நாஸ்திகம்

(தூய வெழிலழகனார் எழுதி சித்திரபுத்திரன் திருத்தியது)

மகன் :- அம்மா! இதென்ன விபரீதம்? நமது தந்தை சதா சர்வகாலம் “குடி அரசு” “குடி அரசு” என்று “குடி அரசு”ம் கையுமாகவே இருந்து சதாகாலமும் படித்துக் கொண்டு வந்தது போதாமல் இப்போது “குடி அரசு” ஆபீசுக்கே போய்ச் சேர்ந்து விட்டாரே இதென்னம்மா! அநியாயம்! அவருக்கு நாஸ்திகம் தலைக்கேறிவிட்டது போல் இருக்கின்றது.

தாய் :- மகனே! இவ்வாறு கேட்பதற்குக் காரணமென்ன? “குடி அரசு” பத்திரிகை நாம் இழந்த சுயமரியாதை, அறிவு, செல்வம், நாடு ஆகியவை
களை மறுபடியும் பெறுவதற்கு வேண்டிய வேலை என்ன? என்ன செய்யவேண்டுமோ அவைகளை உயிர்க்கு துணிந்து செய்து கொண்டும், மனிதர்களுக்குள் பரவி நிற்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே இவ்வுலகமெங்கணும் வெற்றிக் கொடியோடு உலவிக் கொண்டும் வருகின்றது. உமது தந்தை அக் ‘குடி அரசின்’ கொள்கைகளை நன்கு அறிந்தவராதலால், நான்தான் அங்கே போய் அதற்கு ஏதாவது உதவி செய்யலாமே எனக்கருதி போகும்படி சொல்லி அவரை அங்கு அனுப்பினேன். இதிலென்ன அநியாயம்?

மகன் :- என்னம்மா! அக் ‘குடி அரசை’ இவ்வளவு மேன்மையாய் சொல்லிப் புகழ ஆரம்பித்துவிட்டாய். வெறும் நாஸ்திகத்தையே போதிக்கும் ‘குடி அரசை’ப் பற்றி இப்படிப் புகழுவதோடு அப்பாவையும் அங்கு அனுப்பி விட்டாயே?

தாய் :- மகனே! நாஸ்திகத்தைப் போதிப்பது ‘குடி அரசு’ அல்ல, நானும் அல்ல, நீயும் அல்ல, உமது தந்தையுமல்ல, நாம் ஒருவரும் நாஸ்திகரல்ல; இதற்கு யாதொரு சந்தேகமும் படவேண்டாம்.

மகன் :- அம்மா! “குடி அரசை” நாஸ்திகமல்ல என்று எப்படி அம்மா சொல்லுவது? சாமியே இல்லை என்று வாரந்தோறும் வெளிவரு
கின்றதேயம்மா? நீங்கள் படித்ததே இல்லையோ? உலகமெங்கணும் எங்குப் பார்த்தாலும் “குடி அரசு நாஸ்திகத்தைப் பரப்புகின்றது” என்று சொல்லப்
படுகின்றதே.

தாய் :- அப்பா குழந்தாய்! நீ நல்ல புத்திசாலி, பகுத்தறிவு உள்ளவன். அப்படியிருக்க ‘குடி அரசை நாஸ்திகமென்று சொல்லுதே அம்மா’ என்று சொல்லுகின்றாயே ஒழிய நீ எப்போதாகிலும் எங்காகிலும் ‘குடி அரசில்’ சாமி இல்லை என்று எழுதியிருந்ததைப் பார்த்ததுண்டா? நீயும் வாரந்
தோறும் படித்துக் கொண்டுதானே வருகின்றாய். நானும் இடைவிடாது படித்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரு நாளும் சாமி இல்லை என்ற கட்டுரையைக் ‘குடி அரசு’ கொண்டு வந்ததே இல்லையே! யாரோ சொல்லுவதைக் கேட்டுக்கொண்டு “அம்மா உலகம் சொல்லுகிறதே” என்கின்றாயே உனக்கு அமைந்த அறிவு எதற்காக இருக்கிறதோ தெரிய
வில்லையே? அய்யோ, இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு இப்படித்தானே படிப்பிக்கின்றார்கள்.

மகன் :- நான் ஒன்றும் சந்தேகப்படவில்லை. உனது இட்டப்படியே வருகிறேன், சற்று பொறு, நீயும் ‘குடி அரசை’ படிக்கின்றாயே. சாமி உண்டு என்கிறாயா, இல்லை என்கிறாயா? சற்று சொல்லு பார்ப்போம். பிறகு குடி அரசைப் பற்றி பேசுவோம்.

தாய் :- மகனே, எனது இட்டப்படி ஒன்றும் வேண்டாம். உன் இட்டப்படியே எது வேண்டுமானாலும் கேள். ஆனால் இப்போது கேட்ட கேள்வி உண்டே, இது ஒரு நல்ல கேள்விதான். இதற்காக நான் மெத்த சந்தோஷிக்கிறேன். என்னப்பா! சாமி உண்டா இல்லையா? என்ற கேள்விதானே கேட்கிறாய்? வேறு ஏதாகிலும் உண்டா?

மகன் :- அம்மா! வேறு யாதும் இல்லை. குடி அரசைப் படிக்கின்ற
வர்களின் மனப்பான்மையை அறிய இது ஒன்றே போதும்.

தாய் :- ஆஹா, அப்படியா! சரி பதில் சொல்லுகிறேன். பதில் சொல்லுவதற்கு முன்பு கேள்வியை நன்றாய் விளக்கிக் கொள்ள வேண் டாமா? அவசரப்படாதே; நிதானமாய்ப் பேசு; சந்திக்கடைப் பேச்சிலேயே உனது கவனம் சென்றுவிட்டதே ஒழிய உன் அறிவுக்கு நீ சற்றும் மதிப்புக் கொடுக்கவில்லை என்று தெரிகின்றது. ஆனாலும் குற்றமில்லை. உனது கேள்வி என்ன? சாமி உண்டா இல்லையா என்பது தானே?

மகன் :- ஆம் அம்மா.

தாய் :- அப்பா மகனே, சாமி என்றால் என்ன? அதை முதலில் சொல்லு பார்ப்போம். அதாவது அதற்குப் பெயர் என்ன? ரூபம் என்ன? நிறம் என்ன? குணம் என்ன? அது என்ன சொல்? சற்று புரியும்படி சொல்லு பார்ப்போம். பிறகு, அது உண்டா இல்லையா? என்பதைப் பற்றி பேசலாம்.

மகன் :- என்ன அம்மா உனக்கு இது கூடவா நான் சொல்லிக் கொடுக்க வேண்டும்?
பெயரும் உருவமும் குணமும் தோற்றமும் அற்றவனும், புத்திக்கும் மனத்திற்கும் எட்டாதவனும், எங்கும் வியாபித்து சகல உலகங்களையும் படைத்துக் காக்கும் சர்வ வல்லமையும், சர்வமும் அறியும் சக்தியும் உள்ளவனும், அவனன்றி ஓரணுவும் அசைய முடியாத ஆதிக்கம் கொண் டவனும் ஆகிய ஏக பரம் பொருள் என்றும் அது ஒரு பெயர்ச்சொல் என்றும் நீ அறிந்ததில்லையா? என்தாயே, இந்தக் கேள்வியிலேயே நாஸ்திக வாடை வீசுகின்றதே.

தாய் :- குழந்தாய்! பொறு பொறு, அவசரப்படாதே. கிளிப்
பிள்ளையைப் போல யாரோ சொல்லிக் கொடுத்ததை மனதில் வைத்துக் கொண்டு அர்த்தமில்லாமல் கஷ்டப்படுகின்றாய்.

‘சாமி’ என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு ஒரு வண்டி சங்கதி சொல்லி விட்டாய். அவைகளில் ஒவ்வொன்றாக கவனிப்போம். நீ நல்ல பிள்ளை ஆனதினால் கேள்விப்பட்டவைகளையும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததையும் எதிலாவது படித்ததையும் மறந்து விட்டதாக நினைத்துக் கொள். குருட்டு நம்பிக்கை முரட்டுப் பிடிவாதம் முதலிய அறிவுக்கு விரோதமான குணங்களை விட்டுவிட்டு மாசு மறுவற்ற பரிசுத்தமான மனதோடு நான் சொல்வதை சற்றுக் கூர்ந்து கவனமாய்க் கேள்.

மகனே! நீ உண்டா இல்லையா என்று என்னைக் கேட்ட சாமி பெயரில்லாதது, உருவமில்லாதது, குணமில்லாதது, ஆனால் எங்கும் வியாபித்தது, புத்திக்கும் மனதிற்கும் எட்டாதது என்று முதலில் சொல்லி முடிவில் அது ஒரு பெயர்ச் சொல் என்றும் சொல்லி இருக்கின்றாய். மத்தியில் உள்ளதை பற்றி பிறகு பேசுவோம். பெயர்ச் சொல் என்றால் நாமமோ, ரூபமோ, குணமோ இருந்தாக வேண்டும்-சரி அதுதான் போகட்டும் வஸ்து என்றால் அதற்கும் ஒருபெயர் வேண்டும், ரூபம் வேண்டும், குணமும் வேண்டும். அதுதான் போகட்டுமென்றால், எப்பேர்ப்பட்ட ஒரு தன்மையைப் பற்றியதானாலும் அது மனதிற்காவது புத்திக்காவது எட்டினதாக இருக்க வேண்டும். எனவே “பேர் இல்லை, குணமில்லை, மனதிற்கும் புத்திக்கும் எட்டவும் முடியாது, அப்படி ஒரு வ°து இருக்கின்றது, அதை உண்டு என்கிறாயா இல்லை என்கின்றாயா?” என்று நீ என்னைக் கேட்டால் நான் என்ன பதில் சொல்லக்கூடும் என்பது உனக்குத் தெரிய வேண்டுமானால், நான், அந்த மாதிரி ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீ என்ன பதில் சொல்லுகிறாய் என்று பார்க்கிறேன். அதாவது என்னருமைக் குழந்தாய்! நம்ம வீட்டுப் பெரிய பெட்டிக்குள் ஒரு வஸ்து இருக்கின்றது. அதற்குப் பெயர் இல்லை, ரூபமும் இல்லை, குணமும் இல்லை, அது உன் புத்திக்கும் மனதிற்கும் எட்டாதது, அது இப்போது இருக்கின்றதா? இல்லையா? என்று சொல்லு பார்ப்போம்.

மகன் :- என்னம்மா இப்படி கேட்கின்றாய்? நீ சொல்லுகின்ற மாதிரி ஒரு சாமான் இருந்திருக்க முடியுமா அம்மா? அப்படியானால் பெட்டிக்குள் ஒன்றுமில்லை என்று தானே அர்த்தமாகின்றது?

அம்மா :- ஏனப்பா அப்படிச் சொல்லுகின்றாய்? பெயரும் உருவமும் இல்லாததாலேயே ஒன்றும் இல்லை என்று சொல்லி விடலாமா? குழந்தாய்! நன்றாய் யோசித்து பதில் சொல்லு.

மகன் :- பெயரும் உருவமும் இல்லாமல் ஒரு வஸ்து இருக்கக் கூடும் என்று என் புத்திக்கும் படவில்லை. மனதிற்கும் எட்டவில்லையே. எப்படியம்மா அப்படி ஒரு வஸ்து இருக்க முடியும்?

தாய் :- உன் புத்திக்கும் உன் மனதிற்கும் எட்டாததினாலேயே ஒரு வஸ்துவை நீ இல்லை என்று சொல்லிவிடலாமா? குழந்தாய்!

மகன் :- அந்தப்படி சொல்லி விடக் கூடாது என்றே வைத்துக் கொண்டாலும், நீ கேட்கின்ற வஸ்து யாருடைய புத்திக்கும் மனதிற்கும் படாதது என்று மேலே சொல்லி இருக்கின்றாயே. ஆதலால் வேறு யாருடைய புத்திக்கும் மனதிற்கும் படக்கூடியதாக இருக்கும் என்று நினைத்தாலும் கூட அது நீ சொல்லும் வஸ்து அல்லாததாய் விடுமே. ஆகையால் நீ கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமானால் நீசொல்லுகின்ற குணங்கள் கொண்டே ஒரு வஸ்து இருக்க முடியாது என்று சொல்வதுடன் அந்தக் கேள்வியை அர்த்தமற்றதும் (கோபித்துக் கொள்ள வேண்டாம்,) முட்டாள் தனமுமான கேள்வி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்வதற்காக அம்மா! தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும்.

தாய் : மகனே நீ அப்படி கடுமையாக சொல்வதைப் பற்றி எனக்கு மிகவும் சந்தோஷமே; தயவுசெய்து இன்னம் ஒரு நூறு தடவை சொல்லு பார்ப்போம், என் காது குளிரட்டும்.
மகன் : என்னம்மா ஒருவர் உன்னை முட்டாள் என்று சொன்னால் அது உனக்கு மகிழ்ச்சியாய் இருக்கின்றது என்றால் அது எனக்கு அதிசய மாயிருக்கின்றதே?

தாய் : இதில் அதிசயம் ஒன்றுமில்லை; நீ என்னையா சொன்னாய்? அந்த மாதிரி கேள்வி கேட்டவர்களைத் தானே சொன்னாய்? அந்த மாதிரி கேள்வி நானா கேட்டேன்? கேட்டவர்களைத்தானே அந்த முட்டாள் பட்டங்கள் போய்ச்சேரும். நான் எதற்காக வருத்தப்படவேண்டும்?

மகன் : (சற்று யோசித்துப்பார்த்து) நீ சொல்லுவது ஒன்றும் எனக்குப் புரியவில்லையே, நீ தானே அந்த மாதிரி கேள்வி இப்பொழுது என்னைக் கேட்டாய்?

தாய் : மகனே! நன்றாக யோசித்துப் பார்: முதலில் நீ அந்த மாதிரி என்னை ஒரு கேள்வி கேட்கவில்லையா?

மகன் : என்னம்மா நான் சாமியைப் பற்றிக் கேட்ட கேள்விக்கும் நீ பெட்டியில் இருக்கும் வஸ்து என்பதைப்பற்றி கேட்கும் கேள்விகளுக்கும் வித்தியாசமில்லையா?

தாய் : என்ன வித்தியாசம் வேண்டுமென்கிறாய்? நீ கேட்ட வஸ்துக்கு என்ன கு™ங்கள் கற்பித்து ‘உண்டா இல்லையா’ என்று கேட்டாயோ, அதே குணங்களைத் தானே கற்பித்து நானும் ஒரு வஸ்துவைப் பற்றிக் கேட்டேன். நான் கேட்டது முட்டாள் தனமானால் நீ கேட்டது என்ன சொல் பார்ப்போம்?
தவிர நீ பெயர் இல்லை என்று சொல்லிவிட்டு சாமி என்று முன்னுக் குப் பின் முரண் பேசினாய்: நான் அப்படிச் சொல்லவில்லை; பெயர்இல்லாத வஸ்து என்றேன். ஆகவே நான் கேட்டதில் நீ கேட்டதை விட அதிகமானத் தப்பு என்ன?

மகன் : என்ன அம்மா இப்படி நீ பேசுகின்றாய்? கேட்ட வஸ்துக்கு சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் படைத்துக் காத்து அழித்தல் ஆகியவைகள் உண்டா அம்மா?

தாய் : மகனே சர்வ சக்தி முதலிய விஷயங்களைப் பற்றியும், படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய விஷயங்களைப் பற்றியும் பிறகு பார்த்துக் கொள்ளுவோம். வஸ்து நிச்சயம் செய்து கொண்டு குண நிச்சயத்திற்கும் போவோம்.

மகன் :- சற்று பொறு அம்மா. நான் போய் வாத்தியாரைக் கேட்டு விட்டு வருகின்றேன்.

தாயார் :- மகனே, நான் முன்னமே சொன்னேன், கிளிப்பிள்ளையைப் போல் வாத்தியார் சொன்னதையே நம்பிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டாம் என்று. ஆனாலும் குற்றமில்லை. அப்படியே ஆகட்டும், போய் கேட்டுவிட்டு வா, எனக்கு ஆட்nக்ஷபணை இல்லை. அவர் உனக்கு இன்னும் என்ன என்ன மூடபக்திகளைப் பற்றி சொல்லி வைப்பாரோ பார்ப்போம். நான் அப்பொழுதே இந்த மாதிரி மூடநம்பிக்கைகளைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு நமது பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்று சொன்னால், உன் தந்தை அதைக் கவனிக்கவில்லை. இருந்தாலும், குற்றமில்லை. போய் உன் வாத்தியாரை நன்றாய்க் கேட்டு தெரிந்து கொண்டு வா. வாத்தியார் புத்திசாலித்தனத்தையும் பார்க்கலாம். ( தொடரும்)

குடி அரசு – உரையாடல் – 16.12.1928

You may also like...

Leave a Reply