானித்திருப்பதிலிருந்தும் சுய மரியாதை இயக்கக்காரர்கள் அடிமைகளா? பண ஆசை உத்தியோக ஆசை உடையவர்களா? என்பதும் தானாகவே விளங்கிவிடும். அன்றியும் ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமென்னும் கொள்கையைக் காங்கிரசில் புகுத்தக் கூடாதென்று சொன்ன காங்கிரசும் பிறவியில் உயர்வு தாழ்வு கூடாதென்ற தீர்மானம் மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேறியவுடன் ராஜினாமாக் கொடுத்த திருவாளர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், டாக்டர் சாஸ்திரி, சந்தானம், வரதாச்சாரி முதலிய பார்ப்பனர்களும் அவர்களது சிஷ்ய கோடிகளும் மக்கள் விடுதலையும் மக்கள் சமத்துவமும் சம்பாதித்துக் கொடுக்கும் தேசபக்தர்களா? அல்லது ஜாதி வித்தியாசம் ஒழிவதோடு அதை நிலை நிறுத்தும் மதம் வேதம் சாஸ்திரம் புராணம் சாமி ஆகியவைகள் எல் லாம் அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் தேச பக்தர்களா? என்பதையே யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
தவிர இந்த மகாநாட்டில் ஒரே ஒரு தீர்மானம் மாத்திரமே விவாதத் திற்கு இடமாகி தள்ளப்பட்டு விட்டது. மற்றொரு தீர்மானம் கேட்டுக் கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது. அதாவது, திரு. காந்தியின் உப்புச் சட்ட மீறுதலை ஆதரித்து அதனால் துன்பமுற்றவர்களுக்கு அனுதாபம் காட்டி ஸர்க்காரை கண்டனம் செய்வது.
மற்றொன்று திரு. காந்தியாரின் உப்பு சட்ட மறுப்பு சத்தியாக்கிரகம் ஆகியவைகளில் நம்பிக்கை இல்லை என்று கண்டனம் செய்வது. பிந்தியதை கொண்டு வந்த நண்பர் கேட்டுக் கொண்டதின் பேரில் நிறுத்திக் கொண்டார். முந்தியதைக் கொண்டு வந்த நண்பர் பிரேரேபித்ததில் அக்கிராசனர் அரசியல் (அதாவது பொலிட்டிகல்) விஷயத்தை சம்மந்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்கின்ற நிபந்தனை உள்ள இந்த மகாநாட்டில் அந்த விஷயம் கொண்டுவருவது நியாயமாகாது என்ற காரணம் சொல்லி தள்ளப்பட்டு விட்டது. அவைகளை தவிற வேறு எல்லா வித தீர்மானமும் அநேகமாய் ஏகமனதாகவே நிறைவேறிற்று.
இனி செய்ய வேண்டியது
மற்றபடி மகாநாடு இனிது நிறைவேறிய மகிழ்ச்சியோடே இதை முடிக்க நாம் விரும்பவில்லை. இனி அடுத்த மகாநாடு வரையில் நாம் செய்ய வேண்டிய வேலையை நிர்ணயித்து அதில் ஈடுபட வேண்டியதே முக்கிய மான காரியமாகும்.
முதலாவதாக கடவுளைப் பற்றியும், சமயத்தைப் பற்றியும், ஆழ்வார் நாயன்மார்கள் என்பவர்களைப் பற்றியும் மக்கள் பேசிக் கொண்டு திரியாம லிருக்கும் படி செய்ய வேண்டும். அவைகளின் மீது பழிபோட்டு மக்களை ஏமாற்றி சோம்பேறிகளாக்கி வயிறு வளர்ப்பவர்களின் தொழிலையும் செல்வாக்கையும் அடியோடு ஒழிக்க வேண்டும். ஆக இவ்விரண்டு காரிய மும் நமது சுயமரியாதைத் தொண்டர்களுக்கு முக்கிய பிரசாரமாயிருக்க வேண்டும்.
இரண்டாவதாக விதவை மணமும், கலப்பு மணமும் எங்கும் நடக்கும் படியாகப் பிரசாரம் செய்ய வேண்டும்.
புராணங்களிலும் புராண மதங்களிலும் நம்பிக்கையுள்ள – அல்லது அவற்றை ஜீவனமாகக் கொண்ட பண்டிதர்களை எங்கும் பகிஷ்கரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்களே தான் மக்களுக்கு மூட நம்பிக்கை என்னும் விஷத்தைச் செலுத்துகின்ற கொடிய ஜந்துக்களாய் இருக்கிறார்கள்.
மேற்கண்ட சுயமரியாதைக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாத தலைவர்களையும் தொண்டர்களையும் சுயநலத்திற்காகவே இதில் வந்து சேரும் சுயநலப் புலிகளையும் கூடுமானவரை ஒதுக்கியே நமது காரியத்தைச் செய்துகொண்டு போக நாம் சக்தியுடையவர்களாக முயற்சிக்க வேண்டும்.
சுயமரியாதை இயக்கத்தில் கலந்து கொண்டு இருக்கும் தலைவர்கள் தொண்டர்கள் என்பவர்களின் மூட நம்பிக்கையை வெளிப்படுத்த யாரும் தயங்கக் கூடாது.
திருவிழாக்கள் புண்ணியஸ்தல யாத்திரை முதலிய காரியங்களுக்குச் செல்லுகின்றவர்களை நிறுத்தவும் திருவிழாப் புரட்டுகளையும் புண்ணிய ஸ்தலப்புரட்டு முதலியவைகளை வெளியாக்கவும் திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இவைகள் ஒரு புறம் நடக்கச் செய்வதோடு மற்றொரு புரம் பொது வான வழிநடை பாதை, குளம், கிணறு, சத்திரம், சாவடி, பள்ளிக் கூடம், ஓட்டல், கோயில் முதலியவைகளில் பிறப்பின் காரணமாய் இருக்கும் வித்தியாசங் களை ஒழிக்க ஆங்காங்கு பிரசாரங்களும் சத்தியாக்கிரகமும் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்களுக்கு துன்பத்தையோ, கஷ்டத்தையோ, நஷ்டத்தையோ இழிவையோ கொடுக்கும்படியான ஒழுக்கக்கேடுகளான காரியங்கள் மக்கள் செய்யாமலும் நாணையமாய் இருக்கும்படியும், மதுபானம் முதலிய தீய காரியங்கள் செய்யாமல் இருக்கும்படியும் பிரசாரங்கள் நடைபெற வேண்டும்.
சட்டத்தை எதிர்பாராமல் ஒவ்வொரு பெற்றோர்களும் சகோதரர்களும் கணவன்மார்களும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும்படியான பிரசாரத்தையும் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட அரசியல் என்கின்ற பார்ப்பன ஆதிக்க சூக்ஷியில் மக்கள் சிக்கி அறிவையும் தைரியத் தையும் வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கிய வேலை யாகும் யாதொரு கொள்கையும் இல்லாமல் வெறும் வயிறு வளர்ப்புக் காகவும் வியாபாரத்திற்காகவும் புஸ்தகம், மருந்து, சில்லரைச் சாமான், ஷாப்பு சாமான்கள் முதலியவைகளை நூற்றுக்கு 200, 300, 400 ஆக லாபம் வைத்து விற்று மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பதற்காகவும் செல்வாக்குள்ள ஸ்தாபனங்களின் பேரையும் கொள்கைகளையும் சொல்லிக் கொண்டு புறப்பட்டு மக்களை ஏமாற்ற நடத்தும் பத்திரிகைகளின் யோக்கியதையை வெளியாக்கி அவைகளிடம் மக்கள் ஏமாறாமல் இருக்கும்படியும் செய்ய வேண்டும்.
இது போன்ற காரியங்களில் முனைந்து நிற்பதையே இவ்வருஷத் தொண்டாய் ஏற்றுக்கொள்ள வேண்டியது சுயமரியாதைத் தொண்டர்களின் முக்கிய கடமையாகும்.
இத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் நமக்குத் தெரியும். அதாவது நாம் மேற்கூறிய காரியங்களைச் செய்யும்போது இத்தொண்டின் பலனால் பாதகமடையும் கூட்டத்தாரால் நமது இயக்கத்தை யும் நம்மையும் நமது தொண்டர்களையும் பற்றி பலவித குற்றம் சுமத்தி பழியுரைகள் கட்டிவிடப்படும்.
அதாவது முதலில் நம்மை நாஸ்திகர் என்பார்கள். அதற்கு நாம் சிறிதும் அஞ்சக்கூடாது. ஏனெனில் கடவுள் என்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்லுகின்றவன் தான் நாஸ்திகன் என்றால் அந்த தன்மையில் நாம் நாஸ்திகர் அல்ல. ஏனெனில் கடவுள் என்கின்ற வார்த்தையே அர்த்தமற்றதும் விளங்காததும் ஆனதென்று சொல்லும் நாம் அது உண்டா இல்லையா என்கின்ற வேலையில் பிரவேசிப்பது முட்டாள்தனம் என்றே கருதி இருக்கின்றோம்.
அதோடு கூடவே கடவுள் இல்லை என்று சொல்லும் வாதமும் பயன் படக் கூடியது என்பதை நாம் ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் கடவுள் என்கின்ற வார்த்தைக்கு இன்னதுதான் அர்த்தம் அது இன்ன பொருளைத் தான் குறிக்கிறது என்று தெரிந்தாலல்லவா அந்த வஸ்து உண்டு இல்லை என்கின்ற வாதங்கள் பயன்படக்கூடியதாய் இருக்கும்? உதாரணமாக ஒரு மனிதனைப் பார்த்து உங்கள் வீட்டில் கீக்கிரி மூக்கிரி இருக்கின்றதா? என்று கேட்டால் அவன் அது இன்னது என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றது என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அவன் எவ்வளவு மூடனாவானோ அது போலவேதான் கடவுள் விஷயத்திலும் உண்டு இல்லை என்று சொல்லும் இருவர்களுமே யாவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் யாரை நாம் அயோக்கியர்கள் என்று சொல்லுகின்றோம் என்றால் கடவுள் ஒருவர் உண்டு. அவரே உலகத்தையும் அதில் உள்ள சகல வஸ்துகளையும் உண்டாக்கி அவைகளின் சகல நடவடிக்கைகளையும் தானே நடத்திவிப்ப வராய் இருந்து கொண்டு நடத்தி வருகின்றார் என்று சொல்லிக் கொண்டு தனக்கு இச்சையில்லாத காரியங்களின் மீது வெருப்பையும் சிலர் மீது தூஷணை யையும் செய்து கொண்டு இருப்பவர் கசடன் அல்லது அயோக்கியன் ஆகிய இரண்டில் ஒன்று என்று தான் சொல்லுகின்றோம். அன்றியும் அப்படிப்பட்டவர்கள் சுய நலம் பிடித்த பித்தலாட்டக்காரர்கள் என்றும் சொல்லுகின்றோம். மற்றபடி வேதத்தையும் சாஸ்திரத்தையும், புராணத்தையும் தர்க்கிக்கின்ற வனும், நிந்திக்கின்றவனும், நாஸ்திகன் என்றும் சொல்வதனால் நாம் நாஸ்திகர்களே யாவோம்.
ஏனெனில் மேல் கண்ட மூன்றும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற ஆட்சி என்றும் அவைகள் பெரிதும் மனிதத் தன்மை அற்றது என்றும் அனேகமாய்க் காட்டுமிராண்டிகளாலும், அயோக்கியர்களாலும் தங்கள் சுய நலத்திற்கென்று ஏற்படுத்தப்பட்டதென்றும் சொல்லுவதுடன் அவை ஒழிந்தாலல்லது மக்களுக்கு விடுதலையும் சுயமரியாதையும் ஏற்படாது என்றும் சொல்லுகின்றோம். இது நமது இயக்க ஆரம்ப காலத்திலேயே சொல்லியும் இருக்கின்றோம்.
இனி சுயமரியாதை இயக்கத்தார்கள் எழுத்து வாசனை அற்றவர்கள் என்று இகழப்படுவது நம்மைப் பொருத்தவரை நமக்கு எழுத்து வாசனை அதிகமாக இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் மனிதன் எழுத்து வாசனை இருந்தால்தான் அறிவுடையவன் ஆவான் என்பது ஒரு காரியத்தை செய்ய ஆற்றல் உடையவனாவான் என்று சொல்லப்படுவதும் மடத்தனம் அல்லது அயோக்கியத்தனம் என்பதே நமது முடிவு. ஏனெனில் எழுத்து வாசனை இல்லாத பலரை பெரியார்கள் என்று மக்கள் வணங்கு வதைப் பார்க்கின்றோம். எழுத்து வாசனை அதிகமாக கற்ற பண்டிதர்கள் என்பவர்கள் அனேகர்கள் மூடர்களாகவும் இணையற்ற அயோக்கியர்களாக வும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். ஆகவே எழுத்து வாசனை இல்லாதவர்கள் அறிவற்றவர்கள் அயோக்கியர்கள் என்பதானது எழுத்து வாசனையுள்ள மூடர்களும் அயோக்கியர்களும் தாங்கள் பிழைப்பதற்காக சொல்லும் சூழ்ச்சியே தவிர அதில் சிறிதும் யோக்கியமும் நாணயமும் கிடையாதாகையால் சுயமரியாதை இயக்கத்தார் அதற்கும் பயப்படக்கூடாது என்றே சொல்லுவோம்.
சுயமரியாதைக்காரர் மற்றும் பெரியோர்களை குற்றம் சொல்லுகின் றார்கள் என்பது. இதற்கும் சுயமரியாதைக்காரர்கள் பயப்படக்கூடாது என்றே சொல்லுவோம். ஏனென்றால் அனேகர்கள் கஷ்டப்படாமல் சோம்பேரியாய் இருந்து பிச்சை வாங்கித் தின்பதற்கும் பிரசங்கம் பண்ணிப் பிழைப்பதற்கும் புஸ்தகம் அச்சுப்போட்டு விற்பதற்கும் பலரை அதுவும் கடைந்தெடுத்த அயோக்கியர்களை பெரியவர்களாக்கி மக்களை ஏமாற்றுகின்றார்கள். அப் பெரியார் என்பவர்கள் அனேகர்களை ஒவ்வொருவருடைய யோக்கியதை களையும் பட்டவர்த்தனமாக பல தடவை வெளியிட்டிருக்கிறோம். ஒரு “பெரியாரின்” அயோக்கியத்தனத்திற்கும் அக்கிரமத்திற்கும் கூட சமாதானம் சொல்ல யோக்கியதையும் தைரியமும் இல்லாத வீணர்களே சுயமரியாதைக் காரர்கள் பெரியாரைப் பழிக்கின்றவர்கள் என்று பேசுகிறார்கள், எழுதுகின் றார்கள். ஆகையால் அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
தவிரவும் ராமாயணம் – பாகவதம், பாரதம், விஷ்ணு புராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்த புராணம், சிவபுராணம் முதலாகிய புஸ்தகங்களையும் அவற்றில் வரும் பாத்திரங்களையும், அவர் களின் நடவடிக்கைகளையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பதோடு அவற்றின் ஊழல்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்தியர்களின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் அவைகளே முட்டுக்கட்டையாய் இருந்து வந்தன, வருகின்றன என்றும் முடிவு செய்து இருக்கின்றோம். அன்றியும் அதற்காகவே சுயமரியாதை இயக்கத்தின் பெரும்பகுதி நேரத்தையும் பத்திரிகைகளின் பெரும்பகுதி பாகத்தையும் ஒதிக்கிவைத்தும் இருக்கின்றோம். அவ்வளவோடு இல்லாமல் சில புராணங் களும் மநுதர்மம் போன்ற சாஸ்திரங்களும் மனிதத் தன்மைக்கும் ஒழுக்கத் திற்கும் மக்கள் சுயமரியாதைக்கும் இடையூறாய் இருப்பதால் அவைகளை கொளுத்த வேண்டுமென்று சொல்லுவதுடன் சில இடங்களில் அவைகளை கொளுத்தியும் இருக்கின்றோம். ஆதலால் இம்மாதிரியான குற்றங்கள் சுமத்தப்படுவதற்கும் பழி சுமத்தப்படுவதற்கும் சுயமரியாதைக்காரர்கள் பயப்பட கூடாதென்றே சொல்லுவோம்.
மற்றபடி சுயமரியாதைக்காரர்கள் மீது அரசியல் சம்பந்தமாக சொல்லப் படும் குற்றங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதைப் பற்றி அடுத்த வியாசத்தில் விவரிப்போம்.
குடி அரசு – தலையங்கம் – 18.05.1930